உட்கட்சி வேட்பாளர் குத்துவெட்டுகள் !! (கட்டுரை)

Read Time:18 Minute, 52 Second

ஒரு பரீட்சையில், தான் சித்தி அடையவில்லை என்பதை விட, தன்னோடு போட்டியிட்டுப் பரீட்சை எழுதிய இன்னுமொரு குறிப்பிட்ட நபரும் சித்தி அடையவில்லை என்பது, சிலருக்கு மன மகிழ்ச்சியையும் ஓர் ஆறுதலையும் தருவதாக இருப்பதுண்டு. இந்த அற்பத்தனமான எண்ணம், முஸ்லிம் அரசியலையும் அண்மைக் காலமாக ஆட்கொண்டுள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது.

போட்டிக் கட்சிகளுக்கு இடையில் இருந்த எதிரெதிர் மனப்பாங்கு, இப்போது திரிபடைந்து, ஒரே கட்சிக்கு உள்ளேயே, ஓர் ஊருக்கு உள்ளேயே முரண்பாடுகளையும் அரசியல் குத்துவெட்டுகளையும் கொண்டு வந்திருக்கின்றது.

தலைமைத்துவத்துக்குப் பொருத்தமற்றவர்கள், முஸ்லிம் அரசியலுக்குத் தலைமை தாங்குவதாலும் பொருத்தமற்ற வேட்பாளர்கள் களமிறக்கப்படுவதாலும், இப்படியான ஓர் இழிநிலை ஏற்பட்டு இருக்கின்றது.

முன்னைய காலங்களில், ஓர் அரசியல் ஒருமைப்பாடு இருந்தது. முஸ்லிம்கள், தங்களுக்காக பிரத்தியேகக் கட்சிகளை உருவாக்கிக் கொள்வதற்கு முன்னதாக, பெரும்பாலும் பெருந்தேசியக் கட்சிகளின் அரசியலிலேயே பங்காளிகளாக இருந்தனர். கணிசமான காலம், தமிழரசுக் கட்சியுடன் அரசியல் ரீதியாக, இணைந்து செயற்பட்டிருந்தனர்.

இந்தக் காலங்களில், சிங்களம், தமிழ் ஆகிய சமூகங்களைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு, முஸ்லிம்கள் வாக்களித்தனர். முஸ்லிம் வேட்பாளர்களுக்கு தமிழ் மக்களும் ஒரு சில பகுதிகளில் சிங்கள மக்களும் வாக்களித்து, மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்த வரலாறுகள் இருக்கின்றன. அப்போது, இனபேதம், மத வேறுபாடு போன்றவை இந்தளவுக்கு இருக்கவில்லை. அத்துடன், சிறந்த ஓர் அரசியல் பிரதிநிதியாக, அவர் இருப்பாரா என்று மட்டுமே, மக்கள் சிந்தித்து வாக்களித்தனர் என்று சொல்லலாம்.

இந்தப் போக்கு, தென்னிலங்கையிலும் மலையகத்திலும் இன்னும் மீதமிருக்கின்றது. அங்கு இனம் சார்ந்து, ஊர் சார்ந்து வேட்பாளர்களை, நியமிக்க முடியாமையும், அதற்கு ஒரு காரணமாகக் குறிப்பிடப்படலாம்.

ஆனால், இந்தக் கட்டமைப்பு, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும் மாற்றத்துக்கு உள்ளாகி உள்ளது. இன ரீதியாக மட்டுமன்றி, கட்சி ரீதியாகவும் வாக்குகள் பிரிவடைந்து இருக்கின்றன. இது பழைய கதை!

குறிப்பிட்டதொரு முஸ்லிம் கட்சிக்கு இருக்கின்ற வாக்குகளே, இன்று பல அடிப்படைகளில் பிரிந்து செல்கின்ற நிலைமைகள் தோன்றியுள்ளன. ஊர், பிரதேசம் என்ற பாகுபடுத்தல்களின் அடிப்படையில், வாக்குகள் பிரிகின்ற நிலைமைகளின் உச்சக்கட்டமாக, குறிப்பிட்டதொரு கட்சியின் அரசியல்வாதிகள், வேட்பாளர்களுக்கு இடையே ஒத்துழையாமையும் போட்டி மனப்பாங்கும் வளர்ச்சி அடைந்திருப்பதைத் தெளிவாக அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இதுதான், புதுக் கதையாகும்.

