By 16 May 2020 0 Comments

‘படித்தது பொறியியல்; பார்ப்பது பண்ணை’ (கட்டுரை)

அரச வேலை ஒன்று மட்டுந்தான் அபிமானம் மிகுந்தது என்று நினைக்காதீர். வேலை செய்யாமலே மாதாந்தச் சம்பளம் பெறுவது பற்றிக் கனவு காணாதீர்”. இவ்வாறு, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

வேலையில்லாப் பட்டதாரி ஒருவரால் கேட்கப்பட்ட கேள்வியின் அடிப்படையில், வாரம் கேள்வி-பதில் அறிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

“நாங்கள் வேலையில்லாப் பட்டதாரிகள், எமக்கு வேலை வேண்டும். கடந்த பல வருடங்களாக, வேலைக்காக அலைகின்றோம். அரசாங்க ஆதரவு அரசியல்வாதிகள்தான் வேலை தருவதாகக் கூறுகின்றார்கள்”. இவ்வாறு, இன்னும் உள்ளம் குமுறுகின்றார், அந்த வேலையில்லாப் பட்டதாரி.
இது தொடர்பில், அரச நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் பட்டதாரி ஒருவருடன் உரையாடும் போது, அவரது மனைவியும் பிறிதோர் அரச நிறுவனத்தில் பணியாற்றும் பட்டதாரி ஆவார்.

அவர், தனது பல்கலைக்கழகத்தின் பீடாதிபதியை, ஒரு தேவையின் பொருட்டுச் சந்தித்துள்ளார். வழமையான உரையாடலின் போது, “மனைவியும் நானும் அரச திணைக்களத்தில் பணியாற்றுகிறோம்” என (பெருமையுடன்) பீடாதிபதியிடம் சொல்லியிருக்கிறார். பீடாதிபதி, “எப்படி அரசாங்க உத்தியோகம், திருப்தியுடனும் ஈடுபாட்டுடனும் பணியாற்றுகின்றீர்களா” எனக் கேட்டிருக்கிறார்.

“பிடிச்ச வேலை ஒன்று, கிடைத்த வேலை பிறிதொன்று. கோழி மேய்ச்சாலும் கவுன்மெந்தில (அரசாங்கம்) மேய்க்கவேனும்” எனக் கூறினாராம்.

“அப்படியென்றால், பொதுவாகக் கணிசமான பட்டதாரிகள் செய்வதைப் போலவே, நீங்களும் செய்து உள்ளீர்கள்” எனப் பீடாதிபதி பதில் அளித்தாராம்.

“அது என்ன சேர். பொதுவாகப் பட்டதாரிகள் செய்வது” எனக் கேட்டாராம்.

“அதாவது, மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பது. பல்கலைக்கழகத்திலிருந்து பட்டதாரியாக வெளியேறிய உடனேயே, அரச நியமனத்தை எதிர்பார்ப்பது, நியமனம் சில வேளைகளில் வலிந்து கிடைக்கும். பல வேளைகளில் போராட்டங்களை நடத்தி வலிந்து பெற்றுக்கொள்வது. அப்படியே 55, 60 வயது வரை கடமையாற்றுவது, பின்னர் இளைப்பாறுவது” எனக் கூறினார்.

“நீங்கள், மனைவி என இருவரும் அரச வேலை புரிகின்றீர்கள். ஆனால், உங்கள் மனைவி அரச வேலை செய்ய, நீங்கள் உங்களுக்குப் பிடித்த பணியைச் செய்திருந்தால் பணியிலும் திருப்தி, அதனால் மனதிலும் திருப்தி கிடைத்திருக்கலாம்” எனப் பீடாதிபதி கூறினாராம்.

ஏனெனில், மனைவி அரசாங்க வேலையில் இருக்கின்ற போது, மாதாந்தம் ஒரு தொகைப் பணம் சம்பளமாகக் கிடைக்கும். அது, உங்களது அன்றாட வாழ்க்கைச் செலவை (ஓரளவேனும்) தங்குதடையின்றி கொண்டு செல்ல உதவும்.

