‘முஸ்லிம் அரசியல் பிழைத்துவிட்டது’ !! (கட்டுரை)

Read Time:10 Minute, 59 Second

ஓர் அரசாங்கம், ஓரினத்தைத் தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் செயற்பாடுகளைச் செய்யும் என்று நினைக்கவில்லை. ஆனால், இந்நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே, சிங்கள மேலாதிக்கச் சிந்தனை கொண்ட செயற்பாடுகள், நிறையவே நடந்திருக்கின்றன. சில விடயங்கள் தற்போது நடைபெறுவதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. ஆனால், முஸ்லிம்கள் வாக்குகளை அளிக்கவில்லை என்று, தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் நிலைமை இல்லை. எவ்வாறாயினும், முஸ்லிம் அரசியல் பிழைத்துவிட்டதென, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் வேட்பாளருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
தமிழ்மிரருக்கு அவர் வழங்கிய பிரத்தியேகச் செவ்வியிலேயே, மேற்கண்டவாறு தெரிவித்தார். செவ்வியின்
முழு விவரம் வருமாறு,

கேள்வி – நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் உங்கள் நிலைப்பாடு…

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு என்ற எமது கட்சி, இம்முறை நாடாளுமன்ற தேர்தலில், மட்டக்களப்பு மாவட்டத்தில் களமிறங்கியுள்ளது. எமது இந்தக் கட்சி, கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளரான கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவளித்தது. ஜனாதிபதித் தேர்தலின் போது, எமது கட்சிக்கும் பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையில், எழுத்து மூலமான ஓர் ஒப்பந்தம் இருந்தது.

அந்த வகையில், இப்பொழுது நடைபெற இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில், பொதுஜன பெரமுன கட்சியின் ஆசிர்வாதத்தோடு, எதிர்காலத்திலே அரசாங்கத்தோடு இணைந்து செயற்படுகின்ற வகையிலே நாங்கள் இம்முறை தேர்தலில் இறங்கியிருக்கிறோம்.

இந்தத் தேர்தலில் நாங்கள் வெற்றியடைகிற போது, நாடாளுமன்றத்தில் பொதுஜன பெரமுனவின் பக்கத்திலேயே இருந்து முழுமையாகச் செயற்படுவதற்குத் தயாராக இருக்கிறோம். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம், தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.

கேள்வி – பொதுஜன பெரமுன கட்சியுடனான ஒப்பந்தத்தில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள புதிய உள்ளூராட்சி மன்றம் அமைப்பது தொடர்பில் ஏதாவது கூறப்பட்டிருக்கின்றதா?

மட்டக்களப்பு மாவட்டம் மாத்திரமல்ல, கிழக்கிலங்கை முழுவதிலும் இருக்கிற உள்ளூராட்சி சபைகளை அதிகரிப்பது தொடர்பான ஒரு விடயம், எங்களுடைய ஒப்பந்தத்தில் இருக்கிறது. நாங்கள், முஸ்லிம்களுக்கு மட்டும்; தமிழர்களுக்கு மட்டும் என்று வடக்கு, கிழக்கில் சபைகளை விடவும், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கான சபைகளை அதிகரிக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் செயற்படுகிறோம். அதுபோன்று, வடக்கு, கிழக்குக்கு வெளியிலும் சிங்கள மக்கள் வாழும் பகுதிகளிலும், அதிகமாகத் தனித்து இயங்கக்கூடிய உள்ளூராட்சி சபைகளுக்கான கோரிக்கைகள், பொதுஜன பெரமுன அரசுடன் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கும் நாங்கள் ஆதரவு வழங்கும் வகையில், எங்களது கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றித் தருமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

கேள்வி – உங்கள் கட்சி முன்வைத்த கோரிக்கைகளை, நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் பொதுஜன பெரமுன கட்சியினர் நிறைவேற்றித் தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதா?

எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில், முஸ்லிம் மக்களில் பெரும்பான்மையானவர்கள், பொதுஜன பெரமுன கட்சிக்கு ஆதரவு வழங்கவில்லை என்ற பொழுதிலும், நானும் எங்களைப் போன்றவர்களும், தீவிரமாக ஆதரவளித்துச் செயற்பட்டவர்கள் என்ற அடிப்படையிலும் 12.5 சதவீதம் வாக்குகள் பொதுஜன பெரமுன கட்சிக்கு கிடைத்தது என்ற அடிப்படையிலும், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிகமான முஸ்லிம்கள் அல்லது அதிகமான தமிழ் வேட்பாளர்கள், பொதுஜன பெரமுன கட்சியில் கேட்காமல் விட்டாலும், அவர்களது நேசக் கட்சியில் கேட்பவர்களுக்குச் சரியான மரியாதை, வேட்பாளர்கள் வெற்றி பெறும்போது மக்களின் அங்கிகாரம் கிடைக்கும் போது, இந்த அரசாங்கம் கணக்கெடுக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

