தமிழரின் ஏகபிரதிநிதித்துவமும் அதன் முன் எழும் சவால்களும் !! (கட்டுரை)

Read Time:33 Minute, 28 Second

கொவிட்- 19க்குப் பின்னரான காலப்பகுதியில், உலகளாவிய அரசியல், பொருளாதரம் சார் வெளிகள், பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்துப் பயணிப்பதை அவதானிக்கலாம். இருப்பினும், இலங்கையின் சமகாலப்போக்கு, கொவிட்-19க்கு மத்தியிலும் சூடுபிடித்தே காணப்படுகின்றது. இதற்கு வித்திடும் காரணிகளாக, நடைபெறப்போகும் நாடாளுமன்றத் தேர்தலையும் அதை ஒட்டிய நிகழ்வுகளையும் குறிப்பிடலாம்.

இம்முறை நடக்க இருக்கின்ற தேர்தலானது, முன்னர் ஒருபோதும் இல்லாத புதிய கொள்கைகள், எண்ணக்கரு சார் எடுத்தியம்பல்களுடனும் நகர்வதை அவதானிக்கலாம். அந்தவகையில், வாக்கு வங்கியின் ஏறுமுகத்தினை உறுதிப்படுத்துவதற்காகவும் இடம்சார் அதாவது, புவியியல் அமைப்பாக்க ரீதியான தேர்தல் யுத்திமுறைகள் அனைத்து கட்சிகளாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவ்வகையில், இந்நாடாளுமன்றத் தேர்தலின் மய்ய நீரோட்ட நகர்வானது, மாவட்ட வாக்காளர்களின் வாக்களிப்பு விகிதாசங்களே, நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைத் தீர்மனிப்பதால், புவியியல் சார் உந்துதல்களின் பிரகாரம் தேசிய அரசியல், தெற்கு சார் அரசியல், வடமேற்கு சார் அரசியல் , மலையகம் சார் அரசியல், வடக்கு சார் அரசியல், கிழக்கு சார் அரசியல் எனத் தேர்தல் வியூகங்கள் முன்நிறுத்தப்படுகின்றன. வாக்கு வங்கியின் பூரண நிரம்பலைத் தக்க வைத்துக்கொள்ளும் நோக்கில், தேவைக்கு ஏற்றால் போல், ஒருமித்தும் தனித்தும் இடம்சார் தேவைப்பாட்டைப் பூர்த்தி செய்யும் அணுகுமுறைகள் கையாளப்படுகின்றன.

இச் சூழ்நிலையில், சிறுபான்மையினரின் அரசியல் நகர்வுகள், அவற்றின் வினைதிறனான நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. குறிப்பாக, தமிழர்களின் அரசியல் கோரிக்கையானது, இன்று தோற்றம் பெற்ற விடயமன்று. அதாவது, பல தசாப்தங்களுக்கு முன்பிருந்தே எழுப்பப்பட்டு, நீண்டகாலச் சக்கரச் சுழலின் நீட்சியின் வெளிப்படுத்துகையாக அமைகின்றது.

இவ்வாறு, தமிழர் அரசியல் நகர்வுகள் அமைந்தற்கான விளைவுக் காரணங்களாக, முன்னர் நிகழ்ந்ததும் நிகழ்ந்து கொண்டிருக்கக் கூடியதுமான உரிமையிழப்பு, ஓரங்கட்டப்படுதல், சிறுபான்மையினர் மீதான வன்முறைகள் போன்றவைற்றைக் கூறலாம்.

அரசியலானது, எப்போதும் ஒரே வடிவில் அமைந்திருப்பதில்லை. ஏனெனில், அரசியலில் தனித்துவமானதும் தன்னகத்தையும் உள்ளடக்கிய உள்ளார்ந்த இயல்பாக, ‘ மாற்றமுறு தன்மை’யைக் கோடிட்டுக் கூறலாம். அதாவது, நிகழ்ந்தேறும் சமுகம் சார்ந்தும் பொருளாதரம் சார்ந்தும் ஏனைய மாற்றங்கள் சார்ந்தும் செவிசாய்த்து, அதற்கேற்றால் போல் தன்னையும் கட்டமைத்துக்கொண்டு முன்னகரும் செயற்பாட்டுக் கருவியாகவே, அரசியல் காணப்படுகின்றது.

