ஜப்பானில் நடுக்கடலில் பயங்கரம் சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்தது; இந்திய மாலுமி சாவு

Read Time:3 Minute, 9 Second

Japan-China.jpgஜப்பானில் நடுக்கடலில் சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இதில் இந்திய மாலுமி பலியானார். மேலும் 9 இந்திய சிப்பந்திகள் காணாமல் போய்விட்டனர். பசிபிக் கடல் பகுதியில் `பபிங்கா’, `ரம்பியா’ என்ற 2 புயல்கள் உருவாகி இருப்பதால், ஜப்பானின் கிழக்கு பகுதியில் மோசமான வானிலை நிலவி வருகிறது. அடிக்கடி கடல் கொந்தளிப்பு ஏற்படுவதுடன் சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பனாமா நாட்டைச் சேர்ந்த ஒரு சரக்கு கப்பல், நேற்றுமுன்தினம் மாலை ஆஸ்திரேலியாவில் இருந்து ஜப்பானில் உள்ள காசிமா துறைமுகத்துக்கு சென்று கொண்டிருந்தது.

1 லட்சத்து 90 ஆயிரம் டன் இரும்புத்தாதுவை ஏற்றிக்கொண்டு அது சென்றது. அதில் 25 இந்திய சிப்பந்திகளும், ஒரு பாகிஸ்தான் சிப்பந்தியும் பயணம் செய்தனர்.

தீவிபத்து

கிழக்கு ஜப்பானில் காசிமா துறைமுகத்தை அடைவதற்கு 2 கி.மீ. தூரமே இருக்கும்போது கப்பலில் திடீரென்று தீப்பிடித்து கொண்டது. அதனால் என்ஜின் செயலிழந்தது. சற்று நேரத்தில் கடுமையான சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் நடுக்கடலில் கப்பல் அங்கும் இங்கும் அலை பாய்ந்தது. இதில் கப்பல் இரண்டாக உடைந்தது.

இந்திய மாலுமி சாவு

இதனால் கப்பலில் இருந்த சிப்பந்திகள் கடலுக்குள் விழுந்தனர். தகவல் அறிந்து ஜப்பான் கடலோர காவல் படையினர் விரைந்து வந்தனர். உடனடியாக மீட்புப்பணியில் ஈடுபட்டனர். முதலில் 4 இந்தியர்களை மீட்டனர். அவர்களை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவர்களில் ஒரு இந்திய மாலுமி சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஜப்பான் கடலோர காவல் படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு கப்பலின் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கிடந்த மேலும் 13 சிப்பந்திகளை காப்பாற்றினர். அவர்களை விமானம் மூலம் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தினர்.

காணவில்லை

மீதி 9 சிப்பந்திகளை காணவில்லை. இவர்கள் அனைவரும் இந்தியர்கள் ஆவர். அவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. அவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் ஜப்பான் கடலோர காவல் படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வடக்கிலும் மோதல் தொடர்கிறது
Next post டென்மார்க் நாட்டில் மீண்டும் சர்ச்சை- நபிகள் நாயகத்தை கேலிச்சித்திரம் வரையும் போட்டி