By 9 August 2020 0 Comments

டைம் இதழின் அட்டையை அலங்கரித்த கிரேட்டா தன்பெர்க்!! (மகளிர் பக்கம்)

காலநிலை மாற்றம் தொடர்பாக உலக நாடுகளின் தலைவர்களை நோக்கி ‘HOW DARE YOU’ என்ற வார்த்தை மூலம் எச்சரித்த சிறுமி ‘கிரேட்டா தன்பெர்க்கை’ எளிதில் மறந்துவிட முடியாது.

சுவீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பெர்க். கடந்த செப்டம்பரில் நியூயார்க் நகரில் நடந்த ஐ.நா.வின் பருவநிலை மாற்றத்திற்கான மாநாட்டில், தேசிய அளவிலான அரசியல் தலைவர்களை நோக்கி, ‘‘உங்கள் வெற்று வார்த்தைகளால் என் கனவுகளையும் என் குழந்தைப் பருவத்தையும் திருடி விட்டீர்கள். மக்கள் கஷ்டப்படுகிறார்கள். முழுச் சுற்றுச்சூழல் அமைப்புகளும் சரிந்து வருகின்றது. மேலும் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு பெரிய அழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம்.

நீங்கள் பேசக்கூடியது பணம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் கதைகள். உங்களுக்கு எவ்வளவு தைரியம்?” என்ற கேள்வியை வைத்து பிரபலமானார். இதனால் உலகளவில் #FridaysForFuture என்ற ஹேஷ்டேக் பிரபலமானது. அமெரிக்க உச்சி மாநாட்டில் ஒரே நாளில் இவர் இந்த
கேள்வியை வைக்கவில்லை.

கிரேட்டா தன்பெர்க் ‘ஆஸ்பெர்ஜர் சிண்ட்ரோம்’ (asperger syndrom) நோயால் பாதிக்கப்பட்டவர். இந்த நோய் உள்ளவர்கள் மக்களுடன் பேசுவதில் தடுமாற்றங்கள் இருக்கும். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி பள்ளிக்குச் செல்லாமல் ஸ்வீடன் நாடாளுமன்றத்திற்குச் சென்றார். உலகமே அவரை திரும்பிப் பார்த்தது.அன்றிலிருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையையும் சுற்றுச்சூழலுக்காகவே ஒதுக்கினார். சுற்றுச்சூழல் குறித்து பல்வேறு கட்டுரைகளை எழுதினார். சக மாணவர்களிடம் இதுகுறித்து உரையாடினார். மாணவர்களை ஒன்று திரட்டினார். `பள்ளிக்குச் செல்லும் வயதில், உனக்கு எதுக்கு வேண்டாத வேலை?’ என்றவர்களைப் புறக்கணித்தார்.

இந்நிலையில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பத்திரிகை ஒன்று சுற்றுச்சூழல் குறித்து ஒரு கட்டுரைப் போட்டி வைத்தது. அந்தக்கட்டுரைப் போட்டியில் கிரேட்டாவின் கட்டுரை முதலிடம் பிடித்தது. மேலும், அந்தக் கட்டுரை வெளியான பின்னர், சூழலியல் ஆர்வலர்கள் கிரேட்டாவைத் தொடர்பு கொண்டு சூழலியல் சார்ந்த விஷயங்களை அவரிடம் பகிர்ந்து கொண்டனர். இதனால் தான் களத்திற்கு வந்து எப்போது போராடப் போகிறோம் என்ற எண்ணம் அவருக்குள் எழவே, உலக வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி பாராளுமன்றம் முன்பு தனி ஒரு ஆளாக போராட்டம் நடத்தி இளம் சுற்றுச்சூழல் ஆர்வலராக அறியப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் “கிரேட்டா தன்னுடைய கோபத்தைக் கட்டுப்படுத்த முயல வேண்டும். தனது நண்பர்களுடன் நல்ல க்ளாசிக் திரைப்படங்களாகப் பார்க்க வேண்டும். Chill கிரேட்டா, Chill!” என்று கிரேட்டாவின் கோபத்தை விமர்சனம் செய்து பதிவிட்டிருந்தார். ட்ரம்பிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தன்னுடைய ட்விட்டரில், “கோபத்தைக் கட்டுப்படுத்த முயலும் இளம்பெண். தற்போது நண்பர்களுடன் நல்ல க்ளாசிக் திரைப்படங்களைப் பார்த்துக்கொண்டு ஜாலியாக இருக்கிறேன்” என்று அமெரிக்க அதிபரை கலாய்த்து ட்விட்டில் பதிவிட்டிருந்தார் தன்பெர்க்.

