ஆரோக்கியப் பெட்டகம்: மணத்தக்காளிக்காய்!! (மருத்துவம்)

Read Time:9 Minute, 20 Second

மணத்தக்காளிக் கீரை வாங்கும் போது, அதில் கொத்துக் கொத்தாக பச்சை மற்றும் கருப்பு நிறத்தில் அதன் காய்களும் பழங்களும் இருப்பதைக் கவனித்திருக்கலாம். கீரையை மட்டும் கிள்ளி எடுத்துவிட்டு, அந்தக் காய்களையும் பழங்களையும் அப்புறப்படுத்துபவரா நீங்கள்? அப்படியானால் உங்கள் ஆரோக்கியத்தைக் காக்க கையில் கிடைத்த அரிய வாய்ப்பை நீங்கள் தூக்கி எறிகிறீர்கள் என்றே அர்த்தம்.

ஆமாம்… மணத்தக்காளிக் கீரையின் மகத்துவம் தெரிந்த உங்களுக்கு அதன் காய் மற்றும் பழங்களின் அருமையும் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். கீரைக்குக் கொஞ்சமும் சளைத்ததல்ல அதன் காய். அது பழுத்து கருப்பாகும். அந்தப் பழங்களை அப்படியே வெறும் வாயில் மென்று தின்னலாம். சுவையாகவும் இருக்கும். மணத்தக்காளிக் காயின் மருத்துவ மகிமைகளைப் பட்டியலிடுவதோடு, அந்தக் காயை ைவத்து சூப்பரான மூன்று ஆரோக்கிய உணவுகளையும் செய்து காட்டுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் அம்பிகா சேகர்.

மணத்தக்காளிக் கீரை வருடம் தோறும் கிடைப்பது போலவே அதன் காயும் கிடைக்கும். சில நேரங்களில் அந்தக் காயை மட்டும் தனியே விற்பார்கள். பச்சை மணத்தக்காளிக் காயை பல வகைகளில் சமையலில் சேர்க்கலாம். சுவையும் பிரமாதமாக இருக்கும்.

இயற்கை மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் சருமப் பிரச்னைகள், ஆஸ்துமா மற்றும் காய்ச்சலை குணப்படுத்த மணத்தக்காளிக் காய் பயன்படுகிறது.

உடலில் இருந்து கழிவுப்பொருட்களை பிரித்தெடுக்க உதவுகிறது.வாய்ப்புண் இருக்கும்போது 4 இலைகளை அதன் காய்களுடன் மென்று அல்லது சாறு எடுத்து உட்கொண்டால் புண் ஆறிவிடும்.

மணத்தக்காளி இலையையும் காய்களையும் விழுதாக அரைத்து தீப்புண் பட்ட இடத்தில் போட்டால் காயம் மறையும்.மணத்தக்காளிக் காய் குடல்புழுக்களை வெளியேற்றுகிறது.

நுரையீரல் நோய்களை போக்குவதில் பூவும் காயும் பயன்படுகிறது. கண் மற்றும் தசைப் பகுதிக்கு நல்ல சக்தி தரும். தலைவலி, குடல்புண் மற்றும் சரும நோய்களுக்கு நல்ல மருந்தாகும். சிறுநீரகக் கோளாறுக்கும் சிறந்த மருந்து. மலச்சிக்கல் மற்றும் மன உளைச்சலுக்கு சிறந்தது.

வயிற்றில் ஏற்படும் அனைத்து கோளாறுகளையும் இந்த இலையும் காயும் குணப்படுத்தும். சீதபேதி மற்றும் அஜீரணக் கோளாறுக்கு பயனுள்ளது. மணத்தக்காளிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும்.

மணத்தக்காளிப்பழம் கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது. கருவைப் பலப்படுத்தும் தன்மை கொண்டது. மணத்தக்காளிக் கீரையை அதன் காய் மற்றும் பழங்களுடன் சேர்த்து இடித்து எடுத்த சாற்றை அடிக்கடி எடுத்துக் கொண்டால் கல்லீரல் மற்றும் கணைய வீக்கம் சரியாகும்.

ஹெல்த்தி ரெசிபி

மணத்தக்காளிக்காய் சட்னி

என்னென்ன தேவை?

மணத்தக்காளிக்காய் – 100 கிராம், உளுந்து – 20 கிராம், இஞ்சி – 1 துண்டு, பச்சைமிளகாய் – 2-3, தேங்காய் –
10 கிராம், உப்பு – தேவையான அளவு, பெருங்காயம், மல்லி இலை, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் –
1 டீஸ்பூன், புளி – 5 கிராம்.

