By 27 July 2020 0 Comments

ஆரோக்கிய பெட்டகம்: கொத்தவரங்காய்! (மருத்துவம்)

கொத்துக் கொத்தாக சத்து

இப்படியொரு காய் இருப்பதே இந்தத் தலைமுறைக் குழந்தைகள் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பெயருக்கேற்றபடி கொத்துக் கொத்தான சத்துகளை, ஆரோக்கியத்தை உள்ளடக்கியது கொத்தவரங்காய். பீன்ஸ் குடும்பத்தைச் சேர்ந்தது!

கிராமத்துக் காய்கறிகளில் கொத்தவரங்காய்க்கு மிக முக்கிய இடமுண்டு. வற்றலாக, குழம்பாக, கூட்டாக, பொரியலாக எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடக் கூடிய கொத்தவரங்காய், கிராமத்து மக்களின் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது’’ என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ்.

கொத்தவரங்காயின் நல்ல தன்மைகளை விளக்குவதுடன், அதை வைத்துச் செய்யக்கூடிய 3 ஆரோக்கிய ரெசிபிகளையும் சொல்கிறார் அவர்.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியமான புரதம், நார்ச்சத்து இரண்டையும் அபரிமிதமாகக் கொண்ட ஒரு காய் கொத்தவரை. வைட்டமின் ஏ, சி மற்றும் கே ஆகியவற்றையும் அதிகம் கொண்டது. பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்துகள் நிறைந்தது.

கொத்தவரங்காயை ஏன் அடிக்கடி சாப்பிட வேண்டும்?

சில கிலோ எடை குறைக்கிற முயற்சியில் இருப்பவர்கள், வாரத்தில் 3 நாட்கள் கொத்தவரங்காயை சேர்த்துக் கொண்டால் பயனடைவார்கள். குறைந்த கலோரியும், அதிக தாதுக்கள் மற்றும் வைட்டமின்களையும் கொண்டது என்பதால் ஆரோக்கியமான முறையில் எடை குறைக்க நினைப்போருக்கு பெஸ்ட் சாய்ஸ்.

ரத்த சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவும் கிளைகோநியூட்ரியன்ட்ஸ் கொத்தவரங்காயில் அதிகம் உள்ளது. கொத்தவரங்காய் லோ கிளைசெமிக் இண்டக்ஸ் கொண்டது என்பதால் இதை அடிக்கடி உண்பதால், ரத்த சர்க்கரை அளவில் அடிக்கடி ஏற்படுகிற ஏற்ற, இறக்கங்களை சமன்படுத்தக்கூடியது. நீரிழிவுக்காரர்கள் பாகற்காய்க்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கொத்தவரங்காய்க்குக் கொடுக்கலாம்.

கால்சியம் அதிகமுள்ளதால், எலும்பு களின் ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம் தருகிறது. கொத்தவரங்காயில் உள்ள பாஸ்
பரஸ் எலும்புகளை பலமாக்க உதவுகிறது.

ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கக்கூடியது என்பதால் கொத்தவரங்காய் இதயத்துக்கும் இதமானது. இதிலுள்ள பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் ஃபோலேட் மூன்றும் இதயக் கோளாறுகளுக்கு எதிராகப் போராடக்கூடியவை.

கொத்தவரங்காயில் உள்ள ஹைப்போகிளைசெமிக் மற்றும் ஹைப்போலிபிடெமிக் குணங்கள், ஹைப்பர் டென்ஷனால் பாதிக்கப்பட்டிருப்போருக்கான இயற்கையான மருந்து. நீரிழிவும், இதய நோயும் இருப்பவர்களுக்கு ஹைப்பர் டென்ஷன் ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம். அதைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியத்துக்கு உதவுகிறது கொத்தவரங்காய்.

கர்ப்பிணிகள் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டியவற்றில் கொத்தவரங்காய் தவிர்க்கக் கூடாதது. இதிலுள்ள இரும்புச்சத்தும் கால்சியமும் கர்ப்ப காலத்தில் அவர்கள் சந்திக்கிற சத்துக்குறைபாடுகளை சரி செய்யும். கொத்தவரங்காயில் உள்ள அதிகபட்ச ஃபோலிக் அமிலமானது, குழந்தை குறைகளின்றி பிறக்கவும், கர்ப்ப கால சிக்கல்களைத் தவிர்க்கவும் உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின் கே, கருவிலுள்ள குழந்தையின் ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.

கொத்தவரங்காயிலுள்ள இரும்புச்சத்தானது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக நடைபெறச் செய்கிறது. இதிலுள்ள ஃபைட்டோகெமிக்கல், ஆக்சிஜன் சப்ளையை தூண்டி, அதன் மூலமாகவும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்னைக்கு மருந்தாகக்கூடியது கொத்தவரங்காய். வயிற்றில் சேரும் தேவையற்ற நச்சுகளை வெளியேற்றி, செரிமானமண்டலம் தொடர்பான நோய்கள் வராமல் காக்கவும் உதவக்கூடியது.

