By 23 June 2020 0 Comments

மூலிகை சாம்பிராணி தயாரிக்கலாம்… தொற்றுக் கிருமிகளை விரட்டலாம்!! (மகளிர் பக்கம்)

விளக்குகள் அணைகிறது, திரை விலகுகிறது, பிரகாசமான ஒளி வெள்ளம் மேடை முழுவதும் புகை மூட்டம், அரங்கம் முழுவதும் மணம் கமழ்கிறது, திடீரென புகையினூடே கடவுளின் தோற்றம் அல்லது அரசவைக் காட்சி அல்லது கடை வீதியில் மக்கள் கூட்டம். இப்படித்தான் அன்றைய காலகட்டத்தில் நாடக மேடைகளில் முதல் காட்சி இருக்கும். முதல் காட்சியில் புகை பரப்ப முக்கிய காரணம் உள்ளது. அதைப் பின்னால் பார்ப்போம்…

அதுபோலவே அன்றைய காலத்தில் வீட்டில் யாருக்காவது அசௌகரியம் ஏற்பட்டால் கையில் மரப்பெட்டி சகிதம் நாட்டு மருத்துவர் ஆஜராவார். நாடிப்பிடித்துப் பார்த்த பின் மருந்து மாத்திரைத் தந்துவிட்டு புறப்படுகையில் காலை மாலை மறக்காம சாம்பிராணி தூபம் போடுங்க அதுல இந்தப் பொடியையும் சேர்த்து போடுங்க என்பார். அடுத்த சில நாட்களில் நோயாளிக்கு நோய் இருந்த இடம் தெரியாமல் புகை போல காற்றில் கலந்து போயிடும். இதுபோல ஏராளமான எடுத்துக்காட்டுகளை அடிக்கிக்கொண்டே செல்லலாம்… மற்றொன்றை இங்கே குறிப்பிட்டே தீரவேண்டும். பாரம்பரிய இயற்கை தொழில்கள் உற்பத்திப் பொருட்கள் விற்பனையை ரசாயன பூச்சு மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை சுவையூட்டிகள் சேர்த்து தயாரித்து தனது பொருட்களின் விற்பனையால் பன்னாட்டு நிறுவனங்கள் தகர்த்தெறிந்த சாகசக் கொடுமையை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

அதுமட்டுமின்றி இயற்கை வளம் மண்டிக்கிடந்த நமது காடுகளையும் ஆற்று சமவெளி பிரதேசங்களையும் அசுர வேகத்தில் ஆக்கிரமித்து பன்னாட்டு நிறுவனங்கள் விரிவாக்கம் என்ற பெயரில் கபளீகரம் செய்ததால் பாரதத் தாயும் படுகாயம் அடைந்து முடங்கியுள்ளாள். விலங்குகள் எப்போது காட்டைவிட்டு ஊருக்குள் படையெடுக்கத் தொடங்கியதோ அப்போது முதல் பன்றி, பறவை, வவ்வால், எலி போன்ற காய்ச்சல்கள் பரவி இப்போது கொரோனா என்ற அச்சுறுத்தலில் முற்றுப்புள்ளி இல்லாமல் மனித அழிவு எனும் பேரிடரை சந்தித்து வருகிறோம் என்பது வேதனைக்குரியது.

எந்தத் தொற்றையும் விரட்டியடிக்கவும் ஒழித்துக்கட்டவும் அண்டவிடாமலும் செய்யக்கூடியது இயற்கை நமக்களித்த சாம்பிராணி. கும்பல் கூடியுள்ள இடங்களில் நச்சுக்கிருமிகளை அகற்றி மக்களை பாதுகாக்கும் நன்மையைத் தருவது சாம்பிராணி. கட்டுரைத் தொடக்கத்தில் நாம் குறிப்பிட்டபடி நாடக அரங்குகளிலும் கோவில்களிலும் சுபநிகழ்வுகளிலும் அந்த மருத்துவரும் சாம்பிராணி தூபமிட சொன்னது ஏன்? என இப்போது புரிந்திருக்கும். திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி வட்டாரத்தில் சுத்தமல்லி அடுத்த சத்யாநகரில் செயற்கை சாம்பிராணிகளை மூட்டைக்கட்டிவிட்டு இயற்கை சாம்பிராணிக்கு மாறுங்கள் எனும் சமுதாய அக்கறையுடன் ஒரிஜினல் சாம்பிராணியை பல்வேறு மூலிகைப் பொடிகளுடன் கலந்து உற்பத்தி செய்து வருகிறார் இளம் தொழில்முனைவோர் கவிதா. இனி தனது தொழில் குறித்து அவர் விவரிப்பதைக் கேட்போம்….

‘‘ஃபிரங்கின்சென்ஸ் (Frankincense) என தாவரவியல் பெயர் கொண்ட குங்கிலிய மரத்தில் இருந்து வடித்தெடுத்த பிசின்தான் இயற்கை சாம்பிராணி. குங்கிலியம், மரத்துவெள்ளை, வெள்ளைக்கீரை, குமஞ்சம், பரங்கிச்சாம்பிராணி என இயற்கை சாம்பிராணிக்கு பல நாமங்கள் உள்ளன.
மருத்துவக் குணங்கள் கொண்ட ஒரிஜினல் சாம்பிராணியைக் கொண்டு தூபம்போடுவது இன்று அடியோடு மறைந்து கரித்தூளுடன் சாம்பிராணி வாசனைக்கொண்ட ரசாயனம் கலக்கப்பட்டு அதை எரிக்கும்போது வெளிப்படும் நச்சுப்புகையைத்தான் கோவில்களிலும் தேவாலயங்களிலும் மசூதிகளிலும் ஜென் கோவில்களிலும் சுப சடங்குகளிலும் இன்று பயன்படுத்தி வருகின்றனர்.

