மூத்த குடிமக்களுக்கு முத்தான உணவுகள்!! (மருத்துவம்)

Read Time:8 Minute, 4 Second

பல்லிருக்கறவன் பக்கோடா சாப்பிடறான்’ என்று வேடிக்கையாகச் சொல்வோம். குறிப்பிட்ட வயது வரைதான் நன்றாக சாப்பிட முடியும். வயது ஏறும்போது கூடவே செரிமான பிரச்னை, மலச்சிக்கல் ஏற்பட்டு உடலில் பலவிதமான நோய்கள் குடியேற ஆரம்பித்துவிடும். இதற்கு ஒரே தீர்வு உணவுக் கட்டுப்பாடு. நோயுள்ளவர்கள், ஆரோக்கியமானவர் என்றில்லாமல் முதியவர் அனைவருக்குமே உணவுக் கட்டுப்பாடு அவசியம். முதியவர்களின் உணவு முறைகள் குறித்த நமது சந்தேகங்களை தீர்க்கிறார் முதியோர் நலன் மருத்துவர்’ டாக்டர் மகேஷ்.

‘‘அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள், ஓரிரு உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் என இரு வகையாகப் பிரிக்கலாம். கிட்னி பாதிப்பு, சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் உடையவர்கள் என இவற்றில் ஏதேனும் ஒரு பிரச்னை உள்ளவர்களோ, எல்லா பிரச்னைகளும் ஒருசேர உள்ளவர்களோ இருப்பார்கள். எனவே, முதியவர்கள் தங்களுடைய உடல் ஆரோக்கியம் அடிப்படையில், மருத்துவரின் ஆலோசனைப்படி உணவு சாப்பிட வேண்டியது அவசியம்.

அசைவ உணவுப் பழக்கம் உடையவர்கள் அசைவம் சாப்பிடுவதை படிப்படியாக குறைத்து வருவதே நல்லது. அதிலும் 75 வயது கடந்தவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது. மருத்துவர்கள் சிக்கன், மட்டன், முட்டை போன்றவற்றை சாப்பிடுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தால், வாரம் இரண்டு தடவைதானே சாப்பிடுகிறேன்’ என்று சமாதானம் சொல்லிக் கொண்டு, இவற்றை எடுத்துக் கொள்வதை நிறுத்த வேண்டும்.

பொதுவாக ஆரோக்கியமான முதியவர்களுக்கு மருத்துவர்களால் பால் பரிந்துரைக்கப்படுகிறது. அவர்கள் பால் அருந்தலாம். மருத்துவர் பாலைத் தவிர்க்கச் சொன்னாலோ, கண்டிப்பாக அதை நிறுத்தி விடவேண்டும். உணவில் சுவை மற்றும் நறுமணத்துக்காகச் சேர்க்கப்படும் பொருட்களிலும் முதியவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். உணவின் சுவைக்காகவும் நறுமணத்துக்காகவும் புதினா, கொத்தமல்லி, பூண்டு, கரம் மசாலா போன்றவற்றைச் சேர்ப்பது இப்போது அதிகமாகி இருக்கிறது.

வயதானவர்களுக்கு தயாரிக்கும் உணவில் இந்தப் பொருட்களைக் கண்டிப்பாக சேர்க்க வேண்டாம். அதோடு, உணவில் காரம் குறைப்பதும் நல்லது. உப்பை மட்டும் உடனடியாக நிறுத்தாமல், மெல்ல மெல்ல குறைத்துக் கொள்ள வேண்டும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பைக் குறைவாக சேர்த்துக் கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள், அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் 3 – 4 மணி நேரங்களுக்கு ஒருமுறை ஏதேனும் சாப்பிட வேண்டும். அதற்காக, பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடக்கூடாது. வேக வைத்த சுண்டல், காய்கறி சூப், வெஜிடபிள் சாலட் சாப்பிடலாம்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் குளிர்பானங்கள், பழங்கள், இனிப்பு வகைகள் ஆகியவற்றைத் தவிர்ப்பதே நல்லது. சாதத்தின் அளவையும் குறைக்க வேண்டும். வயிறு முட்ட ஒரே நேரத்தில் சாப்பிடக் கூடாது. அரிசி உணவான இட்லி, தோசை, சாதம் ஆகியவற்றைக் குறைத்து, கோதுமை, கேழ்வரகு போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். இரவு உணவை 8 மணிக்குள் முடித்துவிட வேண்டும். படுக்கும் முன் சர்க்கரை சேர்க்காத பால் குடிக்கலாம்.

கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளவர்கள் எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்ப்பது அவசியம். மீன், மட்டன் ஆகியவற்றை வறுத்து சாப்பிடாமல், குழம்பில் வேக வைத்து உண்ணலாம். ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் ஊறுகாய் மற்றும் பதப்படுத்திய உணவு வகைகள், முறுக்கு, சிப்ஸ், மிக்சர் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். பொதுவாகவே வயதானவர்களுக்கு எலும்புப் புரை (ஆஸ்டியோபொரோசிஸ்), செரிமான குறைபாடுகள், சோர்வு, சர்க்கரை நோய் போன்றவை இருப்பதால், உணவு அளவைக் குறைக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

இது தவறான எண்ணம். உணவு அளவைக் குறைத்தால் எடை குறைதல், பலவீனம் போன்றவை ஏற்படும். இவர்களுக்கு கலோரி தேவை குறைந்தாலும், ஊட்டச்சத்து தேவை ஒரே விகிதத்தில்தான் இருக்கும். முதுமைப் பருவத்தில் ஆண்களுக்கு 1800 கலோரிகளும், பெண்களுக்கு 1300 கலோரிகளும் தேவைப்படும். உணவில் புரதம், மாவு மற்றும் நார்ச்சத்து சரியான விகிதத்தில் இருக்கும் வகையில், சப்பாத்தி, கேழ்வரகு, காளான், ஆப்பிள், பப்பாளி சாப்பிடலாம். அன்றாட உணவில், புரதம் – 60 கிராம், கொழுப்பு – 50 கிராம், கால்சியம் – 400 மி.கி., இரும்புச்சத்து 30 மி.கி. மற்றும் வைட்டமின் சத்துகளும் போதிய அளவு இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

உணவு விஷயத்தைப் போலவே, தேவையான அளவு தண்ணீர் அருந்துவதும் அவசியமான ஒன்று. தாகம் எடுப்பது குறைவதால் குடிக்கும் நீரின் அளவையும் குறைத்து விடுவார்கள். இதனால் உடலுக்குத் தேவைப்படும் நீரின் அளவு குறைந்து மலச்சிக்கல், கிட்னி பாதிப்பு, தலைவலி, சோர்வு, வாய் உலர்ந்து போதல் போன்றவை ஏற்படும். சிறுநீர் மஞ்சள் நிறத்தில் குறைந்த அளவே வெளியேறும். இவர்கள் ஒருநாளைக்கு ஒன்றரை லிட்டர் தண்ணீர் அவசியம் அருந்த வேண்டும்.

முதியவர்கள் கண்டிப்பாக ஏதாவது ஒரு பிரச்னைக்காக, மருந்து, மாத்திரைகள் சாப்பிடுபவர்களாக இருப்பதோடு, இரவுத் தூக்கம் இல்லாததாலும் சோர்வாகக் காணப்படுவார்கள். இதைத் தவிர்க்க, சரியான உணவை, சரியான அளவில், சரியான வேளைகளில் சாப்பிட வேண்டும். வயதானவர்களை ஓரம் கட்டாது, அவர்கள் அருகில் சென்று பரிவாக பேசினாலே அவர்களின் ஆரோக்கியம் நீடிக்கும். நாளின் சில நிமிடங்களை அவர்களுக்காக ஒதுக்குங்கள்!’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காயமே இது பொய்யடா!! (மருத்துவம்)
Next post குமரிக்கண்டத்தில் தமிழன் வாழ்ந்தது உண்மையா? (வீடியோ)