இதன் நிமித்தம் அவதானிப்போமாயின், தமிழர் அரசியலும் மாற்றங்களுக்கு உட்பட்டு முன் செல்வதை அவதனிக்கலாம்.

அந்தவகையில், தமிழர் அரசியலின் செயல் வழிமுறையாக (Modeus Opreandi) அஹிம்சை வழிநகர்வு (Non- violence movement), ஆயுதப் போராட்ட நகர்வு ( Arms movement), இராஜதந்திர நகர்வு (Diplomatic movement) என மும்முனைப் பரிணாமங்களில் பயணித்துள்ளது.

எனினும், தமிழர்களின் அரசியலின் இருப்பானது, யுத்தம் மௌனிக்கப்பட்டதற்கு முன்னரான நிலை (Pre-War Situation), யுத்தம் மௌனிக்கப்பட்டதற்கு பின்னரான நிலை (Post-War Situation) எனும் இரு வகுதிகளாகக் கூர்ந்து நோக்கப்படுகின்றது.

இவ்வகுதிகளை அடிப்படையாகக் கொண்டு, இன்றியமையாததும் தவிர்க்க முடியாததுமான விடயமாக அமைவது, தமிழரின் ஏக பிரதிநிதித்துவமாகும். இங்கு தமிழரின் ஏகபிரதிநிதித்துவம் என்பது, ஜனநாயகத்தின் பிறப்பாக்கங்களில் முதன்மையான விடயமாக அமைந்த, மறைமுக ஜனநாயக ஏற்பாடான மக்கள் பிரதிநிதித்துவத்தின் ஒருமித்த கூட்டமைக்கப்பட்ட பிரதிநிதித்துவத்தைக் குறித்து நிற்கின்றது.

அதாவது, தமிழர்களின் பிரதிநிதித்துவத்தைச் சிதைக்காமல், கேள்விக்கு உள்ளாக்காமல் ஒன்று திரட்டிய முழுமையான பிரதிநிதித்துவமே தமிழர்களின் ஏகபிரதிநிதித்துவம் எனச் சுட்டுகின்றது. தமிழர்கள், தங்களது நீண்டகால அரசியல் கோரிக்கையான சுயநிர்ணய உரிமை, தமிழர் தாயகம் போன்றவற்றை முன்நிறுத்தி, ஆயுதப் போராட்டத்துக்கு முன்னர் அஹிம்சை வழியில், அரசியல் நகர்வை மேற்கொண்டனர்.

இருப்பினும், அதன் விளைவானது, வினைதிறன் மிக்கதும் தாக்கம் செலுத்த கூடியதுமான முடிவைப் பெற்றுத் தரவில்லை. அதனால், அதைத் தொடர்ந்து எழுந்த அரசியல் சூழல், ஆயுதப் போரட்டத்தின் தேவைப்பாட்டை உணர்த்தியதின் காரணமாக, தமிழரின் அரசியல் கோரிக்கையை வென்றடுக்க, ஆயுத மார்க்கத்தை நோக்கித் தள்ளியது.

இதன் காரணமாக, ஆயுதப் போராட்டமே தீர்வைப் பெற்றுத்தரும் எனும் நம்பிக்கையின்பால் ஈர்க்கப்பட்டு, மூன்று தசாப்தங்களுக்கு மேலாக, தமிழர் அரசியல் தொடர்பான ஆயுதப்போராட்டம் நடைபெற்றது.

இருப்பினும், பூகோள அரசியல் உட்பட இன்ன பிற காரணங்களால் ஆயுதப் போராட்டத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆகவே, மேற்கூறப்பட்ட வழிமுறைகளில் ஏற்பட்ட முற்றுப்புள்ளிகளின் மூலம், தமிழர் அரசியல் செல்நெறி, சென்றடையும் இலக்கை நோக்கிய நகர்வை முன்னெடுப்பதற்கான கதவைப் பலமாக மூடப்பட்டுள்ளது எனலாம்.

அதன் பின்னர், அமைந்த அரசியல் நகர்வாக, இராஜதந்திர நகர்வைக் குறிப்பிடலாம். தமிழ் அரசியல்வதிகளால் வாய்வழியாக உச்சரிக்கப்படுவதும் அதிக விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளதுமான நகர்வாக, இந்த இராஜதந்திர நகர்வு காணப்படுகின்றது.

