ஆந்திரம் கொண்டாடிய சீத்தம்மா – கீதாஞ்சலி!! (மகளிர் பக்கம்)

Read Time:27 Minute, 0 Second

தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகியாக முதன்மை இடத்தைப் பிடித்தவரில்லை. ஆனாலும் அவர் தொடர்ந்து பத்தாண்டுகள் தமிழ்ப் படங்களில் தனக்குக் கிடைத்த பாத்திரங்களில் தோன்றிக்கொண்டே இருந்தார். தமிழில் குறைவான படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் பிரபலமாகவே அறியப்பட்டவர்.

70களுக்குப் பின் திருமண வாழ்க்கையில் ஈடுபட்டுத் திரையுலகை விட்டு விலகியபோதும், சென்னையை விட்டு நீங்காமல் 40 ஆண்டுக் காலம் தன் இருப்பிடத்தை இங்கேயே அமைத்துக் கொண்டவர். மிக நீண்ட காலம் சென்னை வாசியாகத் தமிழகத்திலேயே வாழ்ந்தவர். 93, ஹபிபுல்லா சாலை என்ற அவரது முகவரி அக்கால ரசிகர்களுக்கு நன்கு மனப்பாடம்.

இப்போதும் அவருக்கு சென்னையில் மயிலாப்பூர், தேனாம்பேட்டையில் வீடுகள் உண்டு. தமிழ் ரசிகர்களின் நினைவை விட்டு நீங்காதவர் சமீபத்தில் மறைந்த நடிகை கீதாஞ்சலி. 1947 ஆம் ஆண்டு விடுதலை பெற்ற இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தின் காக்கி நாடாவில், ஸ்ரீராமமூர்த்தி – சியாமளாம்பா தம்பதியினரின் ஐந்து பெண்களில் இரண்டாவதாகப் பிறந்தவர் மணி. ஆம், அதுதான் கீதாஞ்சலியின் இயற்பெயர். மணிக்கு முன்னதாக ஒரு மூத்த சகோதரியும் மூன்று இளைய சகோதரிகளும் ஒரு சகோதரரும் என பெரியதொரு நடுத்தரக் குடும்பம்.

தந்தையின் நாட்டியப் பித்து உருவாக்கிய நடனமணி

மணியின் தந்தையாருக்கு பரத நாட்டியத்தின் மீது கொஞ்சநஞ்சமல்ல, மிக அதீதமாகவே காதலும் பித்தும் இருந்தது. அந்த நடனப்பித்து, தன் மகள்கள் இருவரும் நடனம் கற்க வேண்டுமென்பதில் தீவிரமானது. அதனால், அவர்களுக்கு நாட்டியம் கற்பிக்க வேண்டுமென்பதில் முனைப்புடன் ஈடுபாடு காட்டினார்.

மகள் மணிக்கு ஐந்து வயதானபோது தீவிர நாட்டியப் பயிற்சி ஆரம்பமானது. படிக்க வேண்டிய வயதில் பள்ளிக்கு அனுப்புவதை விட நாட்டியம் கற்றுக் கொடுப்பதையே முதன்மையாக நினைத்தார் அந்தத் தந்தை. இது எந்த அளவுக்குச் சென்றதென்றால், வீட்டில் எந்த நேரமும் நடனமும் அதற்கான பயிற்சியும் மட்டுமே என்பதாகவே மணியின் குழந்தைப் பருவம் கழிந்தது.

ஐந்து வயதில் தொடங்கிய நடனப் பயிற்சி ஐந்தாண்டுகள் வரை தொடர்ந்தது. நாட்டியமாடும்போது தன் மகள் உலக மகா பேரழகியாகவும் ஒரு தேவதையைப் போன்று ஜொலிப்பதாகவும் அந்தத் தந்தை நம்பினார். அதனாலேயே தன் மகள்களுக்கு நாட்டியம் கற்பிக்க வேண்டும் என்பதிலும் தீவிரம் காட்டினார்.

