தேவை இவர்களுக்கு தொழில்பயிற்சி!! (மகளிர் பக்கம்)

Read Time:16 Minute, 3 Second

இருவர் மூவராய் இணைந்து… பொது இடங்களிலும், பேருந்து நிறுத்தங்களிலும் விரல்களையும் கைகளையும் அசைத்து, சைகை செய்து, தங்களுக்குள்ளாகவே பேசி, சிரித்து, மகிழ்ந்து, பிறகு மீண்டும் விரல்களை அசைக்கும் ‘காது கேளாத மற்றும் வாய்பேச முடியாத’ சிறப்புக் குழந்தைகளை பலமுறை பார்த்து கடந்திருப்போம். தங்களின் மௌன மொழியை விரல் அசைவில் வித்தையாக்கி, மனப் பகிர்தல்களை நிறைவேற்றிக்கொள்ளும் இவர்களின் கல்வி, வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு குறித்து அறியவும், இவர்களது சைகை மொழி (sign language) குறித்து தெரிந்துகொள்ளவும்,

சென்னை மைலாப்பூரில் இயங்கிவரும் சி.எஸ்.ஐ. காதுகேளாதோர் மற்றும் வாய்பேச இயலாதோருக்கான சிறப்புப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜேம்ஸ் ஆல்ஃபர்ட் அவர்களை சந்தித்தபோது… ‘‘என்னைப் பொறுத்தவரை இயல்பான குழந்தைகள். மாற்றுத்திறனாளி குழந்தைகள் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. இவர்களும் திறமையானவர்கள்தான். எந்த விசயத்தையும் விரைவாக கற்கும் திறன் கொண்டவர்கள். சாதாரண குழந்தைகளைப்போல இவர்களும் நன்றாகவே படிக்கிறார்கள். நன்றாகவே செயல்படுகிறார்கள். இவர்களாலும் பார்க்க முடியும். படிக்க முடியும், எழுத முடியும். நன்றாக வேலை செய்ய முடியும்.

விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள முடியும். அப்படி இருக்க ஏன் அவர்களை இயலாதவர்களாக முடிவு செய்து குறுகிய வட்டத்திற்குள் அடைக்க வேண்டும். நம் அனைவருக்கும் தெரியாத ஒன்று, வராத ஒன்று என்பது கண்டிப்பாக இருக்கும். அதற்காக நாம் குறையுள்ளவர்களா? காதுகேட்காத வாய்பேச முடியாதவர்களின் குறைகளை களைந்து அவர்களின் வாழ்வாதாரத்துக்கான வழியினை செய்து கொடுத்துவிட்டால் அவர்களும் நம்மைப்போல் இயல்பானவர்களே.நம் ஒவ்வொருவருக்கும் எப்படி தாய் மொழி என்கிற ஒன்று இருக்கிறதோ அதைப்போல, இவர்களின் தாய் மொழி சைகை எனப்படும் சைன் லாங்வேஜ்.

தங்கள் செவியால் ஒலியை உள்வாங்க முடியாத நிலையில், பேச்சு வராமல், தங்களைப் போன்றவர்களிடம் தொடர்புப்படுத்திக்கொள்ள சைகை மொழியை இவர்களே சுலபமாக உருவாக்கிக் கொள்கிறார்கள். ஒலிவாங்கி கருவிகள் மூலமாக இவர்களுக்கு லிப் மூவ்மென்ட் பயிற்சி, ஓரல் மெத்தெட் போன்ற வழிகளில் கற்பிக்க முயற்சித்தாலும், விரல்களை அபிநயித்து, காற்றில் அசைந்து இவர்கள் காட்டும் சைகை மொழியே இவர்களுக்கு சுலபமானது. அவர்களுக்கான மொழி அது. அதை ஏன் நாம் தடுக்க வேண்டும்? இவர்களின் வாழ்க்கை எப்போதும் குறுகிய வட்டம்தான்.

