By 19 May 2020 0 Comments

தொலைந்ததோ திறப்பு; அடி வாங்குவதோ பூட்டு !! (கட்டுரை)

சிறப்பான வாழ்வுக்கு அடிப்படையே, நாம் பாதுகாப்பாக இருக்கின்றோம் என்ற உணர்வு ஆகும். ஆனால், ஈழத் தமிழ் மக்கள் வாழ்வில் 1956, 1958, 1972, 1977, 1981, 1983 என ஒவ்வோர் ஆண்டும், அவர்களது பாதுகாப்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டது. தங்களுக்கு எதிராகத் திட்டமிட்டு நடாத்தப்பட்ட ஒவ்வொரு துன்பியல் நிகழ்வுகளையும் கவலைகளுடனும் துயரங்களுடனும் அவர்கள் கடந்து சென்றுகொண்டிருக்கிறார்கள்.

அதுபோலவே, இவற்றுக்கு முழுமையாகச் சிகரம் வைத்தது போல, 2009ஆம் ஆண்டு மே மாத முள்ளிவாய்க்கால் கொடூரங்களும் ஏக்கங்களுடனும் கனவுகளுடனும் கடந்த 11 ஆண்டு காலமாகக் கடந்து செல்கின்றது. எங்களுக்கு விடிவு கிடைக்காதா, எங்களுக்காக உலகம் தனது குரலை உயர்த்தாதா எனத் தமிழினம் காத்திருக்கின்றது.

இது இவ்வாறு நிற்க, ‘சும்மா நடிக்க வேண்டாம்; என்னோடு விளையாடாதே’ என, எங்களது அன்றாட உரையாடல்களில் நாம் அடிக்கடி உபயோகிப்பதுண்டு. ஆனாலும், நன்றாக நடிப்பவர்களே நடிகர்களாகவும் சிறப்பாக விளையாடுபவர்களே சிறந்த விளையாட்டு வீரர்களாகவும் கொழுத்த சம்பளம் பெற்று வருகின்றார்கள்; வருவாயை அள்ளிக் குவித்து வருகின்றார்கள்; பேரோடும் புகழோடும் வாழ்கின்றார்கள்.

இக்காலப் பகுதியில், உருவெடுத்துள்ள கொரோனா வைரஸ் கொடூரத்துக்குள்ளும் இந்நாள்களில் நினைவு கூரப்பட்டு வருகின்ற முள்ளிவாய்க்கால் கொடூர நினைவு நாள்களிலும் கூட, வடக்கு-கிழக்கின் சில அரசியல்வாதிகள் நன்றாக நடித்தும், சிறப்பாக விளையாடியும் வருகின்றனரோ எனத் தமிழ் மக்கள், கருத வேண்டிய நிலையில் உள்ளனர்.

ஏனெனில், தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட, ஒட்டுமொத்த மானுட குலத்துக்கு எதிரான துயரை, தனக்கு ஏற்பட்ட துயராகக் கருதும் உயர் நிலையை, இவர்கள் அடைந்திருந்தால், இன்றைய கீழ்நிலை அரசியலைச் செய்ய மாட்டார்கள் எனத் தமிழ் மக்கள், தங்களுக்குள் வேதனைப்படுகின்றார்கள்.

தமிழ் மக்களைத் தழுவிய நேசிப்பு இல்லாது, தங்களது பதவிகளுக்காகவும் பகட்டுக்காகவும் எனத் தங்களை மட்டுமே தழுவிய நேசிப்புடன் அரசியல்வாதிகள் வாழ்வதாக, தமிழ் மக்கள் சந்தேகம் கொள்கின்றார்கள்.

தமிழ் மக்களது அரசியல் பிரதிநிதிகள் சரியாக இருந்தால், தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால், மக்கள் பிரதிநிதிகள் தாங்கள் மட்டும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புவதால், தமிழ் மக்கள் சரியாக இல்லாது இருக்கின்றார்கள் போலும்.

பொதுவாக, அறிவுக்கூர்மை என்பது, அறிவுத்திறன் அலகு சம்பந்தப்பட்டதோ, படித்த படிப்போ, படித்த காலங்களோ, படித்த நிறுவனங்களோ, பட்டங்களோ அல்ல. மாறாக, அறிவுக்கூர்மை என்பது, செயற்படும் முறைமை ஆகும். அதாவது, சிக்கலான விடயங்களைக் கையாளுகின்ற முறைமை ஆகும்.

