By 5 September 2020 0 Comments

மகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்!! (மருத்துவம்)

நம்முடைய கலாசாரத்திலும், பாரம்பரிய மருத்துவத்திலும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது மஞ்சள். தற்போது இதன் பெருமையை உணர்ந்து மேலை நாட்டினரும் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் மருத்துவத் தன்மை உறுதியான பிறகு மஞ்சளுக்கான காப்புரிமையையும் அமெரிக்கா பெற்று வைத்துள்ளது.

எல்லோரிடமும் மஞ்சளின் பெருமையைக் கொண்டு சேர்க்கும் வகையில் மஞ்சள் தினம் எனவும் ஜூலை 14-ம் நாள் சமீபகாலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மஞ்சளுக்கு அப்படி என்னென்ன பெருமைகள் இருக்கின்றன, அதன் மருத்துவ குணங்கள் என்னென்ன என்பதை ஆயுர்வேத மருத்துவர் மகாதேவனிடம் கேட்டோம்…

இந்தியர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த மஞ்சள் மஞ்சள் இந்தியாவின் மிகப் பழமையான ஒரு நறுமணப் பொருள். இந்து மதச் சடங்குகளின்போது ஒரு புனிதப் பொருளாக உபயோகிக்கப்படுகிறது. இது மங்களத் திரவியங்களில் முதலில் குறிப்பிடப்படும் பொருளாக உள்ளது. பொன்னிறமும், நறுமணமும், அருங்குணமும் அதற்கு இந்த முதல் இடத்தைப் பெற்றுத் தந்திருக்கின்றன.

எல்லா சுபகாரியங்களிலும் முழுமுதற் கடவுளாக வணங்கப்பெறும் விநாயகப் பெருமானை திருவுருவமாக அமைக்கவும் இது பயன்படுகிறது. சௌபாக்கிய தேவதையான மகாலட்சுமியின் இருப்பிடமெனப் பெண்கள் இதை எப்போதும் மங்களப் பொருளாகத் தன்னுடலில் தாங்கிக் கொள்கிறார்கள். உணவுப் பொருள்களிலும் இதற்கு முதற் தாம்பூலம் உண்டு.

பெண்கள் பூப்படையும்போது அதை கொண்டாடும் சடங்கினை மஞ்சள் தண்ணீர் விழா அல்லது மஞ்சள் நீராட்டு விழா என்று அழைக்கிறோம். மஞ்சள் சிறந்த கிருமி நாசினி என்பதாலும் அதை கலந்து குளிக்கச் செய்வதாலும் இவ்விழா இப்பெயரால் அழைக்கப்படுகிறது. முந்தைய காலங்களில் மஞ்சள் பூசி குளிக்காத தமிழ் பெண்ணைப் பார்க்க முடியாது. பெண்கள் நெற்றியில் தினசரி இடும் உண்மையான குங்குமமும் மஞ்சளில் இருந்து செய்யப்படுவதே.

மஞ்சளின் வகைகள்…

மஞ்சள் கிழங்கில் மூன்று வகை உள்ளது. முதல் வகை முட்டா மஞ்சள் என்று அழைக்கப்படுகிற முகத்துக்குப் போடும் மஞ்சள். இது உருண்டையாக இருக்கும். இரண்டாம் வகை வில்லை வில்லையாக, தட்டையாக, நிறைய வாசனையோடு இருக்கும் கஸ்தூரி மஞ்சள். மூன்றாவது வகை நீட்ட நீட்டமாக இருக்கும் விரலி மஞ்சள். இதை கறிமஞ்சள் என்றும் சொல்வதுண்டு.

