By 10 June 2020 0 Comments

அழகான கூடு!! (மகளிர் பக்கம்)

சுவர்கள்தான் வீடு என்ற அந்தஸ்தை தருகின்றன. சுவர் இல்லாத தரையை காலி மனை என்போம். தரையைப் போல கிட்டத்தட்ட நான்கு மடங்கு பரப்பளவு ெகாண்டது சுவர். தரைக்கு ‘டைல்ஸ்’ பார்த்துப் பார்த்து வாங்கும் பொழுது, சுவரையும் நாம் பார்த்துப் பார்த்து அலங்கரிக்க வேண்டாமா? வீட்டிற்குள் நாம் நுழைந்த உடன் நம் கண்களில் படுவது சுவர்தான். சுவர் நன்றாக இருந்தால்தான் வீடு பார்க்க அழகாக இருக்கும்.

பொதுவாக அனைவரும் விரும்புவது நல்ல பெயின்டிங். சுவர்களில் வண்ணமயமாக ‘பெயின்டிங் செய்திருந்தாலும், மேலும் சுவருக்கு அழகு கூட்ட அழகிய சித்திரங்கள் மாட்டலாம்! அழகான, ஆடம்பரமான ஆடைகளை உடுத்தினாலும், அதற்கேற்ற நகைகளை போட்டு மேலும் அழகாக்கிக் கொள்கிறோமல்லவா? அதுபோல அழகான சுவராகயிருந்தாலும், ஆங்காங்கே நம் கலையார்வத்தையும், கைத்திறனையும் கொஞ்சம் காட்டும்பொழுது, சுவரின் அழகு மேலும் மெருகூட்டப்படுகிறது.

சிலருக்கு ‘வால்பேப்பர்’ ஒட்டுவது ரொம்பவும் பிடிக்கும். வால்பேப்பர்கள் மிகக் குறைந்த விலையில் இருந்து கிடைக்கிறது. தண்ணீர் பட்டால் கூட பாழாகாதவாறு மிகச் சிறந்த விலை உயர்ந்த வால்பேப்பர்களும் கிடைக்கின்றன. துணி போன்ற அமைப்பிலும் கூட கிடைக்கின்றன. முன்பெல்லாம் வால் பேப்பர்களில் பூ படங்கள், கோடுகள் போன்றவை நிறைய இருக்கும்.

ஆனால் இப்பெழுதோ, ஓவியங்கள் தீட்டியவை, கண்ணைப் பறிக்கும் காட்சிகள் போன்றவை கிடைக்கின்றன. அவரவர் ரசனைக்கேற்றபடி, கையிருப்புக்கு ஏற்றவாறு சுவர் அலங்காரம் செய்து கொள்ளலாம். ‘பானலிங்’ என்று சொல்லக்கூடியது முழு மர வேலைப்பாடுகள் கொண்டதாகும். ஓரளவு இட வசதி, பண வசதி இரண்டு மிருந்து, நம் ரசனையும் சேர்ந்தால் இது சாத்தியப்படும்.

‘பானலிங்’ மூலமாக பல காட்சிப் பொருட்களை தொங்க விடலாம். பொதுவாக நட்சத்திர ஹோட்டல்களில் இவற்றைப் பார்க்க முடியும். அந்தக் காலத்தில், ஒரு வீட்டிற்குள் நுழைந்தவுடன் அந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் புகைப்படங்களையும் நம்மால் பார்க்க முடியும். பரம்பரை வரிசையில் போட்டோக்களை மாட்டி வைத்திருப்பார்கள்.

ஆனால் அவை அனைத்தும் இப்பொழுது ஆல்பங்களில்தான் காணப்படுகின்றன. மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பழக்கம் ஆரம்பித்துள்ளது. குடும்ப போட்டோ அழகாக லேமினேட் செய்யப்பட்டு ஆங்காங்கே மாட்டப்படுகின்றன. சிறிய கார்ப்பெட்களை கண்ணாடி சட்டகம் போட்டு நடு சுவரில் மாட்டலாம்.

ஒரே ஒரு பொருளாக இருந்தாலும், ஆடம்பரமாக இருக்கும். ரிச் லுக் தரும். ஃபேப்ரிக் பெயின்ட் என்று சொல்லக்கூடிய துணியில் பெயின்ட் செய்த சித்திரங்களைக்கூட லேமினேட் செய்து போடலாம். இவற்றில் பழங்கால சித்திரங்களான உழவன் உழும் காட்சி, வயல் வரப்பு, மலை-நீர் நிலைகள் போன்ற இயற்கையை பிரதிபலிப்பனவற்றை போடலாம்.

