ஆளுமையா? அனுதாபமா? (கட்டுரை)

Read Time:18 Minute, 23 Second

“உங்கள் மூன்று விருப்பு வாக்குகளில் ஒன்றையேனும் அந்தக் கட்சியிலுள்ள பெண் வேட்பாளருக்குப் போடுங்கள்” என்ற கோஷமானது என்றுமில்லாதவாறு தற்போதைய தேர்தல் களத்தில் மிகவும் வலுப்பெற்று வருகிறது. இது அனுதாப வாக்குகளாக வெளிக்குத் தோன்றினாலுமே ஆணாதிக்க அரசியலில் ஆளுமையுள்ள பெண்கள் கூட உள்ளே நுழைவதற்கு அனுதாபம் தான் முதலில் தேவையாக இருக்கிறது. இல்லாவிடின் மக்களுக்கு அறிமுகமேயில்லாத ஒரு வேட்பாளரை நிறுத்தினால் கூட வடக்கில் பெரும் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையோடிருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் கூடப் பெண் வேட்பாளர் தெரிவு என்று வரும்போது ஆளுமையுள்ள பெண்ணைத் தேசியப் பட்டியலிலும் அனுதாப வாக்குகளைப் பெறக்கூடியவர் என்று கருதுபவரையே களத்திலும் இறக்கப்படுகிறார். இதுவே அரசியலில் பெண்களின் இன்றைய நிலை.

இலங்கையில் கடந்த நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய பன்னிரு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுமே குறிப்பிடத்தக்களவு கல்வியறிவைக் கொண்ட தொழில் சார் வல்லுநர்கள் ஆவர். இதில் எவருக்கும் எதிராக ஊழல், மோசடிக் குற்றச்சாட்டு எதுவும் இல்லை. இருப்பினும் இலங்கை அரசியலில் பெண்களுக்கு உரிய இடத்தையும் அங்கிகாரத்தையும் பெற்றுக்கொள்ள நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.

அதிலும் குறிப்பாக இலங்கையில் நான்கில் ஒரு பங்கு சனத்தொகையைக் கொண்டிருக்கும் சிறுபான்மையினங்களிலிருந்து கடந்தமுறை தெரிவுசெய்யப்பட்ட 42 பிரதிநிதிகளுக்குள், இருவர் மாத்திரமே பெண் பிரதிநிதிகள் ஆவர். இது மொத்த சிறுபான்மைப் பிரதிநிதித்துவத்தில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவானதாகும்.

குறித்த இரு பெண்களும் கூட வடக்கிலிருந்தே தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். முந்தைய காலங்களில் கிழக்கிலிருந்து பேரியல் அஷ்ரப் மற்றும் கம்பஹாவைச் சேர்ந்த அஞ்சான் உம்மா ஆகியோர் முஸ்லிம் தரப்பு பெண் பிரதிநிதிகளாக இருந்திருந்தாலுமே மலையகத்தைச் சேர்ந்த பெண்கள் எவரும் இதுவரை நாடாளுமன்றத்தில் பிரதிநிதிதுவப் படுத்தவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் வாக்காளர்களில் ஐம்பத்தியாறு வீதத்துக்கும் அதிகமான பெண் வாக்காளர்களைக் கொண்டிருந்தும் சிறுபான்மையினரின் பிரதான கட்சிகள் எவையும் பெண் வேட்பாளர்களைத் தெரிவு செய்யாமைக்குப் பிரதான காரணமாக பெண்களுக்கு யாரும் வாக்குப் போட மாட்டார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இங்கே “பெண்களுக்கு யாரும் வாக்குப் போடமாட்டார்கள்” என்று குறிப்பிடப்படுபவர்கள் இந்த 44 சதவீத ஆண் வாக்காளர்கள் மட்டுமல்ல 56 சதவீத பெண் வாக்காளர்களையும் சேர்த்துத் தான்.

இருந்தும் முன்னைய காலங்களைப் போலல்லாது தற்போது பல கட்சிகளில் பெண் வேட்பாளர்களுக்குக் குறித்தளவு ஆசனங்கள் ஒதுக்கப்பட்டு வருவதக் காணலாம். அப்படிக் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுத் தெரிவு செய்யப்படும் சொற்பமான பெண்களைக் கூட வெல்லவைக்க முடியாதளவுக்கு வாக்காளர்களின் தெரிவுகள் இருக்கும் பட்சத்தில் இங்கே பெண்களின் பிரதிநிதித்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்துவதாலோ கட்சிகளில் பாதியளவு பெண் வேட்பாளர்களை நிறுத்தச் சொல்லிக் கேட்பதாலோ எதுவுமே ஆகிவிடப்போவதில்லை. எந்தவொரு கட்சியுமே உள்ளுக்குள் ஆண், பெண் என வேறுபாடு காட்டினாலுமே தேர்தல் களம் என்று வரும்போது இவையெல்லாவற்றையும் தாண்டி கட்சியின் வெற்றி – தோல்வி என்பதையே முக்கியக் குறிக்கோளாகக் கொண்டிருக்கும்.