மஞ்சள் கிழங்கின் உருண்டையாக உள்ள பெரும்பாகத்தை எடுத்து உலர்த்தி நல்லெண்ணெயில் பக்குவம் செய்தால் கிடைப்பதை கப்பு மஞ்சள் என்று சொல்கிறோம். இந்த மஞ்சள் அதிக மணமும் எண்ணெய் பசையும் உடையது. இதை வியாபாரத்துக்காகத் தயாரிப்பவர்கள் இந்தக் கிழங்கு உளுத்து எடை குறையாமல் இருப்பதற்காக, நாகசத்துச் சேர்ந்த விஷ ரசாயனப் பொருளால் பாடம் செய்வதுண்டு. இதனால் நிறம் நன்கு காண முடியும். ஆனால், உடலில் நாக விஷம் அதிகமாகக்கூடும். இதை உணவுப் பொருளாகவோ, பூச்சுப் பொருளாகவோ உபயோகிப்பதால் கெடுதல் அதிகமாக ஏற்படுகிறது. எனவே, இதுபோன்று ரசாயனப் பொருள் சேர்த்து தயாரிக்கப்படும் மஞ்சள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

முகத்துக்குப் பூசும் மஞ்சள் முகத்தில் முடி வராமல் தடுக்கவும், முகத்துக்கு ஒருவித மினுமினுப்பைத் தருவதற்கும், வசீகரத்தைத் தருவதற்கும் உதவுகிறது. மேலும் இது மிகவும் மங்களகரமான ஒரு பொருளாகவும் கருதப்படுகிறது. கஸ்தூரி மஞ்சள் வாசனை மிகுந்தது. இதை வாசனைப் பொடிகள் மற்றும் வாசனைத் தைலங்களில் சேர்த்து வருகிறார்கள்.

மூன்றாவது ரகமான விரலி மஞ்சள்தான் சமையலறையின் முதற்பொருளாக திகழ்கிறது.மஞ்சள் கிழங்கின் பக்கவாட்டில் விரல்கள் போன்று நீண்டிருக்கும் பகுதியைப் பிரித்து சாண நீரில் வேக வைத்துப் பாடம் செய்வதே கறி மஞ்சள். இது கிருமிகளை அழிக்கும் சக்தியுடையது என்பதால் வாசற்படிகளில் மஞ்சள் பூசுவதற்கும், வீடு முழுவதும் மஞ்சள் கரைத்துத் தெளிப்பதற்கும் இவ்வகை மஞ்சளைப் பயன்படுத்துகின்றனர்.

மருத்துவ பயன்கள்

* மூக்கடைப்பு ஏற்பட்டவர்கள், மூர்ச்சை போட்டு விழுந்தவர்களுக்கு மஞ்சளை சுட்டு அந்தப் புகையை மூக்கில் காட்டினால் தெளிவு
ஏற்படும்.

* வேனல் கட்டி, விரல் சுற்றி, அடிபட்ட வீக்கம் போன்றவற்றுக்கு மஞ்சளை அரைத்து மாவுடன் கலந்து கிளறிச் சூடாக்கி அதை அடிபட்ட இடங்களில் பற்றுப் போட்டால் குணமாகும்.

* மஞ்சள், வேப்பிலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றுப்போட்டு வந்தால் அம்மை கொப்புளங்கள், சேற்றுப்புண் போன்றவை குணமாகும். மஞ்சளை அரைத்து சிரங்குகள், அடிபட்ட புண்கள் அல்லது கட்டிகள் போன்ற பாதிக்கப்பட்ட இடத்தில் இரவில் பூச வேண்டும். கட்டிகளாக இருந்தால் இரண்டு அல்லது மூன்று நாள்கள் பூசிய பிறகு பழுத்து உடைந்துவிடும். பிறகு அதற்குரிய சிகிச்சையைத் தொடர அவை குணமாகும்.

* உணவாக ஏற்கப்படும் மஞ்சள் தொண்டையிலும், மார்பிலும், இரைப்பையிலும் ஏற்படும் கப அடைப்பை அகற்றி வலியைக் குறைக்கிறது. வாய், நாக்கு, தொண்டை, எகிறு, அண்ணம் முதலிய இடங்களில் ஏற்படும் வேக்காளத்தையும், புண்ணையும் ஆற்றுகிறது. இரைப்பை, குடல் முதலியவைகளுக்குச் சுறுசுறுப்பூட்டி பசி மற்றும் ஜீரண சக்தியை உண்டாக்குகிறது. குடலில் புழு, கிருமி தங்கவிடாமல் வெளியேற்றி விடுகிறது. இத்தனை நல்ல குணமுடையது என்பதால் உணவுப் பொருள்கள் அனைத்திலும் மஞ்சள் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது.

