By 26 June 2020 0 Comments

முளைகட்டிய தானியங்களை சாப்பிடச் சொல்வது ஏன்?! (மருத்துவம்)

விளக்கம்

இயற்கை மருத்துவர்களும், உணவியல் நிபுணர்களும் முளைகட்டிய தானியங்களை சாப்பிட சொல்வது பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். அப்படி அவற்றில் என்ன ஸ்பெஷல்? எப்படி சாப்பிட வேண்டும்? நாமே தயார் செய்ய முடியுமா? எல்லா சந்தேகங்களுக்கும் பதிலளிக்கிறார் சித்த மருத்துவர் அப்துல் காதர். முளைகட்டிய பயறு என்பது முளைக்க வைக்கப்பட்ட நிலையிலுள்ள பயறினை குறிக்கிறது. முளைக்க வைக்கப்பட்டு பயன்படுத்தும் அனைத்து பயறு வகைகளுமே சிறந்த புரதச்சத்து உடையதாக இருக்கிறது.

இதன் காரணமாகவே பயறு வகையை நீரில் ஊற வைத்து, பின்பு முளைக்க வைத்து அதனை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிட பரிந்துரைக்கிறோம். முளை கட்டிய தானியங்கள் என்றவுடன் பெரிதாகவும் நினைக்க வேண்டியதில்லை. நம்முடைய அன்றாட வாழ்க்கையில், எளிதில் கிடைக்கும் பயறு வகைகளையே முளைகட்டச்செய்து பயன்படுத்தலாம். அந்த வகையில் பாசிப்பயறு, கொண்டைக் கடலை, தட்டைப்பயறு, உளுத்தம்பயறு, சோயா பயறு இந்த ஐந்து முளை கட்டிய தானியங்களிலும் புரதச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகிறது.

அதனால் இந்த பயறு வகைகளை முளைகட்டி பயன்படுத்துவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். முளை கட்டிய தானிய வகைகளில் சிட்ரஸ் அமிலம் (Citrus Acid) என்று சொல்லக்கூடிய வைட்டமின் சி மற்றும் ஈ சத்துக்களும் அதிகப்படியான நார்ச்சத்துக்களும் செறிவாகக் காணப்படுகிறது. மேலும் புரதம், கார்போஹைட்ரேட், பீட்டா, கரோட்டின் போன்றவை அதிக அளவில் உள்ளன. முளை கட்டிய தானியங்களில் அதிக அளவு ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டும், உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது.

இளைஞர்களுக்கு அவசியம்

இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், டென்னிஸ், கபடி, ஓட்டப்பந்தயம் சிலம்பம் மற்றும் உடற்பயிற்சி இளைஞர்கள் கட்டாயம் முளை கட்டிய தானிய வகை ஏதாவது ஒன்றினை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். இது அவர்கள் விரும்பும் உடல் ஆரோக்கியத்தையும் கட்டுமஸ்தான உடலையும் தரும். தற்போது முளை கட்டிய பயறு எல்லா டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களிலும் கிடைக்கிறது. வாய்ப்பு இருப்பவர்கள் வீட்டிலேயே தயார் செய்து உண்பது சாலச் சிறந்தது.

குழந்தைகளுக்கு அத்தியாவசியம்

இன்றைய சூழலில் குழந்தைகளின் திண்பண்டங்கள் ரசாயனங்கள் நிறைந்தவையாக இருக்கிறது. நேரடியாக எண்ணெயில் பொரித்த உணவுகள், சிப்ஸ் வகைகள், பிஸ்கட் வகை உணவுகள், சாக்லெட் வகை உணவுகள், செயற்கை நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகள் என இதுபோன்ற திண்பண்டங்களை குழந்தைகள் தின்று, வளரும்போதே தங்களது ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள். அதற்கு பெற்றோரும் முக்கிய காரணமாக இருக்கிறார்கள். அதனால் வளரும் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு கட்டாயம் முளைகட்டிய தானியங்களை நன்றாக வேக வைத்து தினமும் 30 முதல் 50 கிராம் வரை காலை உணவோடும், மதிய உணவோடும் தரலாம்.

