யார் வெற்றி பெற்றார்கள் என்பது முக்கியமல்ல; என்ன செய்யப் போகிறார்கள் என்பதே முக்கியமானது !! (கட்டுரை)

Read Time:12 Minute, 45 Second

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை அறிந்து, ஆச்சரியமடைந்த எவராவது நாட்டில் இருந்தார்களா? இது, நாடே எதிர்பார்த்த தேர்தல் முடிவுதான்.

தமது கட்சி, இந்தத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெறும் என்று, பொதுஜன பெரமுனவினர் கூறி வந்தனர். அதில்தான் பலருக்குச் சந்தேகம் இருந்தது.

பொதுஜன பெரமுனவை ஆரம்பித்தவரும் அதன் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்‌ஷவே, கடந்த இ​ரண்டாம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போது, தமது கட்சிக்கு 130-135 ஆசனங்களே கிடைக்கும் என்று கூறியிருந்தார். ஆனால், அக்கட்சி 145 ஆசனங்களைப் பெற்றுள்ளது. இது வரலாற்றுச் சாதனையாகும். விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ், சாதாரண அறுதிப் பெரும்பான்மை பெறுவதே மிகவும் கஷ்டமான விடயமாகும்.
2010ஆம் ஆண்டு, போர் வெற்றியின் சூடு தனியாத நிலையிலும், மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 144 ஆசனங்களையே பெற்றது.
இப்போது, பொதுஜன பெரமுன தனது நட்புக் கட்சிகளுடன், நாடாளுமன்றத்தில் மொத்த ஆசனங்களில் மூன்றில் இரண்டுக்கு (150 ஆசனங்களுக்கு) மேல் ஆசனங்களைப் பெற்றுள்ளது; இதிலும் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. தேர்தலுக்கு முன்னர், சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில், பொதுஜன பெரமுனவுக்கு அந்தளவு பெரும் அலை அடித்தது.

1956ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை, ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுமே நாட்டில் பிரதான இரு கட்சிகளாக இருந்தன. இப்போது, அக்கட்சிகள் இரண்டும் பெயரளவிலான கட்சிகளாக மாறி, அவற்றில் இருந்து பிரிந்து சென்ற சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுமே பிரதான இரு கட்சிகளாக இருக்கின்றன.

“கட்சியை ஆரம்பித்து மூன்றரை ஆண்டுகளில், ஆட்சியைக் கைப்பற்றக் கூடிய நிலைக்கு வந்துள்ளோம்” என, பசில் ராஜபக்‌ஷ மேற்படி ஊடகவியலாளர் மாநாட்டின் போது கூறியிருந்தார்.
“குறுகிய காலத்தில், மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளோம்” என, பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், தேர்தலின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது கூறினார்.

அதேபோல், “ஒரு சில மாதங்களில், பாரிய சக்தியாக மாறியுள்ளோம்” என, தேர்தலின் பின்னர் சஜித் பிரேமதாஸ கூறினார்.

இவ்விரு சாராரும் கூறும் கருத்து, சரியானதல்ல. 2016ஆம் ஆண்டு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிளவுபட்டு, ஏறத்தாழ 90 சதவீதமான கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் மஹிந்த ராஜபக்‌ஷவின் பக்கம் சார்ந்து இருந்தனர்.

சட்டரீதியாக மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ ல.சு.க தலைவராக இருந்த போதிலும் நடைமுறையில் கட்சி மஹிந்தவிடமே இருந்தது. அதற்குப் பொதுஜன பெரமுன என்ற பெயரை, அவர்கள் சூட்டிக் கொண்டது மட்டுமே உண்மையில் நடைபெற்றது.

எனவே, பொதுஜன பெரமுன என்பது, பெயரளவிலேயே புதிய கட்சியாக இருக்கிறது. நடைமுறையில், அன்று ஸ்ரீ ல.சு.கவின் தலைவராக இருந்த மஹிந்த ராஜபக்‌ஷ, அன்று ஸ்ரீ ல.சு.கவின் உறுப்பினர்களாகவும் ஆதரவாளர்களாகவும் இருந்தவர்களுக்கு இப்போதும் தலைமை தாங்குகிறார். அதே உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அதே தலைவர்; கட்சிப் பெயரை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு இருக்க, அது எவ்வாறு புதிய கட்சியாக முடியும்?

அதேபோல், சஜித்தின் கருத்தும் பிழையானதாகும். ஐக்கிய தேசிய கட்சியில், தலைமை பற்றிய பிரச்சினை எழுந்தது. 95 சதவீதமான உறுப்பினர்கள் சஜித்தை ஆதரித்தனர். அவர்கள், இப்போது வேறு பெயரில் இயங்குகிறார்கள். அவ்வளவு தான். இதுவும் பெயரளவிலேயே புதிய கட்சியாக இருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க விட்டுக் கொடுத்து இருந்தால், இதே தலைவரோடு, இதே உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் ஐ.தே.கவாகவே இருப்பார்கள்.

இந்தத் தேர்தலில், பொதுஜன பெரமுன வரலாற்றுச் சாதனை படைத்தாலும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே சிறந்த வெற்றியாளனாக இருக்கிறார். முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிறந்த தோல்வியாளனாக இருக்கிறார்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், “நான் தோல்வியடைந்து இருந்தால், ஆறடி நிலத்துக்குள் இருந்திருப்பேன்” என, அத்தேர்தலில் வெற்றி பெற்றவுடன் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார். மஹிந்தவின் தலைமைக்கு எதிராகச் சவால் விட்டதற்காக, தாம் கொல்லப்பட்டு இருக்கலாம் என்பதே அதன் அர்த்தமாகும்.