* மஞ்சள் தூளைப் பாலில் போட்டுக் காய்ச்சி சாப்பிட வாய்ப்புண், தொண்டை எரிவு, வயிற்றில் எரிவு போன்றவை சரியாகிறது. மஞ்சள் சேர்த்துக் கொதிக்க வைத்த வெந்நீரால் வாய் கொப்பளித்தால் தொண்டைப்புண் ஆறுவதோடு, சளி முறிந்து எளிதில் வெளியாகும்.

* மஞ்சளை அரைத்து கரப்பான், சொரி, சிரங்கால் ஏற்படும் தோல் நிறக்கேட்டிற்கு மேல்பூச்சாக பூச நிவாரணம் கிடைக்கும். மஞ்சளை விழுதாக அரைத்துச் சுடவைத்துப் பற்றுப்போட வீக்கம் குறையும்.

கட்டியாக இருந்தால் அது பழுத்து உடையும். மஞ்சளுடன் அரிசி மாவைச் சேர்த்துக் களியாகக் கிண்டியோ, சாதத்துடன் சேர்த்து அரைத்தோ அதை கட்டிகளின் மேல் போடுவதுண்டு.

* சொரி, சிரங்கு, நமைச்சல் அதிகமிருக்கும்போது மஞ்சளுடன் ஆடாேதாடை இலை சேர்த்துக் கோமூத்திரம் விட்டரைத்துப் பூசுவது நல்லது. சுளுக்கு நரம்புப்பிசகு உள்ள இடங்களில் ஏற்படும் வீக்கத்தையும், வேதனையையும் குறைக்க இத்துடன் சுண்ணாம்பும், பொட்டிலுப்பும் சேர்த்து அரைத்துப் பூசலாம்.

* பச்சையான பசுமஞ்சளின் சாற்றைப் புதிதாக பூச்சி கடிபட்ட இடங்களில் தடவ வீக்கம், தடிப்பு, அரிப்பு, நீர்சொரிதல் போன்ற காணாக்கடி பிரச்னைகள் ஏற்படாது.மஞ்சள் துண்டை ஒரு ஊசியில் குத்தி அனலில் காட்டி எடுத்து அதில் இருந்து வரும் புகையை மூக்கினுள் இழுக்க மார்புச்சளி, இழுப்பு, விக்கல் போன்றவை குறையும். இந்தப் புகை பட்டால் தேள்கடி வலி குறையும்.

* மஞ்சளைத் தூளாக்கிப் புண்ணின்மேல் தூவப் புண் சீக்கிரம் ஆறும். அழுகல் அகன்று பள்ளம் சீக்கிரம் தூர்ந்து வடு மறையும். கல்லீரல், மண்ணீரல் பகுதிகள் மேல் பற்றிடுவது உண்டு.

* மஞ்சள் தூளை வெண்ணெயில் குழப்பிப் பூசிக்கொள்ள பல தோல் நோய்கள் நீங்கும். காமாலை, பாண்டு குஷ்டம், தீராத விரணம், மதுமேகம், பீனசம், கண்டமாலை முதலிய நோய்களில் மிகச்சிறந்த மருந்தாக இது பயன்படுகிறது.

மஞ்சளின் மகிமை

மஞ்சள் பொடியை உணவில் சேர்த்துச் சாப்பிடும்போது அதிலுள்ள சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகிறது. இது உடலிலுள்ள செல்களுக்கு முழு பாதுகாப்பை தருகிறது. மஞ்சளில் உள்ள குர்க்குமின் (விதையிலுள்ள ஒரு ரசாயனப் பொருள்) என்ற நிறமிதான் அதன் மஞ்சள் நிறத்துக்குக் காரணமாக உள்ளது. இந்த ரசாயனப் பொருள் புற்றுநோய்க் கட்டி ஏற்படாமல் தடுக்கவும், ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கவும், பாக்டீரியாக்களின் தாக்குதலை முறியடிக்கவும் உதவுகிறது.

