காதலே காதலே…!! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 5 Second

‘சாரங்கி’ இந்த சொல் ஒரு பழமையான தந்தி வாத்தியத்தைக் குறிக்கிறது. பெரும்பாலும் ஹிந்துஸ்தானி இசையில் அதிகம் வாசிக்கப்படும் வாத்தியம். தென்னிந்தியாவில் இந்த வாத்தியத்தை வாசிக்கும் கலைஞர்களைப் பார்ப்பதே அரிது எனும்போது, இதை வாசிக்கும் பெண் கலைஞர்களைப் பார்ப்பது அரிதினும் அரிது.

இந்த வாத்தியத்தை வாசிக்கும் ஒரே தென்னிந்தியப் பெண் என்னும் புகழுக்கு உரியவராக இருப்பவர் மனோன்மணி. சாரங்கியை வாசிப்பது அவ்வளவு
எளிதானதல்ல. விரல் நகத்தின் பக்கத்தைப் பயன்படுத்தி வாசிக்க வேண்டும். ஆனால், இதிலிருந்து கிளம்பும் நாதம் அலாதியான இனிமை கொண்டது. இசையை வாசிப்பதோடு அதை சுவாசிக்க செய்யும் குடும்பம் இவருடையது. “தாத்தா பி.வி.சண்முகம், அம்மா சரோஜா, இருவரும் தில்ரூபா பிளேயர். எம்.எஸ்.வி சாரிலிருந்து ஏ.ஆர்.ரஹ்மான் சார் வரை ஐந்தாயிரம் பாடல்களுக்கு மேல் அம்மா இவர்களிடம் வாசித்திருக்காங்க. இளையராஜா சாரின் குழுவில் அம்மா இசைத்து வந்திருக்காங்க. அவங்க வாசிக்கிறதை சின்ன வயசிலிருந்தே பார்த்திருக்கிறேன். வீடடில் எப்போதும் இசை, கச்சேரி என்பதால், நானும் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டேன்.

அதே சமயம் எனக்கு அம்மா, தாத்தா போல் வித்தியாசமா இசைக் கருவியை கற்றுக் கொள்ளணும்ன்னு விருப்பம். அந்த சமயத்தில் சாரங்கினு ஒரு இசைக்கருவி பற்றி தெரிய வந்தது. அதை கற்றுக் கொள்ளணும்ன்னு ஆசை வந்தது. சாரங்கி வாசிப்பது அவ்வளவு சுலபம் இல்லை. ரொம்பவே கஷ்டமானது. அந்த கருவிக்குப் பழகி, அது நமக்கு வசப்பட கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆகும். இசைக் குடும்பத்தில் இருந்தாலும் அம்மா-அப்பா இருவரும் படிப்புக்கு தான் முக்கியத்துவம் தந்தாங்க. எம்.சி.ஏ. முடிச்சிட்டு ஐ.டி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். பிறகு எல்லா பெண்களைப் போல் எனக்கு கல்யாணமாச்சு. அதன் பிறகு தான் என் இசை ஆர்வத்தை பற்றி என் கணவரிடம் பேசினேன். அவருக்கும் அந்த வாத்தியம் பத்தித் தெரிஞ்சிருந்தது.

ரொம்பவே என்கரேஜ் பண்ணினார்” என்று கூறும் மனோன்மணி, சாரங்கி பயின்ற அனுபவத்தை பற்றி விவரித்தார். “சாரங்கியில், தில்ரூபா மாதிரி சப்தம் இருந்தாலும், அதைவிட பவர்ஃபுல்லா அழகான டோன் இருக்கும். இதன் மீது இருந்த ஆர்வத்தால் யூடியூப்ல பார்த்து வாசிக்க ஆரம்பிச்சேன். மும்பை, ஹைதராபாத்னு வேற வேற இடங்கள்ல நாலு சாரங்கி வாங்கினேன். ஆனா, எதுலயுமே எனக்கு சரியான டோன் கிடைக்கலை. இதன் உன்னதமான இசையினை ராஜஸ்தானில்தான் கேட்க முடியும். அதனால் வடக்கில் போய் கற்றுக்கொள்ள வேண்டுமென்று முடிவு செய்தேன். சமூகவலைத்தளத்தில் அதற்கான பயிற்சி குறித்து தேடினேன். அதன் மூலம் பிரபல சாரங்கி வித்வானான உஸ்தாத் குலாம் சபீர் கான் தில்லியில் இருப்பது தெரிய வந்தது. உடனே அவரிடம் மாணவியாக சேர்ந்தேன்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக தில்லிக்கு சென்று கற்றுக் கொண்டு வருகிறேன்” என்ற மனோன்மணி, தென்னிந்தியாவின் ஒரே பெண் சாரங்கி இசைக் கலைஞர் என்ற பெருமைக்குரியவர். திரைப்படப் பாடல்களுக்கும் சாரங்கி வாசிப்பதில் பிஸியாக இருக்கும் மனோன்மணி, முதன் முதல் சாரங்கி வாசித்த திரைப் படம் இசையமைப்பாளர் இமான் இசையில் மைனா படத்தில் இடம் பெற்ற ‘கிச்சுக்கிச்சு…’ பாடல். தொடர்ந்து ரம்மி படத்தில் ‘கூடை மேல கூடை வச்சு…’ ‘சொப்பன சுந்தரி’ போன்ற என்னற்ற ஹிட் பாடல்கள் வாசித்திருக்கிறார். “தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழி பாடல்களுக்கும் வாசித்திருக்கிறேன். இசையமைப்பாளர்கள் வித்யாசாகர், அனிருத், ஜிப்ரான், ஹிப் ஹாப் தமிழா ஆகியோருடன் பணிபுரிந்து வருகிறேன்.