2017ஆம் ஆண்டும், ராஜபக்‌ஷக்கள் மீதான அந்த அச்சம், அவரிடம் இருந்தது. “ராஜபக்‌ஷக்கள் மீண்டும் பதவிக்கு வந்தால், உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாது; ஆனால், எனது நிலைமை என்னவாகும்” என, அவர் அக்காலத்தில் அமைச்சரவைக் கூட்டத்தில் கேட்டதாக, ஊடகங்கள் தெரிவித்து இருந்தன.

அவ்வாறு இருக்கத்தான், 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், பொதுஜன பெரமுன அமோக வெற்றியீட்டியது. அதிலிருந்தே, ராஜபக்‌ஷக்கள் தொடர்பான தமது நிலைப்பாட்டை, மைத்திரி மாற்றிக் கொண்டார். அவர்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள வழிகளைத் தேடினார். அதன்படியே, 2018ஆம் ஆண்டு ரணிலைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கி, மஹிந்தவை அப்பதவிக்கு நியமித்து, மஹிந்தவின் நண்பனாக மாறிக் கொண்டார்.

இன்று, பொதுஜன பெரமுன உள்ளிட்ட தேர்தல் கூட்டணியின் தவிசாளராக மைத்திரி உள்ளார். அவரது, ஸ்ரீ ல.சு.கவுக்கு நாடாளுமன்றத்தில் 15 ஆசனங்கள் உள்ளன. பொதுஜன பெரமுனவின் மூன்றில் இரண்டு பலத்தில், குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய நிலையில் அவருள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர், ராஜபக்‌ஷக்கள் ஆட்சிக்கு வந்தால், உயிருக்கு ஆபத்து வரும் என்று இருந்தவர், இன்று ராஜபக்‌ஷக்களுக்கு இன்றியமையாதவராக மாறிவிட்டார். இவர் சிறந்த வெற்றியாளனா, இல்லையா?

அதேபோல், 95 சதவீதமான தமது கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் சஜித்திடம் போய்விட்டார்கள் என்பதை உணர, ரணிலால் முடியாமல் போய்விட்டது. அதை உணர்ந்து விட்டுக் கொடுத்திருந்தால் ரணில், சிலவேளை பல இலட்சம் விருப்பு வாக்குகளால் இம்முறையும் தெரிவு செய்யப்பட்டு இருப்பார். இன்று அவரே, தேசிய பட்டியலில் வருவோமா என்று, சிந்திக்கக் கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார். இவர் சிறந்த தோல்வியாளனா இல்லையா?

எப்போதும் போலவே, மக்கள் இம்முறையும் அறிவுபூர்வமாகச் சிந்தித்து வாக்களிக்கவில்லை. ஓர் உதாரணத்தின் மூலம், இதை நோக்கலாம்; பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் பிரேமலால் ஜயசேகர, கொலையாளி எனத் தேர்தலுக்கு ஆறு நாள்களுக்கு முன்னர், இரத்தினபுரி மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில், இரத்தினபுரி மாவட்ட மக்கள், அவருக்கு ஒரு இலட்சத்துக்கு மேல் விருப்பு வாக்குகளை அள்ளி வழங்கி இருக்கிறார்கள்.

நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டியவர் என, எதிர்க்கட்சிக்காரர்கள் கூடப் பகிரங்கமாகவே கூறும் மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளரும் ‘கோப்’ குழுவின் முன்னாள் தலைவருமான சுனில் ஹந்துன்னெத்தி தோல்வியடைந்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் தேர்தல் முடிவுகள் எடுத்துக் கூறும் விடயங்கள் பல இருக்கின்றன. இந்த விடயங்கள், தனியானதொரு கட்டுரையில் ஆராய வேண்டிய ஒன்றாகும்.

இனித்தான், அரசாங்கம் தமது சுயரூபத்தைக் காட்டப் போகிறது. அது, எவ்வாறு இருக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் நடந்து கொண்ட முறைகளைப் பார்த்து, வரப்போகும் காலத்தைப் பற்றி எதிர்வு கூற முடியாது. ஏனெனில், பொதுத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதால், அக்காலப் பகுதியில் அரசாங்கம், மிக அவதானமாக நடந்து கொண்டது.

ஆனால், இப்போது அவர்கள் ஒரு புறத்தில், யதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டும்; பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டும். மறுபுறத்தில், அவர்களது சொந்த விருப்பு வெறுப்புகள், சகாக்களின் நெருக்குதல்களுக்கு இடம்கொடுக்கவும் வேண்டும். எவர் எந்த மேடையில், எதைக் கூறினாலும் அவரவரைப் பொறுத்தவரை, அரசியல் என்பது இலகுவாகவும் பெருமளவிலும் பணம் சம்பாதிக்கும் வழிமுறையாகவே இருக்கிறது.

விலைவாசியைக் குறைக்க, வேலைவாய்ப்பின்மையைத் தீர்க்க, கல்வியை மேம்படுத்த, இனப்பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கத்திடம் என்ன திட்டம் இருக்கிறது என்பது தெளிவில்லை. தேர்தலின் போது, அவர்கள் அவ்வாறானதொன்றை முன்வைக்கவும் இல்லை. எல்லாவற்றையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிங்கப் பெண்ணே சிங்கப் பெண்ணே!! (மகளிர் பக்கம்)
Next post ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி சுட்டுக்கொலை !! (உலக செய்தி)