ஆஸ்துமா வருது…அலர்ட் ப்ளீஸ்! (மருத்துவம்)

Read Time:14 Minute, 22 Second

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணியை அச்சுறுத்தும் நோய்களில் முக்கியமானது ஆஸ்துமா. இந்தத் தொல்லை கர்ப்பிணிக்கு எந்நேரம் வரும், எப்போது விலகும், எவ்வளவு நேரம் நீடிக்கும் என்று சரியாக சொல்ல முடியாது. பெண்ணுக்குப் பெண் இது வேறுபடும்.ஆஸ்துமாவை ஒரு நோய் என்று சொல்வதைவிட ‘நுரையீரலில் ஏற்படுகிற தற்காலிக சீர்குலைவு’ என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். மூச்சுக்குழல் சுருங்கி, சளி அடைத்து, இளைப்பு வருவது மூச்சுக்குழாய் ஆஸ்துமாவின்(Bronchial asthma) அடிப்படை செயல்பாடு. ஒவ்வாமையும் பரம்பரைத் தன்மையும்தான் இதற்கு முக்கியக் காரணங்கள். குறிப்பாக உணவு, உடை, தூசு, புகை, புகைப்பிடித்தல், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவை ஒவ்வாமையைத் தூண்டும்போது ஆஸ்துமா வருகிறது.

அப்பா, அம்மா இருவருக்கும் ஆஸ்துமா இருந்தால், வாரிசுகளுக்கு ஆஸ்துமா வருவதற்கு 70 சதவீதம் வாய்ப்புள்ளது. பெற்றோரில் ஒருவருக்கு மட்டும் ஆஸ்துமா இருந்தால், 50 சதவீதம் வாய்ப்பு உள்ளது. குளிரான சீதோஷ்ண நிலை, கடுமையான வெப்பம் இந்த இரண்டுமே ஆஸ்துமாவை வரவேற்பவை.நுரையீரலில் நோய்த்தொற்று இருந்தால் அது ஆஸ்துமாவைத் தூண்டும்.அடிக்கடி சளிபிடித்தால் ஆஸ்துமா நிரந்தரமாகிவிடும். அடுக்குத் தும்மல்கள், மூக்கொழுகல், மூக்கடைப்பு, வறட்டு இருமல் போன்றவற்றுக்கு முறையாக சிகிச்சை எடுக்காத பட்சத்தில் இவை ஆஸ்துமாவுக்கு வழி அமைத்துவிடும்.இவை தவிர, மனம் சார்ந்த பிரச்னைகளால்கூட ஆஸ்துமா வரலாம். கவலை, பதற்றம், மன அழுத்தம், கோபம், பயம், அதிர்ச்சி, பரபரப்பு, மனகுழப்பம், அதிகமாக உணர்ச்சி வசப்படுதல் போன்றவற்றை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம். சில மருந்துகளால்கூட ஆஸ்துமா வருவதுண்டு.

ஆஸ்துமா எப்படி ஏற்படுகிறது?
இதுவரை சொன்ன காரணங்களில் ஒன்றோ பலவோ சேர்ந்து நுரையீரலில் உள்ள மூச்சுக்குழல்(Bronchus) தசைகளைத் தாக்கும்போது அவை சுருங்கிவிடுகின்றன. அப்போது மூச்சு சிறுகுழல்கள்(Bronchioles) இன்னும் அதிகமாகச் சுருங்குகின்றன. அதேவேளையில் மூச்சுக் குழலில் உள்சவ்வு வீங்கிவிடுகிறது. இந்தக் காரணங்களால் மூச்சு செல்லும் பாதை சுருங்கி விடுகிறது.இந்த நேரத்தில் மூச்சுக் குழல்களில் வீங்கிய சவ்விலிருந்து நீர் சுரக்கிறது. இது ஏற்கனவே சுருங்கிப்போன மூச்சுப் பாதையை இன்னும் அதிகமாக அடைத்துவிடுகிறது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகிறது. ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இளைப்பு, இருமல், மூச்சுத்திணறல் போன்ற தொல்லைகள் ஏற்படுவது இதனால்தான். அடுத்து, மிகக் குறுகிய மூச்சுக்குழல்கள் வழியாக மூச்சை வெளிவிடும்போது விசில் போன்ற சத்தமும் கேட்கிறது. இதையே வீசிங் என்கிறோம்.

அறிகுறிகள்

மாசுபட்ட இடத்துக்குச் செல்கிறீர்கள். சற்று நேரத்தில் உங்களுக்கு வறட்டு இருமல் ஆரம்பிக்கிறது. அதைத் தொடர்ந்து இளைப்பு ஏற்படுகிறது. மூச்சுவிட சிரமப்படுகிறீர்கள். நுரையீரலில் இருந்து ‘விசில்’ சத்தம் கேட்கிறது. நெஞ்சில் பாரம் ஏற்றி வைத்த மாதிரி உணர்கிறீர்கள்,,, இந்த அறிகுறிகளில் ஒன்றிரண்டு தெரிகிறது என்றால் உங்களுக்கு ஆஸ்துமா உள்ளது என்று அர்த்தம்.