இதிலுள்ள ஹைப்போகிளைசெமிக் தன்மையானது நரம்புகளின் ஆரோக்கியத்துக்கும் நல்லது செய்யக்கூடியது. அது படபடப்பு, பதற்றம், டென்ஷன் போன்றவற்றைக் குறைத்து மனதை அமைதியாக வைத்திருக்க மறைமுகமாக உதவுகிறது.

கொத்தவரையில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியைஅதிகரிக்கக்கூடியது. ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுகளையும் அதிகம் கொண்டது. திசுக்களின் சேதாரத்தைத் தடுத்து, சருமம் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது.

இதயத்துக்கு இதமான கொத்தவரங்காய் சப்ஜி

என்னென்ன தேவை?

பொடியாக நறுக்கிய கொத்தவரங்காய் – இரண்டரை கப், பொடியாக நறுக்கிய பரங்கிக் காய் – இரண்டரை கப், சீரகம் – ஒன்றே கால் டீஸ்பூன், ஓமம்-கால் டீஸ்பூன், மிளகாய் தூள் – ஒன்றே கால் டீஸ்பூன், பெருங்காயம்-1 சிட்டிகை, மஞ்சள் தூள் – சிறிது, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – ஒன்றரை டேபிள்ஸ்பூன், எண்ணெய் – ஒன்றரை டீஸ்பூன், கரம் மசாலா- கால் டீஸ்பூன், உப்பு-தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் சூடாக்கி, சீரகம் தாளிக்கவும். அது வெடித்ததும் ஓமம், பெருங்காயம் சேர்க்கவும். கொத்தவரங்காய், பரங்கிக்காய், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 3 நிமிடங்களுக்கு வதக்கவும். 2 கப் தண்ணீர் சேர்த்து பிரஷர் குக் செய்யவும். அல்லது சாதாரண பாத்திரத்திலேயே கொத்தவரங்காய் வேகும் வரை சமைக்கவும். பரங்கிக் காயை நன்கு மசித்துவிட்டு, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

கொத்தவரங்காய் பருப்பு உசிலி

என்னென்ன தேவை?

பொடியாக நறுக்கிய கொத்தவரங்காய்- 2 கப், உப்பு – தேவைக்கேற்ப, கொரகொரப்பாக அரைப்பதற்கு…துவரம் பருப்பு-1/8 கப், கடலைப் பருப்பு- 1/8 கப், காய்ந்த மிளகாய்-2.தாளிப்பதற்கு…எண்ணெய்- 1 டீஸ்பூன், கடுகு- 1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு -அரை டீஸ்பூன், கறிவேப்பிலை-1 ஆர்க்கு, மஞ்சள் தூள்-1 சிட்டிகை, பெருங்காயம்-1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

கொத்தவரங்காயை சுத்தப்படுத்தி, பொடியாக நறுக்கி, போதுமான தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து வேக வைக்கவும். துவரம் பருப்பையும் கடலைப் பருப்பையும் 1 மணி நேரம் ஊற வைத்து, மிளகாயுடன் சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த விழுதை ஆவியில் வேக வைத்து, ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்க்கவும். பிறகு அரைத்த விழுது சேர்த்துப் பொன்னிறமாகும்வரை வதக்கவும். பிறகு வேக வைத்துள்ள கொத்தவரங்காய் சேர்த்து தேவையானால் இன்னும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.

கொத்தவரங்காய் மசாலா

என்னென்ன தேவை?

நறுக்கிய கொத்தவரங்காய்-2 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம்-1, தேங்காய்த் துருவல்-2 டேபிள்ஸ்பூன், வறுத்துப் பொடித்த வேர்க்கடலை-2 டேபிள்ஸ்பூன், மிளகாய் தூள்-2 டீஸ்பூன், சர்க்கரை-அரை டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, கடுகு-அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் -3 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கொத்தவரங்காயை அளவாக தண்ணீர்விட்டு, உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். தண்ணீரை வடிகட்ட வேண்டாம். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு,சீரகம், மஞ்சள்தூள் சேர்க்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும்வரை வதக்கவும். கொத்தவரங்காயை சேர்த்து வதக்கவும். மிளகாய் தூள் சேர்க்கவும். வேர்க்கடலை பவுடரும் தேங்காயும் சர்க்கரையும் சேர்த்துக் கிளறவும். கொத்தவரங்காய் வேக வைத்த தண்ணீரையும் சேர்க்கவும். மூடி வைத்து சமைக்கவும். சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்Post a Comment

Protected by WP Anti Spam