மலையக அரண் சாய்ந்துவிட்டது !! (கட்டுரை)

Read Time:18 Minute, 38 Second

மலையக மக்களின் ஏகோபித்தக் குரலாக, நாடாளுமன்றம் முதல் உலகளவில் ஓங்கி ஒலித்த குரல், இன்று ஓய்ந்துவிட்டது. மலையகத்தைக் கட்டிக்காத்துவந்த மாபெரும் அரண் சாய்ந்துவிட்டது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் மலையக கிராமங்கள் அபிவிருத்தி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், தனது 55ஆவது வயதில், தலங்கம வைத்தியசாலையில், நேற்று முன்தினம் (26) மாலை காலமானார்.

அவரது இழப்பால், மலையகப் பெருந்தோட்ட மக்கள், ஆதரவாளர்கள், இ.தொ.காவின் அரசியல்பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட முழு இலங்கை மக்களும் பெரும் துயர்கொண்டுள்ளனர்.
அரும்பெரும் தலைவர்களின் இழப்புகளால் மலையகம் அண்மைக் காலமாக சாபக்கேட்டை எதிர்கொண்டுள்ளது என்றே கூறலாம்.

மலையகத்தின் தலைசிறந்த ஆளுமைகள் ஒவ்வொருவரையும் மலையகம் இழந்துகொண்டு வருகின்றது. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், பெ.சந்திரசேகரன், வேலாயுதம், எஸ்.அருள்சாமி உள்ளிட்ட பலரின் இழப்புகளே இன்னும் ஈடுசெய்யப்படாத நிலையில், மலையகத்தின் மைந்தனாகவே திகழ்ந்து, தனது கம்பீர அரசியலால் மலையக மக்களுக்காக ஓங்கிக் குரலெழுப்பி வந்த தலை சிறந்த மலையக வீரனை, மலையக மக்கள் இன்று இழந்து தவிக்கின்றனர்.

ஒருவரின் இழப்பை ஈடுசெய்ய முடியாது. அதுவும் மலையகம் எனும் மாபெரும் பிரதேசத்துக்கே ஒற்றைத் தலைவனாய் நின்று, அம்மக்களைத் துன்ப துயரங்களிலிருந்து மீட்டு, அம்மக்களுக்காகக் குரலெப்பி அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுத்து, தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சும் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் போராடி, அவர்களது ஏதேச்சதிகாரம், தொழிலாளர்களைப் பாதிக்காது பாதுகாத்து வந்த காவலரண் அவர்.

மலையகத்தைப் பொறுத்தளவில், பல்வேறு தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்காகக் குரல்கொடுத்து வருகின்றன. ஆனால், அனைத்துத் தொழிற்சங்கங்களுக்கும் தாய்த் தொழிற்சங்கம், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்றால் அது மிகையில்லை.

இ.தொ.காவின் பாசறையில் வளர்ந்தவர்களே, அரசியல் முரண்பாடுகளால் அந்தத் தொழிற்சங்கத்தை விட்டுப் பிரிந்து புதிய தொழிற்சங்கங்ளை உருவாக்கி, அவரவர் கொள்கைகளுக்கு ஏற்றவகையில் மலையக மக்களை வழிநடத்தி வருகின்றனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவுக்குப் பிறகு, இ.தொ.காவின் தலைமைப் பொறுப்பை ஏற்று அதன் பின் பொதுச் செயலாளர் பொறுப்பையும் ஏற்று, ஒரு தந்தையாக இருந்து மலையகத்தை வழிநடத்தி வந்தவர் ஆறுமுகன் தொண்டமான். ஆனால், அவரது இழப்பு இன்று மலையகத்துக்கே சாபக்கேடாகிவிட்டது. அந்த ஆளுமைமிக்கத் தலைவனுக்கு ஈடாக ஒரு தலைவன் மலையகத்துக்கு இனி இல்லை.

கம்பீர அரசியலே அவரது அடையாளம். அந்தக் கம்பீரத்துக்குப் பயந்தே, தொழிலாளர்கள் மீது கைவைக்க, அவர்களை அடிமைப்படுத்த பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடைநடுங்கின. அந்தக் கம்பீரத்துக்கு அடிபணிந்தே, மலையக அரசியலும் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
அவர் தொடர்பில் எத்தகைய விமர்சனங்கள் இருந்தாலும், ‘ஆறுமுகன்’ என்ற ஒரு தலைவன் இல்லை எனில், மலையகத் தொழிலாளர் வர்க்கம் நசுக்கப்பட்டுப் போயிருக்கும். அந்த கம்பீர அரசியலை மலையகத்தில் இனிக் காணக்கிடைக்குமா என்பதே, மலையக மக்களின் ஏக்கமாக அமைந்துள்ளது.