இதனால் உடல் உறுதி, உடல் சுறுசுறுப்பு, மனத்தெளிவு, புத்திக் கூர்மை, ஞாபக சக்தி அதிகரிப்பு, மனத்தெளிவு போன்றவற்றுடன் அவர்களின் இளம் வயதிலயே உடல் எடை கூடாமல் இருக்கும் வண்ணமும் பார்த்துக் கொள்ள முடியும். முக்கியமாக கூந்தல் வளர்ச்சி, தோலுக்கு மினுமினுப்பு தருவதோடு கொலஸ்ட்டிராலை சமன்படுத்தும் வேலையையும் முளைகட்டிய தானியங்கள் செய்கின்றன. வீட்டிலேயே செய்யக்கூடிய ஓர் எளிய ஆரோக்கியமான உணவும் கூட.

இனி எளிதாக செய்யக் கூடிய சில முளைகட்டிய தானிய வகைகளையும், அதன் ஊட்டச்சத்து விபரங்களையும் தனித்தனியாக பார்ப்போம்…

முளை கட்டிய பாசிப்பயறுமுளைகட்டிய பயறு ஒரு சத்தான உணவாகும். இது உடலை வன்மையாக்கும். இது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று. உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கும் ஏற்ற உணவு. அமினோ அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் பி மற்றும் ஈ அதிகளவில் உள்ளது. இது எலும்பு வளர்ச்சிக்கும், சீரான ரத்த ஓட்டத்துக்கும், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் ஏற்ற உணவாகும்.முளை கட்டிய பாசிப்பயறு பெருங்குடல் தொந்தரவுகளைத் தீர்த்து, மலச்சிக்கலைப் போக்குகிறது.

இதில் புரதம், கலோரி, பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், நார்ச்சத்து ஆகியவை அதிகளவில் இருக்கின்றன. மாவுச்சத்து, கொழுப்பு, கோலின், பீட்டா கரோட்டின், கால்சியம், இரும்பு, மெக்னீஷியம், தாமிரம், சோடியம் ஆகியவையும் உள்ளடங்கி இருக்கிறது. இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் அன்றாட உணவில் எடுத்துக் கொள்ளலாம். எலும்பு வளர்ச்சிக்கும், ரத்த ஓட்டத்துக்கும், வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளின் தசைகளை வலுவாக்குவதற்கும் ஏற்றது முளைகட்டிய பச்சைப் பயறு.

முளைகட்டிய கொண்டைக்கடலை

முளைகட்டிய கொண்டைக் கடலையில் ஃபோலிக் அமிலத்துக்கு அடிப்படையான ஃபோலேட்டும், மக்னீசியமும் போதுமான அளவில் உள்ளது. இரும்புச்சத்து, சோடியம், செலினியம், துத்தநாகம், மாங்கனீசு, தாமிரம் போன்ற கனிமச்சத்துகள் உள்ளன. இது மாரடைப்பு காரணிகளைத் தவிர்க்கிறது. முளைகட்டிய கொண்டைக் கடலையை வேகவைத்து சாப்பிடுவது கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது. இதனால் அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து எடுத்து வந்தால் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க முடியும்.

முளைகட்டிய தட்டை பயறு

முளைகட்டிய தட்டை பயறில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், ரிபோஃபிளேவின் போன்ற சத்துக்கள் அதிக அளவில் இருக்கிறது. இது உடலுக்கு நல்ல ஊட்டத்தை அளிக்கிறது. முளை கட்டிய தட்டை பயறுகளில் நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் இதில் வைட்டமின் ஏ, ஆன்ட்டி-ஆக்சிடென்ட்டுகள், ஃப்ளேவனாய்டுகள், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற கனிமங்கள் மற்றும் கரையா நார்ச்சத்து அதிகம் அடங்கியிருக்கிறது.

