By 25 May 2020 0 Comments

உணர்வுபூர்வமாகவும் இதய சுத்தியோடும் சிந்திப்போம் – பைஸர் முஸ்தபா!! (கட்டுரை)

 

கொரோனா தொற்றின் இன்றைய இக்கட்டான சூழ்நிலையை, அக்கறையோடும் உணர்வு பூர்வமாகவும் இதய சுத்தியோடும் சிந்தித்துச் செயற்படுவோம். உறவுகளைப் பிரிந்து, உயிர்களை இழந்து, தொழில் வருமானங்களை இழந்திருக்கும் இன்றைய நிலையில், புனித நோன்புப் பெருநாளில் இறைவனிடம் இரு கரமேந்திப் பிரார்த்திப்போம் என, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று, உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு, நாட்டில் ஏற்படுத்தியுள்ள கொடூரம், சமூகங்களுக்கிடையில் ஏற்படுத்தியுள்ள மனக்கசப்புக்கள் என இன்றைய சூழலில் நாம் நோன்புப் பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். கொரோனா தொற்றினால் கடந்த நாட்களில் நமது நாட்டில் ஒன்பது உயிர்களை இழந்துள்ளோம். இத்தொற்றினால் மரணித்த நான்கு முஸ்லிம்களின் ஜனாஸாக்களும் எரித்து சாம்பலாக்கப்பட்டிருக்கின்றது. இதில், இரண்டு முஸ்லிம்களின் சடலங்கள் கொரோனா என்பது உறுதிப்படுத்தப்படாமலேயே எரிக்கப்பட்டது மிக வேதனையான விடயமாகும்.

எமது முஸ்லிம் பெண் சகோதரி ஒருவரின் ஜனாஸா கூட எரித்து சாம்பலாக்கப்பட்டமை எனக்கு கவலையைத் தருகிறது. ஆக, இவ்வாறான துக்ககரமான ஒரு சூழ் நிலையிலேயே இப்பெருநாளை நாம் இம்முறை கொண்டாடுகின்றோம் என்பதையும், அனைவரும் மனதில் நிறுத்தி இவர்களுக்காகவும் இப்பெருநாளில் பிரார்த்தனை புரிய வேண்டும். இந்தத் தொற்றுத் தாக்கத்திலிருந்து நம்மையும், நம் குடும்பத்தையும், நம் உறவுகளையும், நம் நாட்டையும் பாதுகாத்துக் கொள்ளும் கட்டாயத் தேவைப்பாட்டிலும் ஒவ்வொரு முஸ்லிமும் இருப்பது அவசியமாக இருப்பதுடன், இத்தொற்று நாட்டிலிருந்து விரைவில் நீங்கவும் இத்திருநாளில் பிரார்த்திக்க வேண்டும். முஸ்லிம்கள் இந்நாட்டுக்கும் இந்த உலகுக்கும் விசுவாசமானவர்களாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். நாம் எம்மை ஒருபோதும் காட்டிக்கொடுக்கக் கூடாது. இதனை நாம் ஒவ்வொருவரும் சிந்திந்துச் செயற்படுவோமாக இருந்தால், கொரோனா தொற்றின் தாக்கத்திலிருந்தும் நிச்சயம் எமக்கு வெற்றி கொள்ள முடியும் என்பதையும் நினைவூட்டிக் கொள்ள விரும்புகின்றேன்.

எமது உறவுகளைப் பிரிந்து, உயிர்களை இழந்து, தொழில், வருமானங்களை இழந்திருக்கின்ற இன்றைய நிலையில், இந்தப் பெருநாளை கடந்த காலங்களில் கொண்டாடியதைப் போன்று இம்முறை பெரும்பாலானோர் கொண்டாடுவார்களா என்பது சந்தேகமாகவே உள்ளது. என்றாலும், புனித ரமழான் முடிவடைந்த கையோடு, நோன்புப் பெருநாளை அடைந்துள்ள ஒவ்வொரு முஸ்லிம் சகோதர, சகோதரிகளும் இன்றைய இக்கட்டான சூழ்நிலை குறித்து, மிகுந்த அக்கறையோடும், உணர்வுபூர்வமாகவும், இதய சுத்தியோடும் சிந்திக்க வேண்டும். கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக புனித கஃபதுல்லாஹ், புனித மஸ்ஜிதுன் நபவி, நபி (ஸல்) அவர்களின் புனித “ரவ்ழா ஷரீப்” என்பன மூடப்பட்டுக் கிடக்கின்றன. அத்துடன், உலகிலுள்ள அனைத்து மஸ்ஜிதுகளும் மூடப்பட்டுக் கிடக்கின்றன.

