By 13 August 2020 0 Comments

“புங்குடுதீவு பெருக்குமரம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்கு கையளிப்பு.. (படங்கள் & வீடியோ)

“சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் புங்குடுதீவு புனர்நிர்மாண நடவடிக்கைகளில் “புங்குடுதீவு பெருக்குமரம்”, புங்குடுதீவு மயானங்களில் ஒன்றான “குறிகட்டுவான் முனியப்பபுலம் மயானம்” வேலைகள் யாவும் முழுமையாக நிறைவு பெற்று இன்றையதினம் மக்களின் பாவனைக்காக ஒப்படைக்கப்பட்டது.

யாழ்ப்பாண வரலாற்றுப் பெருமை வாய்ந்த மரபுரிமை சின்னமாகிய “புங்குடுதீவு பெருக்குமரம்” சுற்றாடல், மற்றும் அதனையொட்டிய கடற்கரைப் பிரதேசமும் அழகுபடுத்தப்பட்டு (அதன் வேலைகள் முழுமையாக நிறைவுறாத நிலையிலும்) மக்கள் பாவனைக்கு வழங்கப்படும் நிகழ்வு 20.03.2020 அன்று நடைபெற்று இருந்த போதிலும், அதன் பின்னர் நாட்டில் இடம்பெற்ற அசாதாரண (கொரோனா) சூழ்நிலை மற்றும் அதன் காரணமாக நடைமுறைப் படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக தடைப்பட்டு இருந்த, புனரமைப்பு வேலைகள் கடந்த மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு இன்றையதினம் மக்களின் பாவனைக்காக ஒப்படைக்கப்பட்டது.

நீண்டகாலமாக அடர்ந்த பற்றைக்காடாக இருந்து, சுமார் ஏழு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்த “புங்குடுதீவு பெருக்குமர புனரமைப்பு” வேலைகள், அதாவது “வெளிநாட்டு உல்லாசப் பயணிகளையும், இலங்கையின் அனைத்து பாகங்களிலும் உள்ள மக்களையும் சுற்றுலாப் பயணிகளாக புங்குடுதீவுக்கு ஈர்க்கும் வகையில்” “பெருக்குமரத்தை சுற்றி கட்டுக்கட்டி புல்கள் பதிக்கப்பட்டதுடன், நடைபாதைகள், கல்லிலான இருக்கைகள், ஆண்,பெண்களுக்கென மலசல கூடங்கள், கிணறு, தண்ணீர் தொட்டி, ஆகியவற்றுடன் சிறுவர்களுக்கான விளையாட்டுத் திடல்”

மற்றும் “பெருக்குமர கிணற்றுக்கு முழுமையாக பூசப்பட்டு மற்றும் கிணற்றுக்கு உரிய கப்பி, வாளி போடப்படுவதுடன், கிணற்றை மூடி இரும்பு வளையம் போடுதல், பெருக்குமரத்தை சுற்றி, எட்டு கம்புகள் (பனைக் குற்றிகள்) வைத்து, மேலும் கீழுமாக மரப்பலகையிலான பாதுகாப்புக்கு சுற்றி போடுதல் (யாரும் மரத்தை சுற்றி உள்ள புல்தரையை மிதிக்காதவாறு), பெருக்குமர கடற்கரை மதிலுக்கு கேற், மதிலின் இரண்டு முடிவிலும் இடைவெளிகள் விடாமல் மூடுதல்,

பெருக்குமர பக்கத்து வேலி, பழமையான முறையில் பனை ஓலையால் உயரம் இல்லாமல் அடைத்தல், பெருக்குமர நடைபாதையில் இருந்து, விளையாடும் இடங்களுக்கு (நான்கு இடங்களுக்கும்) புல்தரைப் பாதை, நான்கு விளையாடும் இடங்களை சுற்றியும் மணல்கள் போடுதல், பெருக்குமர மலசல கூடத்தின் பாதுகாப்பு, பெருக்குமரத்தை சுற்றி போடப்பட்ட இருக்கைகளுக்கு பனை ஓலையில் (பழமை முறையில்) குடை அமைத்தல், பெருக்குமர முன்வாசலுக்கு மரத்தினால் கேட் (படலை) போடுதல் போன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு முடிவுக்கு வந்து இன்றையதினம் மக்களின் பாவனைக்காக ஒப்படைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருமான திரு.இ.இளங்கோவன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ள, புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவரும் சமாதான நீதவானுமான திரு.எஸ்.கே சண்முகலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார்.