பரிசோதனைகள்

வழக்கமான ரத்தப் பரிசோதனைகள், ஒவ்வாமைப் பரிசோதனை ஆகியவற்றுடன், ‘ஸ்பைரோமெட்ரி’(Spirometry) எனும் பரிசோதனை மூலம் மூச்சுக்
குழலின் சுருக்க அளவையும் நம்மால் எவ்வளவு காற்றை எவ்வளவு வேகமாக சுவாசிக்க முடிகிறது என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். இந்தப் பரிசோதனை முடிவுகளைப் பொறுத்து சிகிச்சை முறைகளை அமைத்துக் கொள்வது நடைமுறை. கர்ப்பிணிகள் எக்காரணத்தைக் கொண்டும் மார்பு எக்ஸ்-ரே, சிடி ஸ்கேன் ஆகிய பரிசோதனைகளை முதல் டிரைமெஸ்டரில் செய்துகொள்ளக் கூடாது.

கர்ப்ப காலத்தில் என்ன செய்யும்?
பெண்கள் தங்களுக்கு ஆஸ்துமா இருப்பதை வெளியில் சொல்ல வெட்கப்படுவார்கள். மருத்துவரிடமும் இதை மறைத்து விடுவார்கள். பலரும் செய்கிற தவறு இது. ஏற்கனவே ஆஸ்துமா உள்ள பெண்கள் கர்ப்பத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே மகப்பேறு மருத்துவரிடம் தாங்கள் எடுத்துவரும் சிகிச்சை குறித்து சொல்லிவிட வேண்டும்.அப்போதுதான் அந்த மாத்திரைகள் கர்ப்பத்தைப் பாதிக்காதவாறு மருத்துவர் கவனித்துக் கொள்ள முடியும். அல்லது பாதுகாப்பான மாத்திரைகளைத் தரமுடியும். மாத்திரைகளை நிறுத்துவதாக இருந்தால், மருத்துவரிடம் யோசனை கேட்டுக்கொள்ள வேண்டும்; கர்ப்பிணிகள் சுயமாக நிறுத்திவிடக் கூடாது.

பொதுவாக, ஆஸ்துமா உள்ள பெண்களில் மூன்றில் ஒரு பங்கு பேருக்கு கர்ப்ப காலத்தில் ஆஸ்துமா தீவிரமடைகிறது. அதிலும் குறிப்பாக, கடைசி டிரைமெஸ்டரில் ஆஸ்துமாவின் பாதிப்பு அதிகரிப்பது வழக்கம். இதற்குக் காரணம், அதிகமாக விரிவடையும் கர்ப்பப்பை நுரையீரலை அழுத்துவதால் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.கர்ப்பத்தைப் பாதிக்குமா?
குறைந்த அளவில் ஆஸ்துமா பாதிப்புள்ள கர்ப்பிணிகளுக்குக் கர்ப்பத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அடிக்கடி தீவிரமாக ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்களுக்கு மட்டும் ரத்த அழுத்தம் அதிகரித்து, ‘பிரசவ முன்வலிப்பு’ (Pre-eclampsia) வரலாம். சிலருக்கு குறித்த பிரசவ நாளுக்கு முன்பே குழந்தை பிறப்பதற்கும், குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பதற்கும் வாய்ப்பு உண்டு. எந்நேரமும் ஆஸ்துமா(Status asthmaticus) இருந்தால் மட்டுமே பிரசவத்தில் தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்தான பாதிப்புகள் ஏற்படுவது வழக்கம்.

என்ன செய்ய வே2ண்டும்?

ஏற்கனவே சொன்ன ஆஸ்துமாவைத் தூண்டுகிற காரணிகளை ஒதுக்க வேண்டும். கர்ப்பத்தின் ஆரம்பத்திலிருந்தே குழந்தையின் வளர்ச்சியை அல்ட்ராசவுண்ட் பரிசோதனையின் மூலம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஆஸ்துமாவுக்குக் கொடுக்கப்படுகிற ஸ்டீராய்டு மாத்திரைகளால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்புண்டு. ஆகவே, ரத்தச் சர்க்கரை
அளவையும் அடிக்கடி கவனிக்க வேண்டும்.

சிகிச்சை என்ன?

*குறைவான பாதிப்பு அவ்வப்போது உள்ளவர்கள் மூச்சுக்குழாயை உடனடியாக விரிக்க உதவுகிற பிராங்கோடைலேட்டார்(Bronchodilators) மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, அல்பூட்டிரால்(Albuterol) மருந்து கர்ப்பிணிகளுக்குப் பாதுகாப்பானது. இதை மாத்திரையாக எடுத்துக் கொள்வதைவிட இன்ஹேலரில் எடுத்துக்கொள்வது நல்லது.

*குறைவான பாதிப்பு அடிக்கடி உள்ளவர்கள் அல்பூட்டிரால் இன்ஹேலருடன், குறைந்த அளவில் புடிசோனைடு(Budesonide) ஸ்டீராய்டு இன்ஹேலரை பயன்படுத்தலாம்.

