By 17 May 2020 0 Comments

எல்லா திசையிலும் விரட்டினால் என்ன செய்ய? (மகளிர் பக்கம்)

என்ன செய்வது தோழி?

அன்புடன் தோழிக்கு,

வாழ்க்கையில் சில சோதனைகள் வரலாம்… போகலாம். ஆனால் சோதனையே வாழ்க்கையாக தொடர்ந்தால் அதற்கு உதாரணம்தான் என் வாழ்க்கை. இந்த கண்ணீர் கடிதம் எழுதும் எனக்கு 70 வயதாகிறது. எஸ்எஸ்எல்சி வரை படித்திருக்கிறேன். அண்ணனின் ஆதரவில்தான் வளர்ந்தேன். குடும்பத்தில் அண்ணனின் வருமானம் மட்டும்தான். அந்த வருமானத்தில்தான் நான், அம்மா, அண்ணி அவர்களின் இரு குழந்தைகள் வாழ்ந்தோம். அவருக்கு சொற்ப சம்பளம்தான். அந்த வருமானத்திலேயே எனக்கு திருமணம் செய்து வைத்தார்.

என் கணவர் வீட்டினர் வசதியானவர்கள். ஆனாலும் என் பிரசவ செலவுகளையும் பார்த்தது என் அண்ணன்தான். என் அண்ணனைப் போன்று என் அண்ணியும் ெராம்ப நல்லவர். அந்த அதிர்ஷ்டம் என் மாமியார் வீட்டிலும் தொடர்ந்தது என்றுதான் நினைத்தேன். அவர்களுக்கு கேரளாவில் ஏராளமான சொத்துகள் இருந்தன. ஆனால் அவற்றை என் மாமனாரால் பராமரிக்க முடியவில்லை. என் நாத்தனாரின் கணவர் தூண்டுதலால் அந்த சொத்துகளை விற்றுவிட்டு சென்னையில் ஒண்டுக்குடித்தன வாசிகளாக மாறினோம். என் கணவர் அம்மாவிற்கு பயந்தவர்.

எந்த விதமான கெட்ட பழக்கங்களும் இல்லாதவராக தான் இருந்தார். ஆனால் நாத்தனார் கணவர், என் கணவரை கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாக்கினார். போதாததற்கு என் நாத்தனார், அவரது கணவரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு எனது மாமியாரும் என்னை கொடுமைப்படுத்தினர். என் நாத்தனாரும், அவர் கணவரும் சொல்வதைத்தான் என் மாமியார், மாமனார் கேட்பார்கள். என் நாத்தனார் கணவருக்கு மது, மங்கை என கல்யாண குணங்கள்அனைத்தும் உண்டு. என் மாமனார் காலமானதும் மிச்சமிருக்கும் சொத்துக்களை, மாமியாரை ஏமாற்றி அவர்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டனர்.

தன் அக்கா கணவரால் தான், ஏமாற்றப்படுவதை உணராமலேயே என் கணவர் இருந்தார்.அவர் உணர்ந்தபோது நிலைமை கைமீறி விட்டது. சொத்துக்களை பிடுங்கிக் கொண்ட பிறகு நாத்தனாரும் அவர் கணவரும் என் மாமியாரை கைவிட்டுவிட்டார்கள். நோய்வாய்ப்பட்ட மாமியாரை கடைசிக்காலத்தில் நாங்கள்தான் பராமரித்தோம்.மாமியாரும் இறந்து போனார். அதன்பிறகும் எரிந்த வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்று என் நாத்தனாரும், அவரது கணவரும் நடந்துகொண்டனர். ஒருகட்டத்தில் எங்களிடம் எதுவும் இல்லை என்று ஆனப்பிறகு, நாத்தனார் குடும்பத்தின் உறவு விட்டுப்போனது.

