உட்லாண்ட்ஸ் டிரைவ் இன்னில் எனக்கு நிறைய மலரும் நினைவுகள் இருக்கு!! (மகளிர் பக்கம்)

Read Time:16 Minute, 0 Second

‘‘சாப்பாடுன்னா எனக்கும் எமோஷனல் பயணம் இருக்கு. எனக்கு நல்ல ஆரோக்கியமான உணவு சாப்பிட பிடிக்கும். அதே சமயம் துரித உணவுகள், பர்கர், பீட்சா எல்லாம் நான் சாப்பிட மாட்டேன். அதே போல் நான் இப்ப அசைவ உணவும் சாப்பிடுவதில்லை. முற்றிலும் வீகன் டயட்டுக்கு நான் மாறிட்டேன். பால், தயிர், நெய், சீஸ், மாட்டில் இருந்து மட்டும் இல்லை எந்த ஒரு மிருகத்தில் இருந்து வெளியாகும் உணவுப் பொருட்களை நான் சாப்பிட மாட்டேன். நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுன்னா ரொம்ப பிடிக்கும். என்னுடைய உடலுக்கு தேவையான எல்லா விதமான ஊட்டச்சத்துள்ள உணவான புரதம், இரும்பு, கால்சியம், விட்டமின்கள் எல்லாம் இருக்கிற உணவுகள் தான் நான் சாப்பிடுறேன். அதனால எனக்க டயட் மேல நம்பிக்கை எல்லாம் கிடையாது. ஆரோக்கியம் தான் முக்கியம்’’ என்று தன் உணவுப் பயணம் குறித்து பகிர்ந்து கொள்ள துவங்கினார் ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா.

‘‘நான் ஊட்டச்சத்து நிபுணரா மாறியதே ஒரு கதை தான். நான் சின்ன வயசில் சாப்பிடவே மாட்டேன். எங்க காலனியில எங்க பக்கத்து வீட்டில் அவங்க பசங்க இது சாப்பிட்டாங்க, இது செய்து கொடுத்தேன்னு சொல்லுவாங்க. என்னோட அம்மாக்கு அப்படி சொல்ல எதுவுமே இருக்காது. நான் சாப்பிட்டா தானே அவங்களால சொல்ல முடியும். அப்பா மடியில தான் உட்கார்ந்து சாப்பிடுவேன். அப்பா தான் ஊட்டி விடுவார். அது கூட நாலு வாய் தான் சாப்பிடுவேன். அப்புறம் எழுந்து ஓடிடுவேன். அப்பாக்கு எனக்கு வலுக்கட்டாயமா சாப்பாடு கொடுப்பதில் விருப்பமில்லை. அப்படிக் கொடுத்தா சாப்பாட்டு மேல வெறுப்பு வந்திடும்ன்னு சொல்வார். அதன் பிறகு சாப்பிட வைக்கவே கஷ்டமாயிடும் என்பது அப்பாவின் கருத்து.

அதனால என்னால் எவ்வளவு சாப்பிட முடியுமோ சாப்பிடட்டும்னு விட்டு விடுவார். அதற்காக நான் சாப்பிடாமல் இருந்திடக்கூடாதுன்னு அப்பா ஒரு டிரிக் செய்தார். பூச்சாண்டி வரான் சாப்பிடுன்னு சொல்வதற்கு பதில் அப்பா சாப்பாடு மற்றும் காய்கறி பற்றி கதை சொல்லு ஆரம்பித்தார். ஒவ்வொரு காய்கறியிலும் என்ன சத்து இருக்கு, அதை சாப்பிட்டா எப்படி ஆரோக்கியமா இருக்கலாம்ன்னு சொல்லுவார். உதாரணத்திற்கு கேரட் சாப்பிட்டா கண்களுக்கு நல்லது, சருமமும் பளபளப்பா இருக்கும்ன்னு இப்படி ஒவ்வொரு காய்கறி மற்றும் பழங்கள் பற்றி சொல்வார். அதை கேட்டுக் கொண்டு தான் சாப்பிடுவேன் அதன் பிறகு தான் எனக்கு மெல்ல மெல்ல சாப்பாட்டு மேல் விருப்பம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் நானே கீரையில் என்ன சத்து இருக்கு. அது சாப்பிட்டா என்ன பலன் கிடைக்கும்ன்னு தேட ஆரம்பிச்சேன். அந்த தாக்கம்தான் நான் இப்ப ஊட்டச்சத்து நிபுணரா வளர காரணமாக இருந்துள்ளது’’ என்று கூறும் திவ்யாவிற்கு தென்னிந்திய உணவுகள் என்றால் கொள்ளை பிரியமாம்.

