By 2 September 2020 0 Comments

பன்மைத்தேசியமும் இலங்கையும் !! (கட்டுரை)

புதிய நாடாளுமன்றத்தில், தமிழ்ப் பிரதிநிதிகளின் ஆரம்பமே பரபரப்பாக அமைந்திருந்தது. சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ் மொழியை இலங்கையின் சுதேச மொழி என்று விளித்தது, ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

தமிழர்களின் நாடாளுமன்ற அரசியல் போக்கில், இது கொஞ்சம் மாறுபட்ட நிலைதான். இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, கடந்த ஒரு தசாப்த காலமளவில் இதுபோன்ற, “விரோதப்போக்குடைய பேச்சு” (antogonising speech) என்று, சிலர் விளிக்கக்கூடிய, பேச்சுகளைத் தவிர்த்திருந்தனர்.

ஏறத்தாழ 2,500 வருடங்கள் பழைமையான, இலங்கைத் தீவிலும் பல புலவர்களைச் சங்ககாலத்திலேயே கொண்டிருந்த ஒரு மொழியை இலங்கையின் சுதேச மொழி என்று சொல்வதில் என்ன பிழை, அது ஏன் விரோதப் போக்குடைய பேச்சு என்று விளிக்கப்பட வேண்டும் என்று, சிலர் கேள்வி எழுப்பலாம். மறுபுறத்தில், இத்தகைய பேச்சால் அடையப்பெறப்போவது என்ன?

வரலாற்றாசிரியர் கே.எம்.டி சில்வா குறிப்பிட்டபடி, “சிறுபான்மையினரின் மனநிலையைக் கொண்ட பெரும்பான்மை இனக்கூட்டமொன்றின், பாதுகாப்பின்மை உணர்வை இது அதிகரிக்காதா”? இதனால், இனவிரோதமும் குரோதமும் வளருமேயன்றி, ஆக்கம்மிகு விளைவுகள் எதுவும் ஏற்படாது என்பது, மறுசாராரின் மாற்றுக்கருத்தாகும்.

ஆனால், நாடாளுமன்ற ஜனநாயகத்தில், ஒரு விடயத்தை, நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாடாளுமன்றம் என்பது, ‘மக்கள் குரல்’ ஒலிக்கும் இடம். அங்கு, எந்தக் குரலும் அடக்கப்பட்டுவிடக் கூடாது. வோல்டேயர் சொன்னதாக அறியப்படும், “நீ சொல்லும் விடயத்தோடு நான் உடன்படவில்லை; ஆனால், அதைச் சொல்ல உனக்கிருக்கும் உரிமையைப் பாதுகாக்க, என் உயிரையும் தரத்தயாராக இருக்கிறேன்” என்பதுதான், பேச்சுரிமையின் அடிநாதமாக இருக்க வேண்டும். ஆக, ஒவ்வொரு பிரதிநிதியினதும் பேச்சுச் சுதந்திரம், நாடாளுமன்றம் முதல் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் கூட, பாதுகாக்கப்பட வேண்டும். அதுவே ஜனநாயகமாகும்.

நிற்க! ஏறத்தாழ ஒரு தசாப்தகாலத்துக்குப் பின்னர், நாடாளுமன்றம் மீண்டிருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தான் ஆற்றிய உரையில், இலங்கையை ‘பன்மைத்தேசிய’ (plurinational) அரசு என்று விளித்திருந்தார். தேசம், சுயநிர்ணயக் கோரிக்கை உள்ள நாடுகளில், பன்மைத்தேசியம் என்பது, பிரபலமாகிவருகிற ஒரு சித்தாந்தமாக இருக்கிறது.

பன்மைத்தேசியம் பற்றிய ஆய்வுகள், ஸ்கொட்லாந்து பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஸ்கொட்லாந்தின் அரசியல், சட்டத்துறை ஆய்வாளர்களான மைக்கல் கீடிங், ஸ்டீபன் டியேர்னி உள்ளிட்டவர்களின் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கனவாகும். தேசியவாதச் சித்தாந்தங்களுள் நவீனமானதும் அனைத்தையும் உள்ளடக்கும் வண்ணமமைந்ததும், அதேவேளை மிகச் சிக்கலானதுமானதோர் எண்ணக்கரு, இந்தப் ‘பன்மைத்தேசியம்’ எனப்படுவது.

இதுபற்றி, மிகச் சுருக்கமாக ஆய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம். உலகில் ஏறக்குறைய 90%மான அரசுகளை, ஒற்றைப்படுத்தப்பட்ட (homogenised) தேசத்தைக் கொண்ட தேசிய அரசுகளாகக் கருத முடியாது என்று வான் டென் பேர்க் வலியுறுத்துகிறார்.