அவர்களின் தொடர்பு விட்டுப்போனதும், என் கணவரும் கெட்ட பழக்கங்களில் இருந்து படிப்படியாக மீண்டார். எங்களுக்கு 3 பிள்ளைகள் முதல் பையன் +1 , 2வது பையன் எம்.எஸ்.சி, எம்.காம், 3வது மகன் எம்.பி.ஏ படித்திருக்கிறார்கள். வசதியில்லாததால் எல்லோரையும் தமிழ் மீடியம் தான் படிக்க வைத்தோம். கல்லூரி படிப்பையும் அவர்கள் வேலை செய்துகொண்டே அஞ்சல் வழியாக படித்தனர்.

முதல் மகன் டிரைவராக இருக்கிறான். அவன் மனைவி +2. அவனுக்கு கல்யாணமாகி 16 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை. மூத்த மருமகளுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை.இரண்டாவது மகன் பட்டப்படிப்பு படித்திருந்தாலும் நிலையான வேலை கிடைக்கவில்லை. அவனுக்கு திருமணமாகி மனைவி 10 நாட்கள் மட்டுமே எங்கள் வீட்டில் இருந்தாள். அதன் பிறகு ‘பிடிக்கவில்லை’ என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விவாகரத்து வாங்கி விட்டனர். காவல்நிலையம், வழக்கு, நீதிமன்றம் என்று அலைந்ததுதான் மிச்சம்.

அடிக்கடி விடுமுறை எடுக்கிறான் என்று வேலையில் இருந்து நீக்கி விட்டனர். அதன் பிறகு எந்த வேலையும் நிரந்தரமாக அமையவில்லை. அடிக்கடி தேர்வுகள் எழுதிக் கொண்டு இருக்கிறான். என் 3வது மகன் வங்கியில் வேலை செய்கிறான். அவனது நண்பன் உதவியால் அந்த வேலை கிடைத்தது. அவன் வேறு மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டான். நாங்கள் ஆச்சாரமான குடும்பம். முதலில் எங்களுக்கு அது சங்கடமாகத்தான் இருந்தது. ஆனாலும் பிள்ளையின் நலனை கருத்தில் கொண்டு அவளை ஏற்றுக் கொண்டோம்.

ஆனால் அவள் எங்களிடம் ஒட்டுவதில்லை. பேரப் பிள்ளைகளையும் எங்களிடம் சேர விடுவதில்லை. அதற்கு காரணம் அவளுடைய அம்மா. அவள்தான் சொல்லிக் கொடுத்து, சொல்லிக் கொடுத்து மகளையும் பேரக்குழந்தைகளும் எங்களுடன் ஒட்ட விடாமல் செய்கிறாள்.என் மகன் அவனது மனைவிக்கு பயந்தவன். எதையும் கேள்வி கேட்க மாட்டான். எப்போதாவது எங்களுக்கு அவன் ஆறுதலாக பேசினால், உடனே அவனது மனைவி அழுது ஆர்ப்பாட்டம் செய்து சண்டை போடுகிறாள்.

கல்யாணம் ஆன புதிதில் எங்களிடம் நன்றாக நடந்து கொண்டாள். இப்போது எங்கள் வாரிசுகளான பேரக் குழந்தைகளை நாங்கள் கொஞ்சக் கூட முடியாமல் தவிக்கிறோம். மனைவிக்கு பயந்து எங்களுக்கு பண உதவியும் செய்வதில்லை. குழந்தைகளையும் கூட்டி வந்து காட்டுவதில்லை. பெரிய மகனுக்கு வண்டி ஓட்டினால் தான் சம்பளம். அவன் மனைவி எங்களுக்கு உதவுகிறாள். எனினும் சற்று சிரமம்தான். இரண்டாவது மகன் இப்போது வேலையில் இல்லை. அப்பாவுக்கு துணையாக பூஜை, புரோகிதம் செய்கிறான். அதை வைத்துதான் சமாளிக்கிறோம்.

வாழ்க்கையில் நான்தான் சந்தோஷங்களை அனுபவித்ததில்லை. என் பிள்ளைகளுக்கு அப்படியே ஆகிவிட்டதே என்று தவிக்கிறேன். வேலையில் இல்லாமல் இருக்கும் 2வது மகனுக்கு நல்ல வேலை, மீண்டும் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டாத தெய்வமில்லை. கூடவே எனது 3வது மகனும் மனம் மாறி எங்களுடன் இணக்கமாக இருக்க வேண்டும், பேரப் பிள்ளைகளை கொஞ்ச அனுமதிக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டே இருக்கிறேன்முதலில் மாமியார் நாத்தனாரிடம் கஷ்டப்பட்டேன். இப்போதும் மருமகளிடம் கஷ்டப்படுகிறேன்.