இந்நகர்வானது, அஹிம்சை வழியில் உரிமைகளைப் பெற்றெடுப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்த, பூகோள அரசியல், உள்நாட்டு அரசியல் நிலைமைகளை அனுசரித்து, இராஜதந்திர ரீதியில் உரிமைகளைப் பெறுவதற்கு முயற்சிப்பதாகும்.

மேற்கூறப்பட்டவற்றை அடியொற்றி, தமிழரின் ஏகபிரதிநிதித்துவத்தின் இயங்கு நிலையைப் பார்க்கின்றபோது, யுத்தம் மௌனிக்கப்படுவதற்கு முன்னர், ஒரு விதமான நிலையையும் அதற்கு பின்னர் இன்னொரு விதமான நிலையையும் வெளிப்படுத்துகின்றது.

அதாவது, யுத்தம் மௌனிக்கப்படுவதற்கு முன்னர், தமிழரின் அரசியல், உரிமை அரசியலை மய்யமாகக் கொண்டு நடைபோட்டது. இத்தகைய அரசியல் நகர்வுக்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு நல்கப்பட்டிருந்தது.

தமிழர் தொடர்பான அரசியலைப் பறைசாற்றுவதற்கும் முன்னெடுத்துச் செல்வதற்கும், தமிழ்த் தேசிய அரசியலை மய்ய அச்சாணியாகக் கொண்டமைந்த அரசியல் தளம் உருவாக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், யுத்தம் மௌனிக்கப்படுவதற்கு முன்னர் நிகழ்ந்த அனைத்துத் தேர்தல்களிலும் தமிழ்த் தேசிய அரசியலை, யார் அடிநாதமாகக் கொள்கின்றார்களோ, அவர்களுக்கே பூரண ஆதரவுக் கரத்தை மக்கள் கொடுத்திருந்தார்கள். மேலும், தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகுவோர், மக்களால் தூக்கியெறியப்பட்டார்கள்.

மேலும், 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில், தமிழர் அரசியலிலும் ஏகபிரதிநிதித்துவத்திலும் சிதைவுகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். அதாவது, யுத்தம் மௌனிக்கப்படுவதற்கு முன்னர், தமிழர்களின் அரசியலானது, தமிழ்த் தேசிய அரசியலிலும் தமிழர் ஏகபிரதிநிதித்துவத்திலும் ஓர் ஸ்திரத்தன்மை காணப்பட்டது. இருப்பினும், யுத்தம் மௌனிக்கப்பட்டதற்குப் பின்னர், தமிழ்த் தேசிய அரசியலும் ஏகபிரதிநிதித்துவத்துக்கான ஒருமைப்பாடும், படிப்படியாக குறைவடைந்து வருகின்றமையைக் கோடிட்டுக்காட்டலாம்.

ஆகவே, இச்சூழ்நிலையில், இதுவரை இருந்துவந்த நிலையான தமிழ்த் தேசிய அரசியலின் இருப்பு, கேள்விக்குறியாக்கப்படுகிறதா, என்ற ஐயம் எழுவதும் தவிர்க்க முடியாததாகும். அவ்வகையில், தமிழரின் அரசியல் சார்பான ஏகபிரதிநிதித்துவம், ஏன் தேவைப்படுகிறது என்பதை அவதானித்தால், பின்வரும் அம்சங்கள் காணப்படுகின்றன.

முதலாவதாக, தமிழர்களின் நீண்ட நாள் கனவு, அபிலாசை போன்றவற்றை வென்றிட, பலம் வாய்ந்ததும் வினைதிறன் மிக்கதும் ஒருமித்ததும் நிறுவனமயப்படுத்தப்பட்டதுமான அமைப்பொன்று மிக அவசியமாகும். இதற்கு, தமிழர்களின் பிரதிநிதித்துவம், முழுமையான ஏகபிரதிநிதித்துவமாக இருந்தாலேயே இதைச் சாத்தியமாக்கலாம்.

இரண்டாவதாக, தமிழர்களின் கோரிக்கைகளை, மடை மாற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் நயவஞ்சக விடயங்களுக்கு எதிராகக் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, தமிழர் சார்பான ஏகபிரதிநிதித்துவம் வேண்டப்படுகின்றது.

