By 10 July 2020 0 Comments

யாரையும் நம்பி நான் இல்லை!! (மகளிர் பக்கம்)

அண்ணாநகர் பிரதான சாலை. வண்டிகள் இருபுறம் சீறிப் பாய்ந்து கொண்டு இருந்தது. அதே பரபரப்புடன் அந்த சாலையில் அமைக்கப்பட்டு இருந்த பூங்காவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருக்க, மறுபுறம் சாலையில் அமைக்கப்பட்டு இருந்த உணவகத்தில் பெற்றோர்கள் அவர்களுக்கு பிடித்த உணவினை பதம் பார்த்துக் கொண்டு இருந்தனர். பானி பூரி, கட்லெட், சமோசா சன்னா என்று நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு தானே என்று திரும்புகையில் அந்த ஒரு கடையில் மட்டும் மற்ற கடைகளை விட கூட்டம் அதிகமாக இருந்தது. அது நம் இளைய தளபதிக்கு மிகவும் பிடித்த அக்தோ பர்மா உணவுக் கடைதான். ஒரு பக்கம் மெகா சைஸ் தேசைக்கல்லில் நூடுல்ஸ் வதங்கிக் கொண்டு இருக்க, மறுபக்கம் ஒரு பானையில் வாழைத்தண்டு சூப் ஆவி பறக்க, கைகளில் உறைகளை மாட்டிக் கொண்டு அக்தோவினை பார்சல் கட்டிக் கொண்டு இருந்தார் விஜயலட்சுமி. ‘‘நான் இங்க கடைப் போட்டு இரண்டு வருஷமாகுது. குடும்பமா தான் நாங்க இந்த தொழிலை நடத்தி வருகிறோம்’’ என்று பேசத் துவங்கினார் விஜயலட்சுமி.

‘‘பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். அம்மா, அப்பா இருவரும் பர்மா நாட்டைச் சேர்ந்தவங்க. இங்கு அகதிகளா வந்து செட்டிலாயிட்டோம். என் கூட பிறந்தவங்க ஏழு பேர். பத்தாம் வகுப்பு வரை தான் நான் சென்னையில் படிச்சேன். அதன் பிறகு இரண்டு வருஷம் திருச்சியில் இருக்கும் அக்கா வீட்டில் தான் தங்கி படிச்சேன். அப்பாவும் அம்மாவும் நான் சின்ன வயசில் இருக்கும் போதே இறந்துட்டாங்க. அதனால அண்ணனுக்கு குடும்ப பொறுப்பை பார்த்துக் கொள்ளும் கடமை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் எல்லா பொறுப்பையும் அவர் மேல் செலுத்த வேண்டாம் என்று முடிவு செய்து, அக்கா எனக்கான இரண்டு வருஷம் படிப்பு செலவை ஏற்றுக் கொண்டார். அம்மா உயிரோடு இருக்கும் போதே அக்காவிற்கு திருமணம் செய்துவிட்டார். அதனால் என்னைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு அக்காவிற்கு வந்தது.

படிப்பு முடிச்ச கையோடு எனக்கும் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்துட்டாங்க’’ என்றவர் அதன் பிறகு அக்கா வீட்டில் இருந்து சென்னைக்கு வந்து செட்டிலாகிவிட்டார். ‘‘என் கணவர் இரும்பு ஸ்க்ராப் தொழில் செய்து வந்தார். எல்லாம் நல்லபடியாகத்தான் சென்றது. நானும் என் கணவருடன் மகிழ்ச்சியாக தான் இருந்தேன். எனக்கு இரண்டு மகள்கள். இரண்டாவது மகள் பிறந்த போது அவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்ததால் அவர் அங்கு சென்றுவிட்டார். அதன் பிறகு அவரிடம் இருந்து பெரிய அளவில் எந்த ஒரு தகவல்களும் இல்லை. என் நாத்தனார் தான் என்னையும் என் குழந்தைகளையும் பார்த்துக் கொண்டார். இப்போது என்னை இந்த கடையை போடச் சொல்லி சொன்னதும் என் நாத்தனாரின் மகன் தான். நாங்க எல்லாரும் கூட்டுக் குடும்பமா தான் வாழ்ந்து வருகிறோம். என்ன ஒரே வீட்டில் இல்லாமல், அருகாமையில்தான் ஒருவருக்கு ஒருவர் வசித்து வருகிறோம்.

