அணு குண்டு சோதனை நடத்தியது வட கொரியா

Read Time:7 Minute, 15 Second

NorthKorea.jpgபூமிக்கடியில் அணு குண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது வட கொரியா. இதற்கு அமெரிக்கா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சில நாட்களுக்கு முன்பு அணு குண்டு சோதனையை நடத்தப் போவதாக வட கொரியா அறிவித்தது. இதற்கு ஐ.நா. சபை பொதுச் செயலாளர் கோபி அன்னான், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

வட கொரியா அணு ஆயுத சோதனையை மேற்கொண்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என அமெரிக்கா எச்சரித்தது. ஆனால் இந்த எச்சரிக்கைகளை மீறி வட கொரியா தற்போது அணுகுண்டு சோதனையை நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து வட கொரிய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி: வட கொரிய அறிவியல் ஆய்வு மையம் அக்டோபர் 9ம் தேதி பூமிக்கடியில் ஒரு அணு குண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல உத்வேகத்துடன் உள்ள வட கொரிய மக்களுக்கு சந்தோஷம் தரும் வகையில் இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

இந்தப் பரிசோதனை மிகவும் பாதுகாப்பான முறையில் நடத்தப்பட்டது. சோதனைக்குப் பின்னர் கதிர்வீச்சு எதுவும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சோதனையையொட்டி தகுந்த முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

சோதனை 100 சதவீத வெற்றியைத் தந்துள்ளது. இது ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வு. கொரிய மக்கள் ராணுவ¬ம் இந்த சோதனையால் மகிழ்ச்சி அடைந்துள்ளது. வட கொரியா தற்போது பாதுகாப்பில் சுய சார்புடையதாக மாறியுள்ளது.

கொரிய தீபகற்பத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் எதிரிகள் ஊடுறுவுவதை இது தடுத்து நிறுத்தும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறுதி செய்ய முடியவில்லை:

ஆனால் வட கொரியாவின் கூற்றை உறுதி செய்ய முடியவில்லை என அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கூறியுள்ளன. ஆனால், வட கொரியா அணு ஆயுத சோதனை நடத்தியது 100 சதவீதம் உண்மையே என ரஷ்யா கூறியுள்ளது.

இதுதொடர்பாக தென் கொரிய அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அணு குண்டு சோதனை நடத்தப்பட்டதாக வட கொரியா தெரிவித்துள்ள அதே நேரத்தில் தென் கொரியாவில் நில அதிர்வு உணரப்பட்டது. ஆனால் இது அணு குண்டு சோதனையால் ஏற்பட்டதா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

இந்த நில அதிர்வு 3.58 முதல் 3.7 ரிக்டராக இருந்தது. (இந்திய நேரப்படி) காலை 7.05 மணிக்கு இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது என்று அச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

வட கொரியாவுடன் பேச்சு நடத்த அமைக்கப்பட்ட 6 நாடுகள் குழுவுக்கான தென் கொரிய தலைமை தூதரான சன் யங் வூ கூறுகையில், வட கொரியாவின் சோதனை குறித்து உறுதியான தகவல் இல்லை. இந்தப் பிரச்சினை குறித்து வட கொரியா மற்றும் சீனாவுடன் விவாதிக்கப்படும் என்றார்.

இதேபோல ஜப்பானும் வட கொரியாவின் சோதனை குறித்து உறுதிப்படுத்த முடியவில்லை என்று தெரிவித்துள்ளது. ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே சியோல் நகரில் இதுகுறித்துக் கூறுகையில், இதுதொடர்பான தகவல்களை ஜப்பான் சேகரித்து வருகிறது. இதுவரை உறுதியான தகவல் எங்களிடம் இல்லை என்றார்.

வட கொரியாவின் கூற்றை உறுதிப்படுத்த முடியவில்லை என்று அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கூறியுள்ளது வட கொரியாவை அவமதிக்கும் நோக்கத்தில் தான் என்று கருதப்படுகிறது.

ஆனால், ரஷ்யா இதை உறுதி செய்துள்ளதன் மூலம் அமெரிக்காதென் கொரியா ஜப்பான் நாடுகளின் கூற்று கேள்விக்குறியாகியுள்ளது.

உஷார் நிலையில் தெ.கொரிய படைகள்:

இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனது ராணுவத்தை உஷார் நிலையில் வைத்துள்ளது தென் கொரியா. இதுகுறித்து தென் கொரிய ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், வட கொரியாவின் அணு குண்டுச் சோதனை குறித்த தகவலைத் தொடர்ந்து வட கொரிய எல்லையில் உள்ள தென் கொரியப் பகுதியில் ராணுவம் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றார்.

எண்ணை விலை உயர்வு:

வட கொரிய அணு குண்டுச் சோதனை குறித்த வெளியான அடுத்த நிமிடமே அமெரிக்காவில் கச்சா எண்ணையின் விலை கடுமையாக ஏறி விட்டது. ஒரு பாரல் விலை 60 டாலரைத் தாண்டியுள்ளதாம்.

வட கொரிய சோதனையைத் தொடர்ந்து எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகள் எண்ணை ஏற்றுமதியை குறைத்து விடலாம் என்ற அச்சம் காரணமாக அமெரிக்காவில் எண்ணை விலை கடுமையாக உயர்ந்து விட்டது.

தென் கொரிய வெளியுறவு அமைச்சர் பான் கி மூன் இன்று ஐ.நா. பொதுச் செயலாளராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில், வட கொரியாவின் இந்த அணு குண்டுச் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கருணா அணி அறிக்கை
Next post புலிகளின் வன்முறைகளுக்கு குறைச்சல் இல்லை