இதேவேளை, கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக இலங்கையிலும் முழு உலகிலுமுள்ள முஸ்லிம்கள் ஜமாஅத் தொழுகை இல்லாமல் வீடுகளுக்குள் முடங்கி, பள்ளிவாசல்களுக்குச் சென்று கூட்டாகத் தொழுத மகிழ்ச்சி இல்லாமல் தவிக்கின்றார்கள். இன்றைய நிலையில், இலங்கையில் பத்து ஜும்ஆக்களை இழந்த நிலையில், ரமழான் வந்தால் முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்கள் ஆன்மீகச் சூழலில் பூத்துக் குலுங்கும். அக மகிழ்ச்சியாக இருக்கும். பள்ளிவாசல்கள் வணக்க வழிபாடுகளாலும் நல்லமல்களில் ஈடுபடுகின்ற ஈமானிய உள்ளங்களாலும் நிறைந்து வழியும். ஆனால், இன்று அவையெல்லாம் இழந்து ஒரே சோகமாக எல்லாப் பிரதேசங்களும் வீடுகளும் கவலை தேய்ந்த முகத்துடன் காட்சியளித்துக் கொண்டிருக்கின்ற இந்த வேளையிலேயே, நோன்புப் பெருநாள் நம்மத்தியில் பிறந்துள்ளது.

இன்றைய சூழ் நிலையில், பெருநாளைக் கொண்டாடும் மனோ நிலையில் நாமில்லை என்றாலும், பெருநாளைக் கொண்டாடத்தான் வேண்டுமென்ற நிலை இருக்குமானால், புத்தாடை அணிந்து தான் பெருநாள் கொண்டாட வேண்டுமென்ற எந்தக் கடப்பாடும் கட்டாயமும் மார்க்கத்தில் இல்லையென்பதை நாம் எல்லோரும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளின் பிரகாரம், இருக்கின்ற நல்ல ஆடைகளை அணிந்து கொண்டு, பெருநாள் தொழுகைக்குச் செல்ல வேண்டுமென்பதேயொழிய, புத்தாடை தான் வாங்கி உடுக்க வேண்டுமென்ற எந்தக் கடப்பாடும் நமக்கு கிடையாது என்பதையும் புரிந்து கொண்டு நாம் செயற்பட வேண்டும். இம்முறை நாம் “பெருநாள் தொழுகைக்கே பள்ளிவாசலுக்கு அல்லது வெளியே போக முடியாது” என்ற நிலையிலுள்ள போது, பெருநாள் தினத்தன்று அல்லது அதற்குப் பின்னரான தினங்களில் வெளியே சென்று,

வீண் பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ளாமல், மிகக் கவனமாகவும் அமைதியாகவும் நடந்துகொள்ள வேண்டும். இக்கட்டான இன்றைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பெருநாள் தினத்தில் யாரும் வீண் செலவுகள் செய்யக் கூடாது. தங்களது தேவைக்கு மேலதிகமான பணத்தைச் சேமித்து, உணவில்லாமல் தவிக்கும் ஏழை எளியவர்களுக்குக் கொடுத்து உதவுவதே, இச்சந்தர்ப்பத்தில் நாம் செய்யும் மிகச் சிறந்த கைங்கரியமாகும். நிச்சயமாக ஒரு முஸ்லிம் செய்கின்ற காரியங்களிலே, மிகச்சிறந்த காரியமாக அது இருக்குமென்பதைப் புரிந்து, இந்தப் பெருநாளை நாம் மிகவும் அமைதியான, கண்ணியமான முறையில் கழிப்பதற்கு திட சங்கற்பம் பூணுவோமாக…!Post a Comment

Protected by WP Anti Spam