நாட்டியத்தில் ஓரளவு நல்ல பயிற்சி பெற்றுத் தேறிய பின், விசேஷங்கள் நடைபெறும் வசதியானவர்களின் வீடுகள், திருமணங்களில் மணியின் நடனமும் தவறாமல் இடம் பெற ஆரம்பித்தது. எந்தத் தயக்கமும் இன்றி தந்தையாரே இந்த நடன வாய்ப்புகளையும் கேட்டுப் பெற்றார். அதனால், சிறு வயதிலேயே நல்ல நடனக் கலைஞராக அனைவராலும் கொண்டாடப்பட்டார் மணி. ’நாட்டியத்தின் மீது தன் தந்தைக்கு இருந்த விருப்பமே தன்னை ஒரு நடனமணியாக உலகின் முன் நிறுத்தியது’ என்றும் கீதாஞ்சலி தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

தந்தையின் தொழிலில் சற்றே தளர்வும் நலிவும் ஏற்பட்டது. அப்போதுதான் மகளைத் திரைப்படங்களில் நடனமாட வைக்கலாம் என்ற எண்ணம் அவருடைய தந்தைக்குத் தோன்றியது., அதுவரை திரைத்துறைக்கும் மணியின் குடும்பத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இருந்ததில்லை. சினிமா ஆசையின் பொருட்டு காக்கிநாடாவிலிருந்து குடும்பம் சென்னைக்குக் குடியேறியது.

தந்தையார் நாட்டியத்துக்கும் சினிமாவுக்கும் முன்னுரிமை

அளித்ததால் படிப்பு எட்டாம் வகுப்புடன் பாதியில் நின்று போனது. சென்னைக்கு வந்த பிறகும் நடனப் பயிற்சி விடாமல் தொடர்ந்தது. புகழ் பெற்ற வழுவூர் ராமையாப் பிள்ளையின் நாட்டிய வாரிசு கே.ஜே.சரசாவிடம் பயிற்சிகள் தொடர்ந்தன. முன்னாள் நடிகையும் முதல்வருமான ஜெயலலிதாவும் அப்போது அங்கு நடனம் பயின்று கொண்டிருந்ததால் மணியும் ஜெயலலிதாவும் அப்போது நல்ல தோழிகளும் ஆனார்கள்.

ஆந்திர தேசம் கொண்டாடிய சீத்தம்மா

சென்னையில் சில சினிமா வாய்ப்புகளை அதிலும் நடனமாடும் வாய்ப்பை தந்தையாரே கேட்டுப் பெற்றார். 1959ல் என்.டி.ராமாராவ், அஞ்சலி தேவி நடிப்பில் தயாராகிக் கொண்டிருந்த ‘ராணி ரத்ன பிரபா’ தெலுங்குப் படத்தில் பரத நாட்டியம் ஆடும் வாய்ப்பு மணிக்கு கிடைத்தது. இப்படம் 1960ல் வெளியானது. அந்த நடனக் காட்சியைப் பார்த்து வியந்த என்.டி.ஆர். 1961ல் 14 வயதில் கதாநாயகியாக ‘சீதாராம கல்யாணம்’ படத்தில் சீதையாக நடிக்கும் வாய்ப்பை அளித்தார்.

இது என்.டி.ராமாராவின் சொந்தப் படமும் கூட. அவரே படத்தின் இயக்குநரும் ஆவார். இது அவரது இயக்கத்தில் வெளியான முதல் படம். மணியின் குழந்தைமை மாறாத முகமும் தோற்றமும் பிடித்துப் போனதால் அந்த வாய்ப்பை அளித்தார் என்.டி.ஆர்.. இரண்டாண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் நடிகையானார் மணி. அவருக்கு நடிப்பதற்குக் கற்றுக் கொடுத்த குருவும் என்.டி.ஆர்.தான். இது தவிர எந்த மொழிப் படமானாலும் சொந்தக் குரலில் பேச வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், வசனங்களைப் படிக்கவும் பேசவும் ஒவ்வொரு மொழிக்கும் தனித் தனி ஆசிரியர்களையும் நியமித்தார்.