எனவே, அதிக பெண் வேட்பாளர்களை நிறுத்தினால் தமக்கு அதிக பெண்களின் வாக்குகள் கிடைக்கக்கூடும் என்ற ஒரு நிலை வரும்போது நிச்சயமாக எந்தவொரு கட்சியுமே கூடிய வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காகப் பெண்களை அதிகளவில் களமிறக்கத் துணிவார்கள். அதிலும் குறிப்பாக ஒவ்வொருவரும் தாம் கட்சிக்குப் போடும் மூன்று வாக்குகளில் குறைந்தது ஒரு வாக்கையேனும் ஒரு பெண்ணுக்குப் போடும் பட்சத்தில் அது, குறித்த பெண்ணின் வெற்றிக்கும் சேர்த்து வழிவகுக்கிறது.

பெண்களுக்குத் தைரியம் இருந்தால், மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தால் தனித்து நிற்பது தானே… எதற்காகக் காலாகாலமாக ஆண்களால் கட்டியெளுப்பப்பட்டு நீரூற்றி வளர்க்கப்பட்ட கட்சிகளது நிழலுக்குப் போட்டியிடவேண்டும் என்று கேட்டால், இலங்கையின் விகிதாசாரத் தேர்தல் முறையானது பிரதானமாகக் கட்சி அரசியலுக்கே சாதகமாக இருக்கிறது. இதன் காரணமாக சுயேச்சையாகக் களமிறங்குபவர்களின் வெற்றி எவ்வாறு தடுக்கப்படுகிறது என்பதை விளங்குவதற்கு முன்னர் ஒரு தேர்தல் மாவட்டத்தின் ஆசனப்பங்கீட்டு முறையைப் பற்றி அறிந்து வைத்திருத்தல் அவசியமாகிறது.

உதாரணத்துக்கு யாழ். தேர்தல் மாவட்டத்துக்குரிய 7 ஆசனத்துக்காக அங்கு பதிவு செய்யப்பட்ட ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களில் இம்முறை 360,000 வாக்குகளே வழங்கப்படுவதாக எடுகோளாக வைத்துக்கொண்டால், அதனை வைத்து மாவட்ட விகிதாசார தேர்தல் முறையில் போட்டியிடும் கட்சிகளுக்கு இடையே எவ்வாறு ஆசனங்கள் பகிரப்படுகின்றன என்று இங்கே பார்க்கலாம்.

மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகள் – 360,000
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 20,000
செல்லுபடியான வாக்குகள் – 340,000

குறித்த மாவட்டத்தில் A, B, C, D, E, F, G, H ஆகிய எட்டுக் கட்சிகள் மாத்திரமே போட்டியிடுகின்றன என்று வைத்துக் கொண்டு, அக்கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள் கீழே தரப்படுகின்றன.

A – 175,000
B – 50,000
C – 32,000
D – 24,000
E – 19,000
F – 16,000
G – 14,000
H – 10,000

இங்கு ஏழு ஆசனங்களில் முதலாவது ஆசனமாகிய ‘போனஸ்’ ஆசனம், மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற கட்சிக்கு வழங்கப்படும். நாடளாவிய ரீதியில் வழங்கப்படும் இத்தகைய 36 போனஸ் ஆசனங்கள், 9 மாகாணங்களுக்கும் சரிசமமாகப் பங்கிடப்பட்டு, ஒவ்வொரு மாகாணங்களும் தலா நான்கு ஆசனங்களைப் பெறுகின்றன.

பின்னர் இந்த போனஸ் ஆசனங்கள், ஒவ்வொரு மாகாணங்களுக்குள்ளே காணப்படும் தேர்தல் மாவட்டங்களுக்கிடையே பங்கிடப்படும்போது யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, மட்டக்களப்பு, திருகோணமலை, நுவரேலியா, மாத்தளை போன்ற தேர்தல் மாவட்டங்கள் தலா ஓர் ஆசனத்தையும் வன்னி தேர்தல் மாவட்டம் மூன்று போனஸ் ஆசனங்களையும் ஏனைய தேர்தல் மாவட்டங்கள் அனைத்தும் தலா இரண்டு ஆசனங்களையும் பெற்றுக்கொள்கின்றன.