கூடவே வறுமையும் சேர்ந்துகொள்ள கஷ்டப்படுவது வாழ்க்கையாகி விட்டது. இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் இப்படி சிரமப்பட போகிறேன் என்று தெரியவில்லை. சில நேரங்களில் தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற எண்ணம் கூட வருகிறது. எதை பார்த்தாலும் எரிச்சலாக இருக்கிறது. எனக்கு மட்டும் ஏன் இப்படி புரியவில்லை. நான் வேண்டாத கடவுள் இல்லை… ஆனால் எதுவும் நடக்கவில்லை. நிம்மதியே இல்லை. என்ன செய்வது என்று புரியவில்லை.

சாகும் வரை இப்படித்தான் தவிக்க வேண்டுமா தெரியவில்லை. இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் தான் உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். என் வாழ்க்கை இப்படியே முடிந்துவிடுமா? எனக்கு விடிவு கிடைக்குமா? என் மருமகளின் குணத்தை மாற்ற முடியுமா? என் பிள்ளைக்கு நல்ல வேலை கிடைக்குமா? என்ன செய்வது நான்? எனக்கு ஒரு நல்ல வழிகாட்டுங்கள் தோழி…

இப்படிக்கு,பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

நட்புடன் தோழிக்கு,

உங்கள் கடிதத்தை கண்டேன் தோழி. இந்த வயதில் இவ்வளவு துயரங்கள் என்பது தாங்க முடியாத வேதனை தான். இருந்தாலும் உங்கள் வயதை கருத்தில் கொண்டு மனக்கவலைகளில் இருந்து நீங்கள் வெளியே வர வேண்டும். நீங்கள் இள வயதிலேயே பல கஷ்டங்களை கடந்து வந்துள்ளீர்கள். அந்த கஷ்டங்களை தாண்டி உங்கள் வாழ்க்கை பிள்ளை பேரக் குழந்தைகளை நோக்கி திரும்பியிருக்கிறது.

நீங்கள் உங்கள் கடமையை சரியாக செய்து உள்ளீர்கள். உங்கள் பிள்ளைகளை படிக்கவைத்து விட்டீர்கள். பிள்ளைகள் வளர்ந்து ஒரு வயது வந்த பிறகு அவர்கள் வாழ்க்கையை அவர்கள் தீர்மானிக்கட்டும்.. அவர்களைப் பற்றி கவலைப்படும் வயது எல்லாம் உங்களுக்கு கடந்துவிட்டது. உங்கள் இரண்டாம் மகனிற்கு சரியான வேலை இல்லை எனில்அதற்கான காரணங்களை ஆராய்ந்து அதை சரிசெய்ய வேண்டிய பொறுப்பு உங்கள் மகனுக்குத்தான் உள்ளது. தொடர்ந்து முயற்சிக்க சொல்லுங்கள். வேலையின்மைக்கான காரணங்களை அறிய சொல்லுங்கள்.

உங்கள் மருமகளுடன் உங்களுக்கு உறவுமுறை சிக்கல் இருப்பின் அதனை உங்கள் பிள்ளை தான் இருவரிடமும் பேசி சரி செய்ய வேண்டும். நீங்கள் என்ன செய்ய முடியும். மனைவி பேச்சை கேட்டுவிட்டு உங்களை கஷ்டப்படுத்துவதை, உங்கள் பிள்ளை தான் சரி செய்ய வேண்டும். அப்பா என்கிற முறையில் தன் பிள்ளைகளை உங்களிடம் அனுப்ப முயற்சிக்கலாம்.