‘‘எனக்கு நம்ம தென்னிந்திய உணவான முழு சாப்பாடு ரொம்ப பிடிக்கும். சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் இருந்தா போதும் ஒரு வெட்டு வெட்டுவேன். நம்ம தென்னிந்திய உணவு அவ்வளவு ஆரோக்கியமானது. அதில் எல்லா ஊட்டச்சத்தும் நிறைந்து இருக்கு. ஆனால் நாம அதை எல்லாம் விட்டுட்டு பீட்சா பர்கர்ன்னு சாப்பிடுறோம். எனக்கு மைதா சார்ந்த எந்த உணவும் பிடிக்காது. நான் மட்டும் இல்லை என்னிடம் ஆலோசனைக்கு வருபவர்களுக்கும் மைதாவை சாப்பிடவே சாப்பிடாதீங்கன்னு சொல்வேன். காரணம் இது அவ்வளவு எளிதில் ஜீரணமாகாது. நீங்க நல்லா பார்த்தீங்கன்னா, அலுவலகங்கள் இருக்கும் இடத்தில் பெரும்பாலும் தென்னிந்திய உணவகத்தில் தான் கூட்டம் அதிகமா இருக்கும்.

என் வீட்டில் ஸ்போர்ட்ஸ் பத்தி எல்லாம் நாங்க நிறைய பேசமாட்டோம். அப்பா, அம்மா இருவருமே ரொம்ப ஹெல்த் கான்சியஸ். ஜுரம், சளி வந்தாக்கூட அப்பா வீட்டில் இருக்கும் உணவுப் பொருட்கள் மூலம் எப்படி குணப்படுத்தலாம்ன்னு தான் பார்ப்பார். நாங்க எல்லாரும் ஒன்று சேர்ந்தா அதிகமா டிஸ்கஸ் செய்ற டாப்பிக்னா சினிமா, உணவு மற்றும் ஆரோக்கியம் பத்தி தான் இருக்கும். என்னோட ஃபிரண்ட்ஸ் எல்லாரும் என்னை எச்.எம்ன்னு தான் கூப்பிடுவாங்க. எங்க குழுவில் நான் தான் ஹெல்த் மினிஸ்டர்.

எங்க வீட்டில் அப்பாவும் சரி அம்மாவும் சரி எல்லா விஷயத்துக்கும் சலுகை கொடுப்பாங்க. சாப்பாட்டு விஷயம் தவிர. அதுல ரொம்பவே ஸ்ட்ரிக்ட். வீட்டுல உருளைக்கிழங்கு சிப்ஸ், பெப்சி, கோக், பர்கர், பீட்சா எல்லாத்துக்கும் நோ நோ தான். அப்படியே சாப்பிட விரும்பினா இரண்டு வாரத்துக்கு ஒரு முறை தான் சாப்பிட தருவாங்க. அம்மா வந்து சின்ன வயசில் இருந்தே செவன் பிராஷ் சாப்பிடணும்ன்னு சொல்வாங்க. அந்த பழக்கம் இன்றும் இருக்கு. அதே போல் மதிய உணவும் எங்க வீட்டில் எல்லா சத்துக்கள் நிறைந்து இருக்கும். கண்டிப்பா ஏதாவது ஒரு காய்கறி பொரியல் அல்லது கூட்டு இருக்கும்’’ என்றவருக்கு தோசை தான் ஆல்டைம் ஃபேவரிட் உணவாம்.

‘‘முழு சாப்பாடு எப்படி எனக்கு பிடிக்குமோ, அதே போல எனக்கு தோசைன்னா உயிர். எல்லா வகையான தோசையும் சாப்பிடுவேன். பொடி தோசை, கோபி தோசை, பெசரெட்டு, பூண்டு பொடி தோசை, கம்பு தோசை, ராகி தோசைன்னு எந்த வகை தோசைன்னாலும் எனக்கு ரொம்ப பிடிக்கும். வீட்டுல கூட மத்த டிஃபன் செய்தாலும், எனக்கு கண்டிப்பா தோசை இருக்கணும். பாசிப்பயறில் செய்யும் பெசரெட்டில் அதிக அளவு போலிக் அமிலம் இருக்கும். எனக்னிடம் வரும் கர்ப்பிணி பெண்களுக்கு நான் இதை தான் அதிகம் பரிந்துரைப்பேன்.

