By 13 May 2020 0 Comments

பெண் சொல்வதைத்தான் உலகம் நம்புமா? (மகளிர் பக்கம்)

என்ன செய்வது தோழி?

அன்புத் தோழி…எங்களுக்கு ஒரே மகன். ரொம்ப ஜாலியானவன். அவன் இருக்குமிடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். எதற்காவது திட்டினால் கூட கோபப்பட மாட்டான். சிரித்தபடியே பேசி நம் கோபத்தை குறைத்து விடுவான். கள்ளம் கபடம் கிடையாது. எல்லோருக்கும் அவனை பிடிக்கும்.

அதனால் அவனுக்கு பிடித்த மாதிரி இருக்க வேண்டுமே என்று ஊர் ஊராக பெண்ணைத் தேடி பிடித்து திருமணம் செய்து வைத்தேன்.‘பொருத்தமாக இருக்கிறது’ என்று எல்லோரும் பாராட்டினார்கள். எனக்கும் பெருமையாக இருந்தது.

ஆனால் அதெல்லாம் ஒரு மாதம் கூட நீடிக்கவில்லை. மகனுக்கும், மருமகளுக்கும் பிரச்னை. அவள் மாமா பையனை கல்யாணம் செய்து கொள்ள விரும்பினாளாம். வீட்டில் கட்டாயப்படுத்தி என் பிள்ளைக்கு கட்டி வைத்து விட்டார்களாம். அதனால் அவனுடன் ஒப்பிட்டு என் பிள்ளையை கிண்டல் செய்வாளாம்.

ஆரம்பத்தில் இதையெல்லாம் அவன் ெபரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வழக்கம் போல் அவளை சிரிக்க வைத்து சரி செய்ய பார்த்திருக்கிறான். முடியவில்லை. ‘இன்னும் கொஞ்ச நாள்தான் என் மாமா பையனுடன் போய் விடுவேன்’ என்று சொல்ல ஆரம்பித்துள்ளாள். இதெல்லாம் எங்களுக்கு பல மாதங்கள் கழித்துதான் தெரியும்.

நானும் அவளை எந்த வேலையும் வாங்கியதில்லை. சாப்பிடுவாள். அவளுக்கு பிடித்த சேனலை பார்ப்பாள். தூங்குவாள். நானும் ‘செல்லமாக வளர்ந்த பெண் அப்படித்தான் இருப்பாள்’ என்று கண்டு கொள்ளவில்லை.ஆனால் என் பையன் சொன்ன விவரங்கள் என்னை பதற வைத்தன. பிரச்னையை பெரிதாக்க வேண்டாம் என்று அவளது பெற்றோரிடம் தெரிவித்தேன். அவர்களோ, ‘எங்களிடம் அவள் ஏதும் சொன்னதில்லை. தெரிந்திருந்தால் இந்த திருமணத்தை நடத்தியிருக்க மாட்டோம். வேண்டுமானால் கொஞ்ச நாட்கள் தனிக்குடித்தனம் நடத்தட்டும் எல்லாம் சரியாகிவிடும் ’ என்றனர்.

நாங்களும் ‘சரி’ என்று தோன்றவே தனிக்குடித்தனம் வைத்தோம். அதனால் பிரச்னைதான் தீவிரமானது. சமைப்பது, துவைப்பது என்று எல்லாம் என் மகன்தான் செய்வானாம். சாப்பிட்ட தட்டை கூட எடுத்து வைக்க மாட்டாளாம். மகனின் ஊதியம் வரும் வங்கியின் ஏடிஎம் அட்டையை அவள் வாங்கி வைத்துக் கொண்டாள். அதுமட்டுமல்ல அவனின் செல்போனுக்கும் ‘பாஸ்வேர்டு’ போட்டு வைத்து விட்டாளாம். ‘பிங்கர் பிரின்ட்’ வைத்துதான் அந்த செல்போனை பயன்படுத்தியுள்ளான்.

அதன் தொடர்ச்சியாக, ‘ஏன் மொபைைல எப்போதும் ஆன்லைனில் வைத்திருக்கிறாய்’ என்று சண்டை போடுவாளாம். போதாக்குறைக்கு அவன் அலுவலகத்துக்கு போய், ‘என் வீட்டுக்காரருடன் எந்ெதந்த பெண்கள் பேசுகிறார்கள் என்ற விவரத்தை கொடுங்கள். அவர் சரியில்லை. அவரை திருத்த வேண்டும்’ என்று தகராறு செய்திருக்கிறாள்.

திடீரென ஒருநாள் அவள் யாரிடமும் சொல்லாமல் அவளுடைய நகைகள், பொருட்களை எடுத்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு போய்விட்டாள். இப்போது 6 மாதமாகி விட்டது. திரும்பி வரவில்லை.என் மகனும் பொறுக்க முடியாமல் ‘விவாகரத்து செய்து விடலாம்’ என்ற முடிவுக்கு வந்தான். எங்களுக்கும் அதுதான் சரி என்று தோன்றியது. எனவே எங்கள் முடிவை அவள் பெற்றோரிடம் தெரிவித்தோம். அதற்கு அவர்கள், ‘உங்க மகன்தான் எங்கள் பெண்ணை அடித்து வீட்டை விட்டு விரட்டி இருக்கிறான்.