மூன்றாவதாக, தமிழர்களின் கலை, கலாசாரம், பொருளாதாரம், கல்வி, வரலாறு, அபிவிருத்தி போன்ற முக்கிய செயற்றிட்டங்களை முன்னெடுக்கவும் அவற்றைக் நிறுவனப்படுத்தப்பட்ட முறையில் செயற்படுத்தவும் ஏகபிரதிநிதித்துவம் தேவைப்படுகின்றது.

நான்காவதாக, யுத்தம் மௌனிக்கப்பட்டதற்குப் பின்னரான காலப்பகுதியில், தமிழரின் பாரம்பரிய காணிகளில் திட்டமிடப்பட்டதும் வலிந்ததுமான குடியேற்றங்களைத் தடுத்தல், தமிழர் பாரம்பரியங்களைப் பாதுகாத்தல், காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல், வலிந்து இனப்பரம்பலை மாற்றும் செயன்முறைகளைத் தடுத்தல் போன்ற பல விடயங்களைக் கையாள்வதற்கு ஒருமித்ததும் பலமானதுமான தமிழர் ஏகபிரதிநிதித்துவம் இன்றியமையாததாகும்.

ஐந்தாவதாக, சமகாலத்தில் நிலைமாறு நீதியின் (Transitional Justice) உட்கூறுகளான பொறுப்புக்கூறல், உண்மையைக் கண்டறிதல், இழப்பீடு தொடர்பான விடயங்களுக்கும், சர்வதேச தலையீட்டுடனான விசாரணை (கலப்பு நீதிமன்றம்-Hybrid Court), ஏனைய தீர்வுத் திட்டங்களுக்கும் தமிழர்கள் சர்வதேச நாடுகளை நம்பி இருப்பதால், இவை தொடர்பான விடயங்களை முன்னெடுப்பதற்கும் தமிழர்களின் பிரதிநிதித்துவம், ஏகபிரதிநிதித்துவமாக இருப்பின், நம்பத்தகுந்ததும் காத்திரமானதும் வினைதிறனாகவும் அமையும்.

மேற்கூறப்பட்ட வகையில், தமிழர்களின் ஏகபிரதிநிதித்துவம் நிதர்சன ரீதியாக, அத்தியாவசியம் என உணரப்பட்டாலும், தற்கால சூழ்நிலையானது ஏகபிரதிநிதித்துவத்துக்கு வேட்டுவைக்க கூடிய பல நிகழ்வுகள், தற்போதைய சூழலில் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்படுவதானது, தமிழர்களின் ஏகபிரதிநிதித்துவத்தின் சிதைவுக்கான அபாயநிலையைக் காட்டுகின்றது.

அவ்வகையில், யுத்தம் மௌனிக்கப்பட்டதற்குப் பின்னரான காலப்பகுதியில், தமிழர்களின் ஏகபிரதிநிதித்துவம் சிதைவுற்றமைக்கானதும் அதற்குச் சவாலாக அமைந்த ஏதுகளைப் பின்வருமாறு குறித்துரைக்கலாம்.

தமிழர்களின் பிரதிநிதியாக, நிறுவன ரீதியாகப் பலம் பொருந்தியதாக இருந்த அமைப்பு, இல்லாமலாக்கப்பட்டதன் பின்னரான காலங்களில், தமிழ்த் தேசிய அரசியல் தொடர்பாக அமைந்த மாறுபட்ட கருத்துகள், ஏகபிரதிநிதித்துவம் மீதான தன்மையை மாற்றமுறச் செய்தமையையும் செய்கின்றமையையும் குறிப்பிடலாம்.

மேலும், தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் காணப்பட்ட ஒற்றுமை இன்மையும் கையாலாகாத்தனத்தின் நீட்சியும் தலைமைத்துவச் சண்டையும் ஏகபிரதிநிதித்துவம் தொடர்பான ஒருமைப்பாட்டைச் சிதறச் செய்தமைக்கான காரணங்களாகக் கொள்ள முடியும்.

அடுத்ததாக, தமிழர்களின் பிரச்சினைகளுக்குகான தீர்வு பெற்றுத்தரப்படும் என்று, வெறுமனே முழக்கமிடப்பட்டு, அதற்கான காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படமையால், அவ்விடயம் சார்ந்து எழுந்த எதிர்ப்பு அரசியலாலும் ஏகபிரதிநிதித்துவத்தின் மீதான சிதைவைத் தூண்டச் செய்தது எனலாம்.

