கண்டி இராச்சிய மன்னனால் வழிபடப்பட்ட வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம்!! (கட்டுரை)

Read Time:9 Minute, 55 Second

கிழக்கிலங்கையின் சின்னக் கதிர்காமம், உபய கதிர்காமம் என்னும் பெயர்களால் அழைக்கப்படும் வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோயில் சரித்திரச் சிறப்பும் பக்தி மகிமையும் கொண்ட முருகன் ஆலயமாகும்.

வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் திருகோணமலை மாவட்டத்தின் தென் எல்லையிலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் வட எல்லையிலும் மகாவலி கங்கையின் கிளை நதியான வெருகல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

வயல்வெளிகளுக்கு நடுவே எழில்மிகு சூழலில் இவ்வாலயம் தெய்வீக பொலிவுடன் அமைந்துள்ளது. ஆலயத்தின் எதிரே கிழக்கில் தாமரைப் பொய்கையும், ஆலயத்தைச் சூழ்ந்து ஆல், வில்வம், மருதை, இலுப்பை முதலான நிழல் தரும் பெருவிருட்சங்களும் நிறைந்துள்ளன.

மாணிக்க கங்கை ஓரத்தில் சிறப்புமிகு கதிர்காமம் அமைந்திருப்பது போன்று வெருகல் கங்கை ஓரத்தில் பெருமைமிகு வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது.

கதிர்காமத்தில் கதிரமலை, வள்ளிமலை அமைந்திருப்பது போல் இங்கு வெருகல்மலை, படிவெட்டு மலை என்பன அமைந்துள்ளன.

இச்சிறப்புகள் பக்தர்களுக்கு கதிர்காமத்தை நினைவுபடுத்துவதனால் அடியார்கள் இத்தலத்தை ‘சின்னக் கதிர்காமம்’ எனவும், ‘உபய கதிர்காமம்’ எனவும் போற்றி பக்தியுடன் வழிபடுகின்றனர். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் தெய்வீகச் சிறப்புகள் அமையப் பெற்ற புண்ணிய திருத்தலம் வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோயில்.

இக்கோயில் பிரதேசம் திருகோணமலை மாவட்ட நிர்வாகப் பரப்பில் ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் சேருவில தேர்தல் தொகுதியில் அமைந்துள்ளது.

இவ்வாலயம் தொடர்பான கர்ண பரம்பரைக் கதை நெடுங்காலமாக வழக்கில் இருந்து வருகிறது.

வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோயில் தற்போதுள்ள இடத்தில் ஒரு ஆலமரம் படர்ந்து வளர்ந்து நின்றதாகவும், அந்த ஆல மரப் பொந்தில் சுயமாக தோன்றிய வேல் ஒன்று இருந்ததாகவும் அந்த வேலுக்கு மக்கள் பூசை செய்து வழிபாடுகளை மேற்கொண்டு வந்ததாகவும் கர்ண பரம்பரைக் கதை மூலம் அறிய முடிகிறது.

ஒரு சமயம் இந்தியாவிலிருந்து இலங்கை வந்த நல்லைநாதச் செட்டியார் தன் உடம்பில் உள்ள படைநோய் நீங்கும் பொருட்டு திருகோணமலை வழியாக கதிர்காமத்திற்கு கால்நடையாக தலயாத்திரை மேற்கொண்டு வெருகலை அடைந்த சமயம் இரவு நேரமாகிவிட்டமையாலும் மிக்க களைப்புற்றிருந்தமையாலும் வெருகலில் வேல் இருந்த ஆலமரத்தின் கீழ் இரவுப் பொழுதில் தூங்கியுள்ளார்.

களைப்பால் செட்டியார் மிகுந்த தூக்கம் கொண்டிருந்த வேளையில், முருகப் பெருமானான கதிர்காமக் கந்தன் செட்டியாரின் கனவில் தோன்றி அவ்விடத்தில் தனக்கு ஓர் ஆலயம் அமைக்கும்படி அருளாணை இட்டுள்ளார்.

கந்தனின் அருளாணையினால் திகிலடைந்த செட்டியார், ஆலயம் அமைப்பதற்கு நான் பணம், பொருளுக்கு என்ன செய்வேன் எனப் புலம்பி கந்தன் அருள் வேண்டிய போது, கந்தன் செட்டியார் முன்பாக மீண்டும் கனவில் தோன்றி கல்மலையில் திரவியம் இருப்பதாகவும் அங்கு சென்று திரவியக் கடாரம் எடுத்து ஆலயம் அமைக்கும்படியும் கூறி திரவியம் இருக்கும் கல்மலைக்கு செல்லும் வழியையும் கந்தன் செட்டியாருக்குக் கூறியுள்ளார்.