இதன் பொருள் என்னவென்றால், பெரும்பாலான அரசுகளில், ஒரு தேசிய அரசு என்ற எல்லைக்குள் சிக்கியுள்ள பல தேசங்கள் காணப்படுகின்றன. ஆனால், இது அவ்வாறு அமைந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிக்கலாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற சில நவீன தேசிய அரசுகள், அதற்கு முன்பு அங்கிருந்திராத ஒற்றைப்படுத்தப்பட்ட குடிமையையும் (homogenised polity), ஒற்றைப்படுத்தப்பட்ட சிவில் தேசிய அடையாளத்தையும் கட்டமைத்து, உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளன.

அதேநேரத்தில், இங்கிலாந்து, கனடா போன்ற அரசுகள், தேசிய அரசு என்ற சித்தாந்தத்தின் பிடிவாதமான கடினத்தன்மையை நெகிழவைப்பதன் மூலம், ஒரு தேசிய அரசுக்குள் அங்கு காணப்படும் பல குடிமைகளை உள்வாங்கவும் பலகுடிமைகளின் தனித்த தேச அடையாளங்களுக்கும் அரசியலுக்கும் இடமளிக்கும் முறைகளைத் தொடர்ந்து உருவாக்கி வருகின்றன.

ஆயினும்கூட, ஒற்றைப்படுத்தப்பட்ட குடிமை அல்லது, தேசம் இல்லாத நிலையில் ஒரு சிறந்த தேசிய அரசை அடைய முடியாது. அதேவேளை, பல குடிமைகளையோ தேசங்களையோ கொண்ட அரசொன்றில், ஒற்றைப்படுத்தப்பட்ட தேசமொன்றைக் கட்டியெழுப்புதல் பற்றிக் கருத்துரைக்கும் ஸ்டீபன் டியேர்னி, ‘ஒற்றைப்படுத்தலை, பல குடிமைகள் கொண்ட அரசுக்குள் முயற்சிக்கும்போது, ​​ஆதிக்க குடிமைகளின் நடைமுறைகள், உத்திகள் (உத்தியோகபூர்வ மாநில மொழியின் பரப்புதல் போன்றவை) அரசமைப்புக் கொள்கைகளை வடிவமைக்கும் போது, ​​துணை அரசு தேசிய சமூகங்கள் ஓரங்கட்டப்படலாம். அது, அரசின் மய்யத்தைத் தீர்மானிக்கும் குடிமையின் நலன்களை (அதன் மேலாதிக்க சமுதாயத்தை) முன்னிறுத்துவதாக அமையும் என்கிறார். பிரான்ஸ் என்ற தேசிய அரசின் உருவாக்க வரலாற்றைப்பார்த்தால், டியேர்னி கூறும் கருத்தின் அர்த்தம் புலப்படும்.
பிராந்திய மொழி, கலாசாரம் என்பவை ஓரங்கட்டப்பட்ட, முழு நாட்டுக்கும் ஒரு மொழி; ஒரு கல்வி என்று இரும்புக் கரம்கொண்டு பிராந்திய மொழிகளும் கலாசாரமும் ஓரங்கட்டப்பட்டே பிரான்ஸ் என்ற சிவில் தேசிய அரசு கட்டமைக்கப்பட்டது.

சிவில் தேசமல்லாது, இனத்தேசிய அரசியல் வேர்விட்டுள்ள அரசொன்றில், ஒற்றைப்படுத்தப்பட்ட தேசிய அரசொன்றைக் கட்டியெழுப்புதலானது, எப்போதுமே ஆதிக்கம் மிக்க பெரும்பான்மை இனத்தேசியத்தின் நலன்களைக் காப்பதாகவும் சிறுபான்மை இனத் தேசியங்களின் நலன்களைச் சவாலுக்கு உட்படுத்துவதாகவும் அமையும்.

மறுபுறத்தில், ஒவ்வொரு தேசத்துக்கும் ஒவ்வொரு தனி அரசு என்பது, நடைமுறைச்சாத்தியம் இல்லாத கனவு. இந்த இடத்தில்தான், ஓர் அரசுக்குள் பல தேசங்களை உள்ளடக்கும் உபாயத்தை, பன்மைத்தேசிய சித்தாந்தம் முன்மொழிந்து நிற்கிறது.

பன்மைத்தேசியம் என்பதை வரையறுக்கும் மைக்கல் கீடிங், “பன்மைத் தேசியம் என்பது, பல்தேசியத்தை விடவும் அதிகமானது. பல்தேசியம் என்பது, ஒரு குடிமைக்குள் தனித்துவமானதும் தனித்தனி தேசிய குழுக்களின் சகவாழ்வைக் குறிப்பதுமாகும். பன்மைத்தேசியத்தின் கீழ், ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய அடையாளங்கள், ஒரு குழு அல்லது ஒரு தனிநபருக்கு கூட பொருந்தக்கூடும். இது பன்மையான தேசிய இனங்களின் சாத்தியத்தைத் திறக்கிறது, அவை கூடுகட்டப்படலாம்; அல்லது, குறைந்த நேர்த்தியான வழிகளில் ஒன்றுடன் ஒன்று மேவியும் அமையலாம்” என்கிறார்.

