By 26 June 2020 0 Comments

தீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…!! (மருத்துவம்)

ஹெல்த்தியா கொண்டாடுங்க…

இந்தியாவில் ஆண்டுக்கு 6 மாதங்களுக்கு பண்டிகைக் கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இந்தக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் அளித்தாலும், எடைக் குறைப்பில் ஈடுபடுவோருக்கும் நீரிழிவுக்காரர்களுக்கும் கவலை அளிக்கிறது.

தீபாவளி கொண்டாட்டம் முடிந்திருக்கும் வேளையில் அடுத்ததாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என்று இனி வரிசையாக விழாக்கள் களை கட்ட காத்திருக்கின்றன. இதுபோன்ற விழா காலங்களில் ஆரோக்கிய சவால்களை எப்படி சமாளிப்பது? தீர்வு சொல்கிறார் உணவுக் கட்டுப்பாடு மருத்துவ நிபுணர் தாரிணி கிருஷ்ணன்.

‘‘பண்டிகைக் காலங்களில் ரத்த சர்க்கரை அளவுகள் முறையற்று இருப்பதாகவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உதாரணமாக, தீபாவளி ஒரே ஒரு நாள் பண்டிகைதான். ஆனாலும், அதன் கொண்டாட்டங்கள் முன்னும் பின்னுமாக 15 நாட்கள் நடைபெறுகின்றன. இனிப்புகள், உலர் பழங்கள் ஆகியவற்றை ஒரு மாதம் வரை உட் கொள்கிறோம். அதே வேளையில் ரத்த சர்க்கரை அளவையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

பண்டைக் காலங்களில் கூட்டுக் குடும்பம் இருந்தபோது அனைவரும் ஒன்றாக கொண்டாட்டங்களில் பங்கேற்றுக் கொள்வார்கள். ஒரே குடும்பத்தில் 3 தலைமுறைகள் வாழ்ந்தால் பல வகை உணவுகள் இருக்கும். குழந்தைகளும் முதியவர்களுக்கும் எளிதில் செரிமானம் ஆகும் வகையில் அரைத் திண்மத்தில் உணவுகள் தயாரிக்கப்பட்டிருக்கும். இந்த அரைத் திண்ம உணவுகள் செரிமானத்துக்கு ஏற்றது. அதோடு, இவற்றில் சோடியம், எண்ணெய், நெய் மற்றும் நறுமணப் பொருட்கள் குறைவாகவே இருக்கும்.

இன்றைய வாழ்க்கை முறையிலோ கலோரி அதிகமுள்ள உணவுகளை அதிகம் உட்கொள்கின்றனர். இந்த உணவுகளில் மாவுச்சத்தும் கொழுப்பும் மட்டுமே நிறைய உள்ளன. அதிலும் கொண்டாட்ட காலங்களில் இந்த நிலைமை இன்னும் அதிகமாகும். அதனால், இவ்விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதே நம் எடையையும், ஆரோக்கியத்தையும் காக்கும்.

உணவுக்கு முன்பாக காய் – கனிகளை எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக அதிக அளவில் தர்பூசணி, சாத்துக்குடி, பப்பாளி, கொய்யா ஆகியவற்றுடன் ஆப்பிள், வாழை, கிர்ணிப்பழம், மாதுளம், திராட்சை போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். கேரட், காலிஃப்ளவர், பூக்கோசு, வெள்ளரிக்காய், லெட்டூஸ் கீரை, வெங்காயம், முள்ளங்கி, முட்டைக்கோஸ் ஆகியவை அடங்கிய சாலட் நல்லது.

*குறைந்த அளவு எண்ணெயில் சமைத்த அல்லது வேக வைத்த உணவை உட்கொள்ளுங்கள்.

*பருப்புடன் பீன்ஸ் மற்றும் பயறு வகைகளைக் கலந்து சாப்பிடலாம். கொஞ்சம் பாலும் வெல்லமும் சேர்த்துக் கொண்டால் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும். பருப்பு வகைகளில் உள்ள நார்ச்சத்து சர்க்கரை அளவைக் குறைக்கும். பருப்பை உலர் நிலையில் நெய் சேர்க்காமலும் எடுத்துக் கொள்ளலாம்.

*பெரும்பாலான இனிப்புகளில் முந்திரி இருக்கும். முந்திரிக்கு பதிலாக பாதாம், அத்திப்பழம் அல்லது ஃப்ளெக்ஸ் சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றில் நார்ச்சத்தோடு சுவையும் உண்டு.

*வறுத்த உணவுகளை முற்றிலுமாகத் தவிர்ப்பதற்குப் பதிலாக ஒரே ஒரு துண்டுடன் நிறுத்திக் கொள்ளலாம். இது தொடர்ந்து உட்கொள்வதற்கு மாற்றாகவும், குடும்ப உணர்வுகளுக்கும் மதிப்பளித்த வகையிலும் அமையும். குடும்ப உறுப்பினர்களும் எடை குறைப்பவர்களையும், நீரிழிவுகாரர்களையும் இந்த முறையில் உணவு வகைகளை மாற்றி அமைத்து உண்ண ஊக்குவிக்க வேண்டும். ஒரே ஒரு நாள் உண்டால் பரவாயில்லை என தவறான உணவுகளைச் சாப்பிட வலியுறுத்தக் கூடாது.Post a Comment

Protected by WP Anti Spam