நம்மோடு இணைய முற்படவேமாட்டார்கள். பெரும்பாலும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வார்கள். இவர்கள் உணர்வுகளை நம்மாலும் புரிந்துகொள்வது கடினம். தங்கள் உணர்வை வெளிப்படுத்த முடியாத நிலையில் அதிகம் முன்கோபக்காரர்களாகவும் இருப்பார்கள். ஒருசிலரை மட்டுமே தங்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாக நினைப்பார்கள். அவர்கள் சொன்னால் உடனே கேட்பார்கள். எங்களிடம் 130 குழந்தைகள்வரை உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களாக இங்கேயே தங்கி பயில்கிறார்கள். கல்வி, தங்கும் இடம், உணவு, சீருடை இவர்களுக்கு இலவசம்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் குழந்தைகள். ஒருசில குழந்தைகள் தவிர, பெற்றோர் இல்லாத, அப்பா மட்டும் இல்லாத, விவாகரத்துப்பெற்ற, சிங்கிள் பேரண்ட் குழந்தைகள் என எல்லோரும் கலந்தே இங்கு தங்கிப் படிக்கிறார்கள். ஓரளவுக்கு வசதியோடு, பணம் செலுத்த முடிந்தவர்களாக இருந்தால் அவர்களிடம் மட்டும் குறைந்த அளவிலான கல்வி கட்டணத்தை பெறுகிறோம். இயல்பான குழந்தைகளுக்கு இணையாக இவர்களையும் மாற்ற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். ஸ்கூல் ஆஃப் எஜுகேஷனோடு இணைந்து சமச்சீர் கல்வியினை இங்கு படிக்கும் மாணவர்களுக்கு வழங்குகிறோம்.

இங்கு 6 முதல் 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சியும், கார்பென்டரி பயிற்சியும் கற்றுத்தரப்படுகிறது. பள்ளி இறுதி ஆண்டு முடிக்கும் மாணவர்களில் மேலே படிக்க விரும்பும் மாணவர்களை, இவர்களுக்கென இயங்கும் செயின்ட் லூயிஸ் கல்லூரி, எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி போன்ற சிறப்புக் கல்லூரிகளில் படிக்க ஏற்பாடு செய்து தருகிறோம். படிப்பை முடித்து வேலை என்று வரும்போதுதான் இவர்கள் சிக்கலில் மாட்டுகிறார்கள். எந்த நிறுவனமும் இவர்களுக்கு வேலை வாய்ப்பைத் தர முன்வருவதில்லை.

பள்ளி இறுதி முடித்ததுமே நாங்கள் அனைவரையும் வெளியில் அனுப்பிவிடுகிறோம். வாய்ப்பு கிடைக்கும் குழந்தைகள் கல்லூரிக்குள் நுழைந்து விடுகிறார்கள். மீதி குழந்தைகளின் நிலை? அப்பா, அம்மா இல்லாத குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகளாக இருந்தால் வாய்பேச முடியாத நிலையில் வெளியில் சென்று வாழ்வாதாரத்திற்கு என்ன செய்ய முடியும்? சில வருடங்கள் கழித்து மீண்டும் இந்தக் குழந்தைகளை சந்திக்கும்போது தங்களின் உணவு மற்றும் அடிப்படைத் தேவைக்காக பிட்பாக்கெட் திருடர்களாகவும், சமூகவிரோதிகளாகவும், வேறுமாதிரியான நிலைக்கும் மாற்றப்பட்டு இருப்பார்கள்’’ எனத் தன் ஆதங்கத்தை மிகவும் வேதனையோடு தெரிவித்தார்.

‘‘இவர்களின் நலன் கருதி, இவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ஒன்றை நாங்கள் எங்கள் பள்ளி வளாகத்திலேயே நடத்தினோம். 400க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டார்கள். அதில் நிறைய பெண் குழந்தைகள் இருந்தார்கள். எங்களை அதள பாதாளத்தில் தள்ளிய மாதிரியான நிலையில் இருக்கிறோம், மிகவும் கஷ்டமான சூழல் எனவும் வாய்ப்பு கேட்டு பல மாணவர்கள் வந்தார்கள். அந்த நிகழ்வு எங்களுக்கு மிகவும் வருத்தமாகவே இருந்தது. ‘பசியோடு இருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதைவிட மீன் பிடிக்க கற்றுக் கொடு’ என்ற பழமொழி உண்டு.

வாழ்வாதாரத்திற்குத் தேவையானதை செய்து கொடுத்துவிட்டால் தங்கள் பசிக்காக பிட்பாக்கெட் அடிப்பது, திருடுவது, வேறு மாதிரியான தவறான செயல்களுக்குள் தங்களை திசை திருப்புவது என செல்ல மாட்டார்கள் என முடிவு செய்தோம். தொழில்முறை பயிற்சியை இவர்களுக்கு வழங்கலாம் என முடிவு செய்து பள்ளியிலேயே கம்ப்யூட்டர், தையல், ஆர்கானிக் தோட்டம் அமைத்தல், மாடித் தோட்டம் செய்வது, ப்யூட்டி பார்லர், பேக்கரி மேக்கிங், கார்பென்டரி பயிற்சிகளை, முறையான பயிற்சியாளர்களைக் கொண்டு சொல்லிக்கொடுக்கத் தொடங்கினோம். எதை எல்லாம் கண்ணால் பார்த்து அவர்களால் செய்ய முடிகிறதோ அவற்றை வேலை வாய்ப்பிற்காக பயிற்சிகளாகத் தேர்ந்தெடுத்து செய்ய வைத்தோம்.

