By 30 July 2020 0 Comments

அலிசியாவும் சார்லியும்!! (மகளிர் பக்கம்)

அலிசியா டி’சோசா என்ற பெயர் இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் பரிச்சயம். காரணம் அவரின் பல விதமான பொருட்கள் இவர்கள் அன்றாடம் பயன்படுத்தி வருகிறார்கள். இன்றைய தலைமுறையினரின் விருப்பத்திற்கு ஏற்பவே இவர் காலண்டர், நாட்குறிப்பு, டி-ஷர்ட், காபி கப் எனப் பல பாப்-கல்ச்சர் பொருட்களை வடிவமைத்து வருகிறார். கார்ட்டூனிஸ்ட், ஓவியக்கலைஞர், தொழில்முனைவர், தன் நாய்க்குட்டியின் பொறுப்பாளர் எனப் பல முகங்கள் கொண்டவர் அலிசியா.

அபுதாபியில் பிறந்து வளர்ந்து, மெல்போர்னில் கம்யூனிகேஷன் டிசைன் படித்து முடித்தவர், முதலில் ஒரு காபி ஷாப்பில் வேலைப் பார்த்து வந்துள்ளார். பிறகு ஒரு வங்கியில் வேலைக்கு சென்றவர், இந்தியா திரும்பியதும் தன் அடையாளத்தை ஓவியக்கலைஞர் என்று மாற்றிக்கொண்டார். அலிசியாவிற்கு வரைய பிடிக்கும். குழந்தைகள் பேப்பர் தீர்ந்ததும் தரையிலும் சுவரிலும் வரைய ஆரம்பிப்பது போல, அலிசியாவும் தன் ஓவியங்களை காகிதங்களில் மட்டுமல்லாமல், காபி மக் முதல் டி-ஷர்ட் வரை, வரைய ஆரம்பித்தார். அவர் கார்ட்டூனை சமூக வலைத்தளங்களில் பார்க்கும் அனைவர் முகத்திலும் நிச்சயம் ஒரு புன்சிரிப்பு வரும். அவரது ஓவியங்களில் க்ரியேட்டிவிட்டியுடன், நகைச்சுவையும் கலந்து இருக்கும்.

சென்னையில் பிரபலமான மால்களுக்கு செல்லும் போது, அங்கு நம் கண்ணைக் கவரும் வகையில் சும்பக் (chumbak) கடை கண்டிப்பாக இருக்கும். அதை உருவாக்கியவர்களுள் ஒருவர் அலிசியாதான். தினம் தான் சந்திக்கும் நிகழ்வுகளை, மனிதர்களை, நாய்குட்டிகளை என தன் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்தையும் தன் கலையில் வெளிப்படுத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமில் மொத்தம் இரண்டு லட்சத்து எண்பதாயிரம் மக்கள் இவர் பக்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். “ஆரம்பத்தில் எனக்கு 9-5 வேலை தான் சரியாக வரும்னு நினைச்சேன். எனக்கான ஒரு வேலையை நானே அமைத்துக் கொள்வேன்னு நான் நினைச்சுக் கூட பார்க்கல. இப்படி வீட்டிலிருந்து வேலைச் செய்யும் போது, நமக்குத் திங்களும் ஞாயிறும் ஒன்றுதான். விடுமுறையே இருக்காது. எல்லா வேலையும் ஒருவரே செய்ய வேண்டும்’’ என்றவர் அவரின் கார்ட்டூன் கதாபாத்திரம் எவ்வாறு உருவானது என்று விவரித்தார்.

‘‘ஒரு நாள், சும்மா போர் அடிக்கவே, என் மனதில் தோன்றிய கார்ட்டூன் கதாபாத்திரத்தை வரைந்தேன். படம் மட்டும் வரையாமல் அதில் சில வாக்கியங்களையும் எழுதினேன். அதை சமூகவலைத்தளங்களில் பதிவு செய்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் ஒவ்வொரு நாளும் அந்த கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு, நான் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளை ஒரு குட்டிக் கதைப் போல் சுவாரஸ்யமாக பதிவு செய்ய ஆரம்பித்தேன். பலர் டைரியில் அவர்களுக்கு நடந்த சம்பவங்களை எழுதுவது போல், நான் எனக்கு நடக்கும் சம்பவங்களை ஓவியமாக சித்தரித்தேன். காலப்போக்கில் அதுவே ஒரு பிராண்டாக உருவாகிவிட்டது.அடுத்து எனக்குப் பிடித்த சில ஓவியங்களை ஸ்டேஷ்னரி கடைகளில் காலண்டர், ப்ளானர், ஸ்டாம்ப்ஸ், கிரீட்டிங் கார்ட் என பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தினேன்.

அது சூப்பர் டூப்பர் ஹிட்டானது. காரணம் இன்றைய இளைஞர்கள் தனித்துவத்துடன் தங்களுக்கு ஒரு அடையாளத்தை உருவாக்க விரும்புகின்றனர். எல்லோரையும் போல இல்லாமல் தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ள விரும்புகின்றனர். அதனால் இதுபோல வித்தியாசமான கலைநயத்துடன் கூடிய பொருட்கள் அவர்கள் மத்தியில் வெற்றியடைகிறது. இந்த தலைமுறையினருக்கு நகைச்சுவை பிடித்திருக்கிறது. அவர்கள் சந்தோஷமாக வாழ்க்கையை ஒரு விளையாட்டுபோல வாழ விரும்புகின்றனர். அவர்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் முக்கியம். மற்றவர்களுக்காக இல்லாமல் தங்கள் மகிழ்ச்சிக்காக உழைக்கின்றனர். அந்த மகிழ்ச்சியை தக்க வைத்துக் கொள்ள செலவும் செய்கின்றனர். மேலும் அவர்களின் சிந்தனையை வெளிப்படுத்தும் பொருட்களை தங்களின் அடையாளமாக மாற்றிக் கொள்கிறார்கள்’’ என்றார்.

