By 6 June 2020 0 Comments

அழகான கூடு 3D டைல்ஸ்!! (மகளிர் பக்கம்)

கட்டடத் துறையில் தினம் தினம் மார்க்கெட்டுக்கு வரும் புதிய பொருட்களும், அழகழகான அமைப்புகளும் நம்மை வேறு உலகத்திற்கே அழைத்துச் செல்கின்றன. அவற்றைக்கொண்டு அலங்கரித்துப் பார்க்கும் பொழுதுதான், இது நம் வீடா என்று நமக்கே வியப்பு ஏற்படும். நான்கு சுவர்கள் அமைக்கப்பட்டவுடன் அது பாதுகாப்பான இடமாக அமைந்துவிடுகிறது. தரை என்பது ஐந்தாவது சுவர். சுவர்களுக்கு தரப்படும் முக்கியம் இப்போது தரையின் அலங்காரத்திற்கும் கொடுக்கப்படுகிறது.

தரை மற்றும் சுவரின் அலங்காரம் வீட்டை அழகாக ஆக்குவதுடன், கலையம்சம் நிறைந்த இடமாக மாற்றுகிறது. பொதுவாக, நம்மில் பலர் விரும்புவது மார்பிள் மற்றும் கிரானைட் போன்றவை தான். ஆனால் தற்போது சுவர் மற்றும் தரைக்கு பல வகையான டைல்ஸ்கள் வந்துள்ளன; டைல்ஸ் என்பது வெவ்வேறு அளவுகளில் இருப்பதால் நம் இட வசதிக்கேற்ற அளவிலான டைல்ஸை வாங்கிக் கொள்ளலாம். இடத்தின் அளவைப் பொறுத்து ஷோரூமில் பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இப்பொழுது பிரபலமாக இருப்பது கண்ணைப் பறிக்கும் 3D டைல்ஸ்தான். பொதுவாக நாம் சில படங்களில், காட்சிப் பொருட்களில் 3D அதாவது முப்பரிமாணத்தில் பார்ப்போம். தரை மற்றும் சுவர்களில் பொருத்தக்கூடிய 3D டைல்ஸ்கள் இப்போது மார்க்கெட்டில் கிடைக்கின்றன. இதன் அடர்த்தி மாறுபடும். இத்தகைய டைல்ஸை நாம் நம்முடைய இடத்திற்குப் போட முடியுமா என்று யோசிக்க வேண்டாம். இவை நல்ல டிசைன், மாடல், பாதுகாப்பு, உறுதியாக இருப்பதோடு நம் பட்ஜெட்டுக்குள்ளும் அடங்கும்.

மேலும் இவை மனதை மயக்கும் பல்வேறு டிசைன்களில் கிடைக்கின்றன. உதாரணத்திற்கு, சுவற்றின் ஓரங்களில் பல வண்ணங்கள் கலந்திருப்பது போன்று காட்சி தரும். தரைகளில் தண்ணீர் ஓடுவது போன்று அழகிய நீல நிறத்தில் காணப்படலாம். தரை தூக்கலாக இருப்பது போன்று சில டிசைன்களில் காணப்படும். எல்லாம் நம்மை மயக்கும் டிசைன்கள்தான். தூரத்தில் நின்று பார்த்தால் தண்ணீர் ஓடிக் கொண்டிருப்பது போலவும், கணித வடிவங்கள் ஒன்றோடொன்று பொருந்தியிருப்பதுபோலவும், ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கிய காட்சிப் பொருட்கள் போலவும் எத்தனையோ வகைகளில் காணப்படுகின்றன.

பெரிய பெரிய அளவிலான டைல்ஸ் மரத்தினாலானது போலவும், செராமிக்கினால் ஆனது போலவும் அலங்காரமாக காணப்படுவதும் உண்டு. சாட்டின் ஃபினிஷ் போன்றும் காணப்படும். சில டைல்ஸில் தேன்கூடு போன்றும் காட்சிகள் தெரியும். கடல் நீரில் டால்பின் செல்லுவது போன்ற காட்சியும் உண்டு. இவை சூழ்நிலையை மாற்றி நம் மனதை மயக்கும். ஒவ்வொரு இடத்திற்கும் வெவ்வேறு டிசைன்களில் வேண்டிய சைஸ்களில் 3D டைல்ஸ் கிடைக்கின்றன. 3Dக்களை வரவேற்பறை மற்றும் டைனிங் ஹாலுக்கு தேர்ந்தெடுக்கலாம்.