கேள்வி – நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர், முஸ்லிம்கள் வாக்களிக்கவில்லை என்றால் பழிவாங்குவார்கள் என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளமை தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

ஓர் அரசாங்கம், ஓரினத்தைத் தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் செயற்பாடுகளைச் செய்யும் என்று நினைக்கவில்லை. ஆனால், இந்நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே, சிங்கள மேலாதிக்கச் சிந்தனை கொண்ட செயற்பாடுகள், நிறையவே நடந்திருக்கின்றன. சில விடயங்கள் தற்போது நடைபெறுவதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. ஆனால், முஸ்லிம்கள் வாக்குகளை அளிக்கவில்லை என்று, தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் நிலைமை இல்லை. எவ்வாறாயினும், முஸ்லிம் அரசியல் பிழைத்துவிட்டது.

முஸ்லிம்களுடைய அரசியல் தலைவர்கள், தங்கள் சொந்த நலனுக்காகவேண்டி இவ்வாறான அரசியல் செய்கின்ற காரணத்தால், பொது நிலை, சமூக நலனை மறந்து, மக்களுக்குச் சரியான அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை அவர்கள் தவிர்த்து, தனிப்பட்ட அரசியல் செய்கின்ற காரணத்தினால், தங்களுடைய நலன்களுக்கு ஏற்ற வகையிலேயே ஆளுங்கட்சியின் பக்கம் ஒரு கட்சி வெற்றி பெற்ற பின் வருவது, பின்பு அடுத்த தேர்தல் வருகின்ற போது எதிர்கட்சியில் சேர்ந்து தேர்தலில் ஆளும்கட்சியைத் தோற்கடிக்க முற்படுகின்ற ஒரு மூடத்தனமான அரசியலைச் செய்து வந்த காரணத்தினால், ஒரு கோபம் இருக்கிறது. அது, முஸ்லிம் மக்கள் மீதான கோபமில்லை. முஸ்லிம் அரசியல் கட்சிகள் மீதான கோபம். அந்தக் கோபத்தைத் தனித்துச் செயற்படுத்துவதற்கே நாங்கள் களத்தில் இறங்கியுள்ளோம்.

கேள்வி – பொதுத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு சார்பாக மக்களுக்குக் கூறும் கருத்து என்ன?

ஒரே ஒரு விடயம், சிங்கள மக்களுக்குள் அதிகமான ஆதரவைப் பெற்றிருக்கிற அந்தப் பெரிய சிங்களத் தலைவர்களோடு; பெரிய கட்சியோடு, எங்களுடைய மக்கள் இணைந்து பயணிப்பதற்குரிய ஒரு முடிவை இந்தத் தேர்தலில் எடுக்கப்பட வேண்டும். அந்த முடிவை, மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் மக்கள், தமிழ் மக்கள் எடுக்கும்போது, அந்த அரசாங்க கட்சியோடு நேசத்தோடு செயற்படுகின்ற, சரியாக புரிந்துணர்வோடு செயற்பட, கட்சிகளிலிருந்து உறுப்பினர் தெரிவுசெய்ய வேண்டும். அப்போதுதான் அந்தச் சிங்கள் மக்கள் காலந்தாழ்த்திக் கேட்கக்கூடிய குரலை உருவாக்க முடியும். அரசாங்கத்தால் காலந்தாழ்த்திக் கேட்கின்ற முஸ்லிம் குரலை, தமிழ் குரலை உருவாக்க முடியும். அதுமாத்திரமல்ல, அரசாங்கக் கட்சியில் நாங்கள் தேசிய பட்டியலிலோ அல்லது அரசாங்கக் கட்சிகளின் அனுசணையுடனோ நாடாளுமன்றம் சென்றால், அங்கு நாங்கள் மக்களின் குரலாக ஒலிப்பதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை. அரசாங்கத்தின் குரலாகத்தான் மக்கள் கொண்டிருக்கலாம். நன்றாகச் சிந்திக்க வேண்டும். மக்களின் குரலாக அரசாங்கத்துக்குள் இருப்பதற்கு, சிறுபான்மை மக்களின் குரலாகச் சிங்களப் பெரும்பான்மைக்குள்ளும் மற்றும் சிறுபான்மை மக்களின் குரலாக அரசாங்கத்துக்குள்ளும், நாடாளுமன்றத்துக்குள்ளும் இருப்பதற்கான வாய்ப்பு வேண்டும். எதிர்கட்சியில் இருந்து கொண்டு கூக்குரல் இடுவதை விட அரசாங்கத்தோடு சமரசமாகப் பேசித் தீர்வைக் காண்கின்ற ஒரு வாய்ப்பையும், இணக்க அரசியலுக்கான வாய்ப்பையும் மக்கள் வழங்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராம்குமார் கொலை செய்யவில்லை என்றால் ? (வீடியோ)
Next post நடிகைகள் முதல் கல்லூரிப் பெண்கள் வரை பரவும் பகீர் கலாசாரம்! (வீடியோ)