யாராலும் பர்ஃபெக்ட் மதரா இருந்திட முடியாது! (மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 24 Second

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள் வெள்ளித்திரையில் நிகழ்த்திய சாதனைகளுக்கு நிகராக சின்னத் திரையில் பல சாதனைகள் படைத்து வருகிறார் அவரின் மகன் கைலாசம். இவரின் ஒவ்வொரு வெற்றிக்கும் உறுதுணையாக இருந்தவர், இருக்கிறவர், இருக்கப்போறவர் இவரின் மனைவி கீதா கைலாசம். ஆண்களின் ஒவ்வொரு சாதனைக்கு பின் ஒரு பெண் கண்டிப்பாக இருப்பாள் என்பதை உறுதிப் படுத்தியிருக்கிறார் கீதா கைலாசம். தங்களின் தயாரிப்பு நிறுவனமான மின்பிம்பங்களில் கணவருக்கு உறுதுணையாக இருப்பது மட்டும் இல்லாமல் குழந்தைகளை பராமரிப்பது, சிறுகதை எழுதுவது, நாடகங்கள் என தனக்கானதை செய்துவரும் கீதா கைலாசம் தன் வாழ்வில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்களை நினைவு கூர்கிறார்.

‘எண்ணம் போல் வாழ்வு’ என்பது தான் என் தாரக மந்திரம். அப்படித்தான் நான் என் வாழ்க்கையையும் வாழ்ந்து வருகிறேன். நினைவு தெரிந்த நாள் முதலே மேடை ஏறிப் பேச வேண்டும் என்கிற ஏக்கம் மனதில் தொத்திக் கொண்டது. என்னுடைய அந்த எண்ணம் ஆறாம் வகுப்பில் நிறைவேறியது. ‘தேள் கொட்டினால் கூட தேசியகீதம் பாடும் போது ஆடாமல் அசையாமல் நிற்கணும்’ என்ற வரிகளோடு ஒரு பத்தி பேசவேண்டும். அதை பற்றி பேசக்கூடிய பெண் அன்று வரவில்லை. அவள் வராததால் அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது’’ என்றவரின் மேடை பேச்சின் ஆசைக்கு விதை விதைத்தவர் அவரின் தந்தையாம்.

‘‘அப்பாக்கு சினிமாவில் கதை எழுதவும், நடிக்கவும் ஆர்வம் இருந்தது.கே.பி. சாரும் அப்பாவும் பாலிய நண்பர்கள். தங்களது 13 வயதில் திருவாரூரில் இருக்கும்போது திரைக்கட்டி நாடகம் போட்டுப் பல வேலைகள் செய்திருக்கிறார்கள். நட்பு உறவாக மாறவேண்டும் என்று இருவீட்டாரும் நினைச்சாங்க. அப்ப நான் சி.ஏ படித்துவிட்டுவேலைக்கு சென்று கொண்டு இருந்தேன். அப்பாவைப் போல் எனக்கும் கலைத்துறையில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

அதற்கு என்ன செய்வதுன்னு தெரியவில்லை. இந்த சமயத்தில் தான் மீடியா துறையிலிருந்த இவருடன் திருமணப் பேச்சு ஏற்பட்டது. அவர் கலைத்துறையில் நிகழ்த்தி வரும் செயல்களை கேள்விப்பட்டு அவர் மேல் இம்பிரஸ் ஆனேன். அவரோடு இணைந்து பயணிக்க ஆரம்பிச்சேன்’’ என்று கூறும் கீதா, மின்பிம்பம் நிறுவனத்தில் நிகழ்ச்சி தயாரிப்புகளில் தனது பங்கு என்னவாக இருந்தது என்பது பற்றிக் கூறினார்.

“80 வயதிலும் எப்போதும் போல் நான்கு மணிக்கெல்லாம் எழுந்து வேலைப் பார்க்கும் கே.பி சாரை போல் தான் அவரின் மகனும். தீவிரமா உழைக்கக்கூடியவர். உடல் முடியாத நிலையிலும், ஒரு வேலையை எடுத்து விட்டால் அதை முடித்துவிட்டுத்தான் அடுத்த வேலைக்கு போவார். இவர்கள் கூடவே பயணித்த எனக்கும், ‘பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும்’ என்பது போல் பலவேலைகள் செய்ய ஆரம்பித்தேன். இவருக்கு கிரியேட்டிவ் துறையில் வேலை பார்க்க பிடிக்கும். அதை புரிந்து கொண்டு புரொடக்‌ஷனில் அவருக்கு உதவ முன் வந்தேன்.