யானைக் கூட்டம், ஒட்டகங்கள், மேகக்கூட்டம் இவை பார்ப்பதற்கு அழகாகயிருக்கும். ஃபேப்ரிக் பெயின்ட்டிங்கில் மணிகள் பதித்தவை போன்றவை காணப்படுகின்றன. மேலே கண்ணாடி போட்டுவிட்டால் உள்ளே இருக்கும் அலங்காரங்கள் கெடாது. ஓரளவு வசதியிருந்தால், தஞ்சாவூர் ஓவியம் கூட போடலாம். முதலில் கொஞ்சம் செலவு செய்தாலும், பராமரித்து வந்தால் நம் வாழ்நாளைக்குக் கெடாது.

நல்ல தரமானதாகப் பார்த்து வாங்கி விட்டால், பளபளப்பும் குறையாது. கருத்தும் போகாது. பலவிதமான அளவுகளில் கிடைக்கின்றன. ஒரு பெரிய ஹாலாக இருந்தால், ஐந்து பெரிய படங்கள் ஒரே மாதிரி போடலாம். சிறியதாக போட்டால் ஏழு படங்கள்கூட ஒரு சேர போடலாம். இவை நம் கலைத்திறனையும், நம் கலாசாரத்தையும் பிரதிபலிக்கும்.

மாட்டப்பட்டுள்ள படங்களைக்கொண்டே குறிப்பிட்ட இடத்தில் வசிப்பவர்களின் ரசனை நமக்குப் புரியும். நிறைய டூ இன் ஒன் அயிட்டங்கள் இப்பொழுது கிடைக்கின்றன. கடிகாரத்துடன் கூடிய போட்டோ பிரேம், இயற்கைக்காட்சிகளுடன் கூடிய போட்டோ பிரேம் போன்றவற்றைக்கூட வால் ஹேங்கிங்காக பயன்படுத்தலாம்.

பலவிதமான தட்டு வடிவங்களில் எகிப்திய நாகரிகம் முதல் மகாபாரதக் கதை காட்சி வரையிலான ஓவியங்கள் காணக் கிடைக்கின்றன. பித்தளையில் ஓவியங்கள் இருந்தால், அவ்வப்பொழுது பாலிஷ் செய்து மாட்டினால் பார்க்க பளிச்சென இருக்கும். கருப்பு மெட்டல் என்று சொல்லப்படும் உலோகத்திலும் செதுக்கப்பட்ட சிற்பங்கள் காணப்படுகின்றன. அதையும் வாங்கி மாட்டலாம்.

தட்டையான தட்டுக்கள் போன்றே வாத்து, அன்னம், மயில் போன்றவை செதுக்கப்பட்டு சுலபமாக மாட்டும் வசதி கொண்டவையாகக் கிடைக்கின்றன. முன்பு போல் சுவரில் ஆணிகள் அடிக்கவே வேண்டாம். இப்பொழுது வால் ஸ்டிக்கர்கள் நிறைய கிடைக்கின்றன. அதை சுவற்றில் ஒட்டி விட்டு, அதன் மூலம் வால் ஹேங்கிங்கை தொங்க விடலாம்.

சில சமயங்களில் காலண்டர்கூட போட நாம் யோசிப்போம். ஆனால் காலண்டர் நமக்கு அவசியம் தேவையும்கூட. எனவே கதவுகளுக்கு பின்புறம் ஸ்டிக்கர் மூலம் காலண்டரை மாட்டலாம். சுவரும் பாழாகாது. நம் தேவையும் பூர்த்தியாகும். நிறைய பேர் விரும்புவது பெயின்டிங்ஸ். இப்பொழுது வெல்வெட், துணி மற்றும் தெர்மகோலில்கூட அழகான பூங்கொத்துகள், சித்திரங்கள் ஆகிய வேலைப்பாடுகள் செய்து கண்ணாடி பிரேம் செய்து விற்கப்படுகின்றன.

கைவேலைப்பாட்டை விரும்பு பவர்கள், அதுபோன்ற படங்களை ஒவ்வோர் அறையிலும் மாட்டலாம். இதேபோல் சில மாடர்ன் ஆர்ட் பெயின்ட்டிங்ஸ் மூங்கில் சட்டகங்களில் செய்யப்படுகின்றன. மரச்சட்டகங்கள் என்பதால் சீக்கிரம் பாழாகாது. ஜன்னல்களில்கூட தொங்க விடலாம். கண்ணாடியில்கூட பெயின்ட்டிங் செய்து ஷோகேஸில் வைக்கலாம்.