எப்படிச் செய்வது?

மணத்தக்காளிக் காய், உளுந்து, பச்சைமிளகாய், இஞ்சி இவை அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக எண்ணெய் ஊற்றி வதக்கி உப்பு, புளி, மல்லி, கறிவேப்பிலை, தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். சிறு கசப்பு இருந்தால் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

மணத்தக்காளி வத்தல் குழம்பு

என்னென்ன தேவை?

மணத்தக்காளி வத்தல் – 50 கிராம், புளி – எலுமிச்சைப்பழ அளவு, சாம்பார் வெங்காயம் – 50 கிராம், தக்காளி சிறியது – 1, கறிவேப்பிலை – சிறிது, மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன், பூண்டு பற்கள் – 10, மஞ்சள்த்தூள் – சிறிது, உப்பு –
தேவையான அளவு. தாளிக்க…கடுகு, வெந்தயம், நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

புளியை கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். பிறகு கடுகு, வெந்தயம், மணத்தக்காளி காய்ந்த வத்தல் நன்றாக வறுத்து பின் பூண்டு, கறிவேப்பிலை, உப்பு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி பின் மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள் சேர்த்து வதங்கியதும் புளிக்கரைசலை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பிறகு 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து இறக்கவும்.

மணத்தக்காளிக்காய் கூட்டு

என்னென்ன தேவை?

வேகவைத்த துவரம்பருப்பு – 1 கப், மணத்தக்காளிக் காய் – 100 கிராம், மணத்தக்காளிக் கீரை – 1 பிடி, பச்சைமிளகாய் – 3, பூண்டு – 10 பற்கள், தக்காளி – 1, வெங்காயம் – 1, மஞ்சள்த்தூள், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க…

எண்ணெய் – 1 டீஸ்பூன், கடுகு அல்லது வடகம் – சிறிது, காய்ந்த மிளகாய் – 2.

எப்படிச் செய்வது?

மணத்தக்காளிக்காய், கீரை, பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயம், உப்பு, தக்காளி அனைத்தையும் சிறிதளவு மஞ்சள்த்தூள் சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் வடகம், காய்ந்த மிளகாயை எண்ணெய் ஊற்றி தாளித்து கொட்டி வேக வைத்த பருப்பையும் சேர்த்து கடைந்து சூடாக பரிமாறவும்.

மணத்தக்காளி வற்றல் செய்வது எப்படி?

பழுக்காத மணத்தக்காளிக் காய்களைப் பறித்து சுத்தம் செய்யவும். உப்பு சேர்த்த மோரில் அந்தக் காய்களை ஊற வைத்து, வெயிலில் உலர்த்தி நன்கு காய்ந்ததும் எடுத்து வைத்துக் கொள்ளவும். இந்த வற்றலை வைத்து குழம்பு செய்யலாம். அப்படியே சிறிது எண்ணெயில் வறுத்துப் பொடித்து, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, வயிற்றில் உள்ள கிருமிகள் அழிந்து வயிறு சுத்தமாகும். தினமும் இப்படி சாப்பிட்டு வர நீரிழிவு கட்டுப்பாட்டில் இருக்கும். ஆஸ்துமா மற்றும் காச நோயும் கட்டுக்குள் வரும்.

மணத்தக்காளி பச்சடி

மணத்தக்காளிக் காய் மற்றும் பழங்களைக் கழுவி சுத்தம் செய்து, அவற்றுடன் தயிர், உப்பு, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சித் துருவல் சேர்த்து அப்படியே சாப்பிடலாம். கோடைகாலத்தில் அடிக்கடி எடுத்துக் கொண்டால் உடலுக்குக் குளிர்ச்சி. வயிற்றுப் புண்களும் வாய்ப்புண்களும் வராமல் இருக்கும்.

என்ன இருக்கிறது?

மணத்தக்காளிக்காயின் சத்துப்பட்டியல் (100 கிராம் அளவில்)

புரதம் – 5.9 கிராம்
கொழுப்புச்சத்து – 1 கிராம்
மாவுச்சத்து – 8.9 கிராம் ஆற்றல் – 68 கிலோ கலோரிகள்
கால்சியம் – 410 கிராம்
இரும்புச்சத்து – 20.5 கிராம்
அஸ்கார்பிக் அமிலம் – 11 மி.கி.
நையாசின் – 1.0 கிராம்
தயாமின் – 0.05 கிராம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நலம் வாழ நட்ஸ்!! (மருத்துவம்)
Next post என்ன கிழி….😡 angry speech !! (வீடியோ)