நிர்வாக பொறுப்பு, ஷூட்டிங் ஷெட்யூல், புரொடக்‌ஷன், காஸ்டிங், செட் பொருட்கள், காஸ்டியூம் என அனைத்து வேலைகளையும் நான் பார்க்க ஆரம்பிச்சேன். திரைப்படங்களில் எப்படி ஒவ்வொரு சீனுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கிறார்களோ அதேபோல் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுப்போம். தேவதர்ஷினி, காயத்ரி, ரேவதிசங்கரன், ரஞ்சனி போன்ற நிறைய நடிகர், நடிகைகளை மின்பிம்பங்கள் மூலம் அறிமுகம் செய்திருக்கிறேன்.

மர்மதேசம், விடாது கருப்பு, ரகசியம், இதுவும் நடக்கும், இயந்திர பறவை, ரமணி வெசஸ் ரமணி, 1, 2 மைக்ரோ தொடர்கள் என்று பல தொடர்கள் எங்கள் தயாரிப்பில் வெளியானது. இதனோடு நையாண்டி தர்பார், கதையல்ல நிஜம் போன்ற டாக் ேஷாக்களும் செய்திருக்கிறோம். இவர் சவுண்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். அதனாலேயே லைவ் சவுண்ட் போடுவோம். இந்த துறையிலேயே வேலை பார்த்துக் கொண்டிருந்ததால் எல்லாரையும் போல் எனக்கும் நடிக்கணும், இயக்க வேண்டும் என்ற ஆசை வந்தது.

இருந்தாலும், ஒரே நேரத்தில் ஏழெட்டு சீரியல், வீட்டு வேலை என பலவேலைகள் செய்யும் போது இதற்கான நேரம் என்னால் ஒதுக்க முடியவில்லை. ஒரு வேலை செய்து கொண்டிருக்கும் போது, அந்த வேலையை விட்டு அடுத்த வேலைக்குப் போவது சரியானதாக இருக்காது” என்றவர் சிறுகதை எழுதிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.“எழுத வேண்டும் என்ற ஆசை ரொம்ப வருடமாகவே இருந்தது. ஆனால் என்னால் எழுத முடியுமான்னு ஒரு சந்தேகம் வேறு இருந்தது.

எழுதித்தான் பார்க்கலாமேன்னு முதன் முதலாக எழுதிய சிறுகதை பத்திரிகை துறை நண்பரின் உதவியால் வெளியானது. இதனை தொடர்ந்து 15 சிறுகதைகளுக்கு மேல் எழுதிவிட்டேன். மாமா மற்றும் இவரிடம் நான் எழுதுவதை காண்பிப்பேன். நான் சிறுகதையை மாமனாரிடம் காட்டும் போது, இன்கம்டேக்ஸ், ஷூட்டிங் பிரச்சினைகள், குழந்தைகள் செய்யும் சேட்டைகளுக்கு மத்தியில், கணவருக்கு உதவும் வேலையிலும், எழுதுறேன்னு நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருப்பதாக கூறுவார்.

தொடர்ந்து எழுத சொல்வார். இவரும் கதையில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் சொல்வார்’’ என்றவர், இன்றைய சூழலில் பெரும் சவாலாக இருப்பது குழந்தை வளர்ப்புதான் என்றார். ‘‘பள்ளிப் பருவத்தில் தான் நம் குழந்தைகளிடம் நிறைய மாறுதல்கள் ஏற்படும். குழந்தைகளுக்கான தைரியம் பள்ளியில் வரவேண்டும். ஆனால், அங்கு பயம்தான் ஏற்படுகிறது. நாம செய்றது சரியா, தப்பா என்கிற மதிப்பிடல் தெரிவதில்லை. அவ்வளவு குழப்பத்திலிருக்கிறார்கள்.

பள்ளியில் சொல்லும் குறைகளுக்குச் சேர்த்து வீட்டுலேயும் திட்டு விழுகிறது. சிலர் படிக்கிறதை தவிர வேறெதற்கும் என்கரேஜ் செய்வதில்லை. என் கணவர், ஜான் ஹோல்ட் என்ற எழுத்தாளரின் புத்தகத்தை எனக்கு கொடுத்தார். அதில் குழந்தைகள் எப்படித் தோற்கிறார்கள், எப்படி ஜெயிக்கிறார்கள், எப்படி பிரச்னைகளை சந்திக்கிறார்கள் என்ற பல கேள்விகளுக்கு பள்ளியைத்தான் காரணம் சொல்கிறார். அதுதான் உண்மை.