அவ்வாறாயின், போர் ஓய்ந்த கடந்த 11 ஆண்டு காலங்களில், தமிழ் மக்கள் சார்ந்து எவ்வாறான அறிவுக்கூர்மையுடன் தமிழ் மக்களது அரசியல் பிரதிநிதிகள் செயற்பட்டிருக்கின்றார்கள்? நிகழ்காலத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்; எதிர்காலத்தில் செயற்படப் போகின்றார்கள் என்பது, விடைகள் தெரியாத வினாவாகவே காணப்படுகின்றது.

தமிழ் மக்களது அரசியல் பிரதிநிதிகளது செயற்படும் முறைமையை, இரு விடயங்களில் அல்லது, கோணங்களில் அலசலாம். முதலாவது, தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், தமிழ்த் தேசியம் என்பதில் மிகுந்த உறுதிப்பாட்டுடன் உள்ளனர். அதற்காகவே, இழக்கக் கூடாத அனைத்தையும் இழந்தனர்.

ஆகவே, தமிழ் மக்களின் தேசியத்தைப் பாதுகாப்பதிலும் அதை மேலும் வலுவாக்குவதிலும் போர் ஓய்ந்த கடந்த 11 ஆண்டுகளில், அரசியல்வாதிகளால் என்ன செய்ய முடிந்தது அல்லது, சாதித்தவை என்ன?

அடுத்தது, 1948ஆம் ஆண்டு தொடக்கம், இன்று வரையுள்ள சிங்கள அரசாங்கங்களைப் பொறுத்தவரையில் தேசியம், தாயகம், சுயநிர்ணயம், அதிகாரப்பகிர்வு என்ற சொற்களைக் கேட்டாலே, ஒவ்வாமை ஏற்பட்டு விடுகிறது.

ஆகவே, இது விடயத்தில் எந்தளவு தூரம், போர்; ஓய்ந்த காலங்களில், இராஐதந்திர ரீதியான அணுகுமுறைகளால், எம் அரசியல்வாதிகளால் வெற்றி காண முடிந்தது. இது தொடர்பில், சர்வதேச ரீதியாக, இலங்கை அரசாங்கம் மீது எவ்வாறான அழுத்தங்களைப் பிரயோகிக்க முடிந்தது.

ஒருவர் உயிருடன் இருக்கின்றார் என்பதற்கான அடையாளம், அவர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் என்பதே ஆகும். அவர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் என்றால், அவர் சிந்திக்கின்றார் என்று அர்த்தம் கொள்ளலாம்.

எங்கள் செயல்களில் சறுக்கல்கள், தவறுகள், ஏமாற்றங்கள், தோல்விகள் எனப் பலதும் வரவே செய்கின்றன; செய்யும். இவைகள், தனி மனிதனுக்கும் தனிநபர்களால் நிர்வகிக்கப்படுகின்ற சமூகத்துக்கும் பொருந்தும். ஆனால், எங்கள் அரசியல்வாதிகள் தவறுகளையும் பிழைகளையுமே மீண்டும் மீண்டும் செய்து வருவதே, தமிழ் மக்களுக்குக் கவலைகளைத் தருகின்றது.

பொதுவாகச் சாதானையாளர்கள், ஒருமுறை செய்த தவறை, மீண்டும் செய்ய மாட்டார்கள். ஆகவே, இனப்பிணக்கு விடயத்தில், பல தசாப்தகால அனுபவம் உள்ளவர்கள் சற்றும் அனுபவம் இல்லாது சிந்திப்பது போலவே, நடப்பு நிகழ்வுகள் உள்ளன.

பொதுவாக, மனிதர்கள் பார்ப்பதை நம்புவதில்லை; மாறாக, ஏற்கெனவே நம்பியதையே, அதன் கோணத்திலேயே தொடர்ந்தும் பார்த்து வருகின்றார்கள். அதுபோலவே, சிங்கள மக்களும் தமிழ் மக்கள் அரசியல் தீர்வு அதிகாரப் பரவலாக்கல் எனக் கேட்டால், தனிநாடு கேட்கின்றார்கள், தமிழீழம் கேட்கின்றார்கள் என்றே கருதி வருகின்றார்கள்.

ஆகவே, இது விடயத்தில் தமிழ் அரசியல்வாதிகளால், சிங்கள முற்போக்கு சக்திகளோடு உறவாடி, உரையாடி அதன் ஊடே, சாதாரண சிங்கள மகனுக்கு, தமிழ் மக்களது மனங்களைப் படம் பிடித்துக் காட்டினார்களா? அதில் சாதித்தவை என்ன?

இவற்றுக்கெல்லாம், தனி மனித ஒழுக்கம், செயல் நேர்த்தி, அர்ப்பணிப்பு உணர்வு, சரியான உள்ளுணர்வு, உண்மை எனப் பல விடயங்களைப் பின்பற்ற வேண்டும்.