இதன் பலனாகப் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளிலும் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டார் மணி. அனைத்து மொழிப் படங்களிலும் தானே டப்பிங் பேசினார். எல்லாவற்றுக்கும் மேலாகத் தன் வீட்டிலேயே மணியைத் தங்க வைத்து இவ்வளவையும் செய்தார் என்.டி.,ஆர். ஒரு தந்தைக்கும் மகளுக்குமான அற்புதமானதொரு உறவு அவர்களிடையே நிலவியது என்றால் மிகையில்லை. என்.டி.ஆர். பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் ‘பெத்த நாய்னா’ (பெரியப்பார்) என்றே மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் குறிப்பிட்டுள்ளார் கீதாஞ்சலி.

இந்தப் படத்துக்காக மணிக்குக் கிடைத்த ஊதியம் 1000 ரூபாய். இப்படத்தில் சீதை, மகாலட்சுமி, வேதவல்லி, மாதளாங்கி என நான்கு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படம் வெளியாகி ஆந்திரத்தில் சக்கைப்போடு போட்டது. ஆனால், ராமன் என்.டி.ஆர். அல்ல, ஹரநாத். என்.டி.ஆர். ஏற்றது ராவணன் வேடம்.

படம் வெளியான காலகட்டத்தில் ஆந்திரமே ‘சீத்தம்மா’வாக மணியைக் கொண்டாடியது. தமிழகத்தில் திருமண வீடுகளில் ‘வாராய் என் தோழி வாராயோ, மணமகளே மருமகளே’ பாடல்கள் இன்றும் ஒலிப்பதைப்போல், ஆந்திராவில் இப்போதும் திருமண வீடுகளில் இப்படத்தில் இடம் பெற்ற ‘சீதாராமுல கல்யாணம் சூத்தமு ராவண்டி’ பாடல் தவறாமல் பாடப்படுகிறது. இப்படத்தில் அவருடைய மூத்த சகோதரியும் சூர்ப்பனகையாக அறிமுகமானார். திரையுலகில் ‘ஆந்திரா சகோதரிகள்’ என்றே இருவரும் அழைக்கப்பட்டார்கள். இந்தப் படத்துக்குப் பின் அவர் தொடர்ந்து நடிக்க விரும்பாமல் திருமணம் செய்து கொண்டு விலகி விட்டார்.

தமிழில் பெருமை மிகு அறிமுகம்

1962ல் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் அடுத்தடுத்து இரு படங்கள் வெளியாயின. மார்ச் மாதம் ‘சாரதா’ வெளியாகி பிரமாதமாக ஓடியது. அந்தப் படத்தில் ’குமாரி. மணி (ஆந்திரா சகோதரிகள்)’ என்ற பெயரில் தமிழில் அறிமுகமானார். நடிப்பதற்குப் பெரிதாக வாய்ப்புகள் ஏதும் இல்லா
விட்டாலும், ‘தட்டுத் தடுமாறி நெஞ்சம்’ பாடல் காட்சியில் மட்டும் தோன்றினார்.

அடுத்து ஒன்பது மாத இடைவெளியில் டிசம்பரில் ‘தெய்வத்தின் தெய்வம்’ படம் வெளியானது. இப்படத்தின் டைட்டிலில் ‘சித்ரா புரொடக்‌ஷன்ஸ் திரை வானுக்கு அளிக்கும் புதிய தாரகை குமாரி மணிமாலா’ என்று தனி கார்டு போடப்பட்டது. மதிப்பு மிக்க அறிமுகமாக அவர் கொண்டாடப்பட்டார். இந்த இரு படங்களின் கதையமைப்புமே சற்றே கனமான விஷயங்களைப் பேசியவை. ‘சாரதா’ திருமணமாகி, விவாகரத்து பெற்ற ஒரு பெண்ணின் மறுமணம் பற்றி பேசியது.