இங்கே யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம் என்பது யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கியதாகவும், வன்னி தேர்தல் மாவட்டம் என்பது மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கியதாகவும் காணப்படுகின்றன. எனவே, வட மாகாணத்துக்குரிய நான்கு போனஸ் ஆசனங்கள் யாழ். தேர்தல் மாவட்டத்துக்கு ஒன்றும் வன்னி தேர்தல் மாவட்டத்துக்கு மூன்றுமாகப் பங்கிடப்படுகின்றன.

இதனடிப்படையில் யாழ். மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற கட்சி A ஆனது, யாழ். தேர்தல் மாவட்டத்துக்குரிய ஒரு போனஸ் ஆசனத்தை முதலில் பெற்றுக்கொள்கிறது.

அடுத்ததாக, மொத்த வாக்குகளில் 5% என்ற வெட்டுப்புள்ளிக்குக் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சியின் வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.

இதனடிப்படையில் (360,000x 0.05 = 18,000) பதினெண்ணாயிரத்துக்குக் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகள் F,G,H ஆகியன பெற்றுக்கொண்ட மொத்தமான 40,000 வாக்குகள் கணக்கெடுக்கப்படாது. இன்னும் விளக்கமாகச் சொல்லப்போனால் இவை கூட ஒருவகையில் செல்லுபடியற்ற வாக்குகளாகவே கருதப்படுகின்றன. இது உண்மையாக வாக்காளர் அளித்த 20,000 செல்லுபடியற்ற வாக்குகளைவிட எண்ணிக்கையில் மிக அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போது போனஸ் ஆசனம் தவிர்த்து மீதம் உள்ள 6 ஆசனங்கள், மீதி ஐந்து கட்சிகளும் பெற்ற வாக்குகள் அடிப்படையில் பிரிக்கப்படும். தொடர்ந்து போட்டியில் இருக்கும் கட்சிகளான A, B, C, D, E ஆகியன பெற்ற மொத்த வாக்குகள் (175,000+ 50,000+ 36,000+ 20,000+ 19,000 = 300,000) மூன்று இலட்சம் ஆகும்.

எனவே, ஓர் ஆசனத்தைப் பெறத் தேவையான வாக்குகள் (300,000/6 = 50,000) ஐம்பதினாயிரம் ஆகும். இதன்படி ஆசனப் பங்கீட்டின் முதல் சுற்றில் 50,000 வாக்குகளுக்கு ஓர் ஆசனம் வீதம் வழங்கப்பட்டு, மீதியுள்ள வாக்குகள் இரண்டாம் சுற்று ஆசனப் பங்கீட்டுக்குச் செல்லும்.

இதன் அடிப்படையில் முதல் சுற்றில் கட்சி A ஆனது 3 ஆசனங்களைப் பெற்று (175,000- 150,000= 25,000) மீதியாக இருபத்தியையாயிரம் வாக்குகளைப் பெறும் அதேவேளை, கட்சி B ஆனது 1 ஆசனத்தையும் (50,000-50,000= 0) மீதியாக எந்த வாக்குகளையும் கொண்டிராது. ஏனைய C, D, E கட்சிகளுக்கு 50,000 வாக்குகள் இல்லாததால் முதல் சுற்றில் ஆசனங்கள் எதுவும் கிடைக்காது. இருந்தும் அவர்களின் வாக்குகள் மீதியாகக் கணிக்கப்பட்டு இரண்டாம் சுற்றில் போட்டி போடும்.

இதுவரை கட்சி A க்கு ஒரு போனஸும் மூன்று ஆசனங்களுமாக நான்கு ஆசனங்களும் கட்சி B க்கு ஓர் ஆசனமுமாக மொத்தமாக 5 ஆசனங்கள் வழங்கப்பட்டுவிட்டன. எனவே தற்போது மொத்த ஏழு ஆசனங்களில் (7-5= 2) இரண்டு ஆசனங்களே மீதம் உள்ளன. இவையிரண்டும் இரண்டாம் சுற்றில் பகிரப்படும்.

இரண்டாம் சுற்று (மீதி வாக்குகள்)

A – 25,000
B – 0
C – 32,000
D – 24,000
E – 19,000

இதன் அடிப்படையில் மீதி வாக்குகள் அதிகம் உள்ள முதல் இரண்டு கட்சிகளுக்கும் தலா ஓர் ஆசனம் வீதம் வழங்கப்படும்.