தமிழ் அரசியல்வாதிகளே! அன்று, ஆயுதப் போராட்டம் நடந்த போது, ‘சிறுபிள்ளை வேளாண்மை, வீடு வந்து சேராது’ எனக் கூறினார்கள். ஆனால், சரிபிழைகளுக்கு அப்பால், 1983 இல் திருநெல்வேலித் தாக்குதலும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட இனக்கலவரங்களுமே, 1985இல் திம்புவில் நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழ்ப் போராட்ட ஆயுத அமைப்புகளும் கலந்து கொண்ட பேச்சுவார்த்தைகளுக்கு அடிகோலின.

அதைத் தொடர்ந்து, இலங்கை-இந்திய ஒப்பந்தம் (1987) என, இறுதியாக முள்ளிவாய்க்கால் (2009) வரை, இலங்கைக்கு உள்ளே அகப்பட்டுக் கிடந்த சிங்கள-தமிழ் இனப்பிணக்கை, ஆயுதப் போராட்டமே ஐக்கிய நாடுகள் வரை கொண்டு சென்றது.

இதன் நீட்சியாகத் தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் கிடைக்கப் போகும் அரசியல் தீர்வு கூட, சர்வதேச அனுசரனையும் ஆசீர்வாதமும் இன்றிக் கிடைக்கப் போவதில்லை.

ஆனாலும், 30 ஆண்டுகள் நீடித்த ஆயுதப் போர், மேலும் அழிவுகளையும் இழிவு வாழ்வையும் கூடப் பரிசாகக் கொடுத்து விட்டுச் சென்றது துரதிர்ஷ்டமேயாகும். யாரும் நினைத்தும் பார்க்காத விடயமுமாகும். இவ்வாறான, போர்க்கால அவலங்கள், ஆழிப்பேரலைத் தாண்டவம் (2004) ஆகியவற்றால், தமிழ்ச் சமூகம் முடமாகிய நிலையில் உள்ளது.

இன்று, தமிழ்ச் சமூகம் மரணத்துக்கு முன்பே, நடைப்பிணமாக வாழ்கின்றது. ஏற்கெனவே, முழுச் சமூகமும் உளத்தாக்கத்தால் பாதிக்கப்பட்டு, மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் மெல்ல மீண்டு வருகையில், கொடிய தொற்று நோய் கொரோனா வைரஸ் தாக்கம், அதை இரட்டிப்பாக மாற்றி விடப்போகின்றது; முற்றிலும் முடக்கப் போகின்றது.

தமிழினத்தின் மீது, ஏற்படுத்தப்பட்ட ஒரு வெளியகப் போரால், (இனப்பிணக்கு) ஏற்பட்ட உள்ளகப் போர் (உளத்தாக்கம்) ஒய்வதற்குள் பிறிதொரு வெளியகப் போர் (கொரோனா) ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பில், உலகமே உறைந்து போய் இருக்கையில், தமிழ் அரசியல்வாதிகளோ, புரிந்துணர்வு இன்றி, மீண்டும் குதர்க்கமும் தர்க்கமும் புரிகின்றார்கள்.

தமிழ் அரசியல்வாதிகளுக்கிடையிலான ஒற்றுமை தொலைந்ததால், தமிழ் மக்களின் வளமான வாழ்வும், பின்நோக்கிச் செல்கின்றது. தமிழ் மக்களது பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்வோர், தமிழ் மக்களது எண்ணங்களைப் பிரதிபலித்தாலே, தமிழ் மக்களும் அவர்களைப் பின்பற்றுவார்கள்.

நாற்காலிகளால், அமருகின்றவர்கள் பெருமை பெறுகின்றார்களா? அல்லது, அமருகின்றவர்களால் நாற்காலிகள் பெருமை பெறுகின்றனவா என்பது ஒரு விவாதப் பொருள் ஆகும்.

பதவி ஆசையாலும் நாற்காலி நப்பாசையாலும் சண்டை போட்டுக் கொள்பவர்களால் என்றுமே சிறந்த பெறுபேறுகள் கிடைத்ததாகத் தெரியவில்லை. நாம், எமது சமூகத்தில் இறந்த பின்பும் வாழ வேண்டுமென்றால், நாற்காலியில் அமருவதைக் காட்டிலும் (தமிழ்) மக்களின் மனங்களில் அமர வேண்டும்.

மக்களின் மனங்களில் அமருபவர்கள், மக்களால் என்றும் நேசிக்கப்படுவார்கள்; பூசிக்கப்படுவார்கள். ஏன், அதையும் கடந்து, வழிபாட்டுக்கும் உரியவர்கள் ஆவார்கள்.Post a Comment

Protected by WP Anti Spam