By 8 June 2020 0 Comments

அழகான கூடு!! (மகளிர் பக்கம்)

கார்னர்

மூலை என்றாலே கொசு மற்றும் பூச்சிகள் அடைந்திருக்கும் இடம், வேண்டாத பொருட்கள் ஒதுக்கப்படும் இடம் என்பது நாம் அறிந்ததே. ஆனால் அந்த இடத்தைக் கூட நாம் அலங்காரமாகக் காட்ட முடியும். பெரிய நகரங்களில் ஒரு சதுர அடி இடத்தின் விலைகூட மதிப்பானது. அப்படியிருக்கும் பொழுது அந்த இடத்தை ஏன் நாம் வீணாக்க வேண்டும். அதையும் அழகுப்படுத்தலாம் வாங்க.பொதுவாக கார்னர் சோஃபா போடுபவர்கள் கார்னரைப் பயன்படுத்துவர். நடு வரவேற்பறையில் சோஃபா செட் அமைப்பவர்கள், கார்னரில் வேறு ஏதேனும் பொருட்கள் வைத்திருப்பர். உயரமான பொருட்களை கார்னர்களில் வைப்பது நல்ல லுக் தரும். தனியாக உயரமான பொருட்கள் இல்லையெனில், நாமே அதனை அழகான இடமாக அமைத்துக் கொள்ளலாம். உதாரணமாக, அழகான ஒரு சிலை உங்களிடம் இருப்பதாகக் கொள்வோம்.

குறிப்பிட்ட மூலையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதாவது வரவேற்பறையின் நான்கு மூலைகளில் எந்த மூலை நுழைந்தவுடன் நம் கண்களில் படுமோ அங்கு, நீள வடிவில் ஒரு டீபாய் அல்லது டெஸ்க் அல்லது நீள ஸ்டூல் ஒன்று போட்டு அதன்மேல் அழகான விரிப்பு ஒன்று போடுங்கள். நான் மேலே சொன்னபடியான ஒரு சிலை அல்லது பெரிய பொம்மையை வைத்து விடுங்கள். அதன் இருபுறமும் அதற்கு பொருந்தும் பொருட்கள் இரண்டு வைத்துவிடுங்கள். இதற்குப் பின்புறம் சுவர் ஸ்டிக்கர் மூலம், ஓவியங்கள் கொண்ட பாய் போன்று தொங்க விடலாம். அந்த இடம் செட்டாக அமைந்துவிடும்.

அதன்பின் செயற்கை அருவியை அங்கு வைக்கலாம். அதிலிருந்து செயற்கைப் பூக்கள், செடி கொடிகள் ெதாங்கவிடலாம். அல்லது செதுக்கிய மரம் நிற்க வைக்கலாம். அதிலிருந்து பொம்மைகள், மணிகள், மரம் போன்று இருப்பதால் திராட்சைக் கொத்துக்கள் போன்று தொங்க விடலாம். செயற்கை நீரூற்றின் மேலோ, மரத்தின் மீதோ சீரியல் லைட் போட்டு விடலாம். அந்த மூலை முழுவதையும் விளக்குகள் போட்டு அசத்தலாம். இவை ஏதும் இல்லையெனில், கிறிஸ்துமஸ் மரம் போன்றுகூட வைக்கலாம். அந்தக் கார்னரா? என்று கேட்காமல் வாவ்! சூப்பர் என்றுதான் சொல்லத் தோன்றும்.

சில வீடுகளில் உள்ளிருந்து மாடிப்படிகள் செல்லும். அப்படிகளின் அடி முழுவதையும், நிறைய பேர் பொருட்களை வைக்கும் ஸ்டோரேஜ் வசதிக்காக பயன்படுத்துவர். நாம் ஏன் அந்த இடத்தைக்கூட பியூட்டி கார்னராக மாற்றக்கூடாது? முதலில் அவ்விடத்தின் நீள அகலங்களை குறித்துக்கொண்டு அதே அளவில் லான் கார்ப்பெட் வாங்கி விரித்து நடுவில் நிற்கும்படியான ஒரு செயற்கை நீரூற்று வாங்கி வைக்கலாம். நீரூற்றில் ஒருபுறம், இருபுறம் ஊற்றுவது என வகைகள் உண்டு. இருபுறமும் ஊற்றுவது மிக அழகாக இருக்கும்.