பெருந்தோட்ட நிறுவனங்களின் கெடுபிடிகளை தற்துணிவோடு எதிர்த்து நின்றுப் போராடி, மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுத்தவர் ஆறுமுகன் தொண்டமான்.
1998ஆம் ஆண்டு முதல், முதலாளிமார் சம்மேளனத்துடன் நேருக்கு நேர் நின்று, அவர்களது குறைகளைச் சுட்டிக்காட்டி, தொழிலாளர்களுக்கான உரிமைகளை 20 வருடங்களுக்கும் மேலாகக் கட்டிக்காத்து வந்தவர். அவரது இழப்பு பேரிழப்பாகிவிட்டது.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், அமரர் பெ.சந்திரசேகரன் உள்ளிட்டோர் மறைந்தாலும், அவர்களுக்கு நிகரான ஒரு தலைவனாக ஆறுமுகன் தொண்டமான் இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால், அவருக்குப் பின், ஓர் இடைவெளி மட்டுமே எஞ்சி நிற்கின்றது.

‘தொழிற்சங்கம்’, ‘அரசியல்’ என வரும்போது, நேர், எதிர் என இருபக்கங்களும் இருக்கவே செய்கின்றன. குற்றங்காணாத எந்த அரசியல்வாதியும், இலங்கையில் ஏன் உலகளவில் இல்லை. சில சில குறைபாடுகளால், மக்களின் மனதில் அவர் தொடர்பில் விரிசல் ஏற்பட்டாலும், அதனைச் சரிசெய்து மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்து, அனைத்து மக்களையும் ஒரு குடையின் கீழ் கட்டிக்காத்து வந்தவர் ஆறுமுகன் தொண்டமான்.

இந்திய வம்வசாவளி மக்கள் தொடர்பில், பாரத நாடு இன்னும் கரிசனை கொள்கின்றது என்றால், அது இ.தொ.கா என்னும் ஆலவிருட்சத்தின் அரசியல் காரணமாகத்தான். இலங்கைக்கும் இந்தியாவுக்குமான பிணைப்புக்கு, இ.தொ.காவே பாலமாக இருந்துச் செயற்பட்டும் வருகிறது.

தமிழ்நாட்டின் தலைவர்களான அமரர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் மரணச்சடங்குளில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டமை, இ.தொ.காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருக்கத்தைப் பறைசாற்றுகிறது.

அமரர் ஆறுமுகன் தொண்டமான் மரணிப்பதற்கு ஓரிரு மணித்தியாலங்களுக்கு முன்பும்கூட, இலங்கைக்கான இந்திய புதிய உயர்ஸ்தானிகருடன் சந்திப்பை ஏற்படுத்தியிருந்தார் என்பதை இங்கு குறிப்பிட்டு கூறவேண்டும்.

அதன் பின்னர், பிரமதர் மஹிந்த ராஜக்ஷவை சந்தித்த ஆறுமுகன் தொண்டமான், பிரதமரின் 50 வருட அரசியல் வாழ்க்கைக்கு வாழ்த்துத் தெரிவித்துவிட்டு, தனது அமைச்சுக்கு சென்று பின்னர் வீடு திரும்பும்போதே, தனது 30 வருடகால அரசியல், தொழிற்சங்க வாழ்க்கை, இயல்பு வாழ்க்கைக்கு விடைகொடுத்து இயற்கை எய்தினார்.

ஆறுமுகன் தொண்டமானின் அரசியல் சார்ந்த இறுதிச் சந்திப்புகள் மிக முக்கியமான சந்திப்புகளாக அமைந்துள்ளன.

வரலாறு

சௌமியமூர்த்தி இராமநாதன் ஆறுமுகன் தொண்டமான் அல்லது ஆறுமுகன் தொண்டமான் என்றழைக்கப்படும் இவர், 1964ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி, இராமநாதன், இராஜேஸ்வரி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.

கொழும்பு ரோயல் கல்லூரியிலும் இந்தியாவிலும், ஆங்கில மொழியில் இவர் கல்வி பயின்றுள்ளார். 1990ஆம் ஆண்டு முதல் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக, செயற்பாட்டு அரசியலுக்குள் பிரவேசித்துள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞரணியைப் பலப்படுத்துவதே, அவரது ஆரம்பகாலச் செயற்பாடுகளாக அமைந்திருந்தன.

1993ஆம் ஆண்டில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உத்தியோகபூர்வ நிதிச் செயலாளராகப் பொறுப்பேற்ற அவர், 1994ஆம் ஆண்டில், கட்சியின் பொதுச் செயலாளராக, மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானால் நியமிக்கப்பட்டார். அவரது முதல் நாடாளுமன்ற பிரவேசம், 1994ஆம் ஆண்டாகும்.

1994ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில் 72 ஆயிரத்துக்கும் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்குப் பிரவேசித்த அவர், தொடர்ச்சியாக நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றியீட்டியிருந்தார்.

இ.தொ.காவின் ஸ்தாபகர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், 1999ஆம் ஆண்டு இயற்கை எய்ததன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி சந்திரகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சியில், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக ஆறுமுகன் தொண்டமான் பதவியேற்றார்.
2000ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட அவர், 121,000 வாக்குகளால் வெற்றிபெற்றார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை 2000ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்ட அவர், கூட்டொப்பந்தப் பேச்சில் பங்கேற்று, பெருந்தோட்டத் தொழிலாள்களுக்கு 20 சதவீத சம்பள அதிகரிப்பைப் பெற்றுக்கொடுத்தார்.

முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இ.தொ.கா உள்ளிட்ட மூன்று தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, 1998ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையிலுள்ளது. இதில், 2000ஆம் ஆண்டு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஆறுமுகன் தொண்டமான் பங்கேற்றிருந்தார்.

2002ஆம் ஆண்டில் அரசாங்கம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்ட போது, அதிலும் வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார். நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு, நான்கு ஆசனங்களைப் பெற்றுக்கொண்டதனூடாக, அவர் அரசாங்கத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக இ.தொ.காவை பலப்படுத்தினார்.

நாடாளுமன்றத்தில் 17ஆவது அரசமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்ட போது, அதில் தனது இருப்பை நிலைநாட்டிக் கொண்டதுடன், அரசமைப்பின் ஓர் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.

2002ஆம் ஆண்டு மீண்டும் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, 121 ரூபாயாக இருந்த நாள் சம்பளத்தை, 147 ரூபாயாக உயர்த்தினார்.

அதைத் தொடர்ந்து, அரசாங்கம் தனியார்த் துறைக்கு அறிவித்த சம்பள அதிகரப்பை, தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஹட்டன் – மல்லியப்பூ சந்தியில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், போராட்டத்தில் வெற்றியும் கண்டார்.

2008ஆம் ஆண்டில் மலையக மக்களின் முக்கிய பிரச்சினையாக விளங்கிய பிராஜவுரிமை விடயத்தில், இந்திய கடவுச்சீட்டு பெற்றவர்களையும் இலங்கைப் பிரஜைகளையும் அங்கிகரிக்கும் விசேட சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டு வருவதற்கும் காரணமாக இருந்தார்.

மலையக மக்களின் லயன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், 2002ஆம் ஆண்டளவில் இந்திய வீட்டுத்திட்டத்தை மலையகப் பகுதிக்கு அறிமுகப்படுத்திய அவர், லிந்துலை – கலிடோனியா தோட்டத்தில், மாடி வீட்டுத் திட்டத்தின் கீழ் 300 வீடுகளை அமைத்துக்கொடுத்தார்.

அந்த வீட்டுத்திட்டம் வெற்றியளித்ததை அடுத்து, வட்டவளை உள்ளிட்ட பகுதிகளிலும் மாடி வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

2004ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு முதன் முறையாக 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவதற்குக் காரணமாக இருந்தார். இத்தேர்தலில் வெற்றிபெற்ற அவர், இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சைப் பொறுப்பேற்றார். இக்காலத்தில், மலையகத்துக்கு 3,000 ஆசியர் நியமனங்கள் உள்ளிட்டவற்றையும் பெற்றுக்கொடுத்தார்.

2010ஆம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இணைந்த ஆறுமுகன் தொண்டமான், அந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 65,000 வாக்குளால் வெற்றிபெற்று, கால்நடைவள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சுப் பதவியை, 2010ஆம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் திகதி பொறுப்பேற்றார்.

2010 முதல் 2015ஆம் ஆண்டு வரையான ஐந்தாண்டுக் காலப்பகுதியில், கால்நடை வளர்ப்பை ஊக்குவித்ததுடன், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிந்து பசுக்களை இறக்குமதி செய்து, கொட்டகலை போன்ற பாற்பண்ணை அதிகம் முன்னெடுக்கப்படும் பகுதிகளுக்கு விநியோகித்தார்.

பெருந்தோட்ட மக்கள் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல அமைச்சுப் பதவிகளை வகித்த அவர், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், இன்றைய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளித்து நுவரெலியா மாவட்டத்தில் மீண்டும் வெற்றிபெற்றார்.

நாடாளுமன்ற உறுப்பினரான அவர், 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளரான இன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கியிருந்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தில், 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில், மலையக கிராமங்கள் அபிவிருத்தி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன அரசாங்கத்திலும், சமூக வலுவூட்டல் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு உள்ளிட்ட வடக்கு, கிழக்கு மக்களைப் பிரதநிதித்துவப்படுத்தும் வகையில் அமைச்சு பதவியை வகித்து வந்த நிலையிலேயே, அவர் இயற்கை எய்தினார்.

இவ்வாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் அவர் போட்டியிட இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இ.தொ.காவின் தலைமைப் பதவியையும் பொதுச் செயலாளர் பதவியையும் வகித்துவந்த அவர், இ.தொ.காவின் வளர்ச்சிக்கு பாரிய பங்காற்றினார்.

ஆறுமுகன் தொண்டமான், ராஜலக்ஷ்மி என்பவரை திருமணம் செய்துள்ளதுடன் அவர்களுக்கு நாச்சியார், விஜி, ஜீவன் தொண்டமான் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

மகள்மார் இருவரும் திருமணம் முடித்துள்ள நிலையில், ஜீவன் தொண்டமான், இலங்கைத் தொழிலாளர் காங்கிரிஸின் இளைஞரணியின் பொதுச் செயலாளராக செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யார் இந்த சுப்பிரமணியன் சுவாமி? (வீடியோ)
Next post மனைவிக்கு நடிகர் மீது ஆசையால் நடந்த விபரீதங்கள்! (வீடியோ)