By 25 May 2020 0 Comments

சிங்கப்பூர் பாலிமர் நகைகள் இப்போது சென்னையில்…!! (மகளிர் பக்கம்)

பட்டு நூல், க்வில்லிங் பேப்பர், டெரக்கோட்டா என வகை வகையான பொருட்களில் காதணிகளும், நகைகளும் பெண்கள் அனைவரும் விரும்பி அணிய ஆரம்பித்துவிட்டனர். அதிலும் உடைக்கு ஏற்ப மேட்சிங் அணிகலன்கள் இருப்பதால், எந்த உடைக்கும் மேட்சிங் செய்து கொள்கிறார்கள். இதன் வரிசையில் இப்போது புது வரவு பாலிமர் க்ளே அணிகலன்கள்.

பார்க்க பிரமாண்டமாக காட்சியளித்தாலும், இதன் எடை மிகவும் குறைவு தான் என்பதால், பல பெண்கள் இதனை விரும்பி அணிகிறார்கள். சிங்கப்பூர், சீனா, கொரியா போன்ற நாடுகளில் பிரபலமான இந்த அணிகலன்கள் இங்கு இந்தியாவிலும் இப்போது அறிமுகமாகி வருகிறது. அந்த நகைகளை வீட்டிலேயே செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறார் சங்கீதா அருள்மொழி ராஜா.

கணவர் சிங்கப்பூரில் வேலை பார்க்கும் சமயம், அங்கு வீட்டிற்குள் இருக்க முடியாமல், அருகிலிருக்கும் பாலிமர் க்ளே பயிற்சி வகுப்பில் இணைந்து, வண்ண வண்ண அணிகலன்கள் செய்ய கற்றுக்கொண்டார்.

குடும்பத்துடன் இந்தியா வந்து செட்டில் ஆனதும், இரண்டு குழந்தைகளும் வளர்ந்து
விட சங்கீதாவிற்கு வேறு வேலைகளில் கவனம் செலுத்த நேரம் கிடைத்தது. வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என்று முடிவெடுத்தார். மூன்று வருடங்கள் ஆன நிலையில் இப்போது ஆர்டர் எடுத்து பாலிமர் க்ளே அணிகலன்களை வழங்கி வரும் அளவு வளர்ந்திருக்கிறார்.

“முதலில் க்வில்லிங், பட்டு நூல் போன்ற பொருட்கள் கொண்டுதான் அணிகலன்கள் தயாரித்து வந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் அனைவருமே இதை செய்யும் போது, வித்தியாசமாக என்ன செய்யலாம் என்று யோசித்தேன். அப்போது தான், சிங்கப்பூரில் நான் கற்றுக்கொண்ட இந்த பாலிமர் க்ளே பொருட்கள் நினைவிற்கு வந்தது.

அலங்கார பொருட்கள் மட்டுமாக இல்லாமல், அதில் அணிகலன்கள் செய்யலாம் என்று யோசனையுடன் Golden Fish Creations என்ற பெயரில் என் சுயதொழிலை ஆரம்பித்தேன். இதில், கம்மல், செயின்கள், வளையல்கள் செய்கிறேன்.

பாலிமர் க்ளேவும் ஒரு விதமான மாடலிங் க்ளே வகைதான். அழகான கைவினை பொருட்கள் செய்யவும் அலங்காரங்களுக்கும் இவை பிரபலம். ஆசிய நாடுகளில் இப்போது கம்மல், நெக்லஸ் போன்ற பொருட்கள் செய்யவும் இவை பயன்படுகின்றன. இதில் அழகான ஸ்டைலான பொருட்கள் செய்ய முடியும். அது வெகுநாட்கள் நீடித்து நிற்கும் என்பதால், விலை அதிகம்.

எனக்கு தேவையான பொருட்கள் தரமாக இருக்க வேண்டும் என்பதால் ஸ்பெஷலாக இறக்குமதி செய்கிறேன். நமக்கு தேவையான அளவில், தேவையான வடிவத்தில் அணிகலன்கள் செய்ய முடியும். பொருட்களை செய்து முடித்ததும், அதை Oven அடுப்பில் குறிப்பிட்ட நேரம் சூடாக்கி எடுத்தால் நமக்கு தேவையான மாடலில் பொருட்கள் கிடைத்து விடும்” என்றவர் இவை எல்லாம் பல வண்ணங்களில் வருவதால், வண்ணம் தீட்ட தேவையிருக்காதாம். கல்லூரி மாணவிகள் முதல் வயதான பெண்கள் என அனைவருமே விரும்பி வாங்குகிறார்கள். அனைத்து தரப்பினருக்கும் ஏற்றார் போல, பாரம்பரிய முறையிலும், மார்டன் உடைகளுக்கு ஏற்ற ஸ்டைலான அணிகலன்கள் என அனைத்து வகையிலும் டிசைன் செய்யலாம்.