விவாகரத்து என்பது சமூகத்தால் ஏற்கப்படாத ஒன்றாக இருந்த காலகட்டம் அது. அதிலும் ஆண்மையிழந்த கணவன், இயல்பான பாலுறவு மறுக்கப்பட்ட மனைவி என்பவை எல்லாம் அப்போது பேசப்படக் கூடாத விஷயங்களாக இருந்தவை. யாரும் இதுவரை திரையில் பேசாத அந்த கனத்த விஷயத்தை அப்படம் பேசியது. விமர்சனங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு படம் நன்றாகவே ஓடி வசூலித்தது.

ஆனந்த விகடனில் பிலஹரி என்பவர் எழுதிய ‘ஜடம்’ சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் ‘தெய்வத்தின் தெய்வம்’ இது கைம்பெண் மறுமணம் பற்றி பேசியது. திருமணமான அன்றே தேன் நிலவுக்குச் செல்லும் புதுமணத் தம்பதிகள் கார் விபத்தில் சிக்க மணமகன் உயிரிழக்கிறான், துணையை இழந்த அந்த மணப்பெண் யாரும் வலியுறுத்தாமல் சமூக நியதி இதுவென தானே வெள்ளைப் புடவையைக் கட்டிக்கொண்டு வலிந்து கைம்பெண் கோலம் ஏற்கிறாள். படம் நெடுக வெள்ளைப் புடவையுடன் துயரம் தோய்ந்த முகத்துடன் வலம் வருகிறாள்.

அந்த கனமான வேடத்தை ஏற்று நடித்தவர் மணிமாலா (கீதாஞ்சலி). தன் அண்ணன் இறந்து போனாலும் அண்ணிக்கு மறுமணம் செய்து வைக்க வேண்டுமென்று அதற்கான தீவிர முயற்சிகளில் இறங்குபவர் கதாநாயகி விஜயகுமாரி, அவருக்குப் பக்கத்துணை தந்தையாக நடித்த எஸ்.வி. ரங்காராவ் இருவரும்தான். இரு பெண்களின் பாத்திரப் படைப்பும் நடிப்பும் மிகுந்த அழுத்தமாகப் படைக்கப்பட்டவை.

1930களிலேயே பெரியார் இவ்வகைத் திருமணங்களை சமூகத்தின் பெரும் எதிர்ப்பு பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் மிகுந்த துணிச்சலுடன் நடத்தி வைத்தவர். 1962லும் கைம்பெண் மறுமணத்தை மிக ரகசியமாக முன்னெடுக்க வேண்டிய ஒன்றாகவே படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. சம்பந்தப்பட்ட பெண் அவளின் தாய், சகோதரன் என யாருக்குமே மறுமணத்தில் விருப்பம் இல்லை. கதாநாயகியும் அவளின் தந்தையும் முன் நின்று ஏற்பாடுகளைச் செய்கிறார்கள் என்னும்போது எந்த அளவு சமூகத்தில் கைம்பெண்கள் மீதான அக்கறையும் மறுமணத்தின் மீது வெறுப்பும் நம்பிக்கையின்மையும் நிலவக்கூடிய சூழல் இருந்தது என்பதையும் யூகிக்க முடிகிறது.

‘கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் கண்டு வர வேணுமடி தங்கமே தங்கம்’ பாடலுக்கு மணிமாலா அற்புதமாகப் பதம் பிடித்து நடனமாடியிருப்பார். தான் விரும்பிக் கற்ற பரதத்துக்கு நியாயமும் செய்திருப்பார். பெருமைமிகு அறிமுகமாக தமிழுக்கு வந்தவருக்கு இந்தப் படத்துக்குப் பின் தமிழில் ஒரு அழுத்தமான வேடமோ, முதன்மைக் கதாநாயகி வாய்ப்போ ஏன் கிடைக்காமல் போனது என்பது மட்டும் புரியாத புதிர்.