ஆகவே, பன்மைத்தேசியம் என்ற கருத்து, வெறுமனே ஓர் அரசுக்குள், பல தனித்துவமான தேசங்கள் அனுமதிக்கப்படல் என்பது மட்டுமல்ல; அத்தோடு, பல அடுக்குகள் கொண்டதும் ஒன்றுடன் ஒன்று மேவிய அரசும் துணைஅரசும் தேசிய அடையாளங்களைப் பல-குடிமை அரசியலுக்குள் கொண்டுள்ளமையை இது குறிக்கும்.

இலங்கைச் சூழலில், இதன் பொருளானது, ஒரு நபர் இலங்கையின் தேசிய அடையாளத்தை அல்லது, தமிழ் அல்லது சிங்கள துணை அரசுத் தேசிய அடையாளத்தை மட்டுமே கடைப்பிடிக்கலாம் அல்லது அரசும் துணை அரசும் தேசிய அடையாளங்களைச் சமமாகப் பின்பற்றலாம்; அல்லது, ஒவ்வோர் அடையாளத்துக்கும் வேறுபட்ட நிறையை வழங்கலாம். சுருங்கக் கூறின், ஒருவர் தனது தேசிய அடையாளத்தை இலங்கையராக மட்டும் கொண்டிருக்கலாம். அல்லது தமிழராகவோ சிங்களவராகவோ கொண்டிருக்கலாம். அல்லது இலங்கைத் தமிழராகவோ இலங்கைச் சிங்களவராகவோ கொண்டிருக்கலாம். அல்லது தமிழ் இலங்கையராகவோ, சிங்கள இலங்கையராகவோ கொண்டிருக்கலாம். ஆக, இலங்கை என்ற அரசுக்குள் பல தேசங்கள் உள்ளடங்குவது மட்டுமன்றி, ஒன்றோடொன்று மேவியமைந்த அரசு மற்றும் துணையரசுத் தேசிய அடையாளங்களைக் கொண்டிருக்கும் இயலுமையை பன்மைத்தேசியம் உருவாக்குகிறது.

ஆழமாக யோசித்துப்பார்த்தால், இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்குச் சாத்தியமான வழிகளுள் முக்கியமானதாக, பன்மைத்தேசியம் அரசொன்றைக் கட்டியெழுப்புவது அமையும். இந்தநாட்டின்பெரும்பான்மை மக்கள் பிரிவினையை (secession) எதிர்க்கிறார்கள், மறுக்கிறார்கள். அதாவது, இலங்கைத் தீவுக்குள் இன்னொரு தனியரசு உருவாவதை, இங்கு வாழும் பெரும்பான்மை மக்கள் ஏற்கவில்லை. மறுபுறத்தில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் என்பது தேசம், தாயகம், சுயநிர்ணயம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டது. ஒரு பன்மைத்தேசிய அரசுக்குள் இந்த இருதரப்பின் விருப்பங்களையும் உள்ளடக்க முடியும். இலங்கை ஓர் அரசாகவே இருக்கும்; ஆனால், அதற்குள் பன்மைத் தேசங்களும் குடிமைகளும் அவற்றுக்குரிய அங்கிகாரம், உரிமைகளுடன் காணப்படும். ஆகவே, சித்தாந்த ரீதியில் இலங்கைக்கு பன்மைத்தேசியவாதமே மிகப்பொருத்தமானதாகும். பன்மைத்தேசியம் என்பது தீவிரவாதமல்ல; பன்மைத்தேசியவாதத்தைவிட, இன்னொரு சமரசமான மாற்று, இலங்கைக்குக் கிடைப்பது அரிது.

இது ஒரு புறமிருக்க, மறுபுறத்தில் பெரும்பான்மை இனத் தேசிய ஆதிக்க அரசியலின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையின் ஆட்சியானது, பெரும்பான்மை இனத் தேசிய அரசியல் சித்தாந்தத்தைத் தாண்டி சிந்திக்கத்தக்கதா என்ற கேள்வி யதார்த்தத்தில் முக்கியமானது. இந்தப் பெரும்பான்மை இனத் தேசிய அரசியல், எப்படி சமஷ்டியை பிரிவினைவாதமாக வரையறுத்துப் பிரசாரம் செய்து, மக்கள் மனங்களில் அதனை ஒரு சொல்லத்தகாத தூசணவார்த்தை போலவே பதியவைத்துவிட்டதோ, அதைப்போலவே பன்மைத்தேசியவாதத்தையும் செய்துவிடலாம்.

ஆனால், இந்த அரசியல் ஊடாட்டங்களுக்கு அப்பால், இலங்கை அரசையும் அதன் மக்களையும் வரையறுப்பதற்கு, பன்மைத்தேசியத்தைவிட மிகப்பொருத்தமானதோர் அடையாளம் இன்னும் இல்லை என்பதுதான் உண்மை.Post a Comment

Protected by WP Anti Spam