அதே போல் பூண்டு ஆன்டி இன்பிளமேட்டரி என்பதால் கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு நல்லது. தோசைக்கு அடுத்து எனக்கு பிடிச்ச உணவுன்னா பொங்கல். ரொம்பவே கம்பர்ட்டான உணவுன்னு தான் சொல்லணும். எனக்கு அதிக வேலைக் காரணமா மனஅழுத்தம் இருந்தா, சுடச்சுட பொங்கல் மற்றும் ஒரு பில்டர் காபி சாப்பிட்டா போதும். எல்லா விதமான ஸ்ட்ரெசும் பறந்திடும். ஸ்ட்ரெஸ் இருக்கும் போது எல்லாம் என் மனசு பொங்கல் மற்றும் பில்டர் காபியை தான் என் மனம் தேடும்’’ என்றவர் வெளியூர் பயணத்தில் ஏற்பட்ட உணவு அனுபவத்தை பற்றி விவரித்தார்.

‘‘எங்க சொந்த ஊர் கோவை என்பதால் நேரம் கிடைக்கும் போது எல்லாம் அங்க போயிடுவேன். அங்க வளர்மதி மெஸ்ன்னு எங்க வீட்டு பக்கத்தில் ஒரு சின்ன மெஸ். ஊருக்கு போனா அங்க போகாம இருக்க மாட்டேன். அங்க வேலை பார்க்கும் மாஸ்டர் மற்றும் சர்வர் முதற்கொண்டு எல்லாருக்கும் என்னை தெரியும். மேலும் நான் காரமா சாப்பிடமாட்டேன். அதனால எனக்கு மட்டும் காரம் கம்மியா சாப்பாடு ஸ்பெஷலா செய்து தருவாங்க. அதே போல் என் பாட்டி வீட்டில் வெரைட்டி சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கும். பாட்டி விதவிதமா வெரைட்டி ரைஸ் செய்வாங்க. சாம்பார் சாதம், புளி சாதம், மாங்காய் சாதம், தக்காளி சாதம், வெங்காய சாதம், எலுமிச்சை சாதம்…

அப்புறம் பொடி வகையிலும் நிறைய சாதம் செய்வாங்க. கருவேப்பிலை பொடி, பூண்டு பொடின்னு செய்வாங்க. அவங்க செய்ற புளியோதரை மற்றும் அப்பளத்துக்கு ஈடு இணை கிடையாது. சென்னையை பொறுத்தவரை என்னோட ரொம்ப ஃபேவரெட் உணவகம் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் சிகனேச்சர் வசந்தபவன். அங்க தோசை வெரைட்டி நிறைய இருக்கும். அங்க ஒரே தோசையில் பருப்பு பொடி, பூண்டு பொடின்னு போட்டு தருவாங்க. அது தவிர கறிவேப்பிலை பொடியும் தனியா இருக்கும். கேட்டு வாங்கி சாப்பிடுவேன். அங்க வாரத்தில் ஒரு நாள் போய் சாப்பிடலைன்னா எனக்கு அந்த வாரமே முழுமை அடைந்தது போல் இருக்காது.

அதே நுங்கம்பாக்கத்தில் இருக்கும் கிருஷ்ணவிலாசம் உணவகமும் எனக்கு பிடிக்கும். சஞ்சீவனம் முழுக்க முழுக்க ஆயுர்வேத உணவகம். அங்கேயும் சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கும். அதிக காரம் எல்லாம் இருக்காது. ஆனாலும் சுவையா இருக்கும். சாப்பிட்ட பின் ஒரு ஸ்பூன் தேன் தருவாங்க. அது சாப்பிட்டா தான் அன்னைக்கு சாப்பிட்ட உணவு முழுமை அடைந்தது போல் இருக்கும்.