கட்சி ஒன்றை மட்டுமல்ல, சாதாரணமாகச் சமூக சேவை அமைப்பொன்றைக் கூட, முன்கொண்டு செல்வது என்றால், எல்லோருடைய ஒத்துழைப்பும் பங்களிப்பும் அவசியமாகின்றது. அதில், ஒருவர் கூட முரண்டு பிடித்தால், உள்ளொன்று வைத்து, வெளியே வேறொன்றை வெளிக்காட்டிச் செயற்பட்டால், இலக்கை அடைவது பற்றி, நினைத்துக்கூடப் பார்க்கத் தேவையில்லை.

இருப்பினும், இதுதான் நடந்து கொண்டிருக்கின்றது. மக்கள் நலன் சார்ந்த அரசியலுக்குப் பொருத்தமற்றவர்களும் பணம், பதவியாசை பிடித்த பேர் வழிகளும் முஸ்லிம் அரசியலுக்குள் பிரவேசிக்கும் போது, தேர்தல் ஒன்றின் ஊடாகப் பிரதிநிதித்துவ அரசியலுக்குள் பிரவேசிக்க முற்படுகின்ற போது, அதன் பக்கவிளைவுகளாக, இப்படிப்பட்ட மோசமான நிலைமைகள் உருவாகி விடுகின்றன.

கடந்த காலங்களில், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில், கடும் விமர்சனங்கள் இருக்கின்றன. சுமார் 20 பேர் நாடாளுமன்றத்தில் இருந்தும், முஸ்லிம் சமூகத்துக்குக் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு எதுவும் நடக்கவில்லை என்ற, கவலைகள் இருக்கின்றன. இதற்கு அடிப்படைக் காரணமாக, தலைமைகள் மாத்திரமன்றி, சமூக அரசியலுக்குப் பொருத்தமற்ற பண்புகளை உடையவர்கள், பிரதிநிதித்துவ அரசியலுக்குள் நுழைவதும் ஆகும்.

அரசியல்வாதி அரசியலில் உழைக்கக் கூடாது என்றோ, பதவிகளைப் பெறக் கூடாது என்றோ மக்கள் கூறவில்லை. ஆனால், சமூகம் சார்ந்த விடயங்களை முன்னிறுத்தாமல், தமது சொந்த இலாப-நட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்துச் செயற்பட வேண்டாம் என்பதே, முஸ்லிம் சமூகத்தின் வேண்டுதலாக இருக்கின்றது. ஆனால், இப்படியாகப் பண்பற்ற பலர், முஸ்லிம் அரசியலில் எம்.பிக்களாக, மாகாண சபை உறுப்பினர்களாக, உள்ளுராட்சி சபை அங்கத்தவர்களாக, அரசியல் எடுபிடிகளாகக் கடந்த காலங்களில் இருந்தார்கள். இவர்களை மக்கள் வெகுவாக விமர்சித்து இருந்தார்கள்

எனவே, சமூக சிந்தனை அற்றவர்களை, கள்வர்களை, கயவர்களை, பித்தர்களை, சபல புத்திக்காரர்களை, போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டவர்களை இனிவரும் தேர்தல்களில் களமிறக்கக் கூடாது என்ற மக்களின் நிலைப்பாட்டை நாம், இப்பக்கத்தில் வெளியான பல பத்திகளில் வெளிப்படுத்தி இருந்தோம். ஆனால், அதே தவறை, முஸ்லிம் கட்சிகளும் தலைமைகளும் இம்முறையும் செய்திருக்கின்றன என்றே கருத வேண்டியுள்ளது. இதன்காரணமாக, ஒரேகட்சி வேட்பாளர்களுக்கு இடையில், ஒற்றுமை இன்மைகள் ஏற்பட்டுள்ளன.

இந்தத் தேர்தல், கடந்த நாடாளுமன்றத் தேர்தல்கள் எல்லாவற்றையும் விட, முஸ்லிம் சமூகத்துக்கு மிகவும் சவாலானது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக ஆதரவளித்த வேட்பாளர் தோற்று, மற்றைய வேட்பாளர் ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ளார். இந்தக் களநிலைமைகளைப் பயன்படுத்தி, முஸ்லிம் சமூகம் மீது, பல கோணங்களில் நெருக்குவாரங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.

நிலைமை இவ்வாறிருக்கையில், ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற வேட்பாளரான சஜித் பிரேமதாஸவுக்கே, இரு பிரதான முஸ்லிம் கட்சிகளும் ஆதரவளிக்கின்றன. அதுவும், சஜித்துக்கு எதிராக ரணில் விக்கிரமசிங்க களமாடுகின்ற தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸும் மக்கள் காங்கிரஸும் சஜித்துக்கு ஆதரவளிக்கின்றன. எனவே, இதில் உள்ள சிக்கல்கள், நாம் அறியாதவை அல்ல.