இத்துடன் அதிக அளவு நார்ச்சத்தும், புரதமும் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்னைகள் நீங்கி, வயிறு சம்பந்தப்பட்ட செரிமானம், மற்றும் வயிற்றுக் கோளாறுகளுக்கு சிறந்த உணவாக முளைகட்டிய தட்டை பயறு இருக்கிறது. முளைகட்டிய சோயா பயறு முளைகட்டிய சோயா பயறை எடுத்துக்கொள்ளும்போது உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஹார்மோன் பிரச்னைகளுக்கு உள்ளான பெண்கள் இதை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். இதில் புற்றுநோயை வராமல் தடுக்கும் மூலக்கூறுகள் உள்ளது.

இதில், புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஃபோலிக் ஆசிட், ஒமேகா 3 வகை கொழுப்பு, மாவுச்சத்து, தயாமின், ரிபோஃபோமின், பீட்டா கரோட்டின், மெக்னீசியம், தாமிரம், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கிறது. (சோயா பயறு வகையை ஊற வைத்து முளைகட்டி சாப்பிடும்போது அதை நன்றாக வேக வைத்து பயன்படுத்த வேண்டும். இதை முளைகட்டிய சோயாவை நேரடியாக எடுத்துக் கொள்ளும்போது அஜீரண தொந்தரவுகள் இருக்கும்.)

முளைகட்டிய உளுந்து

முளை கட்டிய உளுந்தை வேகவைத்து சாப்பிடும்போது உடல் சோர்வு நீங்கி, உற்சாகம் தரும் உணவாக உளுந்து இருக்கிறது. குறிப்பாக, நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் சோர்வாக இருக்கும். அவர்கள் வலுப்பெறுவதற்கு உளுந்து உதவுகிறது. இது எலும்பு, தசை, நரம்புகளுக்கு ஊட்டமளிக்கிறது. மன அழுத்தத்தை போக்கி தூக்கமின்மை பிரச்னையை தீர்க்கிறது. இதில் அதிக அளவு புரதம் உள்ளது. பொட்டாசியம், கால்சியம், இரும்பு, நியாசின், தியாமின், ரிபோஃப்ளேவின், அமினோ அமிலங்களும் நிறைந்து காணப்படுகிறது.

முளைகட்டிய பயறு செய்யும் முறை

பச்சைப்பயறு 100 கிராம் அளவு எடுத்துக்கொண்டு அதனை ஒரு பாத்திரத்தில் நன்றாக நீரில் ஊற வைக்க வேண்டும். 10 மணி நேரம் ஊறவைத்து, பின்பு தண்ணீரை வடிகட்டி பயரினை ஒரு நல்ல சுத்தமான காட்டன் துணியில் வைத்து கட்டிவிட வேண்டும். பின்பு 12 மணிநேரம் கழித்து பார்க்கிறபோது முழுவதுமாக முளை கட்டிய பயறு தயாராகிவிடும். முளை கட்டிய தானியங்களை பயன்படுத்தும் போது அதனுடைய முழுமையான புரதச்சத்தை நாம் பெறமுடியும் ஏனெனில் முளைகட்டுவதால் அதில் அதிகஅளவு புரதச்சத்து இருக்கும்.

எப்படி சாப்பிட வேண்டும்?

முளைகட்டிய தானியங்களை நேரடியாக சாப்பிடுவதென்றால் குறைந்த அளவு சாப்பிடுவது நல்லது. ஏனெனில், இது செரிமானம் அடைவதற்கு கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளும். சில நேரங்களில் வயிறு உபாதைகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக, வயிற்றுப் பொருமல், வயிறு உப்புசம், ஜீரணம் ஆகாமல் அடிக்கடி ஏப்பம் வருதல், சில நேரங்களில் வயிறு இரைந்து பேதி செல்லல் போன்றவைகள் ஏற்படலாம். அதனால் முளைகட்டிய தானியங்களை லேசாக வேகவைத்து சாப்பிட்டால் ஒருவர் 50 கிராம் அளவு வரை சாப்பிடலாம்.குறிப்பாக முளை கட்டிய பயறு வகைகளை சாப்பிட காலை நேரம் உகந்தது. மாலை வேளையிலும் தேநீர் சாப்பிடும் நேரத்தில் உட்கொள்ளலாம்.Post a Comment

Protected by WP Anti Spam