அடுத்து யானை, குதிரை போன்ற மண் பொம்மைகள் பெரிது பெரிதாக அங்கங்கே வைக்கலாம். நீரூற்றின் இருபுறமும், இரண்டு பூங்கொத்துகள் வைக்கும் ஸ்டாண்டுகள் நிறுத்தி விதவிதமான வண்ணங்களில் பூங்கொத்துகள் சொருகலாம். நான்கு ஓரங்களிலும் அங்கங்கே அழகிய பெயின்ட் செய்யப்பட்ட பூந்தொட்டிகள் வைக்கலாம். அதிகப்படியாக தோன்றினால் விட்டு விடலாம்.இவ்வாறு இவ்விடத்தை அலங்கரிக்கும்முன் ஒரு போட்டோ எடுத்து வையுங்கள். பின் அலங்கரித்தபின் போட்டோ எடுங்கள். இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். அதன்பின் இந்த இடங்களை சும்மா விடுவோமா, என்ன? வெற்றிடங்களில் இடத்திற்கேற்றபடி எளிமையான அலங்காரம் செய்யலாம். சிறிய சிறிய விஷயங்களைக்கூட ரசிக்கும் பொழுது நம் மனம் பெரிய கவலைகளிலிருந்து விலகி விடும்.

தனி வீடாக இருந்து, வீட்டிற்குள்ளிருந்து படிகள் செல்லும்படியிருந்தால் ரெட் கார்ப்பெட் போடலாம். நான் ஓவன் கார்ப்பெட் வெறும் சிவப்பு நிறத்தில் ஒட்டி விட்டால், நடப்பதற்கு வெல்வெட் மீது நடப்பது போன்ற உணர்வு ஏற்படும். பார்க்கவும் அழகு. ரிச் லுக்கும் கிடைக்கும். வீட்டிற்குள் இருப்பதால், குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். லான் கார்ப்பெட்கூட ஒட்டிக் கொள்ளலாம். இதன்மூலம் புல்தரையில் நடப்பது போன்று இருக்கும்.இல்லாவிடில் நாம் படி திருப்பங்களிலும், அதையொட்டிய சுவர்களிலும் வேறு விதமான அலங்காரங்கள் செய்ய முடியும். வீட்டு உறுப்பினர் மட்டுமே பயன்படுத்துவதால் அங்கு பாதுகாப்பிற்குக் குறையிருக்காது. எனவே நான்கு அல்லது ஐந்து படிகள் விட்டு ஒவ்வொரு திருப்பத்திலும் பாவை விளக்குகள் வைக்கலாம். பெயின்ட் செய்யப்பட்ட தொட்டிகள் அல்லது டெரகோட்டா தொட்டிகள் வைத்து அலங்கரிக்கலாம். ஸ்டாண்டுகள் வைத்து மலர் கொத்துகள் வைக்கலாம். பித்தளைப் பாத்திரங்களை நன்கு பாலிஷ் செய்து, அதற்குள் தொட்டிகள் வைக்கலாம்.

ஹோட்டல்களில் வைத்திருப்பது போன்று காணப்படும். மரப்பொம்மைகள், ராணுவ வீரன் பொம்மை போன்றவற்றை நிற்க வைக்கலாம். ஒவ்வொரு திருப்பத்திலும், அதையொட்டிய சுவற்றில் ஃபேப்ரிக் பெயின்டிங் போடலாம். அழகிய இயற்கைக் காட்சிப் படங்கள் போடலாம். கண்ணாடிப் பெயின்டிங் அல்லது போட்டோக்கள் போடலாம். இப்படியாக மேல் மாடி வரை இடைவெளி விட்டு போட்டால் போதும். வீட்டின் உட்புறம் மட்டுமின்றி மாடிப்படிகள்கூட அழகாக காணப்படும்.

சரி, வீட்டிற்கு வெளியே படிகள் இருந்தால் என்ன செய்வது? இதெல்லாம் சாத்தியமில்லைதான். ஆனால் அதற்கென நமக்கு எளிய, அழகான மலிவான பொருட்கள் கிடைக்கும். படிகள் குறுகலாக இருக்கும்பட்சத்தில் நாம் படிகளில் எதுவும் வைக்க முடியாது. ஆனால் படிகளின் வெளிப்புற விளிம்புகளில், சிறிய வளையங்கள் போன்று அமைத்து, அதற்குள் பெயின்ட் செய்யப்பட்ட தொட்டிகளை வைக்கலாம். உயரமான வரிசையில் படிகள் இருந்தால், ஐந்து படிகள் இடைவெளிவிட்டு வளையங்கள் அமைத்து தொட்டிகள் வைக்கலாம்.படிக்கட்டுகள் திருப்பங்களுடன் அமைந்தால், அதற்கேற்றவாறான அமைப்புகளில் வைக்கலாம். வெயில் படும் இடமானால், டேபிள் ரோஸ் மாதிரி பூக்கக்கூடிய சிறிய தொட்டிகளை வைக்கலாம் அல்லது மணிபிளான்ட் வைத்து சரியான ஷேப்பில் வளர விடலாம். ஆனால் தண்ணீர் ஊற்றும்போது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். தொட்டிகளும், வைக்கப்படும். வளையங்களும் எப்பொழுதும் பளிச்சென இருந்தால்தான் பார்க்க அழகாக இருக்கும்.