மறுக்கத்தில், ஆளும் தரப்புக்கு ஆதரவளிக்கும் தேசிய காங்கிரஸ், ராஜபக்ஷக்களை குளிர்மைப்படுத்தினாலும், இரு பிரதான முஸ்லிம் கட்சிகளும், கடந்த காலங்களில் ஆளும் கட்சிகளுக்கு அதிக (சுமார் 10 வரையான) எம்.பிக்களைப் பெற்றுக் கொடுத்ததைப் போன்று, அதிகளவான எம்.பிக்களை அக்கட்சியால் இம்முறை பெற்று, ஆளும் தரப்பைப் பலப்படுத்துவதும் இன்றைய நிலைவரப்படி சாத்தியமற்றது என்பது, பொதுவான அபிப்பிராமாகும்.

எனவே, இதற்குப் பின்னால் உள்ள சவால்களை வெற்றி கொள்வது என்றால், முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு உள்ளடங்கலாக, அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஏனைய கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும், கட்சி அரசியலுக்கு அப்பால், சமூகத்தின் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்துவதற்காகப் பாடுபட வேண்டிய ஒரு தேர்தலாக இது இருக்கின்றது.

ஆனால், முஸ்லிம் கட்சிகள், தங்களுக்கு இடையே வழக்கம் போல, பகைமை பாராட்டத் தொடங்கியுள்ளன. வசைபாடல்களும் ‘தமது வேட்பாளரே வெல்வார்’ என்ற, சிறுபிள்ளைத்தனமான கருத்துக் கணிப்புகளும் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளதைக் காண முடிகின்றது.

இவ்வாறு, முஸ்லிம் கட்சிகள், தங்களுக்கு இடையே சண்டையிட்டுக் கொள்கின்ற நிலைமைகளில் இருந்து ஒருபடி கீழிறங்கி, அண்மைக் காலமாக ஒரே கட்சிக்கு உள்ளேயே முட்டிமோதிக் கொள்வதும் வெட்டுக்குத்துகளும் இடம்பெறுகின்ற சூழல் உருவாகியுள்ளது.

குறிப்பாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களில், முஸ்லிம் கட்சிகள் சார்பில் பொருத்தமற்ற வேட்பாளர் சிலர் நிறுத்தப்பட்டு இருப்பதற்கு மேலதிகமாக, ஒழுங்கற்ற விதத்தில் இந்நியமனங்கள் இடம்பெற்றிருப்பதாகச் சொல்ல முடியும்.

அதாவது, ஒரு கட்சி, ஓரூரில் ஊரில் இரு வேட்பாளர்களை நிறுத்தி இருக்கின்றது. மூன்று முஸ்லிம் கட்சிகளும் தாம் போட்டியிடும் மாவட்டங்களின் ஆசனங்களுக்கு ஏற்றாற் போல, வேட்பாளர்களை நியமிக்க வேண்டிய அவசியம் உள்ளதன் காரணமாக, ஒவ்வோர் ஊரிலும் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு உள்ளார்கள்.

இவர்களில் சில வேட்பாளர்கள், நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுபவர்கள். சிலர், கணிசமான வாக்குகளைப் பெறுவார்கள் என எதிர்வுகூறப்படுகின்றவர்கள். வேறுசிலர், வேட்பாளர் பட்டியலை நிரப்புவதற்காக நியமிக்கப்பட்ட ஆட்கள். இவர்களைக் கிராமங்களில் ‘போடுகாய்’கள் என்று அழைப்பர்கள். அதாவது, தாம் வெற்றிபெற முடியாது என்று தெரிந்தும், கட்சிக்கு வாக்குச் சேகரித்துக் கொடுப்பதற்காக, ஏனைய கட்சிகளின் வாக்குகளைப் பிரிப்பதற்காக நிறுத்தப்பட்டவர்கள் எனலாம்.

இவர்கள் எல்லோரும், தங்களை வெற்றிபெறக் கூடிய வேட்பாளர்களாகக் காட்டிக் கொண்டாலும், சிலருக்குத் தெரியும் தாம் தோல்வியடைவோம் என்று! ஒரு சில முன்னாள் எம்.பிக்களின் வெற்றிகூட, நிச்சயமற்றதாக இருக்கின்ற சூழலில், பிரதேச சபைத் தேர்தலில்க் கூட வேட்பாளராக நிற்காமல், எவ்வித பின்புலமும் இல்லாமல், நேரடியாக எம்.பியாக ஆசைப்படுபவர்களின் நிலைமை பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

இந்தப் பின்னணியில், ஒரேகட்சி வேட்பாளர்களிடையே, ஒருவித போட்டியும் ஒத்துழையாமையும் உருவெடுத்து வருவதை, உன்னிப்பாகக் கவனிப்போரால் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. ஒரு குறிப்பிட்ட முஸ்லிம் அணி சார்பாக, ஏதாவது ஒரு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர், இன்னும் இரண்டு வேட்பாளர்களுக்கும் விருப்பு வாக்குகளை அளிக்குமாறு, தம்முடைய ஆதரவாளர்களைக் கோருவது வழக்கமான நடைமுறையாகும்.