வெறுமனே, நாடாளுமன்றக் கதிரையை அலங்கரித்துக்கொண்டு, மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கும் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் அடிப்படை பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் செவிசாய்க்காத நபர்களாக வலம் வந்ததால், அதுதொடர்பாக எழுந்த வெறுப்பரசியலின் உந்துதல், ஏகபிரதிநிதித்துவத்தை மந்தமடையச் செய்தது.

தமிழர்களால், நாடாளுமன்றப் பிரதிநிதிகளாக அனுப்பட்டவர்கள், நவபேரினவாதச் சக்திகளுக்கும் அவர்களது நிகழ்ச்சி நிரலுக்கும் ஏற்றவகையில், தலையாட்டிப் பொம்மைகளாகச் செயற்பட்டதன் காரணமாக ஏற்பட்ட அதிருப்தி அரசியலானது, ஏகபிரதிநிதித்துவத்தை முன்னெடுப்பதற்குச் சவாலானது.

பிரதேசவாத அரசியலின் முன்னெடுப்புகள், அதாவது, வடக்கு நிலப்பிரதேங்களில் வடக்கு சார் விடயங்களை முன்னிறுத்தியும் கிழக்கு நிலப்பிரதேசங்களில் கிழக்கு சார் விடயங்களை முன்னிறுத்தியும் மலையகப் பிரதேசங்களில் மலையகம் சார் விடயங்களை முன்னிறுத்தியும் இடம்பெற்றதும் இடம்பெற்று வருகின்றதுமான பிரதேச ரீதியான அரசியலின் காரணமாகத் தமிழர்கள் என்ற ஒட்டுமொத்தப் பார்வை சிதைக்கப்படும் அதேபட்சத்தில், தமிழர் ஏகபிரதிநிதித்துவம் பி​ரதேச ரீதியான பிரதிநிதித்துவமாக மாற்றம் பெற்றமையும் அதன் அபாயத்தன்மையும் சவாலாக அமைகின்றது.

தமிழ் கட்சிகளுக்குள் ஏற்பட்ட பிளவுகளும் அதைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டுள்ள புதிய கட்சிகளின் வருகையும், அதனூடான வாக்குகள் பிரிக்கப்படுவதும் ஏகபிரதிநிதித்துவதற்கு அபத்தமான நிலையை உருவாக்குகின்றது.

தமிழர் பகுதிகளில், தேசிய கட்சிகளின் வருகையும் அதனூடான வாக்குப் பிரிப்புக்களுக்கான முயற்சிகளும் ஏகபிரதிநிதித்துவத்துக்கான சவாலாக அமைகின்றது. அதாவது, தேசிய கட்சிகள் என அடையாளப்படுத்திக்கொண்டு பேரினவாதக் கொள்கையைத் தாரக மந்திரமாகக் கொண்டு இயங்கும் கட்சிகள், முன்னைய காலங்களில் குறிப்பிட்டுக்கூறும் படியான நகர்வுகளை முன்னெடுத்தமை மிகவும் குறைவாகும்.

இருப்பினும், அண்மைக் காலங்களில் தேசிய கட்சிகள், தமிழர் பிரதேசங்கள், தங்களது வேட்பாளர்களை முன் நிறுத்தி, வாக்குச் சேகரிக்கும் நகர்வுகளை மேற்கொள்வதால், அதன் மூலமாக வாக்குகள் பிரிக்கப்படுவதாலும் ஏகபிரதிநிதித்துவம் பாதிக்கப்படுகின்றது.

மிகவும் முக்கியமான விடயமாக அமைவது, சமகாலத்தில் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் ‘உரிமை அரசியல் எதிர் அபிவிருத்தி அரசியல்’ என்ற நிலைப்பாடாகும். இந்த நிலைப்பாடானது, முன்னைய காலங்களை விட இத்தேர்தலில், அதிகளவில் பேசப்படும் பேசுபொருளாகவும் வாக்குகளை ஈர்ப்பதற்கான வாக்குக் காந்தமாகவும் அமைகின்றது.

பொதுவாக, இலங்கையின் அரசியல் வெளியில், உரிமை அரசியலும் அபிவிருத்தி அரசியலும் என்ற விடயப் பரப்பானது, இருதுருவ மயமாக்கப்பட்ட எண்ணக்கருக்களாகவும் நடைமுறைச் செயல்வடிவத்தில் ஒன்றோடொன்று முரண்பட்டதாகவும் பார்க்கப்படுகின்றது.