பாரம்பரிய ஒரிஜினல் சாம்பிராணிக்கு நூறு சதவிகித கேரண்டியுடன் போட்டி நிறைந்த இந்த வியாபார உலகில் கஸ்தூரி இயற்கை சாம்பிராணியை பல்வேறு மூலிகைகளுடன் கலந்து கஸ்தூரி இயற்கை சாம்பிராணி என்ற பெயரில் நாங்கள் அறிமுகம் செய்திருப்பதுதான் புதுமை. பெரிய தொழில் நிறுவனமாக தொடங்கவில்லை என்றாலும் தற்போது கிடைத்துள்ள ஆதரவு மற்றும் வரவேற்பு அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு இருப்பதே எனக்கு கிடைத்த குறுகிய கால வெற்றி. ஹோமம் நடத்தினால் திருஷ்டிகழிந்து சகல ஐஸ்வர்யங்களும் பெருகும் என புரோகிதர் கூறுவார். அதன்படி நடக்கும் ஹோமத்தில் அகில், சந்தனம், வெட்டிவேர், ஜவ்வாது, வேப்பம்பட்டை என பலவித மூலிகைப் பொருட்கள் அக்னியில் தாரைவார்க்கப்படும்.

அப்போது எழும்பும் புகை காற்றிலுள்ள தீய சக்திகளை ஒழித்து நன்மை உண்டாக்கும். இதுவே, திருமணம் உள்ளிட்ட அனைத்து சுப சடங்குகளுக்கும் முறைப்படி ஆனது. பலரும் என்னிடம் கேட்டார்கள், ‘அப்படி இந்த சாம்பிராணியில் என்ன இருக்கு?’ என்று கேட்டவர்களுக்கு மற்றும் கேட்க நினைப்பவர்களுக்கும் ஒருசில விசயங்களை தெளிவாக்கிவிடுகிறேன். மரப்பிசின் இயற்கையிலேயே இறுகி, தணலில் இட்டால் நறுமணப் புகையுடன் நச்சுக்கிருமிகளை ஒழித்துக்கட்டும் என்பது எப்பேர்ப்பட்ட விசயம். குறிப்பாக சாம்பிராணியை மட்டும் தூபமிட்டால் (தேங்காய் சிரட்டையை எரித்து, அந்தத் தணலில் சாம்பிராணி பொடியை தூவி புகை மூட்டுதல்) கண்திருஷ்டி மற்றும் பொறாமையை நீக்கும்.

சாம்பிராணி தூபமிடுதல், வீடு, கடைகளில் தீய காற்றை அகற்றி ஆரோக்கியம் அளிக்கும் அற்புத மருந்தாகும். முன்னோர்கள் அன்றே கூறினார்கள், வாரம் இருமுறை சாம்பிராணி தூபமிடுங்கள் என்று. சாம்பிராணி புகையால் நக்சுக்கிருமிகள் அடியோடு ஒழியுமே தவிர உடலில் எந்த பக்கவிளைவையும் ஏற்படுத்தாது. புற்று நோயை எதிர்க்கும் திறன் கொண்டது சாம்பிராணி புகை என்பதை ஆய்வாளர்கள் சமீபத்தில்தான் உறுதி செய்துள்ளனர். கருப்பை உட்பட பெண்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சாம்பிராணி உகந்த தீர்வு. வெள்ளிக்கிழமையிலும் வீட்டு விலக்குக்குப் பின்னரும் தலைக்குளித்து பெண்கள் சாம்பிராணி தூபம் போடுவதன் பின்னணியில் மருத்துவரீதி உண்மையிலேயே உள்ளது.

உடலில் உள்ள ராஜ உறுப்புகள் அனைத்தையும் சாம்பிராணி பத்திரமாக பாதுகாக்கும் தனித்துவம் வாய்ந்தது. எனவேதான் செயற்கை சாம்பிராணிக்கு ஒரே தீர்வாக அனைத்து மருத்துவக் குணங்களும் கொண்ட இயற்கை சாம்பிராணியை தற்போது சமூக அக்கறையுடன் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். அதிலும், ஒவ்வொரு மூலிகைப் பொருள் கலவையுடனும் தனித்துவமாக சாம்பிராணி கிடைப்பது கஸ்தூரி இயற்கை சாம்பிராணி நிறுவனத்தின் ஸ்பெஷாலிட்டி. ஐம்பது, நூறு, நூற்று ஐம்பது என வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப சப்ளை செய்து வருகிறேன். நிறுவனத்தில் முற்றிலும் பெண்களை பணிக்கு அமர்த்தி அவர்களுக்கு தொழிலிலும் பயிற்சி அளித்து வருகிறோம்.

எதிர்கால சமுதாயம் சிறப்பாக அமைய வேண்டும் எனும் குறிக்கோளுடன் நான் தொடங்கியுள்ள இயற்கை சாம்பிராணி பொருளை சந்தைப்படுத்த பெண்களை அதிக அளவில் ஊக்குவித்து வருகிறேன். இன்றைய சமுதாயத்தில் தனித்துவிடப்பட்ட பெண்களின் கதி அதோகதிதான் எனும் நிலைமை மாறி அப்படிப்பட்ட பெண்கள் என்னை நாடி எனது பொருட்களை விற்பனை செய்து வருமானம் ஈட்டி தன்னம்பிக்கையுடன் தனது வாழ்வாதாரத்தை சரிசெய்து கொள்ளும் நம்பிக்கையை ஏற்படுத்த நான் உறுதுணையாக இருப்பேன்’’ என்று உற்சாகமான வார்த்தைகளுடன் பேசி முடித்தார் தொழில்முனைவோர் கவிதா.



Post a Comment

Protected by WP Anti Spam