எங்கள் பெண் அப்பாவி’ என்றனர்.அவர்களது மகளோ, ‘உன் பிள்ளை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தினான். திருப்பி கேட்டதற்கு நகைகளை பிடுங்கிக் கொண்டு என்னை வீட்டை விட்டு அடித்து துரத்தி விட்டான். எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம். அதனால் உங்க வீட்ல இருக்கிற எல்லார் மீதும் போலீசில் புகார் கொடுக்கப் போகிறேன்’ என்றாள்அதைக் கேட்டு அதிர்ந்து போன நாங்கள், எதுவும் பேசாமல் பயந்து போய் வீட்டுக்கு வந்து விட்டோம்.

அவள் புகார் கொடுத்தால் என் பிள்ளைக்கு தலைகுனிவு, கஷ்டம் வருமோ என்று அச்சமாக உள்ளது. எப்போது போலீஸ் எங்களை தேடி வருவார்கள் என்று பயமாக இருக்கிறது. போலீசுக்கு போனால் அவள் சொல்வதை மட்டும்தான் கேட்பார்களா? எங்கள் தரப்பில் உள்ள நியாயத்தை கேட்க மாட்டார்களா? நீதிமன்றம் போனால் நியாயம் கிடைக்குமா? நாங்கள் சொல்லும் உண்மையை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? இல்லை பெண் என்பதால் அவள் சொல்வதைத்தான் நம்புவார்களா?

அதை கேட்டு என் பிள்ளைக்கு விவாகரத்து இல்லை விடுதலை கிடைக்குமா? பெண்கள் பாதுகாப்புச் சட்டம், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் எல்லாம் பெண்களின் தவறுகளுக்கு மட்டும்தான் துணை நிற்குமா?

எப்போதும் மகிழ்ச்சியாய், மற்றவர்களை உற்சாகமாக வைத்திருக்கும் வித்தை தெரிந்த என் மகன் குடும்ப வாழ்க்கையில் தோற்று விட்டான். வாடி நிற்கும் அவனை பார்க்க எங்கள் வயிறு எரிகிறது. எங்களுக்கு நியாயம் கிடைக்குமா? அவளிடம் இருந்து என் குடும்பத்துக்கு சட்டப்படி விடுதலை கிடைக்குமா? அதற்கு நாங்கள் என்ன செய்வது தோழி?இப்படிக்கு ெபயர் வெளியிட விரும்பாத வாசகி.

நட்புடன் தோழிக்கு,

உங்கள் பயத்தில் நியாயமில்லை. நீங்கள் எந்த தவறும் செய்யாத போது எதற்காக பயப்பட வேண்டும். உங்கள் மீது யாராவது போலீசில் புகார் கொடுத்தால் உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்து விட மாட்டார்கள். இரண்டு தரப்பையும் விசாரிப்பார்கள்.
அதுவும் குடும்ப பிரச்னைகள் தொடர்பாக புகார்கள் கொடுக்கும் போது கட்டாயம் நிதானமாகத்தான் போலீஸ் நடவடிக்கை எடுக்கும். இரண்டு தரப்பையும் விசாரிப்பார்கள்.

இதுபோன்ற எத்தனை வழக்குகளை அவர்கள் பார்த்திருப்பார்கள். அதனால் யார் தரப்பில் தவறு இருக்கிறது, யார் பொய் சொல்கிறார்கள் என்று எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள்.தவறு யார் பக்கம் இருந்தாலும் சமாதானமாக போவதற்குதான் ஆலோசனை சொல்வார்கள். கணவன் – மனைவியை பேச வைப்பார்கள். கவுன்சிலிங் தருவார்கள்.

அதிலும் தீர்வு ஏற்படவில்லை என்றால், ‘கோர்ட்ல பார்த்துக்குங்க’னு அனுப்பி விடுவார்கள்.எனவே போலீசில் புகார் வந்ததும் ‘எப்ஐஆர்’ போட மாட்டார்கள். உங்கள் மகன் மீது அடிப்பதாக, நகையை பிடுங்கி வைத்துக் கொண்டதாக மருமகள் சொன்னாலும் போலீஸ் அதை கட்டாயம் கண்டுபிடித்து விடுவார்கள்.

அதுமட்டுமல்ல, உங்கள் மருமகள் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு போய் விட்டதால், உங்கள் மகனே கூட முதலில் புகார் தரலாம். சேர்ந்து வாழ விருப்பமில்லை என்றால் நீதிமன்றத்தை நாடி விவாகரத்து வழக்கு தொடரலாம்.மருமகள் செய்த கொடுமைகள், மாமா மகன் குறித்த பேச்சுகள் குறித்த ஆவணங்கள் இருந்தால் அதை நீதிமன்றத்தின் முன் வைக்கலாம். அவர் செய்யும் கொடுமைகளை உங்கள் மகன் சகி்த்துக் கொண்டு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

மருமகள் வீட்டினர் செல்வாக்கு உள்ளவர்கள் என்ற காரணங்களால் போலீசுக்கு செல்ல தயக்கம் இருந்தால் நேரடியாக நீதிமன்றத்தை நாடலாம். புகார் கொடுப்பது, வழக்கு தொடுப்பது என்ற எந்த முடிவு எடுப்பதற்கு முன்பு ஒரு வழக்கறிஞரின் ஆலோசனையை கேட்கலாம். உங்கள் பிரச்னைகள் கட்டாயம் முடிவுக்கு வரும்.Post a Comment

Protected by WP Anti Spam