உரிமை அரசியல் என்பது, தமிழர்களின் நீண்ட கால அபிலாசைகளை அடைவதற்கான போராட்டமாக அணுகப்படுகின்றது. தமிழர்களின் அரசியல் பாதையில், குறிப்பிட்டுக் கூறப்படக் கூடியதும் நிலையானதும் ஒருமித்த நகர்வாகவும் உரிமையைப் பெற்றெடுப்பதைப் பிரதானமாகக் கொண்டதுமான ஆரோக்கி அரசியல் நகர்வாக, உரிமை அரசியலைக் கூறலாம்.

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் மூலமாகவும் தமிழர்களின் கோரிக்கைகளை வெல்வதற்கான எழுச்சி மிகு உந்துதல்கள் பெளதீக ரீதியிலும் உள ரீதியிலும் பலவீனப்படுத்தப்பட்டதன் மூலமாகவும் உரிமை அரசியல் தொடர்பானதும் சரியானதும் வினைதிறனுடையதுமான முடிவுகள் கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பங்களில், முறையாகப் பயன்படுத்தாமையின் காரணமாகவும், மக்கள் மத்தியில் உரிமை அரசியல் தான் தங்களது கட்சியின் நோக்கமெனக் கூறிக்கொண்டு, அதைச் செயல் வடிவத்துக்குக் கொண்டுவராத கட்சிகளின் நடவடிக்கைகளாலும் உரிமை தொடர்பான அரசியல் நகர்வில் சில தளம்பல் நிலைமை ஏற்பட்டுள்ளமையை அவதனிக்கலாம்.

இருந்தபோதிலும் உரிமை அரசியலை மேற்கொண்ட தமிழ் கட்சிகளின் இன்னுமொரு குறிப்பிடக்கூடிய விடயமாக அமைவது, இதுவரைக்கும் அமைச்சுப் பதவியை நாடாமையைக் குறிப்பிடலாம். அதாவது ,அக்கட்சிகளின் எண்ணப்பாடாகக் காத்திரமான உரிமை அரசியலை மேற்கொள்வதாயின் அடிபணியாததும், அற்ப சலுகைகளுக்கு விலைபோகாத அரசியல் நகர்வை மேற்கொள்வதே உசிதமானது எனக் கருதியிருந்தார்கள்.

ஆகவே, அமைச்சுப் பதவிகளைப் பெற்றால், பேரினவாதத்துக்கு முட்டுக்கொடுக்க வேண்டி வரும் எனவும் தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிரான பரிபூரண கருத்தாக்கத்தைக் கொண்டுள்ள பேரினவாத அமைப்பாக்கத்துக்குள் இருந்துகொண்டு, உரிமை அரசியலை முன்னெடுப்பது சாத்தியமற்றது என்று கருதியதன் விளைவாக, அமைச்சுப் பதவிகளைப் புறமொதுக்கி இருந்தார்கள். எனினும், தற்போது அந்நிலைப்பாட்டைக் கைவிட்டு அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்காக, சமிஞ்ஞைகள் காட்டப்படுவது, மாற்றுப்போக்கைக் காட்டுவதாக அமைகின்றது.

அபிவிருத்தி அரசியல் என்பது சமூக, பொருளதார அக, புறத் தாக்கங்களைக் கருத்தில் கொண்டு கல்வி, வேலைவாய்ப்பு, தொழிற்றுறை, உட்கட்டுமானம், சுகாதாரம், போக்குவரத்து போன்றவற்றைப் பெற்றிடும் நோக்கில் நகர்த்தப்படும் அரசியல் பாய்ச்சலாகும். இவ்விடயத்தைச் சற்று உன்னிப்பாகப் பார்ப்போமாயின் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில், வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் தோற்றுவிக்கப்பட்ட பாரிய பிரச்சினையாகப் பொருளாதாரப் பிரச்சினை அடையாளப்படுத்தப்படுகின்றது.