கீதாஞ்சலி பெயர் மாற்றத்துக்கு உதவிய ‘பாரஸ்மணி’

அதே காலகட்டத்தில் மற்றொரு மணிமாலாவும் தமிழ்த் திரைக்கு (போலீஸ்காரன் மகள், பெரிய இடத்துப் பெண் படங்களில் நடித்தவர்) அறிமுகமாகியிருந்ததால் இருவரில் யார் எந்தப் படத்தில் நடிக்கிறார்கள் என்பது பெரும் குழப்பத்தைத் திரைத்துறையில் ஏற்படுத்தியது இப்போது வரை இந்த மணிமாலா பெயர்க் குழப்பம் நீடிக்கிறது. (சந்தேகம் இருப்பவர்கள் விக்கிபீடியாவைப் பார்க்கவும்).

1963ல் இந்தியில் வெளியான ‘பாரஸ்மணி’ படத்தில் முதன்மைக் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மந்திர, தந்திர மாயாஜாலப் படமான அதில் இடம் பெற்ற பாரஸ்மணி என்பது ரத்தினங்களில் ஒன்றான ஒரு அபூர்வ மந்திரக்கல் என்பது கதை. படத்தின் நாயகி பெயரும் மணி என்பதால், அதற்கு மாற்றாக ரவீந்திரநாத் தாகூரின் படைப்பான கீதாஞ்சலியையே புதிய பெயராக கதாநாயகி மணிக்கு படத்தின் இயக்குநர் பாபுபாய் மிஸ்திரி சூட்டினார்.

தமிழிலும் மணிமாலா பெயர்க்குழப்பம் இருந்ததால், இந்தியில் மட்டுமல்லாமல் நிரந்தரமாக அனைத்து மொழிகளிலும் கீதாஞ்சலியாகவே இறுதிவரை நிலை பெற்று விட்டார். ‘பாரஸ்மணி’ அடுத்த ஆண்டே தமிழில் ‘மாய மணி’ என்று மொழி மாற்றப் படமாக வெளியானது. அதன் பின் 17 இந்திப் படங்களில் கீதாஞ்சலி நடித்துள்ளார்.

எம்.ஜி.ஆரின் ஜோடியாக மாற முடியாத நிலை

எம்.ஜி.ஆர். படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு இணையாக கீதாஞ்சலி நடிக்கவில்லை. 1969ல் அப்படி ஒரு வாய்ப்பு கீதாஞ்சலிக்குக் கிடைத்தது. 1934ம் ஆண்டில் இந்தியில் வெளியான ‘டாக்கு மன்சூர் (கொள்ளைக்காரன் மன்சூர்) படத்தை 35 ஆண்டுகள் கழித்து எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பேனரில் ‘இணைந்த கைகள்’ என்ற பெயரில் சொந்தத் தயாரிப்பாக வெளியிட விரும்பினார் எம்.ஜி.ஆர். ‘நாடோடி மன்னன்’ படம் போல் இப்படத்தையும் பிரமாண்டமாக உருவாக்க நினைத்து, எம்.ஜி.ஆர் – கீதாஞ்சலி இருவரும் இணைந்து நடிக்க சில காட்சிகளும் படமாக்கப்பட்டன.

ஆனால், படம் அந்த ஒரு சில காட்சிகளுடன் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கீதாஞ்சலிக்கு எம்.ஜி.ஆரின் நாயகியாகும் வாய்ப்பும் பறி போனது. அந்த வாய்ப்பு பின்னர் அவருக்குக் கிடைக்காமலே போனது. அப்போது ஜெயல்லிதா ஆஸ்தான நாயகியாக இருந்ததால், எம்.ஜி.ஆரும் கீதாஞ்சலியை கதாநாயகியாக்க முயற்சி எடுக்கவில்லை. ‘ஆசை முகம்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி போல் தோன்றினாலும், வில்லன் ராமதாஸ் எம்.ஜி.ஆரைப் போல் முகத் தோற்றத்தை மாற்றிக் கொண்டிருப்பதாகக் கதையின் போக்கு நகரும். கதைப்படி வில்லனுக்குதான் கீதாஞ்சலி ஜோடி.