கடற்கரை எல்லாருக்கும் ரொம்பவே பிடித்தமான இடம். எனக்கும் ரொம்ப பிடிக்கும். வாரத்தில் ஒரு நாள் கண்டிப்பா என்னை பெசன்ட் நகர் பீச்சில் பார்க்கலாம். ஒரு கப் கிரீன் டீ ,கடற்கரை காற்று… மனசுக்கு அவ்வளவு இதமா இருக்கும். அப்புறம் கேரளா உணவகத்தில் எண்டே கேரளம் ரொம்பவே பிடிக்கும். குறிப்பா அங்க எல்லா உணவும் தேங்காய் எண்ணையில் சமைச்சிருப்பாங்க. அங்க வெஜிடபிள் பிரியாணி ரொம்ப நல்லா இருக்கும். அது நாம மற்ற கடையில் சாப்பிடுவது போல் இருக்காது. வித்தியாசமான சுவையில் இருக்கும். அப்புறம் வாழைப்பூ வடை. தேங்காய் எண்ணையில் பொரிச்சு தருவாங்க.

என்னோட ஆல்டைம் ஃபேவரெட் இடம்னா உட்லண்ட்ஸ் டிரைவ் -இன். அங்க எனக்கு நிறைய நினைவுகள் இருக்கு. சின்னப் பொண்ணா இருக்கும் போது அங்க அடிக்கடி அப்பா கூட பைக்கில் போவேன். அப்பா காபி சாப்பிடுவார். நான் வடை சாப்பிட்டு வருவேன். அப்புறம் அங்க சன்னா பட்டூரா அவ்வளவு நல்லா இருக்கும். அங்க சாப்பிட்ட அந்த சுவை வேறு எங்கும் நான் சாப்பிட்டதே இல்லை. எவ்வளவு மரம் வெயிலே தெரியாது. என்னோட ஒரே வருத்தம் இப்ப அதை மூடிட்டாங்க என்பது தான்’’ என்றவர் வெளிநாடு சென்றாலும் அங்கு தேடுவது தென்னிந்திய உணவகம் தானாம்.

‘‘கான்பிரன்சுக்காக யுரோப், சிங்கப்பூர், மலேசியா, ஸ்காண்டினேவியா, அமெரிக்கா எல்லாம் போயிருக்கேன். அங்க என்னென்னா பிரட் மற்றும் இறைச்சி உணவுகள் தான் நிறைய கிடைக்கும். இப்ப எல்லா இடத்திலும் தென்னிந்திய உணவகங்கள் மற்றும் வீகன் உணவுகள் வந்துவிட்டது. அதனால் அங்கு போன போது சாப்பாட்டு விஷயத்தில் சமாளிச்சுட்டேன். காலையில் ஓட்டலில் பிரட் தான் அதிகம் வச்சிருப்பாங்க. காலையில இல்ல எப்பவுமே எனக்கு பிரட் சாப்பிட பிடிக்காது. அதனால கார்ன்பிளேக்ஸ் மற்றும் பாதாம் பால் சாப்பிடுவேன். மதியம் தென்னிந்திய உணவகத்திற்கு போயிடுவேன்.

அப்படி இல்லைன்னா அங்க பழங்கள் ஃபிரஷ்ஷா இருக்கும். ஏதாவது ஒரு பழத்தை அப்படியே வாங்கி சாப்பிட்டு போயிடலாம். அது மட்டும் இல்லை என்னோட கைப்பையில் எப்போதும் பாதாம், வால்நட், உலர்ந்த திராட்சை இருக்கும். பசிக்கும் போது நாலு பாதாம் சாப்பிட்டா போதும். அது பசியை கட்டுப்படுத்தும். ஒருவர் ஆரோக்கியமா இருக்கணும்னா அதுக்காக ஒரே மாதிரியான போரிங் டயட் சாப்பிடணும்னு அவசியம் இல்லை. அவங்க உணவில் எல்லா ஊட்டச்சத்தும் இருக்கிற உணவுகளை சாப்பிட பழகணும். அதே சமயம் சினிமாவுக்கு போகும் போது அங்க பாப்கார்ன், பப்ஸ் சாப்பிடலாம் தப்பில்லை. ஆனால் அதுவே அவர்களின் அன்றாட உணவாக மாறிடக்கூடாது அவ்வளவு தான். உணவில் கண்டிப்பா ஒரு காய், புரதம், பால், தயிர் இருக்கணும்’’ என்று ஆரோக்கிய டிப்சும் வழங்கினார் திவ்யா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!! (அவ்வப்போது கிளாமர்)
Next post மக்களுக்காகவே நான்! (மகளிர் பக்கம்)