எனக்கு அந்த அனுபவம் இருந்ததினால், குழந்தைகள் வளர்ப்பதில் தெளிவுக் கிடைத்தது. குழந்தைக் கையில் பொம்மைக் கொடுத்தால், அடுத்த பத்தாவது நிமிடம் அதை உடைத்திடுவார்கள். அது அவர்களின் இயல்பு. சிலர் பொம்மைகளை பிரித்து போட்டு அதை மறுபடியும் இணைப்பார்கள். சிலருக்குப் பிரிக்க மட்டுமே வரும். அதை உற்சாகப்படுத்த வேண்டுமே ஒழியத் தடை போடக்கூடாது.

பத்து பன்னிரண்டு வயது வரை குழந்தைகள் உலகத்திலேயே விட வேண்டும். அதன் பின் அவர்களே புரிந்து கொள்வார்கள். அவர்கள் நம் கண்காணிப்புக்குள் இருப்பது அவசியம். நம்முடைய கோவத்தை நாம் அவர்களிடம் தான் காட்டுவோம். நானும் அதைச் செய்திருக்கிறேன். அதைத் தவிர்ப்பது ரொம்பவே நல்லது. யாராலும் பர்ஃபெக்ட் மதரா இருந்திட முடியாது. முயல்வோம்” என்று கூறும் கீதா நவீன மேடை நாடகங்களில் பங்குபெற்று வருகிறார்.

‘‘நான் பார்த்த பல பெண்கள் வெளியில் சொல்லாமல் எவ்வளவோ விஷயங்களை மனதில் புதைத்துக் கொண்டு தான் வாழ்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கும்போது அதை எவ்வாறு வெளிப்படுத்துவார்கள் என்ற மையக் கருவை வைத்து நாடகம் இயக்கினேன். அதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. இதனையடுத்து, இயக்கத்திலிருந்து நடிப்பிலும் கவனம் செலுத்தலாம்னு எண்ணம் ஏற்பட்டது.

அந்த சமயத்தில் தான் என் கணவரின் நண்பரான இயக்குநர் அருண்மொழி, நடிப்பு பயிற்சி மற்றும் நவீன நாடகங்கள் அரங்கேற்றுவது எனப் பல வேலைகள் செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டு அவர்கள் குழுவில் இணைந்தேன். தற்போது பல எழுத்தாளர்களின் சிறுகதைகளைக் கொண்டு, பல நாடகங்கள் அரங்கேற்றி வருகிறோம்” என்று கூறும் கீதா புதிதாக நடிக்க வரும் நடிகைகளுக்கு சில அறிவுரைகளை கூறினார்.

‘‘இன்றைய தொடர்களில் நடிக்கும் நடிகைகளைப் பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது. சீரியல்கள் பெருவாரியாக டப்பிங் ஸ்டுடியோவில் தான் நடக்கிறது. வெளி மாநிலத்திலிருந்து வரும் நடிகைகள் கொஞ்சமாவது தமிழ் புரிந்து நடித்தால் தான், அந்த கதையோட்டத்திற்கு அவர்களின் பங்கு என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஒரு சில நடிகர், நடிகைகள் தங்களது வேலையில் முழு ஈடுபாடு காட்டுவதில் தீவிரமாக இருப்பார்கள்.எவ்வளவு வீழ்ந்தாலும், எழுந்து நிமிர்ந்து வேலையில் முழு கவனம் செலுத்த ஆரம்பிப்பார்கள்.

இப்படிப்பட்டவர்களுக்கு வேலைக் கொடுக்கும் ஆட்கள் கம்மி. ஒல்லியா இருக்கணும், கருப்பு நிறம் வேண்டாம் என்ற மன நிலை இயக்குநர்கள் மத்தியில் மாறினால் தான் பலருக்கு வாய்ப்பு கிடைக்கும். பொதுவா இந்த மாற்றத்தை ஆஃப்பீட் பிலிம்களில் தான் பார்க்கமுடிகிறது. ‘டூலெட்’ படத்தில் ரொம்ப சாதாரணமா மேக்கப் இல்லாம இம்பிரசிவா ஷைலஜா என்ற பெண் நடிச்சிருப்பாங்க. இவங்க இந்தக் கதைக்கு போதும்ன்னு இயக்குநர் புரிந்து எடுத்திருக்கிறார்” என்று கூறும் கீதாவிற்குத் திரைப்படங்களில் வசனம் எழுதவேண்டும் என்கிற ஆசையும் இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஷத்தையும் முறிக்கும் வசம்பு!! (மருத்துவம்)
Next post வாழ்வென்பது பெருங்கனவு !! (மகளிர் பக்கம்)