முருகப் பெருமான் கூறியபடி செட்டியார் கல்மலையுள்ள இடம் சென்று திரவியக் கடாரத்தை பெற்று அதில் இருந்த திரவியங்களைக் கொண்டு சித்திரவேலாயுத சுவாமிக்கு ஆலயம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

செட்டியார் ஆலயம் அமைக்க திரவியம் எடுத்த இடம் இப்பொழுதும், ‘திரவியம் எடுத்த இடம்’ என்னும் பெயரால் மக்களால் அழைக்கப்பட்டு வருகின்றது.

ஆலயத் திருப்பணியில் ஈடுபட்ட செட்டியார் கர்ப்பக்கிருகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்பவற்றைக் கொண்ட ஆலயத்தைக் கட்டி முடித்துள்ளார்.ஆலய கட்டட வேலைகளை முடித்த செட்டியார் கண்டி மன்னனிடம் சென்று மன்னிடம் ஏழு மாணிக்கக் கற்களை பெற்று வந்து அவற்றை அவ்வாலயக் கருவறையில் யந்திரத்தின் கீழ் வைத்து கந்தனான முருகப்பெருமானை பிரதிஷ்டை செய்துள்ளார்.

ஆலய திருப்பணியை நிறைவேற்றிய செட்டியார், ஆலய கும்பாபிசேகத்திற்கு கண்டி இராச்சிய மன்னனையும் அழைத்தமையால் மாணிக்கக் கற்களை வழங்கிய கண்டி மன்னனும் வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோயில் கும்பாபிஷேகப் பெருவிழாவில் கலந்து கொண்டார். கண்டி மன்னன் ஆலய கும்பாபிஷேகத்திற்கு வந்த சமயம் வரும் வழியில் மக்கள் வெருகல் ஆலயத்திற்கு அண்மையில் வழியில் வீதியில் நெற்கதிர்களால் பந்தல் அமைத்து வரவேற்றுள்ளனர்.

இதனால் மகிழ்ச்சியடைந்த கண்டி மன்னன் அவ்விடயத்திற்கு ‘கதிர்வெளி’ எனப் பெயர் சூட்டியுள்ளார்.

வெருகல் சித்திர வேலாயுத சுவாமி கோயில் திருப்பணி வேலைகளை முடித்து செட்டியார் ஆலய கும்பாபிஷேகத்தை இனிதே செய்து முடித்ததும் முருகன் அருளால் செட்டியாரின் உடலில் இருந்த படைநோயும் நீங்கி விட்டதாக வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோயில் வரலாறு தொடர்பிலான கர்ணபரம்பரைக் கதை மூலம் அறிய முடிகிறது.

கண்டி மன்னன் ‘கதிர்வெளி’ எனப் பெயர் சூட்டிய பெயர் மருவி இப்பொழுது அவ்விடம் ‘கதிரவெளி’ என அழைக்கப்படுகின்றது. இன்றுள்ள கதிரவெளி கிராமம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வட எல்லைக் கிராமமாகும். செட்டியாரால் அமைக்கப்பட்ட ஆலயம் காலத்திற்குக் காலம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டும், கட்டடங்கள் விஸ்தரிக்கப்பட்டும் இப்போது சிறப்புடன் எழிலாய் திகழ்கிறது.

வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோயிலில் கருவறையில் வள்ளி, தெய்வானை சமேத சித்திர வேலாயுதப் பெருமான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். இங்கு மகா மண்டபத்தில் மகாவல்லி, கஜவல்லி சமேதராக ஆறுமுகப் பெருமான், உமையம்மை சமேத சந்திரசேகரர் மூர்த்தங்கள் தெற்கு வாசல் நோக்கி உள்ளன. வசந்த மண்டபம் வேறாக உள்ளது. பரிவார மூர்த்திகளான விநாயகருக்கும், பைரவருக்கும் தனிக் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வெருகலில் சித்திரவேலாயுத சுவாமி கோயிலின் தென்புறத்தில் விசேடமாக அமைக்கப்பட்ட கதிர்காம சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கருவறையான மூலஸ்தானத்தில் முருகன் திருவுருவமோ, வேலோ பிரதிஷ்டை செய்யப்படவில்லை. அட்சர மந்திரம் எழுதி வைக்கப்பட்ட பேழையே கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இங்கு கதிர்காமத்தில் பூஜை நிகழ்வது போல் திரைமறைவிலேயே பூசை நடைபெறுகிறது. வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோயிலுக்கு சற்றுத் தூரத்தில் காவடிப் பிள்ளையார் கோயில் உள்ளது. சித்திரவேலாயுத சுவாமி கோயிலுக்கு கிழக்கு திசையில் வீரபத்திரர் கோயில், தாமரைக்குளம், சூரன் கோட்டை என்பன அமைந்துள்மை வரலாற்று சிறப்பாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இது தெருஞ்சா உங்க டீச்சருக்கே நீங்க டஃப் கொடுக்கலாம் ! (வீடியோ)
Next post பெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…!! (அவ்வப்போது கிளாமர்)