By 7 September 2020 0 Comments

எனக்கு கேர்ள் ஃப்ரெண்ட் இருக்கா!! (மகளிர் பக்கம்)

ஓட்டப் பந்தய வீராங்கனை டூட்டி சந்த்

2018 ஆசிய போட்டியில், 100 மீ ஓட்டப் பந்தயத்தில் புதிய சாதனையை படைத்து இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் வென்ற டூட்டி சந்த், தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாக பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்து தன்னை ஓரினச் சேர்க்கையாளர் என அறிவித்தார். ஊரில் இருக்கும் 19 வயது தோழியை, ஐந்து வருடங்களாக காதலித்து வருவதாகவும்.

அவரைதான் வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுத்திருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு விளையாட்டு வீராங்கனை இப்படி தன்பாலின ஈடுபாட்டை வெளிப்படையாக பொது அவையில் கூறியுள்ளது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

23 வயதே நிரம்பிய டூட்டி சந்த், ஒடிசா மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சிறிய கிராமத்தை சேர்ந்தவர். பல தடைகளை கடந்து ஆசிய விளையாட்டில், 100 மீ ஓட்டப்பந்தயத்தை 11.28 விநாடிகளில் கடந்து அவரின் முந்தைய சாதனையை முறியடித்தார். 18 வயதில் ஆசிய ஜூனியர் விளையாட்டில் இரண்டு தங்கப் பதக்கங்கள் பெற்றார்.

ஆனால் அவர் உடலில் அதிகமான ஆண்ட்ரோஜென் (குறிப்பாக டெஸ்டோஸ்டிரோன்) இருப்பதால் அடுத்த காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க முடியாது எனத் தெரிவித்தனர். பிறகு அதையும் ேபாராடி ஜெயித்தார். . “முதலில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரவே கூடாது என்றனர். அதை மீறி வெளியில் வந்து நாட்டிற்காக விளையாடினால், நீ பெண் என்பதை நிரூபிக்க வேண்டும் என்கிறார்கள்” என ஆவேசப்பட்டார்.

உலக சாம்பியன்ஷிப் போட்டிக்காக ஹைதராபாத்தில் பயிற்சி எடுத்துவரும் டூட்டி, செய்தியாளர்களிடம், அவர் காதலிக்கும் பெண், புவனேஷ்வர் கல்லூரியில் படித்து வருவதாக தெரிவித்து, மற்ற விவரங்களை தர மறுத்துவிட்டார். அவரின் அக்கா, டூட்டியை குடும்பத்தில் இருந்து வெளியேற்றி சிறையில் அடைக்கப்போவதாக கூறினார். தன் அக்கா தேவையில்லாமல் இதில் தலையிடுவதாகவும், தன் காதலி தன்னை மிரட்டுவதாக பொய்யான செய்திகள் பரப்புவதுமாக தெரிவித்த டூட்டி, அக்காவின் மிரட்டல்களுக்கு பயந்து கட்டுப்படப்போவதில்லை எனத் தெரிவித்தார்.

“என் குடும்பத்திடம் என் நிலைமையை எடுத்துக் கூறியும், அவர்கள் அதை பொருட்படுத்தவேயில்லை. இனிமேல் நான் பயந்து வாழப்போவதில்லை. இந்தியாவில் பலர் சமூகத்திற்கு அஞ்சி தங்களின் உரிமைகளை இழந்து தவிக்கும் நேரத்தில், பொது கவனத்தில் இருக்கும் நான், மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாய், தன்பாலின ஈடுபாடுள்ள மக்களுக்கு பாதுகாப்பு உணர்வை தருவதற்காகவே இதைச் செய்தேன்” எனத் தெரிவித்தார்.

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், டூட்டியின் துணிச்சலுக்கு உலகளவிலிருந்து பாராட்டுக்கள் குவிகின்றன. இவருக்கு அமெரிக்கா தொலைக்காட்சி பிரபலம் எலென் டிஜெனரஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், டூட்டியை கண்டு பெருமிதம் கொள்வதாக தெரிவித்து, வாழ்த்துகளையும் கூறினார்.

நடிகர் சித்தார்த் தன் டுவிட்டர் பக்கத்தில், “டூட்டி சந்த், மைதானத்திற்குள்ளும் சரி, வெளியிலும் சரி தான் ஒரு சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளார்” என்றார். அதே போல் மஹிந்த்ரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்த்ராவும் டுவிட்டரில் வாழ்த்துகளை கூறியுள்ளார்.

செப்டம்பர் 2018ல், டெல்லி உச்சநீதிமன்றம், சட்டப்பூர்வ வயதை கடந்த இருவர் உறவு கொள்வது அவர்களின் தனிப்பட்ட உரிமை என்று கூறி ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என்று அறிவித்தது. சுமார் 25 நாடுகளில் ஓரினச்சேர்க்கை சட்டப்பூர்வமானதாக உள்ளது.

தன்பாலின உறவு இயற்கைக்கு புறம்பானது எனப் பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்தியா பல வேறுபட்ட கருத்துகளை கொண்ட நாடு, வேற்றுமைகளில்தான் நம் ஒற்றுமை இருக்க வேண்டும். தன் துணையை தேர்வு செய்வது ஒவ்வொரு மனிதனின் சுய உரிமை, சுய விருப்பம். அதை இந்த அரசாங்கம் மதித்து, அவர்களுக்காக உரிமையையும், பாதுகாப்பையும் வழங்கும் என்றும் கூறியுள்ளது.

“எது நடந்தாலும் என் கவனம் முழுவதும் என் போட்டியின் மீதுதான் இருக்கும். அடுத்து வரும் உலக போட்டிக்காகவும், ஒலிம்பிக் போட்டிக்காகவும் என் முழு உழைப்பையும் அளித்து பயிற்சி எடுத்துவருகிறேன். கண்டிப்பாக எதிர்காலத்தில் நான் காதலிக்கும் பெண்ணுடன் சேர்ந்து வாழ்வேன்” எனக் கூறியுள்ளார் டூட்டி சந்த்.Post a Comment

Protected by WP Anti Spam