‘‘பொதுவாக டெரக்கோட்டா அணிகலன்கள் கொஞ்சம் ஹெவியாக இருக்கும் என்பதால், அதிக நேரம் அணிய முடியாது. பாலிமர் க்ளே ஜூவல்லரிகள் எடை குறைவாக இருக்கும். விழா காலங்களில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அணியலாம். இருப்பதே தெரியாது. அலர்ஜியும் ஏற்படுத்தாது.

எல்லாவற்றையும் விட வாடிக்ைகயாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப யுனீக்காக செய்து தருகிறேன். அதனால் ஒரே டிசைன் மறுபடியும் நான் ரிபிட் செய்வதில்லை. சில சமயம் ஒரே குடும்பத்தை சேர்ந்தவங்க, ஒரே மாதரி அணிகலன் வேண்டும் என்று கேட்பார்கள். அதுவும் செய்து தருகிறேன். இவை தவிர எனக்கான தனிப்பட்ட டிசைன்களிலும் வடிமைக்கிறேன்.

இந்தியாவை பொறுத்தவரை பாலிமர் க்ளே நகைகள் செய்யும் அனைவருமே அதிக விலையில்தான் விற்கிறார்கள். காரணம் ஒரு சிறிய க்ளே பாக்கெட்டில் இரண்டு கம்மல்கள் தான் செய்ய முடியும். அதனால் தான் இதன் விலை கொஞ்சம் அதிகம். என்னை பொறுத்தவரை, நான் இந்த தொழிலை என் விருப்பத்திற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்கிறேன்.

அதனால் பொருட்கள் வாங்க ஆகும் செலவு போக கூரியர் செலவுகளுக்குமே வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் பணம் செலுத்துவார்கள். அவர்கள் விற்பது போல் அதிக விலையில் நான் விற்பது இல்லை. என்னைப் பொறுத்தவரை கல்லூரி மாணவர்கள் முதல் வீட்டில் இருக்கும் பெண்கள் வரை அனைவரும் நான் செய்த நகைகளை அணிய வேண்டும். அதனால் பலதரப்பட்ட பெண்களின் பட்ஜெட்டிற்குள் அடங்கும் விலையிலேயே விற்கிறேன்” என்றார்.

பாலிமர் க்ளே நகைகள் செய்வதில் இருக்கும் சவால்கள் பற்றி விவரிக்கும் சங்கீதா, “இதில் செய்யும் பொருட்கள் அழகாக இருந்தாலும், இதை கவனமாக செய்ய வேண்டும். ஒரு முறை டிசைன் செய்து Oven அடுப்பில் வைத்ததும், அதை மேலும் திருத்தங்கள் செய்ய முடியாது.

பெரிய வேலைப்பாடுகளுடன் நகை செய்வது சுலபம். ஆனால் சின்னச் சின்ன வேலைப்பாடுகள் செய்ய அதிக நேரமும் உழைப்பும் தேவை. ஒரு சின்ன ரோஜா பூவில் வண்டு இருப்பது போன்ற அலங்காரம் செய்ய, ஒரு நாள் முழுக்க தேவைப்படும். அதனால் அதுபோல சிக்கலான டிசைன்களுக்கு கூடுதல் செலவாகும்’’ என்றார்.

நகை விற்பனையை தாண்டி சங்கீதா, பயிற்சி வகுப்புகளும் எடுக்கிறார். ‘‘முதல் இரண்டு வகுப்புகளிலேயே இதன் அடிப்படைகளை கற்றுக் கொள்ளலாம். புதிய டிசைன்கள், சிக்கலான வடிவமைப்புகள் பற்றி தெரிந்து கொள்ள கூடுதல் வகுப்புகள் உண்டு. வாடிக்கையாளர்களுக்கு வசதியாக சென்னையில் சில முக்கிய பகுதிகளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவியுடன் அவர்களது இடத்திலேயே சில வகுப்புகளும் ஏற்பாடு செய்கிறேன்.

நான் இந்த தொழில் துவங்கி மூன்று வருடமாகிறது. இன்றும் என்னுடைய வெற்றிப் பயணத்திற்கு என் குடும்பம் தான் முக்கிய காரணம். தேவையான பொருட்கள் வாங்க, நகைகளை கூரியர் அனுப்ப என பல வேலைகளில் என் சகோதரிகள் அவர்களின் கணவர்கள் தான் உதவியாக இருக்கிறார்கள். பொழுதுபோக்கிற்காகத்தானே வேலை செய்கிறேன் என்று ஒதுக்கிவிடாமல், நான் எது செய்தாலும், அதற்கு பக்கபலமாய், பாராட்டி ஊக்குவிப்பது என் குடும்பத்தினர்தான்’’ என்கிறார் சங்கீதா.Post a Comment

Protected by WP Anti Spam