C – 32,000 ஓர் ஆசனம்
A- 25,000 ஓர் ஆசனம்

இறுதி முடிவு

கட்சி A – 1+3+1= 5ஆசனங்கள்
கட்சி B – 1+0= 1 ஆசனங்கள்
கட்சி C- 0+1 = 1 ஆசனம்
கட்சி D- 0+0= 0 ஆசனம்
கட்சி E- 0+0 = 0 ஆசனம்

இங்கே பல கட்சிகள் போட்டி போடும் சந்தர்ப்பங்களில் வாக்குகள் பிரிவடைந்து செல்லக்கூடிய வாய்ப்பு அதிகமாகிறது. இதில் பலர் ஐந்து சதவீத வாக்குகளைக் கூடப் பெற முடியாத சூழ்நிலை காணப்படுமாயின் அவை செல்லாத வாக்குகளாகவே ஆகிவிடக்கூடிய சந்தர்ப்பங்களே அதிகமாகக் காணப்படுகின்றன. எனவே தான் பெரும்பாலான வாக்காளர்கள் தமது வாக்குகளை வெற்றிபெறக்கூடியது என்று கருதப்படும் கட்சிகளுக்கே அளித்து வருவதைக் காணலாம். இது சிறுபான்மையினரின் பலத்தை ஒருங்கிணைப்பதாகக் கருதினாலுமே பெண்களின் பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தவரையில் மிகவும் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தி வருகிறது.

தேர்தலில் ஆசன வாய்ப்பைப் பெறுவதற்காக வெற்றிபெறக்கூடிய நிலையிலிருக்கும் குறித்த பிரதான கட்சியிலிருக்கும் அடிமட்ட உறுப்பினர்கள் ஏற்கெனவே ஆசனங்களை அலங்கரித்துக்கொண்டிருக்கும் நபர்களுக்குப் போடும் கும்பிடுகளையும் ஜால்ராக்களையும் உள்ளே சென்று பார்த்தால், தன்முனைப்புள்ள எந்தப் பெண்ணுமே அரசியலுக்கு வரத் துணிய மாட்டார்கள். அப்படியும் அடித்துப்பிடித்து வரத்துணியும் பெண்களைக் கூட இன்னொரு பெண் வாக்காளரே தமது வாக்கை அளிக்காமல் துரத்திவிடும்போது அந்தப் பெண்கள் எங்கே தான் போவார்கள்?

இங்கே தான், ‘ஆண்களின் நிழலில் எதற்காகப் பங்கு கேட்கவேண்டும்?, பெண்கள் தமக்கொரு கட்சியை ஏன் உருவாக்கக்கூடாது?’ என்றொரு கருத்து என் முன்னால் சென்ற வருடம் வைக்கப்பட்டபோது, இதுவரையில் ஒருவரின் ஆளுமையின் மீது மட்டுமே நம்பிக்கைவைத்து, பாலினப் பாகுபாட்டைப் பற்றியெல்லாம் அதிகம் பேசியிராத எனக்கு இக்கருத்து அர்த்தமற்றதாகத் தெரிந்தது. ஆனால், இன்றைய அரசியல் சூழ்நிலைகள் பெண்களின் தெரிவுகளை அந்தப் பாதையை நோக்கியே மீண்டும் மீண்டும் கைகாட்டத் துணிவது மிகவும் வேதனைக்குரிய விடயமாகவே தெரிகிறது. இதனைத் தடுக்க வேண்டுமெனில் கட்சி எதுவாக இருந்தாலும் உங்கள் விருப்பு வாக்குகளில் ஒன்றையேனும் பெண்களுக்குக் கொடுங்கள். அவர்கள் உங்களுடன் சேர்ந்து பயணிக்கவே விரும்புகிறார்கள். எமக்குள் இனம், மதம், சாதி என்று பிரிந்து நின்றது போதும். இப்போது பாலினப் பாகுபாட்டைக் காட்டி மேலும் சிறு கூறுகளாகப் பிரித்து வைக்காமல், பெண்களுக்குரிய இடத்தை அவர்களுக்கு முறையாக வழங்குங்கள். மதிப்புடன் வாழவிடுங்கள். அதற்கு அனுதாபமோ ஆளுமையோ, இல்லை அதற்கும் மேலாக சாகோதரியாக, தாயாக, நண்பியாக, நலன்விரும்பியாக அன்புடனோ உங்கள் வாக்கில் ஒன்றை மறக்காமல் கட்டாயமாக அவளுக்குப் போடுங்கள். அது போதும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post Nepal-ஐ கைக்குள் போட்டுக்கொள்ள துடிக்கும் China!! (வீடியோ)
Next post அடுத்த டயானா வேண்டாம்!! (மகளிர் பக்கம்)