தமிழ்ப் படங்களில் கீதாஞ்சலியின் பங்களிப்பு

பணம் படைத்தவன், வாழ்க்கைப்படகு படங்களில் நாகேஷுக்கு ஜோடியாக நகைச்சுவைப் பாத்திரங்கள், தாயின் மடியில், நெஞ்சிருக்கும் வரை, அன்பளிப்பு படங்களில் வேம்ப் காரெக்டர், அன்னமிட்ட கை படத்திலோ குறைந்த நேரமே வரும் பர்மியப் பெண் வேடம், அதே கண்கள் படத்தில் ஊருக்குத் தெரியாமல் ரகசிய வாழ்க்கை நடத்தும் ஜமீன்தார் அசோகனின் ரகசியக் காதலி.

என் அண்ணன் படத்தில் சோவுடன் நகைச்சுவை நடிகை. கங்கா கௌரியில் மகாலட்சுமியாக புராண அவதாரம். கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்று பிடிவாதம் கொள்ளாமல் இப்படி கிடைத்த வாய்ப்புகளை, வேடங்களை எல்லாம் கீதாஞ்சலி பயன்படுத்திக் கொண்டார். அதனாலேயே தமிழில் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படியான வேடங்கள் அவருக்கு அமையவில்லை. தனக்குப் பின் வரிசையாக இருந்த மூன்று தங்கைகளுக்குத் திருமணம் செய்துவைத்துக் கரையேற்ற வேண்டிய பெரும் பொறுப்பும் அவருக்கு இருந்ததும் கூட இதற்கு முக்கியமானதொரு காரணம்.

தமிழில் கீதாஞ்சலிக்கு அற்புதமான பாடல்கள் வாய்த்தன என்றே சொல்ல வேண்டும். ‘பழனி சந்தன வாடையடிக்குது பூசியது யாரோ’ (வாழ்க்கைப் படகு), ‘கண்ணன் வரும் நேரமிது’, ‘நினைத்தால் போதும் பாடுவேன்’ (நெஞ்சிருக்கும் வரை), ‘அன்னமே சொர்ணமே, ’கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்’ (தெய்வத்தின் தெய்வம்) என அனைத்துமே மிகப் பிரபலமான பாடல்கள்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளிலுமாக 500 படங்களுக்கு மேல் நடித்தவர். தாய்மொழி தெலுங்கில் பல்வேறுபட்ட வேடங்களில் அதிகமான படங்களில் நடித்துள்ளார். அதேபோல், இவர் நடித்த பல தெலுங்குப் படங்கள் தமிழில் மொழி மாற்றப்படங்களாகவும் வெளியாகியிருக்கின்றன. தமிழிலிருந்து தெலுங்கில் மீண்டும் தயாரிக்கப்பட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.

திருமண பந்தம் முடித்து வைத்த திரை வாழ்க்கை அப்போதைய தெலுங்குத் திரைப்பட நாயகர்களில் ஒருவரான ராமகிருஷ்ணா, கீதாஞ்சலியை விரும்பிப் பெண் கேட்டுத் திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் செய்து வைத்த இந்த ஏற்பாட்டுத் திருமணமும் சென்னை மயிலாப்பூரில்தான் நிகழ்ந்தது. ராமகிருஷ்ணா – கீதாஞ்சலி ஜோடி இணைந்து 40 தெலுங்குப் படங்களில் நடித்திருக்கிறார்கள். திருமணத்திற்குப் பின் ராமகிருஷ்ணா கேட்டுக் கொண்டதற்கிணங்கி திரைப்படங்களில் நடிப்பதையும் கீதாஞ்சலி நிறுத்திக் கொண்டு விட்டார்.

ராமகிருஷ்ணா சில தமிழ்ப்படங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் ஜென்ட்டில் மேன் பெங்காலி மானேஜர். (சுஜாதாவை திருமணம் செய்து கொள்ள விரும்பி பெண் கேட்டு வருவார். திருமணமும் முடிவாகி, இறுதியில் அது வேறு விதமாக மாறிப் போகும்.)