பாத்ரூம் போன்ற இடங்களுக்கு வழுக்காத டைல்ஸ் தேர்ந்தெடுப்பது அவசியம். சமைக்குமிடத்திலும் நீர் அதிகம் புழங்குவதால் வழுக்காதவாறு பார்த்துக் கொள்வது அவசியம். நம் வரவேற்பறை மற்றும் டைனிங் அறைகளின் அமைப்பையே மாற்றிக் காட்டக்கூடிய அழகான வாட்டர் ப்ரூஃப் டைல்ஸ் உண்டு. செராமிக் 3D சுவர் பானல்ஸ் வீடுகளுக்கும் வியாபாரக் கட்டடங்களுக்கும் பொதுவாகப் போடுவர். மிகவும் சுலபமாக பொருத்தக்கூடிய 15க்கும் மேற்பட்ட 3D டைல்ஸ் மிகவும் மனதைக் கவர்பவையாக இருப்பதோடு நம்மால் வாங்க முடிந்த விலையிலும் இருக்கும்.

சமையலறை மற்றும் குளியல் அறைகளுக்கு ஏற்றவாறு, கலை நயத்துடன் கூடிய, கண்ணாடி போல் ஜொலிக்கக்கூடிய, நல்ல தரம் வாய்ந்த கற்பனைத் திறன் கொண்ட அழகழகான டிசைன்கள் காணப்படுகின்றன. நாம் இருக்கும் இடத்தில், எந்த மாதிரி கிடைக்கிறதோ, அதில் நம் இடத்திற்கு எது பொருந்துமோ, அதில் நம் பட்ஜெட் அடங்குமா என்பதை தெரிந்து கொண்டு செயலாக்கலாம். ரங்கோலி என்று சொல்லக் கூடிய பலவித வண்ண கோல டிசைன்கள் போன்று டைல்ஸ் கிடைக்கின்றன. அறை முழுவதும் கோலம் போட்டாற்போல காணப்படும்.

ஒரு அறையை எந்த செயலுக்காக வடிவமைக்கிறோமோ, அந்த செயல் அங்கு நல்ல விதத்தில் நடைபெறுகிறதா என்பதுதான் முக்கியம். உதாரணமாக, சமையலறை என்றால், நாம் சமைப்பதற்கு நல்ல மனநிலையைத் தருவதாகவும், படுக்கையறை என்றால் வசதியுடன் படுத்து உறங்க ஏதுவாகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட தேவைகளுக்கான வசதிகளை தந்தபின் வேறு அலங்காரங்களுக்கு முக்கியத்துவம் தரலாம். 3Dல் படுக்கையறைக்கும் ஏற்றவாறான டைல்ஸ் உள்ளன.

பொதுவாகவே நாம் படுக்கையறைக்கு வெளிர் நீலம், வெளிர் பச்சை, வெளிர் ரோஸ் போன்று அதிகபட்சமாக வெளிர் நிறங்களை விரும்புவோம். உண்மையிலேயே ஆகாயம் போன்ற காட்சியைத் தரும் தரை டைல்ஸும் காணப்படுகின்றன. பீங்கான் போன்ற பளபளப்பான டைல்ஸ் அதிகம் வெளிநாட்டினரால் விரும்பப்படுகிறது. நிறைய சமையலறைகளில், பீங்கான் டைல்ஸ் பதிக்கப்பட்ட கையலம்பும் இடம் காணப்படுகிறது. லேமினேட் வுட்டன் ஃப்ளோர் (Laminate wooden floor) நல்ல கனமானது, உயர்ந்தது, தரம் வாய்ந்தது.

செம்மரம் போன்று காணப்படும். நடந்தாலும் அதிக சத்தம் வராது. இது லேயர் சப்போர்ட் என்று சொல்லக் கூடிய வகையில் தரையின் மேல் அமைவதால் சத்தம் கட்டுப்படுவதுடன், நீர்ப்பச்சை இல்லாமல் பாதுகாக்கும். உண்மையான மரம் போன்றே பாலீஷ் செய்யப்பட்டு இயற்கையாக வடிவம் போன்று நல்ல ஃபினிஷிங்குடன் இருக்கும். ஹார்டுவுட் (Hard wood) பொறுத்தவரை யார் கட்டடம் கட்டுகிறார்களோ, எப்படி எங்கே கட்டுகிறார்களோ, எப்படி வேண்டுமோ அப்படி அமைக்கலாம்.

பொதுவாக குளிர் பிரதேசங்களில் அதிகமாக வுட் ஃப்ளோர் காணப்படுகிறது. நிறைய கட்டடங்களில் பெட்ரூமில் வுட்டன் தரை (wooden floor) போட்டிருக்கிறார்கள். கடற்கரை ரிசார்ட்களில் இதை நீங்கள் அதிகம் பார்க்கலாம். அதிலும் வடிவங்கள், பலவித மரங்களின் நிறங்கள், சதுர வடிவங்கள், தரை முழுவதும் நீள மர ரிப்பன் பட்டைகள் போன்று பல வகைகள் கிடைக்கும். கூடவே நம் பட்ஜெட்டையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.Post a Comment

Protected by WP Anti Spam