அபிவிருத்தி அரசியலுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்போர், வெறுமனே உரிமை அரசியலைப் பேசிக்கொண்டிருந்தாலும் மக்களின் அடிப்படை பொருளாதார விடயங்கள், கவனிக்கப்படாமல் போனதன் காரணமாகவும் பொருளாதார ரீதியான, பாரிய பின்னடைவை எதிர்கொள்ள நேரிட்டது எனவும் அப்பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு, அபிவிருத்தி சார்ந்த அரசியலே சரியானது எனக் கூறுகின்றார்கள்.

அண்மைக் காலத்தில், வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார ஏக்கத்துக்குக் குறிப்பாக, வேலைவாய்ப்புத் தொடர்பான பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வைப் பெற்றுத்தருகின்ற அபிவிருத்தி அரசியல் மீதும் ஓரளவான மக்களின் கரிசனையும் அதன் மீது வைக்கப்படுகின்றது, என்பதும் அவதானிக்க கூடியதாக உள்ளது.

அபிவிருத்தி அரசியல் எதிர் உரிமை அரசியல் எனும் போது, இங்கு எழுகின்ற பிரதான வினா, எதற்கு முக்கியத்துவம் வழங்குவதென்பதாகும். உண்மையின், அடிப்படையில் பார்போமாயின் அபிவிருத்தி அரசியல், உரிமை அரசியல் என்பன வெவ்வேறு எண்ணக்கருக்களாக இருப்பினும், இரண்டுக்குமிடையில் பரஸ்பரத் தொடர்பும் ஒன்றில்லாமல், மற்றொன்று இல்லை என்ற தங்கியிருப்பதையும் காட்டுகின்றது. எனவே, இத்தேர்தல் நிகழ்வுகளின் பிரகாரம், பார்போமாயின் மேற்கூறப்பட்ட நிலைமைக்கு, அந்நிய நிலைமையையே அரசியல் கட்சிகளினதும் அரசியல்வாதிகளினதும் நடத்தைகள் வெளிப்படுத்துகின்றன.

இம்முறை இடம்பெற இருக்கின்ற தேர்தல் பரப்புரைகளில், அவர்களது கட்சிகளின் கொள்கையாக்கங்களில் ஒன்றில் தனித்து உரிமை அரசியலை மாத்திரம் அறைகூறுவதாகவும் இல்லாவிடின் அபிவிருத்தி அரசியலை மாத்திரம் முன்வைக்கும் போக்கும் காணப்படுகின்றது. இதைச் சற்று உன்னிப்பாகப் பார்த்தால், உரிமை, அபிவிருத்தி அரசியல் தொடர்பான பிழையாக இருதுருவமயமாக்கப்பட்ட கருத்தாக்கங்களின் தொடர்ச்சியாகவே இதுவும் அமைகின்றது. ஏனெனில், சமகால தமிழர்களின் அரசியலானது உரிமை, அபிவிருத்தி போன்ற விடயங்களை, ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகப் பார்க்கப்பட வேண்டும்.

ஒன்றை பரிபூரணமாகக் கிடப்பில்போட்டு, மற்றொன்றை மாத்திரம் முன்வைத்தல், அதாவது உரிமையை முன்வைத்து, அபிவிருத்தியைக் கைதுறத்தல், அபிவிருத்தியை முன்னிறுத்தி, உரிமையைப் படுகுழியில் போடல் போன்ற நகர்வானது, பிழையான நகர்வாக அமைவது மாத்திரமன்றி ஓர் அபாய நகர்வின் அடித்தளமாக அமைகின்றது.

ஆகவே, இரண்டு விடயங்களையும் சீர்தூக்கிப் பார்த்து, சமநிலையைப் பேணக்கூடிய நகர்வே, தலை சிறந்த நகர்வு என்பதுடன் வரவேற்கத்தக்க நகர்வாகும். இவ்விதம், பார்ப்போமாயின் தற்காலச் சூழ்நிலையில் மேற்கூறப்பட்ட விதமான நகர்வு, பூர்த்தி செய்யப்படாத வெற்றிடமாகவே நீடிக்கின்றது. இவ்வாறான போக்கு, மாற்றப்பட வேண்டும் என்பது, காலத்தின் கட்டாயமாகும்.