16 ஆண்டு காலம் 24 மணி நேரத்தில், 20 மணி நேரம் படப்பிடிப்புத் தளங்களில், ஒரு நாளைக்கு மூன்று படங்களின் படப்பிடிப்பு என மொழி பேதமில்லாமல் மாறி மாறி கால்ஷீட் கொடுத்து இடைவெளியில்லாமல் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த ஒரு நடிகைக்கு வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதும் சமையற்கட்டில் சமையல் செய்து கொண்டிருப்பதும் மட்டுமே வாழ்க்கையானால் அது எவ்வளவு துயரம் என்பதையும் கீதாஞ்சலி பதிவு செய்திருக்கிறார். ஒரு குழந்தை பிறக்கும் வரை அந்த வெறுமையான மனநிலை அவரைச் சூழ்ந்து கொண்டிருந்திருக்கிறது.

கீதாஞ்சலி – ராமகிருஷ்ணா தம்பதிகளுக்கு ஆதித் நிவாஸ் என்று ஒரு மகன். அவரும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். மீண்டும் 18 ஆண்டுகளுக்குப் பின் தெலுங்குப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் கீதாஞ்சலி. அதுவும் கூட ஒரு சில படங்களில் மட்டுமே. 2001ல் ராமகிருஷ்ணா புற்றுநோய் தாக்குதலுக்கு பலியானார்.

அவரது மறைவும் அதனால் ஏற்பட்ட தனிமை உணர்வும் கீதாஞ்சலிக்கு கடும் மன அழுத்தத்தை ஏற்படுத்தின. பதின்ம வயதில் தொழிலின் பொருட்டு சென்னைக்கு வந்து சென்னைவாசியாகவே ஆனவர், கணவரின் மறைவுக்குப் பின் 40 ஆண்டுகளுக்குப் பின் ஹைதராபாத் வாசியாக மாறினார். நண்பர்களின் அறிவுரையின் பேரில் மீண்டும் தெலுங்குப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். வயதுக்கு ஏற்றாற்போல் அம்மா, பாட்டி வேடங்களே கிடைத்தன. வயது முதிர்ந்த காலத்தில் அவரது தோற்றம் சில நேரங்களில் நடிகை அஞ்சலிதேவியை நினைவூட்டும் விதமாகவும் இருந்தது.

மற்றவர்களின் வற்புறுத்தலுக்காக விருப்பமின்றி நடிக்க ஆரம்பித்து விளையாட்டுப் போல் 16 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இறுதிக் காலங்களில் சில விளம்பரப் படங்களிலும் நடித்தார். தொடர்ந்து நடிக்க வேண்டுமென்று எண்ணியிருந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக அக்டோபர் 31 அன்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். 5 வயது முதல் ஓய்வின்றி ஆடிய பாதங்கள், 14 வயதில் தொடங்கிய நடிப்பு என திரைத்துறையோடு அவருக்கு இருந்த பந்தம் என அனைத்தும் 72 வயதில் அடங்கியதுடன் அமைதி அவரை முழுமையாக ஆட்கொண்டு விட்டது. கீதாஞ்சலிக்கு அஞ்சலியாக இக்கட்டுரையை எழுத நேர்ந்ததும் துயரமே.

(ரசிப்போம்!)

கீதாஞ்சலி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

சாரதா, தெய்வத்தின் தெய்வம், தாயின் மடியில், மாயமணி, பணம் படைத்தவன், வாழ்க்கைப்படகு, ஆசை முகம், அதே கண்கள், நெஞ்சிருக்கும் வரை, அன்பளிப்பு, என் அண்ணன், அன்னமிட்ட கை, கங்கா கௌரி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராஜபக்‌ஷ எனும் ‘கோலியாத்’தும் தமிழ்த் தேசியம் எனும் ‘டேவிட்’டும் !! (கட்டுரை)
Next post ஐயா இந்த முறுக்கு கூட கரண்டில தான் சாப்பிடுவீங்களா!! (வீடியோ)