“உண்மைதான், நான் ஒரு சுயதொழில் தொடங்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் கற்ற அறிவின் ஒரு பகுதியை, அதற்குப் பயன்படுத்த வேண்டும். பல பேருக்கு இல்லாவிட்டாலும் சிலருக்காவது தொழில் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என அப்போது (பல்கலைக்கழகத்தில் கற்ற காலப் பகுதிகளில்) நினைந்திருந்தேன். ஏன், கனவு கண்டேன். இப்போது எனக்காக இல்லாவிட்டாலும் பெற்றோருக்காகவும் உறவினருக்காகவும் பிறருக்காகவும் பிடிச்ச வேலையை விட்டுவிட்டு, கிடைத்த வேலையைச் செய்து கொண்டிருக்கின்றேன்” எனக் கூறினாராம்.

ஒரு பானை சோற்றுக்கு, ஒரு சோறு பதம் என்பது போல, இது இந்த நாட்டில் அரச சேவையில் பணியாற்றுகின்ற பல பட்டதாரிகளுக்குப் பெரும்பாலும் பொருத்தமானதாக இருக்கும். ஏதோ, உத்தியோகம் புருச இலட்சணம் எனப் பலர் பணியாற்றுகின்றார்கள்.

எங்கள் நாட்டிலும், ஏனைய நாடுகளைப் போலவே, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறி வருகின்றனர். ஏனைய அபிவிருத்தியடைந்த நாடுகளின் பல்கலைக்கழக மாணவர்கள், பட்டதாரிகள் ஆகியதும் பெரும்பாலும் தாங்களாகவே தங்களது துறைக்கு ஏற்ப சுயதொழில்களை ஆரம்பிக்கின்றார்கள்.
சில நாடுகளில், பல்கலைக்கழக மாணவர்களாகக் கல்வி கற்கும் போதே, பட்டதாரியாகியதும் (நாட்டுக்காக) என்ன வேலைத்திட்டம் செய்ய உத்தேசித்து உள்ளீர்கள் என்ற அறிக்கை, மாணவர்களால் சமர்ப்பிக்கப்படுவது வழமை.

ஆனால், அபிவிருத்தி அடைந்து வருகின்ற எங்கள் நாடுகளைப் போன்ற நாடுகளில், பட்டம் பெற்று, பட்டதாரிகள் ஆனதும் அரசாங்க வேலை வாய்ப்புகளை அரசாங்கத்திடம் எதிர்பார்த்துப் பல வருடக்கணக்கில் வீணே காத்திருப்பதும் அதற்காக உண்ணாவிரதம் வரை செல்வதும் சர்வசாதாரண விடயமாக உள்ளது.

அரசாங்க வேலையில் சுயதொழில்களைப் போல, நிதி ரீதியான ஆபத்துகள் இல்லை. அல்லது, மிகக்குறைவு. அரச சேவைக்கு எம் சமூகத்தில் உள்ள மதிப்பு, பணிக்குப் பின்னரான (55, 60 வயதுக்குப் பின்னர்) ஓய்வூதிய நன்மை, அரச சேவையில் உள்ள பொது விடுமுறை நாள்கள் எனப் பல விடயங்கள், அரச சேவைக்குக் கூடுதல் வலுச் சேர்க்கின்றன.

இவற்றைவிட, சொந்தமாகத் தொழில் செய்கிறவருக்கு எம் சமூகத்தில் எவர் முழு மனத்துடன் விரும்பி (விதிவிலக்காகவும் பலர் உள்ளனர்) தன்னுடைய மகளைத் திருமணம் செய்து வைப்பார்கள். ஒருவர் பட்டதாரியாக, அரச நிறுவனத்தில் பணியாற்றி, மாதாந்தம் ரூபாய் 40,000 சம்பளம் பெறுகின்றார் என எடுத்துக் கொள்வோம்.

மற்றையவர் சுயதொழில் செய்வதுடன் மட்டுமல்லாது, ஐந்து பேருக்கு தொழில் வாய்ப்புகளையும் வழங்கி, அண்ணளவாக மாதாந்தம் 80,000 ரூபாய் வரை நிகர இலாபமாகப் பெறுகின்றார் என எடுத்துக் கொள்வோம். ஆனால், முன்னையவரே திருமணச் சந்தையில் நிலையும் விலையும் உயர்ந்தவராகக் காணப்படுவார்.

ஆனால், அவ்வாறான அரச சேவையில் சேவைக் காலத்தில் எத்தனை வீதமானோர் மகிழ்ச்சியுடனும் ஈடுபாட்டுடனும் பணி செய்து வருகின்றனர் என்பது வினாக்குறியே. பலர் அரச சேவையில் ஓய்வு பெற்ற பின்னர், தங்களுக்குப் பிடித்தமான தொழில் செய்யும் எண்ணங்களோடும் திட்டங்களோடும் உள்ளனர்.