குர்க்குமின் வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படும் நினைவுக் குறைபாடு தரும் அல்சைமர் நோயால் மூளையில் ஏற்படும் கெடுதி தரும்படிவைக் (Plaque) குறைக்கிறது என்று துவக்கநிலை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

மனித மூளையில் அல்சைமர் நோய் உருவாக்கும் கெடுதி தரும் படிவுகளாகக் கருதப்படுபவை அமைலாய்ட் நாறுகள். மூளையில் இருக்கும் இப்படிப்பட்ட பீட்டா அமைலாய்ட் புரதங்களைப் பரிசோதனைக் குழாயில் போட்டு அத்துடன் மிகக் குறைவான அளவு குர்க்குமின் சேர்த்தால், அது பீட்டா அமைலாய்ட் புரதங்களை ஒன்று சேரவிடாமல், அவை நாறுகளாக மாறாமல் இருக்க உதவுகிறது.

பீட்டா அமைலாய்ட் புரோட்டீன்கள் மூளையில் ஒன்று சேர்ந்து அழுக்குகளாக சேர்வதே அல்சைமர் நோயாக உருவாகிறது. ஆகவே, இந்த புதிய கண்டுபிடிப்புகள் அல்சைமர் நோயைக் குணப்படுத்தவும், அது வராமல் தடுக்கவும் மஞ்சள் தூளில் இருக்கும் குர்க்குமின் உதவும் என்னும் கருத்துக்கு வலுவூட்டும் விதமாக அமைந்துள்ளது. எனவே, தினசரி குறைந்த அளவு மஞ்சள் தூள் உணவில் சேர்த்துக்கொள்வது வயது அதிகமானவர்களுக்கு மிகுந்த பலன் அளிக்கும்.

ஆராய்ச்சிகள் சொல்வது என்ன?

இதயத்தில் ரத்தக்குழாய் சுருங்குவதற்கும், புற்றுநோய் ஏற்படுவதற்கும் அதிக அளவில் புரதம் உற்பத்தியாவதுதான் காரணம். இப்போது புற்றுநோய் வராமல் தடுக்கும் மருத்துவ குணமும் மஞ்சளுக்கு இருப்பதாக அமெரிக்க அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆசிய உணவுப் பண்டங்களுக்கு நிறமும் மணமும் தருவதற்கு மட்டுமே பயன்படுவதல்ல மஞ்சள்; புற்றுநோயை உண்டாக்கக்கூடிய புரதத்தைத் தடுக்கக்கூடியதும் கூட என்பது மிக முக்கியமான கண்டுபிடிப்பு என்றே ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

மஞ்சள் தூளில் இருக்கும் குர்க்குமின்(Curcumin) என்கிற மூலக்கூறு, வயதான ஆய்வக எலிகளின் மூளையில் இருக்கும் பீட்டா அமைலாய்ட் புரத சேமிப்புகளை(Beta-amyloid proteins) அகற்றுகிறது என்பதையும் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

லுக்கேமியா என்கிற ரத்தப் புற்றுநோய், விரைப் புற்றுநோய், சருமப் புற்றுநோய், குடல் புற்றுநோய் போன்றவற்றைக் கட்டுப்படுத்தக்கூடிய மருத்துவ குணம் மஞ்சள் தூளுக்கு உண்டு என்பதை உலகளாவிய சான்றுகள் மூலம் நிரூபிக்க அமெரிக்காவின் ஸ்வான்ஸீ பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மற்றும் மோரிஸ்ட்டன் மருத்துவமனையிலும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.Post a Comment

Protected by WP Anti Spam