பொதுவாகவே கலைஞர்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய சிக்கல், ‘க்ரியேட்டிவ் ப்ளாக்’. ஆனால் அலிசியாவிற்கு இந்தப் பிரச்சனை வந்ததே இல்லையாம். “நான் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளைக் குறிப்புகளாக எழுதிவைப்பேன். அதனால் எப்போதுமே எனக்கு க்ரியேட்டிவ் ப்ளாக் வந்தது கிடையாது. நான் வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதால், தினமும் புதிய மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காது. வழக்கமான நாட்களாக இருக்கும். அதனாலேயே, என்னுடைய பெரிய ஊக்கம் என் செல்ல நாய் சார்லிதான். என் ஓவியங்கள் பெரும்பாலும் சார்லியை மையப்படுத்தி இருக்கும். மேலும், இந்தியாவிற்கு வந்து சில ஆண்டுகளுக்கு பிறகு தான், எனக்கு இங்கு இருக்கும் பழக்கவழக்கங்கள், தனித்துவங்கள் எல்லாம் புரிந்தது. அதிலிருந்து பல யோசனைகள் உருவாகும். அவற்றை ஓவியங்களாக மாற்றுவேன்” என்கிறார்.

ஒரு கலைஞராக வெற்றியடைந்து, தொழில்ரீதியாகவும் அலிசியா வென்றிருக்கிறார். பல கலைஞர்கள் நல்ல படைப்பாளிகளாக இருந்தாலும், வணிக ரீதியில் வெற்றியடைய சிரமப்படுவார்கள். ஆனால் அலிசியா இரண்டிலுமே சாதித்துள்ளார். ‘‘இப்போது இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்க ஆரம்பித்துவிட்டனர். திறமையிருந்தால் போதும் ஆன்லைனில் கூட தொழில் செய்யலாம். பல நிறுவனங்கள் தனி நபர்களின் திறமையை ஊக்குவித்து, அவர்களுடன் இணைந்து, அந்த தொழிலில் முதலீடு செய்ய முன்வருகின்றனர். அவர்களின் எண்ணத்தை பெற்றோர்களும் புரிந்து கொண்டு, ஆதரவளிக்கிறார்கள். படிப்பு சார்ந்து அல்லாத பிற கலைத் துறைகளிலும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் உருவாகி இருப்பதே இதற்கான காரணமும் கூட.

இது இக்கால இளைஞர்களுக்குக் கிடைத்த சிறப்புரிமை. சுதந்திரமாக யாரையும் நம்பாமல் திறமையை மட்டும் நம்பி, சுயமாக வேலை செய்யலாம்” என்றவர் ஒரு தொழில் துவங்க தன் ேமல் நம்பிக்கை வைக்க வேண்டுமாம். ‘‘9-5 வேலையையும், நல்ல சம்பளத்தையும் விட்டு, இந்தியாவிற்கு வந்த போது பல சந்தேகங்களும் பயமும் இருந்தன. ஆனால் என்னுடைய திட்டத்தில் எனக்கு நம்பிக்கையிருந்தது. என் ஓவியங்களை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று, இந்திய மக்களுக்கே உரியப் பண்புகளை வெளிப்படுத்தும் ஓவியங்களை வரைந்தேன். திருவிழாக்கள், உணவு, குடும்பங்களை மையப்படுத்தி ஓவியங்களை உருவாக்கினேன். அடுத்து, இன்றைய கால இளைஞர்கள், வேலையில், கல்லூரியில், காதலில் சந்திக்கும் பிரச்சனைகளை நகைச்சுவையாக சொன்னபோது, அதுவும் மக்களுக்கு பிடித்துப்போனது.

நான் இந்தியா வந்து பத்தாண்டுகள் ஆகிவிட்டது. முதலில் ஆன்லைனில் மட்டுமிருந்த என் பொருட்கள், இப்போது இந்தியாவின் முக்கிய நகரங்களிலிருக்கும் ஷாப்பிங் சென்டர்களிலும் விற்பனையில் உள்ளது. இப்போது ஒரு புதிய காமிக்ஸ் புத்தகத்தை உருவாக்கி வெளியிட்டிருக்கிறேன்’’ என்றவர் இதன் மூலம் நூலாசிரியர் என்ற பாத்திரத்தையும் ஏற்றிருக்கிறார். ‘டியரஸ்ட் ஜார்ஜ்’ என்ற பெயரில் காதலை மையப்படுத்தி வெளியாகி இருக்கும் இப்புத்தகம் இம்மாதம் ஆன்லைனிலும், நகரத்தின் முக்கிய புத்தகக் கடைகளிலும் கிடைக்கும்’’ என்றார் அலிசியா.Post a Comment

Protected by WP Anti Spam