இதற்கிடையே, எமது நாட்டில் சில வகையான அரச நியமனங்கள் அரசாங்கங்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களுக்குள் சிக்கியிருப்பதையும் கண்டுகொள்ளலாம். எமது ஆட்சியிலேயே ஆயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கினோம் என அரசியல்வாதிகள் கூட்டங்களில் மார்தட்டிப் பேசுவார்கள்.

ஆனால், இது பட்டதாரிகளுக்கு கீழ் உழைப்பு நிலையை (ஒருவர், தனது கல்வி மற்றும் அனுபவங்களுக்குக் கீழான ஒரு தொழிலைச் செய்வது) ஏற்படுத்துகின்ற வாய்ப்புகளையும் ஏற்படுத்தலாம்.

இதேவேளை, சொந்தத் தொழிலிலும் ஒருவர் தந்தையின் தொழிலைப் பின்பற்றுவது அல்லது தந்தை, தாத்தாவின் தொழிலைப் பின்பற்றுவது கூட, எல்லா வேளைகளிலும் எல்லோரும் விரும்பிப் பின்பற்றுவது இல்லை. அதுபோலவே, எல்லோருக்கும் அது முன்னர் பின்பற்றியவர்களைப் போல, வெற்றி அளித்ததும் இல்லை.

ஓர் உருண்ட வடிவமுள்ள மனிதன், சில சமயங்களில் ஒரு சதுரமான ஓட்டைக்குள் நுழைவதும் சதுர வடிவமுள்ள மனிதன் வட்டமான ஓட்டைக்குள் திணிக்கப்படுவதும், முக்கோண வடிவமுள்ள மனிதன் செவ்வக ஓட்டைக்குள் திணிக்கப்படுவதும் சரியாகப் பொருந்தப் போவதில்லை.

ஆனால், எந்தத் தொழில் என்றாலும் செய்யும் தொழிலில் முழுமையான ஈடுபாட்டுடனும் ஆத்மதிருப்தியுடனும் செய்தாலே அப்பணியுடன் கரைந்து போகலாம். அப்பணியில் கரைந்து போனாலே அதன் (அதில்) உச்சத்தைத் தொட முடியும்.

ஆனால், இவ்வாறாக அரச தொழிலை எதிர்பார்க்கும் நிலை இந்தியாவில் (தமிழ்நாட்டில்) பெரியளவில் இல்லை. பொறியியல் துறையில் பட்டம் பெற்ற பலர் பாரியளவிலான ஒருங்கிணைந்த பண்ணைகள் (கால்நடைகள், பறவைகள், தோட்டம் எனப் பல வேலைத்திட்டங்களை ஒருங்கே செய்வது) நடத்துகின்றார்கள். வெற்றி பெறுகின்றார்கள்.

இவ்வாறான நிலையை, சில வேளையில் எமது நாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. ஆனாலும், அவர்களில் உள்ள முன்மாதிரிகளை நாம் கட்டாயமாகக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஆகவே, “அரச வேலை ஒன்று மட்டுந்தான் அபிமானம் மிகுந்தது என்று நினைக்காதீர்” என, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் கூறிவது போல, அரச வேலைக்காகக் காத்திருக்காமல் சிறிய அளவிலேனும் விருப்பமானதும் வருமானம் தரக்கூடியதுமான வேலையைத் தொடங்குவதே சாலச்சிறந்தது. தன்நம்பிக்கையுடன் தொடங்கினால் தளர்வின்றி தொடரப்படும்.

வாய்ப்புக் குறைவு என்று சொல்வது, பலவீனமான சஞ்சல மனம் எப்போதும் கூறும் சமாதானம் ஆகும். ஒவ்வொருவரின் வாழ்விலும் வாய்ப்புகள் நிரம்பி உள்ளன.

இதையே வாய்ப்பைக் கவனத்துடன் கண்டறிவதில் விழிப்புணர்வு, வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதில் சாமர்த்தியமும் துணிச்சலும், வாய்ப்பைப் பயன்படுத்த அதை ஒன்று சேர்த்துக் கொள்வதில் வேகமும் உறுதியும் என, இவை யாவும் வெற்றிக்கு உத்தரவிடும் போர்த் திறமைப் பண்புகள் ஆகும் என, ஒஸ்ரின் பெல்ப்ஸ் கூறுகின்றார்.Post a Comment

Protected by WP Anti Spam