இவ்வளவு சிரமங்கள் எடுக்க முடியாதென நினைத்தால் செயற்கைச் செடிகளில் கோரைப் புற்கள் போன்று கிடைக்கும். அவற்றை வாங்கி, கொத்துக் கொத்தாக தொட்டிகளில் வைத்துவிட்டால் போதும். ஈரத்துணியால் துடைத்துவிட்டால் போதும். பராமரிப்பு சுலபம். எந்த அலங்காரமும், செய்யும்பொழுதே அதை நம்மால் பராமரிக்க முடியுமா என யோசித்துச் செய்ய வேண்டும். இல்லையெனில் நேரமும், பணமும் வீண்தான்! பராமரிப்புக்கு மிகவும் பொறுமை தேவை.

கார்னர்களை கவனிப்பது போல புத்தகங்கள் இருக்கும் பகுதியை சரியாக திட்டமிட்டு ஒழுங்குபடுத்தலாம். புத்தகங்கள் இல்லாத வீடுகளே இருக்க முடியாது. புத்தகங்களை படித்தால் மட்டும் போதுமா? அவற்றை சேகரித்து நம் அடுத்த தலைமுறைக்கு காத்து வருவதும் நம் கடமையல்லவா? அவற்றை எப்படி சேகரிப்பது? எங்கு வைப்பது? எப்படி ஒழுங்குபடுத்துவது என்பது குறித்தும் பார்க்கலாம்.வீடுகளில் ஷோகேஸ் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், கலைப்பொருட்கள் அடுக்குவதை பார்க்கிறோம். ஃபர்னிச்சர்களுக்கும் முக்கியத்துவம் தருகிறோம். ஆனால் புத்தகங்களை பற்றி நாம் யோசிக்கிறோமா? அறிவைத் தரும் புத்தகங்களுக்காக, அழகான ஒரு இடம் அல்லது அலமாரி தரலாமே! ஷோகேஸ் என்றால் பொம்மைகள்தான் அடுக்க வேண்டும் என்பதில்லை. புத்தகங்களை அழகுற அடுக்கி கூட அழகாகக் காட்டலாம். அழகுப் பொருட்கள் நம் கலை ஆர்வத்தைக் காட்டுவதுபோல், அழகிய புத்தகங்கள் நம் அறிவுத்திறனை பிரதிபலிக்கும்.

மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் போன்றவர்கள் வீட்டில் பார்த்தால், நுழைந்தவுடன் கண்ணாடி அலமாரிகளில், பளபளக்கும் அட்டைகளின், சிறிதுகூட கசங்காத புத்தகங்களைப் பார்க்கலாம். மனதில் எழும் சந்தேகங்களுக்கான பதில்கள் மற்றும் வாழ்க்கை வெற்றியின் ரகசியங்கள் அப்புத்தகங்களில்தான் ஒளிந்திருக்கும். நம்மால் சிந்தித்து செயல்பட முடியாத சில கேள்விகளுக்கு, அத்தகைய புத்தகங்களில்தான் விடை கிடைக்கும். விலை உயர்ந்த நல்ல தரம் வாய்ந்த அருமையான புத்தகங்களை பாதுகாத்து வைத்தால்தான், பின்னால் வரும் தலைமுறை வரை பாதுகாத்து நினைவுப்பரிசாக அளிக்க முடியும்.