*மிதமான பாதிப்பு நிரந்தரமாக உள்ளவர்கள் மிதமான அளவில் புடிசோனைடு மற்றும் சால்மீட்ரால் கலந்த இன்ஹேலரைப் பயன்படுத்தவேண்டும்.

*தீவிர பாதிப்பு உள்ளவர்கள் மேற்சொன்ன மருந்துகளை சற்று அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஸ்டீராய்டு மாத்திரைகளும் ஊசிகளும் தேவைப்படும். சிலருக்கு இந்த மருந்துகளை நெபுலைசர் மூலம் செலுத்த வேண்டியதும் வரலாம். இவர்கள் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு சரியாக உள்ளதா என்பதை ‘பல்ஸ் ஆக்ஸிமீட்டர்’ மூலம் தெரிந்துகொள்ள வேண்டும்.

சிலருக்கு ஆக்சிஜன் செலுத்த வேண்டியதும் வரலாம். இச்சிகிச்சையை மருத்துவர் சொல்லும் காலம் வரை தொடர்ந்து எடுக்க வேண்டியதும் முக்கியம்.
ஸ்டீராய்டுகளைப் பயன்படுத்தலாமா?

பெரும்பாலும் ஸ்டீராய்டு மாத்திரைகளால்தான் பக்கவிளைவு ஏற்படும். இந்த மருந்துகளை எந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும், எத்தனை நாட்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும், எப்படி குறைக்க வேண்டும், எப்போது நிறுத்த வேண்டும் என்று ஒருவரைமுறை இருக்கிறது. டாக்டர்கள் மட்டுமே அறிந்த ரகசியம் இது.

தற்போது கர்ப்பிணிக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பான ஸ்டீராய்டு மருந்துகள் கிடைக்கின்றன. எனவே, மருத்துவர் பரிந்துரைப்படி ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்வதாக இருந்தால், எந்த பக்கவிளைவும் ஏற்படாது. கர்ப்பிணிகள் பயப்படத் தேவையில்லை.
இன்ஹேலரே சிறந்தது!

கர்ப்பிணிகளுக்கு ‘இன்ஹேலர்’ ஒரு வரப்பிரசாதம். ஆஸ்துமாவுக்கு மாத்திரை, மருந்து, ஊசிகளைப் பயன்படுத்தும்போது, அவை ரத்தத்தில் கலந்து நுரையீரலை அடைந்த பின்புதான் பலன் தரும். அதற்குச் சிறிதுநேரம் ஆகலாம். இந்த மருந்தின் அளவுகளும் அதிகம். கைநடுக்கம் போன்ற சில பக்கவிளைவுகளும் இவற்றுக்கு உண்டு. ஆனால், இன்ஹேலரைப் பயன்படுத்தும்போது அதிலிருக்கும் மருந்து நேரடியாக நுரையீரலுக்குச் சென்று அங்குள்ள மூச்சுக்குழல் தசைகளை உடனடியாகத் தளர்த்திவிடும். இதன் பலனால் மூச்சுத்திணறல் உடனே கட்டுப்படும்.

இதில் பயன்படுத்தப்படும் மருந்தின் அளவு மிகவும் குறைவு. மைக்ரோ கிராம்களில்தான் இந்த மருந்து செலுத்தப்படுகிறது. உடலின் வேறு உறுப்புகளுக்கு இந்த மருந்து செல்வதில்லை. எனவே, இதற்கு அவ்வளவாக பக்கவிளைவுகள் இல்லை. பெக்ளோமித்தசோன்(Beclomethasone), டிரையாம்சினோலோன்(Triamcinolone), புடிசோனைடு ஆகியவை பாதுகாப்பான ஸ்டீராய்டு மருந்துகள்.

ஒவ்வாமை மருந்துகள்

ஆஸ்துமா வருவதற்கு ஒவ்வாமைதான் முக்கியக் காரணமாகக் கருதப்படுவதால், அதைத் தடுக்கும் மாண்டிலூக்காஸ்ட்(Montelukast) மாத்திரையை மருத்துவர் யோசனைப்படி தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். மூக்கு ஒழுகலைக் கட்டுப்படுத்துகிற ஆன்டிஹிஸ்டமின் மாத்திரைகளை அவ்வப்போது குறைந்த அளவில் சாப்பிட்டால் போதும். இந்த வழிகளால் கர்ப்ப காலத்தில் ஆஸ்துமாவின் பாதிப்பைக் குறைக்கவும் முடியும்; தடுக்கவும் முடியும்.

தவிர்க்க வேண்டிய மருந்துஇரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும் பிரசவத்தின்போதும் மிசபுரஸ்டால்(Misoprostol) எனும் மருந்து கொடுக்கப்படுவது வழக்கம். ஆஸ்துமா உள்ள பெண்களுக்கு இந்த மருந்தைத் தரக்கூடாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்? (அவ்வப்போது கிளாமர்)
Next post 1000 நாட்கள் ஆச்சரியம்! (மருத்துவம்)