அதனால் அவர்கள் தான் எனக்கு எல்லா விஷயத்திலும் உறுதுணையா இருக்காங்க’’ என்றவர், தங்களின் வாழ்வாதாரத்திற்காக வேலைக்கு சென்றுள்ளார். ‘‘என் கணவரிடம் இருந்து பெரிய அளவில் சப்போர்ட் இல்லை. அதனால என் அக்கா மாமா தான் எனக்கு உதவி செய்தாங்க. அவங்க தான் என் பசங்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் எல்லாம் கட்டினாங்க. ஆனால் எவ்வளவு காலம் தான் அவங்க எனக்காக செய்வாங்க. அவங்களுக்கும் ஒரு குடும்பம் இருக்கே என்ற சிந்தனை என்னை வாட்டி எடுத்தது. அதனால் நான் வேலைக்கு போக முடிவு செய்தேன். என் குடும்ப நண்பரின் தொழிற்சாலையில் கணக்கு பார்க்கும் வேலைக்கு சென்றேன். சில காலம் அங்கு வேலை செய்தேன். அதில் வந்த வருமானத்தைக் கொண்டு என் குடும்பம் நகர்ந்தது. ஆனால் அந்த சந்தோஷம் அதிக நாள் நீடிக்கவில்லை. அவரால் அந்த தொழிற்சாலையை தொடர்ந்து நடத்த முடியவில்லை. அதனால் நானும் அங்கு வேலைக்கு போவதை நிறுத்திவிட்டேன்.

என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டு இருந்த போது என் தோழிகள் ஏன் டெய்லர் கடை வைக்கக் கூடாதுன்னு கேட்டாங்க. எனக்க டெய்லரிங் எல்லாம் தெரியாது. அப்படி இருக்கும் போது எப்படின்னு குழப்பமாக இருந்தது. அவங்க தான் இதற்கு டெய்லரிங் தெரிய வேண்டும் என்றில்லை. நல்ல டெய்லர் மாஸ்டர் மற்றும் அவர்களை நிர்வகிக்க தெரிந்தால் போதும் என்றார். அதன் படி நானும் ஒரு பெரிய தொகையை கடன் வாங்கி துவங்கினேன். எல்லாம் நல்லபடியாகத்தான் போனது. கிட்டத்தட்ட மூன்று வருஷம் சென்னை, சிந்தாமணியில் எங்க கடை நல்ல பிரபலமாச்சு. ஆனால் என் கடையின் மாஸ்டர் மாறினார். அப்போது வந்தது பிரச்னை. அவர் தைக்கும் விதம் பிடிக்கவில்லை போல், வாடிக்கையாளர்கள் எல்லாரும் கைமாறினார்கள். இதனால் கடையின் வருமானமும் குறைந்தது. என்னால் மாஸ்டர்களுக்கு சம்பளம், கடை வாடகை எல்லாம் சமாளிக்க முடியவில்லை.

அதனால் அதையும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டது’’ என்றவர் அதன் பிறகும் அடுத்து என்ன தொழில் துவங்கலாம் என்று யோசிக்க துவங்கியுள்ளார். ‘‘எங்க வீட்டு பக்கத்தில் ஹவுசிங்போர்ட் குடியிருப்பு இருக்கு. அங்கு நிறைய வீடுகள் இருக்கும். அதனால் அங்கு மிக்சர் கடை போட்டேன். ஆனால் ஒரு வருடம் கூட சரியா போகவில்லை. ஆனாலும் மூணு வருஷம் கடை வாடகைன்னு என் கை காசுப் போட்டு சமாளிச்சேன். ஒரு கட்டத்தில் கடன் சுமை ஏறிக் கொண்டு போனது. சமாளிக்க முடியாமல் அதையும் மூடிவிட்டேன். அந்த சமயத்தில் இப்போது சாப்பாட்டு தொழிலுக்கு தான் நல்ல வருமானம்னு என் தம்பி சொன்னான். பானிபூரி, பஜ்ஜி, சமோசா கடை எல்லாம் நிறையவே இருக்கு. அந்தப் பகுதியில் இல்லாத கடையா போடணும்னு யோசிச்ச போதுதான் எங்களின் பாரம்பரிய உணவினையே போடலாம்னு முடிவு செய்தோம். அப்படித்தான் இந்த அக்தோ கடை உருவாச்சு.

அம்மா வீட்டில் அடிக்கடி அக்தோ, மொயிங்கா, தேஜா, சீஜோன்னு பர்மா உணவுகளை செய்வாங்க. அவங்க செய்யும் போது நான் பார்த்து இருக்கேன். அம்மாவுக்கு பிறகு பசங்க கேட்கும் போது செய்து கொடுத்திருக்கிறேன். சில சமயம் எங்க பக்கத்து வீட்டில் இருக்கிறவங்க அவங்க வீட்டு சின்னச் சின்ன விழாக்களுக்கு செய்து தர சொல்லி கேட்பாங்க. அந்த சமயம் ஒரு இருபது பேருக்கு செய்து கொடுத்திருக்கிறேன். இந்த அனுபவம் தான் என்னை அக்தோ கடை போட ஒரு தன்னம்பிக்கை ஏற்படுத்தியது. ஆனால் அதற்கான முதலீடு என்ன செய்வதுன்னு புரியல. அப்போது என் தம்பியின் நண்பர் ராஜூ என்பவர் முப்பதாயிரம் ரூபாய் கொடுத்து கடையை ஆரம்பிக்க சொன்னார். அவர் கொடுத்த பணத்தைக் கொண்டு தான் இந்த கடைக்கு தேவையானதை எல்லாம் பார்த்தோம். இப்ப இந்த கடை ஆரம்பிச்சு இரண்டு வருஷமாச்சு. ஒரு வருஷத்தில் பக்கத்து தெருவில் வேறு கடையும் திறந்திருக்கிறோம்.