ஓரளவு பெரிய இடமாக இருந்தால், தனி புத்தக அலமாரி அல்லது கண்ணாடி பீரோ வைத்து புத்தகங்களை அடுக்கலாம். அடுக்குவதற்கு முன் நாம் சில விஷயங்களை மனதில் வைக்க வேண்டும். பைண்ட் செய்யப்பட்டவை, வெறும் அட்டையுடன் கூடியவை என பிரித்து வைத்துக் கொள்ளலாம். பின் ஒவ்வொரு வகையிலும் அளவு வாரியாக பிரித்துக் கொள்ளலாம். பொது அறிவை வளர்க்கும் புத்தகங்கள், அறிவுக்கதைகள், பொழுதுபோக்குவதற்காக மட்டும் படிப்பவை என வகைப்படுத்திக் கொள்ளலாம். எல்லாவற்றிற்கும் மேல் மொழிவாரியாகப் பிரித்தல் மிக அவசியம்.ஆங்கிலம், தமிழ் என பிரித்துக்கொண்டு, ஒரே பொருளில் பல புத்தகங்கள் இருந்தால், அவற்றை எண் போட்டு அடுக்கலாம். ரொம்பப் பழைய புத்தகமாயிருந்தால் தாள்கள் கிழிந்து போயிருக்கலாம் அல்லது பிரின்ட் சில இடங்களில் போயிருக்கலாம். புத்தகத்தின் ஓரங்களில் பெயரை நாமே எழுதி ஒட்டி விடலாம். இப்படி அனைத்து விதிகளின்படி புத்தகங்களைப் பிரித்து அடுக்கி வைத்துக்கொண்டபின், அலமாரி அல்லது பீரோவில் அடுக்கலாம். கனமான புத்தகங்கள் வெளியிலிருந்து பார்க்கும்பொழுதே தெரியும்.

சிறிய புத்தகங்கள் நிறைய இருந்தால் ஒன்றாக அடுக்குவோம். அப்பொழுது, அவற்றில் என்னென்ன புத்தகங்கள் உள்ளன என்பது சில நாட்கள் கழித்து மறந்து போகலாம். எனவே ஒரு கனமான பைண்டிங் செய்யப்பட்ட நோட்டில், ஒரு ரெக்கார்டு போன்று எழுதி அதையும் அந்த அலமாரி உள்ளே வைத்துவிட்டால், அதைப்பார்த்து வேண்டிய புத்தகத்தை மட்டும் எடுத்துக்கொள்ள வசதியாக இருக்கும்.அனைத்தையும் எடுத்து தேடிப் பார்ப்பதைவிட, அனைத்திலும் சிறிது யோசித்து செயல்பட்டால், நம் நேரம் மிச்சமாவதுடன், டென்ஷனும் குறையும். நம் புத்தகங்களின் எண்ணிக்கையை கம்ப்யூட்டரில் ஃபைல் போட்டு குறித்து வைக்கலாம். தனி பீரோ அல்லது அலமாரி வசதியிருப்பவர்களுக்கு இது சாத்தியம். பீரோ அமைக்க முடியாதவர்கள் என்ன செய்யலாம்?நம்மிடம் இருக்கும் அலமாரிகளில் ஒரு பகுதியை புத்தகம் அடுக்க பயன்படுத்தலாம். நிறைய புத்தகங்கள் இருக்க வேண்டு மென்பது முக்கியமில்லை. இருப்பதை எப்படி அடுக்கி வைக்கிறோம் என்பதுதான் முக்கியம். இடம் குறைவாக இருந்தால், அழகிய பெரிய புத்தகங்களை மட்டும் அங்கு அடுக்கலாம். மீதமுள்ள புத்தகங்களை அதன் சைஸ்படி அடுக்கி பெயர் எழுதி ஒட்டி, தனித்தனி கவர்களில் போட்டு வார்ட்ரோப் பகுதியில் அடுக்கலாம்.

சிலர் புத்தகங்கள் நிறைய வாங்குவர். அடுக்கி வைக்க இடமில்லாமல் அவ்வப்பொழுது போட்டுவிடுவர். அப்படிப்பட்டவர்கள் அத்தகைய புத்தகங்களிலுள்ள தனக்குப்பிடித்த பகுதிகள், தொடர்கள், புதுமையான விஷயங்கள் போன்றவற்றை கத்தரித்து ஆல்பம் போன்று வடிவமைக்கலாம். புத்தகங்கள் அடுக்கும்பொழுது, தரையையொட்டி வைக்காதிருப்பதும் மிக உயரத்தில் அடுக்காதிருப்பதும் நலம். தரையையொட்டி வைத்தால் ஈரம் படவும், உயரமான இடத்தில் அடுக்கினால் பூச்சிகள் அடையவும் வாய்ப்புண்டு. நம் கண் பார்வையில் புத்தக அலமாரிகள் அமைப்பது நல்லது. இருட்டான இடத்திலோ, பொருட்கள் அடைந்திருக்கும் இடத்திலோ அமைப்பது சரியல்ல.Post a Comment

Protected by WP Anti Spam