ஒரு மாமியார் சொல்வதை மருமகன் கேட்பதை விட, கணவர் சொல்வதை மனைவி கேட்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த பிரச்சனையில் உங்கள் பிள்ளையின் தலையீடு இருக்கவேண்டும். நீங்கள் உங்கள் விருப்பத்தை உங்கள் பிள்ளையிடம் தொடர்ந்து தெரிவியுங்கள். அப்படியும் கேட்காவிடில் உங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்து கொண்டு இயல்பாக இருங்கள். உங்கள் பிள்ளைகள் மீதும், பேரக்குழந்தைகள் மீதும் மேலும் நிபந்தனையற்ற அன்பு வையுங்கள்.

அவர்கள் வராமல் இருப்பது கஷ்டமான விசயம் தான்.. நீங்கள் வருத்தப்படுவதால் ஒன்றும் மாறிவிட போவதில்லை. இந்த வயதில் மன உளைச்சல் என்பது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். கடந்த காலங்களைப் பற்றி அதிகம் யோசிக்க வேண்டாம். எதிர்காலத்தை பற்றியும் கவலை கொள்ள வேண்டாம். இன்று என்னவோ அதில் கவனம் செலுத்துங்கள்.

அறிவுரைகளை கொடுக்கும் வயது இது. இந்த வயதில் அறிவுரை என்பதும் மிகவும் கடினமானதாகவே இருக்கும். நீங்கள் கஷ்டங்களை அணுகும் முறையை மாற்றுங்கள். வாழ்க்கையில் கஷ்டங்கள் வரும் போது இரண்டு வகையான தீர்வுகள் மட்டுமே நம்மால் யோசிக்க இயலும்.
ஒன்று கஷ்டங்களை சரிசெய்வது, சரியே செய்ய முடியாத கஷ்டம் எனில் கஷ்டத்தை அணுகும் முறையை மாற்றிக் கொள்வது. எந்த கஷ்டமும் நிரந்தரமானது அல்ல. நம்பிக்கையோடு இருங்கள். மாற்றம் ஒன்றே மாறாதது.

பொதுவாக ஒருவர் மன கஷ்டத்தில் இருக்கும்போது அறிவாற்றல் சிதைவு(Cognitive distortions) ஏற்படும். உதாரணமாக ஏதாவது ஒரு சூழ்நிலையில் கஷ்டங்கள் ஏற்பட்டால், அது எல்லா சூழ்நிலையிலும் ஏற்படும் என்று நினைப்பது, நமக்கு நடந்த நன்மைகளை குறைவாக சிந்தித்துவிட்டு தீமைகளை மிகைப்படுத்தி பார்ப்பது, மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று யோசிப்பது, கஷ்டங்கள் நமக்குதான் வரும், கஷ்டங்கள் நமக்கு சொந்தமானவை என்று சிந்திப்பது என பிரச்சினைகளை எதிர்மறையாக பார்ப்பதுதான்.

இதுபோன்ற அறிவாற்றல் சிதைவுகளால் நமக்கு மன உளைச்சல் அதிகமாகிறது. நான் கூறியபடி கஷ்டங்களைப் பார்க்கும் விதமும் அறிவாற்றல் சிதைவிலிருந்து வெளியே வருவதும்தான், உங்கள் மன உளைச்சலை சரிசெய்யும். மனம் தெளிவாக இருந்தால் தான் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். உங்களுக்கு அவ்வாறு செய்வதில் சிரமங்கள் இருப்பின் நல்ல மன நல மருத்துவரை பாருங்கள். எல்லாம் சரியாகும்.

தொகுப்பு : ஜெயா பிள்ளை

என்ன செய்வது தோழி பகுதிக்கான கேள்விகளை எழுதி அனுப்ப வேண்டிய முகவரி

‘என்ன செய்வது தோழி?’
குங்குமம் தோழி,
தபால் பெட்டி எண்: 2924
எண்: 229, கச்சேரி சாலை,
மயிலாப்பூர், சென்னை – 600 004

வாசகிகள் கவனத்துக்கு,
பிரச்னைகள் குறித்து எழுதும் போது பிரச்னைகளுடன் முழு விவரங்களையும் குறிப்பிடுங்கள். சம்பவங்களை, காரணங்களை தெளிவாக… ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல…Post a Comment

Protected by WP Anti Spam