ஒவ்வொரு இசையமைப்பாளர் கூட ஒர்க் பண்ணினதும் ஒவ்வொருவிதமான அனுபவத்தைக் கொடுத்திருக்கு. சினிமாவுக்கு வாசிக்க நிறைய எமோஷன்ஸ் வேணும். பர்ஃபெக் ஷன் ரொம்ப முக்கியம். சினிமா ஒரு பக்கமிருக்க, இன்னொரு பக்கம் நான் என்னோட கிளாசிக்கல், ஃபியூஷன் பேண்டு
லயும் ஆல்பங்கள்ல வாசிக்கிறதுலயும் பிஸியா இருக்கேன்” என்றவர் பெண்கள் இந்த கலையை கற்பதில் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லையாம்.
‘‘சாரங்கியை கையாள்றது ரொம்பவே கஷ்டம். மொத்தம் 37 கம்பிகள் இருக்கும். அதுல முக்கியமான 3 கம்பிகள்லதான் வாசிக்கணும். இந்த வாத்தியம் மரத்தினால் வடிவமைக்கப்பட்டு இருப்பதால், குளிர் மற்றும் மழைக் காலத்தில் கையாள்வது சிரமம். நகத்துக்குப் பின்னாடி உள்ள கீழ்ப் பகுதியால வாசிக்கணும். வாசிக்கிறபோது அந்த இடம் மரத்து, தடிச்சுப் போயிடும். அப்பதான் நாம எதிர்பார்க்கிற இசை வரும்.

முதல் முறை வாசிச்சப்ப எனக்கும் கையெல்லாம் புண்ணாகி, ரத்தம் வழிஞ்சு, கொப்புளம் வந்திருக்கு. அந்த பயமும் மிரட்சியும் என் குருநாதர் வாசிக்கிறதைப் பார்த்ததும் மாயமாகிடுச்சு” என்று கூறும் மனோன்மணியின் சாரங்கியிலிருந்து ஒலித்த நாதம் தான் சமீபத்தில் இளசுகள் மனதில் சக்கைப்போடு போட்ட ‘காதலே காதலே…’ பாடல். “96 படத்தில் இடம்பெற்ற ‘காதலே காதலே…’ பாடல் எனக்கான தனி அடையாளத்தைக் கொடுத்தது. அந்த சத்தம் வயலின் என்று பெரும்பாலானோர் நினைத்திருப்பார்கள். யூடியூபில் பார்த்த பின் தான் பலர் சாரங்கி என்று அடையாளம் கண்டுகொண்டனர். ’உள்ளத்தில் நல்ல உள்ளம்…’, ‘குறுக்கு சிறுத்தவளே…’ போன்ற பாடல்களில் சாரங்கி பயன்படுத்தப்பட்டிருக்கிறது” என்றார்.

ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் இசையமைப்பில் சீன வயலினான எர்ஃபு என்ற வாத்தியத்தையும் வாசித்து வருகிறார். ‘‘ஒவ்வொரு நாட்டிலும், பகுதியிலும் வாசிக்கும் போது அதன் ஸ்டைல் ஆஃப் பிளே, அதிலிருந்து வரும் சத்தம் வேறு மாதிரி இருக்கும். பொதுவாக பாம்பேயிலிருப்பவர்கள் ஹிந்துஸ்தானி பிளேயராக இருப்பாங்க. அதை இங்குள்ளவர்கள் வாசித்தாலும் அந்த ஸ்டைல் இருக்காது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ஒரு நாட்டுப்புற கலைஞர் பாடும் போதும், இசைக்கும் போது அதன் தன்மை மண் வாசனையோடு நிஜமாக இருக்கிறது. எனவே தற்போது பல இசையமைப்பாளர்கள் வெவ்வேறு நாட்டின் இசைக் கலைஞர்களை பயன்படுத்துகிறார்கள்.

தற்போது டிஜிட்டல் வளர்ச்சியால் பல சப்தங்கள் கணினியிலேயே கொண்டு வருகின்றனர். இது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. ஆனால், அப்படி உருவாக்குவதில் உயிரோட்டம் இருக்காது. மேலும் அது மனதில் நிலைச்சு இருக்காது. தொழில்நுட்பம் வளர்ந்தாலும், சில விஷயங்களை நாம் இதன் உயிரோட்டத்துடன் தான் ரசிக்க வேண்டும். அதனை இசைக்கலைஞர்களால் மட்டுமே கொடுக்க முடியும்” என்று மென் சிரிப்புடன் பேசும் மனோன்மணிக்கு சாரங்கியை மேற்கத்திய இசையுடன் இணைத்து வாசிப்பது விருப்பமான விஷயம் என்றாலும் பிற்காலத்தில் கிளாசிக்கல் பிளேயராக பிரபலமாவதே லட்சியமாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோலியை பின்னுக்கு தள்ளிய ஸ்மிருதி!! (மகளிர் பக்கம்)
Next post திருட்டையே திக்குமுக்காட வைத்த பலே திருடர்கள் ! (வீடியோ)