அந்த கடை ஆரம்பிச்சு ஒன்பது மாசமாகுது. என் தம்பி பார்த்துக் கொள்கிறான். நான் இந்தக் கடையை பார்த்துக்கிறேன்’’ என்றவர் ஆரம்பத்தில் சாலையில் நிற்க வேண்டுமே என்று தயங்கியுள்ளார். ‘‘என்னதான் நான் தனியா தொழில் செய்தாலும், அது எல்லாம் ஒரு கடை போல இருக்கும். இப்படி ரோட்டுல நின்னதில்லை. இது கொஞ்சம் எனக்கு சங்கடமாகத்தான் இருந்தது. அப்படி யோசிச்சா, என் குடும்பத்தை எப்படி காப்பாற்றுவது. அதனால் துணிந்து இறங்கிட்டேன். முதல்ல நாம் கடை போட்ட போது, விற்பனையாகுமான்னு எனக்கு சந்தேகமா இருந்தது. ஆனால் அன்னிக்கே பலர் வந்து சாப்பிட்டாங்க. நான் இருபது பேருக்குதான் செய்திருந்தேன். அது தீர்ந்துவிட்டது. மறுபடியும் வீட்டில் செய்ய சொல்லி விற்பனை செய்தோம். தரமான வித்தியாசமான உணவை கொடுத்தா மக்கள் விரும்பி சாப்பிடுவாங்கன்னு அப்பதான் புரிந்தது.

இங்க நான் அக்தோ, மொயிங்கா, முட்டை மசாலா செய்றேன். இதில் முட்டை மசாலா நிறைய பேர் விரும்பி சாப்பிடுறாங்க. அக்தோவிலேயே பல வெரைட்டி இருக்கு. பிரைட் அக்தோ, முட்டை அக்தோ, சிக்கன் அக்தோன்னு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப செய்து தருவேன். இந்த உணவுக்கு முக்கியமே வறுத்த வெங்காயம் தான். காலையில் பசங்கள ஸ்கூலுக்கு தயார் செய்து அனுப்பிவிட்டு எங்க வேலை துவங்கும். வெங்காயத்தை நீளமாக நறுக்கி வெயிலில் காயவைத்து எடுத்து அதை எண்ணெயில் பொரித்து தனியா சுவைத்திடுவோம். அதன் பிறகு நூடுல்ஸ், முட்டை, சிக்கன் எல்லாவற்றையும் தனித்தனியாக வேகவைத்துக் கொள்வோம், காய்கறிகளை நறுக்கி, சூப் என எல்லாவற்றையும் தயார் செய்து வைத்துக் கொள்வோம்.

இவை எல்லாம் தயாராக மாலை ஐந்து மணியாயிடும். அதன் பிறகு கடையை திறந்தா ஒன்பதரை மணி வரை இருக்கும். பொதுவாக எல்லாமே விற்றுடும். விற்கவில்லை என்றால் அப்படியே அங்குள்ளவர்களுக்கு கொடுத்திடுவேன். அல்லது குப்பையில் போட்டுவிடுவோம். காரணம் இந்த உணவுகள் எதுவுமே மறுநாள் வரை வைத்திருக்க முடியாது. கடையை பொறுத்தவரை எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. மழை, பனி எல்லாம் பார்க்க முடியாது. மழை காலத்தில் கடையின் மேல் தார்ப்பாயை விரித்திடுவேன். கொஞ்சம் வியாபாரம் மந்தமாக இருக்கும். அந்த சமயத்தில் தார்ப்பாயை போட்டு விற்பனை செய்வேன். ஒரு பக்கம் கடன் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து வருகிறோம்ன்னு சந்தோஷம் இருந்தாலும், இப்படி ரோட்டில் நிற்கிறோமேன்னு கஷ்டமா இருக்கும். சில சமயம் என்னடா இந்த வாழ்க்கைன்னு என் தம்பிகிட்ட வருத்தப்படுவேன். அவன் தான் எனக்கு ஆறுதல் சொல்வான்.

இப்ப அதுவே பழகிடுச்சு. இது தான் என்னுடைய வாழ்க்கைன்னு நான் என்னை மாற்றிக் கொண்டேன். அதனால் கொசுக்கடியை கூட பொருட்படுத்தாமல் உழைக்கிறேன். யாரும் யாரையும் நம்பி இல்லை என்பதை நான் புரிந்து கொண்டேன்’’ என்றவர் இன்னொரு கடையை அம்பத்தூர் அருகில் போட இருப்பதாக தெரிவித்தார். ‘‘என் தம்பி மொபைல் கடை வச்சிருந்தார். இப்ப முழுக்க முழுக்க இதில் இறங்கிட்டோம். அங்க அண்ணாநகரில் இரண்டு கடையை நானும் என் தம்பியும் பார்த்துக் கொள்கிறோம். இதை மேலும் விரிவுபடுத்தும் எண்ணம் இருக்கு’’ என்றார் அக்தோவை பார்சல் செய்தபடி விஜயலட்சுமி.Post a Comment

Protected by WP Anti Spam