அவ்வாறு, விருப்புவாக்குகளை அளிக்குமாறு சிபாரிசு செய்யப்படும் வேட்பாளர்கள், பெரும்பாலும் கட்சியால் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்ற ஓர் ஆளாக இருப்பார். ஆனால், கடந்த ஒரு சில தேர்தல்களில், கடைசி நேரத்தில் தமது வெற்றிபற்றி அச்சப்பட்ட குறுகிய மனம் கொண்ட வேட்பாளர்கள், இன்னுமொரு வேட்பாளரின் பெயரைக் குறிபிட்டு, அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று இரகசியமாகக் கோரியதாகப் பின்னர் தெரியவந்தது.

இந்த நிலைமை, இம்முறை தேர்தலில் மேலும் மோசமடைந்து இருக்கின்றது. நாம் மேலே குறிப்பிட்டது போல, ஒரு கட்சியில், ஒரு பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற சூழலில், ஒரு சில வேட்பாளர்கள் மற்ற வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொடுக்க விரும்புகின்றார்கள் இல்லை எனத் தெரிகின்றது.

இன்னும் சிலர், தமது கட்சியில் போட்டியிடும் இன்னுமொரு வேட்பாளர், தமது ஊருக்கு வந்து, வாக்குக் கேட்பதைக் கூட, எவ்வாறு தடுக்கலாம் என யோசிப்பதாக அறிய முடிகின்றது.

இவ்வாறாகப் பொதுவாக முஸ்லிம் கட்சிகளின் வேட்பாளர்களிடையே மட்டுமன்றி, குறிப்பிட்ட கட்சியொன்றின் வேட்பாளர்களிடையே, முரண்பாடுகள் தோன்றுவது மிக மோசமாக நிலைமையாகும்.

பொருத்தமற்ற வேட்பாளர்களை நியமித்த விவகாரம் ஒருபுறமிருக்க, இப்போது களமாடுகின்ற ஒரே கட்சியின் வேட்பாளர்களிடையே, ஒருங்கிணைந்த செயற்பாடின்மையும் வெட்டுக்குத்துகளும் இடம்பெறுவது பாதகமான விளைவுகளையே கொண்டுவரும்.

கடந்த காலங்களில், முஸ்லிம் சமூகத்துக்குக் கணிசமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், ஒரு பிரச்சினை கூடத் தீர்க்கப்படவில்லை. ஆயினும், நமது பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்த வேண்டிய ஒரு தேவையிருக்கின்றது. முஸ்லிம் கட்சிகள், அரசியல்வாதிகள் மூன்று பெரும்பான்மைக் கட்சிகளின் முகவர்கள் போல, இம்முறை தேர்தலில் குதித்து, கண்டகண்டவர்களை எல்லாம் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளமை விரும்பத்தக்க நடவடிக்கை அல்ல.

ஆனால், இதையெல்லாம் கடந்து, ஜீரணித்து, முஸ்லிம்கள் ஒரு சமூகமாக வடக்கு, கிழக்கிலும் மலையகத்திலும் தென்னிலங்கையிலும் அதிகப்படியான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்களைப் பெறுவதும் அந்தப் பிரதிநிதிகள் பொருத்தமானவர்களாக இருப்பதும் காலத்தின் அவசியமாகும்.

அந்த வகையில் பார்த்தால், முஸ்லிம் கட்சிகள், தங்களுக்கு இடையில் பரஸ்பரம் மோதிக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அதைவிட முக்கியமாக, குறுகிய மனம் கொண்ட ஒரேகட்சி வேட்பாளர்களிடையே ஏற்பட்டு வருகின்ற முரண்பாடுகள், குத்துவெட்டுகள் குறித்து, கட்சித் தலைவர்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விடயத்தில், பொறுப்பு வாய்ந்த தலைமைகள், ஒரேகட்சிக்குள் ஏற்படுகின்ற முரண்பாடுகள் விடயத்தில், ‘கூட்டிவிட்டுக் கூத்துப் பார்க்கின்ற வேலை’யைச் செய்யக் கூடாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பணத்திற்காகவும் மற்றும் மன திருப்திக்காகவும் ஆசைப்பட்டு வப்பாட்டியாகிய 5 தமிழ் நடிகைகள்!! (வீடியோ)
Next post ஆரோக்கியமான மூளைக்கு ஆப்பிள் சாப்பிடுங்க!! (மருத்துவம்)