“என் மீது அவ்வப்போது அரசியல் சாயம் பூசுகிறார்கள். நான் எந்தவொரு கட்சிக்கோ, அரசியல்வாதிக்கோ, சித்தாந்தத்திற்கோ ஆதரவாகப் பேசவில்லை. நான் அறிவியலையும், நாம் எதுவும் செய்யாமல் விட்டால் நடக்கப்போகும் ஆபத்துகளை பற்றி மட்டுமே பேசுகிறேன்’’ என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த கிரேட்டா தன்பெர்க், தொடர்ந்து உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னையின் வலிமையான குரலாக மாறத் தொடங்கினார்.

2050-ம் ஆண்டுக்கு மேல் நீங்கள் சிந்திப்பதில்லை. அப்போது, என் வாழ்நாளில் பாதியைக் கூட தாண்டியிருக்க மாட்டேன். 2078-ல் நான் எனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடினால், அப்போது நான் எப்படி இருப்பேன், என் குழந்தைகள், என் பேரக் குழந்தைகளின் நிலை என்ன? என்றெல்லாம் நீங்கள் யோசித்தீர்களா?

ஆறிலிருந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்குள் பணக்கார நாடுகள் தங்களது பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றும் அளவினைக் குறைத்தால் மட்டுமே, சுத்தமான காற்று, குடிநீர் போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்து தங்களின் வாழ்க்கை முறையை உயர்த்திக்கொள்ள முடியும். ஏற்கெனவே வளர்ச்சியடைந்திருக்கும் நாமே, பருவநிலை மாற்றம் குறித்துக் கவலைப்படவில்லை எனில், இந்தியா, நைஜீரியா போன்ற நாடுகள் அந்தப் பிரச்னையைப் பற்றிக் கவலைப்பட வேண்டுமென எப்படி எதிர்பார்க்க முடியும்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர் செயல்பாட்டின் காரணமாக தன்பெர்க் 2019ம் ஆண்டிற்கான சிறந்த நபராக ‘டைம்’ பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலக அளவில் பருவநிலை மாற்றத்திற்கான இயக்கத்தையும் தன்பெர்க் வழி நடத்துகிறார் என்று டைம் பத்திரிகையின் பரிந்துரையினை தலைமை ஆசிரியர் எட்வர்ட் பெல்செந்தல் தெரிவித்துள்ளார்.

டைம் பத்திரிகையின் வரலாற்றில் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் 16 வயதுடைய கிரேட்டா தன்பெர்க்தான் மிகவும் இளையவர். டைம் பத்திரிகையின் மூலமாக தனக்குக் கிடைத்த இந்த கவுரவத்தை, பருவநிலை மாற்றத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் ‘பிரைடேஸ் ஃபார் பியூச்சர்’ இயக்கத்தின் செயல்பாட்டாளர்களுடனும் பகிர்ந்து கொள்வதாக தன் ட்விட்டரில் தன்பெர்க் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலை வெளியிடும் போர்ப்ஸ் இதழிலும் தன்பெர்க் 100வது இடத்தைப் பிடித்துள்ளார். அமைதிக்கான நோபல் பரிசுக்கும் இவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.Post a Comment

Protected by WP Anti Spam