By 27 August 2020 0 Comments

விஷத்தையும் முறிக்கும் வசம்பு!! (மருத்துவம்)

இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் ‘பிள்ளை வளர்ப்பான்’ என்று அழைக்கக்கூடிய வசம்பின்
மருத்துவ குணத்தைப் பார்க்கலாம்…

அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட வசம்பு, ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக்(Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத்தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்னச் சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது ‘பிள்ளை வளர்ப்பான்’ என்று கூறப்படுகிறது.

சுடு தண்ணீர், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமி நாசினியாகப் பயன்படுத்தலாம். வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்துக்கடைகளிலும் கிடைக்கும்.

இதில் முக்கிய விஷயமாகச் சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டு, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் விஷம் வெளியே வந்துவிடும். கால்நடைகளுக்குத் தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும் சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது.

வசம்பை உட்கொள்ளும் முறைகள்

* வசம்பை இடித்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். அது அரை டம்ளர் தண்ணீர் கொதித்தவுடன் அதை வடிகட்டி உட்கொள்ளவும்.

* குழந்தைகளுக்கு வசம்புவை தண்ணீரில் ஊற வைத்து சுத்தமான கல்லில் உரசி கொடுக்கலாம்.

* வசம்பை தீயில் சுட்டு கருகிய அப்பகுதியை விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் குழைத்து அதை ஒரு சின்ன டப்பாவில் சேமித்து வைக்கலாம். இதை உட்கொள்ளும் விதத்தில் அந்த கருகிய பகுதியை தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

வசம்புவின் பயன்கள்

வசம்பு ஜீரண சக்தியை அதிகரிக்கும். குறிப்பாக அஜீரணம், வாயுத்தொல்லை, வயிறு உப்புசம், வயிற்றுப்போக்கு, அல்சர் மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்னைகளுக்கு இது எளிமையான ஜீரணத்துக்குத் தேவையான அமிலத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது. நெஞ்செரிச்சலைக் குறைக்கிறது. வசம்பு குழந்தைகளுக்கு வயிற்று வாயுவை நீக்கி ஜீரண சக்தியை அதிகரிக்க உதவுகிறது. வசம்பு இயற்கையான காஜல் மை தயாரிக்க உதவுகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு மை இட வசம்பை நெருப்பில் சுட்டு அதை நல்லெண்ணெயோடு குழைத்து கன்னத்திலும், நெற்றியிலும் மையிட அழகையும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

வசம்பு பவுடரை குழந்தைகளின் படுக்கையின் அருகில் தூவி விடுவதால் கொசு, கரப்பான், மூட்டை பூச்சி குழந்தைகளின் அருகாமையில் வராமல் பாதுகாக்கிறது. வசம்புவை தண்ணீரில் ஊற வைத்து சுத்தமான கல்லில் உரசி தேன் கலந்து உள்ளுக்குள் கொடுக்க சளி, இருமல் குணமடையும். தினசரி ஒரு சிட்டிகை வசம்பு பவுடரை தண்ணீரில் குழைத்து கொடுக்க மலச்சிக்கல் நீங்கும். நாம் தினசரி உபயோகிக்கும் சீயக்காய் பவுடருடன் மற்றும் வேப்பம் பவுடரையும் சேர்ப்பதினால் பொடுகு மற்றும் பேன் தொல்லை தீரும். இதையே வேப்பிலை ஒரு கைப்பிடி இடித்த வசம்புப் பொடி. இதை தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயுடன் சேர்த்து தலையில் தடவி 20 நிமிடம் கழித்து குளித்து வர பேன் மற்றும் பொடுகுத் தொல்லை நீங்கி கூந்தல் பொலிவடையும்.

வசம்புப் பொடியை தேங்காய் எண்ணெய் உடன் சேர்த்து முகத்தில் தடவி வர சருமப்பிரச்னை, அலர்ஜி, ரேஷஸ் (Rashas) மறையும். வசம்புப் பொடியுடன் மஞ்சள் சேர்த்து முகத்தில் தேவையற்ற முடிகளை நீக்க உதவும். இதை குழந்தைகளுக்கு தினசரி இதன் வாசனையை முகர்வதால் நல்ல பேச்சுத்திறன் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு செரியாமை ஏற்பட்டு அதன் காரணமாக செரியாக்கழிச்சல் ஏற்படும். பால் குடித்தால்கூட செரிக்காமல் வாந்தி எடுக்கும் அல்லது செரிக்காமல் பேதி ஆகும். பசி இருக்காது. வயிறு லேசாக உப்பிக்காணப்படும். இலேசான காய்ச்சலும், சோர்வும் இருக்கும். இம்மாதிரியான நேரங்களில் வசம்பை எண்ணெய் விளக்கில் சுட்டு அதனை அப்படியே தேனில் குழைக்க கிடைக்கும் குழம்பினை தடவி அதேசமயம் அக்குழம்பினை அக்குழந்தையின் வயிற்றின் மேற்பரப்பிலும் பற்றுப்போட்டு வரவும்.

வசம்பை இடித்து, சிதைத்து நீரிலிட்டு எட்டில் ஒரு பங்கை சுண்டக்காய்ச்சி வடிகட்டி வேளைக்கு ஒரு ஸ்பூன் சர்க்கரை அல்லது தேன் தேவையான அளவு கலந்து தினசரி 2 அல்லது 3 வேளை குழந்தைகளுக்குப் புகட்டி வர குழந்தைகளுக்குண்டாகும் மாந்தம்- கணம், பேதி, வாந்தி, வாய்வு, வயிறு உப்புசம் குணமாகும். வசம்பின் எடைக்கு பாதி அளவுக்கு சுக்கும் சேர்த்து இடித்து சூரணித்து வைத்துக்கொண்டு தேவையான அளவு வெந்நீரில் குழைத்து தினசரி இரவு படுக்குமுன் கால் மூட்டுகளில் அல்லது வலி-வீக்கம் உள்ள இடங்களில் பற்றிட்டு வர குணமடையும். வசம்பு, நாட்டு அமுக்கரா கிழங்கு, எட்டி வித்து இவைகளை சம அளவு பசும்பாலில் ஊற வைத்து அரைத்து தினசரி இரவு படுக்கும்முன்பு ஆண்களுக்கு மேற்பூச்சு மருந்தாக உபயோகித்து வர ஆண்மை பெருகும்.

ஒரு சிலருக்கு வாய் எப்போதும் உலர்ந்து வறட்சியாக இருக்கும். உமிழ்நீரே சுரக்காது. அவர்கள் வசம்பை வாயிலிட்டு சுவைக்க உமிழ்நீர் சுரக்கும். வாயில் வெப்பம் உண்டாகும். தொண்டைக்கட்டு, தொண்டைக்கம்மல், இருமல் குணமாகும். வசம்பை அளவோடு உபயோகிக்க வேண்டும். அளவுக்கு மீறினால் குமட்டல், வாந்தி உண்டாகலாம். வசம்பைப் பற்றிய நிறைவாக ஒரு முக்கிய செய்தி. காலரா, பிளேக், அம்மை நோய் மற்றும் காற்றினால் பரவும் இதர நோய்களிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ள வசம்பை வாயில் அடக்கிக் கொள்வது அக்காலத்தில் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது.Post a Comment

Protected by WP Anti Spam