இவ்வேளையில், உரிமை அரசியல் எதிர் அபிவிருத்தி அரசியல் என்ற விடயம் எவ்வாறு தமிழர்களின் ஏகபிரதிநிதித்துவத்தைச் சவால்களுக்கு உட்படுத்தியது என்பதைப் பார்போமாயின், இவ்இரு விடயங்களும் எந்நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்றன, எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன, எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதை, அடிப்படையாகக் கொண்டே ஏகபிரதிநிதித்துவத்துக்கான தாக்கத்தைக் கணிப்பீடு செய்யலாம்.

உதாரணமாக, அபிவிருத்தி அரசியல் எனும் போது, எழுகின்ற மிகப்பெரிய ஐயப்பாடானது, வெறுமனே அபிவிருத்தியைப் பெறும் நோக்கில், அதாவது நீண்ட மற்றும் நிலைத்திரு அபிவிருத்தியைக் கருத்தில் கொள்ளாது, குறுகிய கால அபிவிருத்தியை மாத்திரம் மய்யமாக வைத்து, முன்னெடுக்கப்படும் அபிவிருத்தியானாலும் சரி, உரிமையை முற்றாகத் துடைத்தெறிந்த அபிவிருத்தியோ, அபிவிருத்தியைப் பெறுவதற்காகப் பேரின வாத அமைப்பாக்கத்துக்குள் பங்குகொண்டு, தமிழ்த் தேசிய வாதத்துக்கு எதிரான போக்கை வெளிக்காட்டிக்கொண்டு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தியானலும் சரி, அது உப்பில்லாச் சோறு போல் பிரயோசனம் அற்ற வகையில் அமைந்துவிடும்.

எனவே, தற்கால தேர்தல் சூழ்நிலையில் அபிவிருத்தியை மாத்திரம் முன்னிறுத்தி கோரப்படும் நகர்வுக்கு வாக்கு வங்கி அதன் பக்கம் சரியுமாயின் அது தமிழர்களின் ஏக பிரதிநிதித்துவத்தின் மீது விழும் சாட்டையடியாக மாறும்.

ஆகவே, தொகுத்து நோக்கும்போது, உரிமையைப் பெறுவதற்கான தமிழரின் அரசியல் போராட்டமானது, அதன் இறுதி அடைவை அடையாதிருக்கும் இத்தருணத்தில், இத்தேர்தலும் இத்தேர்தலை ஒட்டிய விடயங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.

தமிழரின் உரிமை தொடர்பான அரசியலானது, இன்னும் பயணிக்க வேண்டியிருப்பதால் தமிழரின் ஏகபிரதிநிதித்துவம் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது இன்றியமையாததொன்றாகும். ஏனெனில் பலமான, ஒருமித்த, வினைதிறனான தமிழர்களின் ஏகபிரதிநிதித்துவமே யுத்தம் மௌனிக்கப்பட்டதற்கு பின்னரான காலப்பகுதியில் எஞ்சியிருக்கும் பலமான ஆயுதமாகும்.

எனினும் எவ்வாறான சவால்கள் தோற்றுவிக்கப்பட்டாலும் ஏகபிரதிநிதித்துவத்தைத் தக்கவைத்துக்கொள்ளல், பாதுகாத்தல், முன்னகர்த்தல் போன்ற நடவடிக்கைகளே தமிழர்களின் அரசியல் இலக்கினை அடைவதற்கான சக்தி வாய்ந்ததும், செப்பனிடப்பட்டதுமான உபாய மார்க்கமாக அமையும்.

நிகழ்காலச் சூழ்நிலையில் தோற்றுவிக்கப்படும் உரிமை அரசியல் எதிர் அபிவிருத்தி அரசியல் என்ற முன்னெடுப்புகள் ஒன்றோடுஒன்று, தனித்தும் பிரித்தும் அணுகப்படாமல் (இருதுருவமயமாக்கல் தவிர்க்கப்பட வேண்டும்) உரிமை இழந்த அபிவிருத்தி, அபிவிருத்தியை இழந்த உரிமையென்றல்லாமல் இவ்விரண்டையும் சமாந்தரமாக, அணுகப்படுவதன் மூலமாகவும் அதன் மீதே தமிழரின் அரசியல் நகர்வானது, வெற்றிகரமாகப் பயணிக்க வேண்டியுள்ளது என்பதும் காலத்தின் தேவையாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஏன் வேண்டும் உச்சகட்டம் ? (அவ்வப்போது கிளாமர்)
Next post தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளால் வெற்றியீட்டி ‘கிழக்கை காப்பேன்’!! (கட்டுரை)