ஆனால் மிக ஜாக்கிரதையாக கையாள வேண்டுமென்பதால், மாட்டி வைக்காமல் கண்ணாடி அலமாரிக்குள் வைத்து அழகு பார்க்கலாம். பார்டர் அமைத்து போட்டோ பிரேம் போல் பயன்படுத்தலாம். கருப்புக் கண்ணாடியில் செய்யப்படும் கைவேலைப்பாடுகள் மிகவும் கலைநயத்துடன் காணப்படுபவை.

குறிப்பாக மீரா-கிருஷ்ணா, ஆல் இலை கிருஷ்ணன், குழந்தை கிருஷ்ணன், வெங்கடாஜலபதி போன்றவை அனைவராலும் விரும்பப்படுபவை. ஜமிக்கி, மணிகள் வைத்து பெயின்ட்டிங் செய்து மேலே தங்கக் கலரில் பிரேம் செய்துவிட்டால் எங்கு மாட்டினாலும் கொள்ளை அழகு. பெரிய படம் ஹாலில் ஒன்றே ஒன்று மாட்டினால்கூட போதும்.

இப்பொழுதெல்லாம் ஃபேன்ஸி பை போன்ற வடிவில், மேலே கடிதங்கள் வைக்கவும், கீழே குஞ்சங்களுடன் மணிகளும் சேர்ந்து அழகிய வால் ஹேங்கிங் போலவும் கிடைக்கின்றன. அதே போல் மேல்பாகம் அழகிய படமும், கீழ்பாகம் முழுமையும் சாவிகள் தொங்க விடும் பகுதி போன்றும் காணப்படும்.

இவற்றின் மூலம் நமக்கு டூ இன் ஒன் வசதி கிடைக்கிறது. எதை எங்கே மாட்டுகிறோம் என்பது முக்கியமில்லை. அது குறிப்பிட்ட இடத்திற்கு பொருந்துகிறதா, அங்குள்ள மாற்றம் பொருட்களுடன் ஒத்துப் போகிறதா, சுவரின் நிறத்திற்கு ஏற்றதாக உள்ளதா என்பதுதான் முக்கியம். பொதுவாக பெண்கள் உயரமாக இருந்தால், அகல பார்டர் புடவை நன்றாகயிருக்கும்.

குட்டையாகயிருந்தால், அகல பார்டர் அவர்களை மேலும் குட்டையாகக் காட்டும் என்பார்கள். அதுபோல் உயரமான சுவராக இருந்தால், நல்ல நீள அகலம் கொண்ட வால் ஹேங்கிங் போடலாம். குட்டை சுவராகயிருந்தால், ஓரளவு உயர அகல படங்களை மாட்டலாம். இதெல்லாம் சாத்தியப்படாது என நினைத்தால், அங்கங்கே செயற்கை மலர்க் கொத்துக்களை தொங்க விடலாம்.

வரவேற்பறையில் பெரிய மலர்க்கொத்து ஒன்றை இலை மொட்டுக்களுடன் தொங்கவிட்டால், அதன் நிறக்கலவையில் கொஞ்சம் சிறியதாக மற்ற அறைகளின் நடுவில் தொங்க விடலாம். அறையின் ஒரு பக்கம் சுவர் முழுவதும் வால் பேப்பரோ, இயற்கைக்காட்சிப் படமோ ஒட்டியிருந்தால் அந்த இடத்தில் எதுவும் போட வேண்டிய அவசியம் இல்லை.

இப்பொழுது குடும்பப் போட்டோவோ, வேறு போட்டோக்களோ போட்டாலும் அதிலும் ஒரு லுக் தரும்படி போடலாம். அதாவது ஏறு வரிசை அல்லது இறங்கு வரிைச என்பார்கள். அது போல் போடலாம். சிலர் பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள் போன்றவைகளை விரும்புவர். இதே போன்று நடு சுவரில் பதித்தாற்போல் போடலாம்.

சின்ன வண்ணத்துப்பூச்சி தொடங்கி பெரிய வண்ணத்துப்பூச்சி வரை அழகாக மாட்டலாம். எல்லாம் உங்கள் தேர்வுதான்! எல்லாவற்றிற்கும் மேலாக சுவர் சிலந்தி வலைகள், தூசிகள் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். தலையில் எண்ணெயுடன் சுவரில் சாய்ந்து சுவரை அழுக்காக்கக்கூடாது. சிலர் சுவர் முழுவதும் பொட்டு ஒட்டுவார்கள். அது போல் செய்யாதீர்கள். எவ்வளவு சுத்தமாக வைத்துக்கொள்கிறீர்களோ அவ்வளவு அழகு. ஆடம்பரப் பொருட்களை விட சுத்தம்தான் முதல் அழகு.Post a Comment

Protected by WP Anti Spam