இதில் சிறப்பு மற்றும் கௌரவ விருந்தினர்களாக திரு.பாலசுப்ரமணியம் கபிலன் (தொல்பொருள் திணைக்களம் யாழ்.கோட்டை புனர்நிர்மாணப் பொறுப்பாளர்), திரு.மதியழகன் (தொல்பொருள் திணைக்களம் தீவகம் அலுவலகப் பொறுப்பாளர்), யாழ் பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் திரு.கார்த்திகேசு குகபாலன், திரு.குமாரசாமி சந்திரா (ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்), திரு.க.வசந்தகுமார் (வேலணை பிரதேச சபை உறுப்பினர்), திரு.ரூபன் சர்மா (புங். ஊரதீவு பானாவிடை சிவன் ஆலய சிவாச்சாரியார்), திரு.பிள்ளைநாயகம் சதீஷ் (சமூக ஆர்வலர்), திருமதி.த. சுலோசனாம்பிகை (புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியப் பொருளாளர் மற்றும் தாயகம் சமூக சேவை அமைப்பின் தலைவி), செல்வி.செ.எ.செல்வவதனா (புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றிய செயலாளர்), திரு.திருமதி. அமிர்தலிங்கம் சச்சிதானந்ததேவி (புங். கல்லடி அம்மன் தேவஸ்தான தர்மகர்த்தா), பிரான்சில் இருந்து தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு இருந்த புங்குடுதீவு சின்னத்துரை ஆசிரியரின் மகனான திரு.சி.விக்கினேஸ்வரன் (சுவிஸ் ஒன்றிய பொருளாளரின் சகோதரர்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மேற்படி புங்குடுதீவுப் பெருக்குமர சுற்றாடல் மற்றும் அதனையொட்டிய கடற்கரைப் பிரதேச சுற்றாடலின் புனரமைப்புக்கு முழுமையான நிதி உதவியளித்த வகையில் “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய” அனைத்து உறுப்பினர்களுக்கும், மேற்படி நடவடிக்கையை மேற்கொள்ள பலவழிகளிலும் தோள்கொடுத்த சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்கள் உட்பட உலகெங்கும் உள்ள புங்குடுதீவு மக்களுக்கும், தமது மேற்படிக் காணியை தந்துதவிய கனடா வாழ் திரு.விஸ்வலிங்கம் கிருஷ்ணன் குடும்பத்தினருக்கும், மேற்படி நடவடிக்கையை முழுமையாக மேற்கொண்ட கட்டிடக் கலைஞர் திரு.வனோஜன் குழுவினருக்கும், முழுமையான ஆலோசனைகள் வழங்கி மேற்பார்வை இட்ட திரு.இ.இளங்கோவன், திரு.எஸ்.கே.சண்முகலிங்கம், மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும், இரவுபகல் பாராது தினந்தோறும் அனைவருடனும் உரையாடி அனைத்தையும் மேற்பார்வை இட்டு வழிநடத்தி செயல்படுத்திய “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத் தலைவர்” திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் உட்பட அனைவருக்கும் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்”நிர்வாகசபை சார்பில் எமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி.

இதேவேளை நாட்டின் அசாதாரண சூழ்நிலைக்கு (கொரோனாத் தாக்குதல்) பின்னர் மீண்டும் “பெருக்குமர சுற்றாடலை” பார்வையிட தென்னிலங்கையில் இருந்து பெருமளவு மக்கள் வரத் தொடங்கியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேற்படி நடவடிக்கைகளைத் தொடர்ந்து மணற்காடு (கண்ணகைபுரம்) மயானம், வல்லன் நாவுண்டான்மலை மயானம், ஊரதீவு கேரதீவு மயானம் ஆகியவற்றின் புனரமைப்பு வேலைகளும் நடைபெற உள்ளது. எமது “ஊர் நோக்கிய” புனரமைப்பு வேலைகளை தொடர்ந்து மேற்கொள்ள, சுவிஸ் வாழ் அனைத்து புங்குடுதீவு மக்களையும் அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம். (இதுவரை 2019, 2020 வருட சந்தா செலுத்தாதோர், உடன் அதனை செலுத்தி இணைந்து செயல்படுமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி)

“மண்ணின் சேவையே, மகத்தான சேவை”

இவ்வண்ணம்…
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.
12.08.2020


Post a Comment

Protected by WP Anti Spam