இதுவரை 250 மாணவர்கள் எங்கள் நிறுவனத்தில் பயிற்சி எடுத்துள்ளனர். 210 பேர் வரை வேலை வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள். ஐ.டி,, ரிலையன்ஸ், மேக்ஸ், கே.எப்.சி. போன்ற நிறுவனங்களில் பணிவாய்ப்பு இவர்களுக்குக் கிடைத்துள்ளது. மேலும் சோலார் தயாரிப்பு, லாண்டரி பயிற்சி, பாக்குமட்டையில் தட்டு, டம்பளர் தயாரிப்பு போன்றவற்றுக்கு பயற்சி கொடுப்பதற்கான முயற்சியிலும் உள்ளோம். பயிற்சிகளை வழங்கத் தேவையான இடவசதி, ஆய்வக வசதி போன்றவைகள்தான் எங்களின் பிரச்சனையாக உள்ளது. பொருளாதார சிக்கலினாலும் ஒவ்வொன்றையும் மெதுவாகச் செய்யும் நிலையும் ஏற்படுகிறது.

நாங்கள் வழங்கும் பயிற்சிகள், காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோருக்கு மட்டும் என்கிற நிலையைக் கடந்து தற்போது, ஆட்டிசம் குறைபாடு, மாற்றுத் திறனாளி மாணவர்கள், மாற்றுப் பாலினத்தவர் (trans gender) என விரிவடைந்திருக்கிறது. பயிற்சி முடிக்கும் காலம்வரை இவர்களுக்கு உணவும், தங்குமிடமும் முற்றிலும் இலவசம். வாய்பேச முடியாத பெரும்பாலான மாணவர்கள் மன அழுத்தத்தோடு வருகிறார்கள். பெற்றோர்களாலும் அவர்களைப் புரிந்துகொள்ள முடியாது. ஞாயிற்றுக் கிழமைகளில் இவர்களுக்கென குடும்பநல ஆலோசனையும் (family counselling) இங்கு வழங்கப்படுகிறது.

வாய்ப்பை எதிர்நோக்கி இங்கு வரும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு வருமானம் ஈட்ட வழிவகை செய்யும், மெஹந்தி ஆர்ட், ஃபேஷன் மேக்கிங், ஜுவல்லரி மேக்கிங் போன்றவற்றை கற்றுத்தர விரும்பும் தன்னார்வலர்கள் தாராளமாக எங்களை அணுகலாம்’’ என முடித்தார். பிளாரன்ஸ் அம்மையார் அவர்கள் 1886ல் பாளையங்கோட்டையில் காதுகேளாதோர் மற்றும் வாய்பேச இயலாதோருக்கான முதல் பள்ளியை தொடங்கினார். அப்போது சென்னையில் இருந்து பாளையங்கோட்டை சென்று நிறைய குழந்தைகள் படித்தனர். எனவே சென்னையிலேயே ஒரு பள்ளியைத் துவங்க முடிவு செய்தார். சென்னை திருவல்லிக் கேணி பகுதி இஸ்லாமிய சமூக மக்கள் அதிகமாக வாழும் பகுதி.

இவர்கள் ஒரே ரத்த உறவில் திருமணம் செய்யும் பழக்கம் கொண்டவர்கள் என்பதால், இவர்களது குழந்தைகள் அதிகம் இப்பிரச்சனையால் பாதிப்படைந்திருந்தனர். எனவே சி.எஸ்.ஐ.காதுகேளாதோர் மற்றும் வாய்பேச இயலாதோர் பயிற்சி நிறுவனம் மைலாப்பூரில் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் 20 மற்றும் 30 வயதிற்குமேல் பேசமுடியாத நிலையில் சுற்றித் திரிந்தவர்களை அழைத்து, தொழில் பயிற்சியாக வெல்டிங், லேத், கார்பென்டரி, டெய்லரிங் பயிற்சிகள் கொடுக்கப்பட்டது. அப்போதைய காலகட்டத்தில் இங்கு பயிற்சி எடுத்தவர்கள் அதிகமாக அசோக் லேலாண்ட் போன்ற நிறுவனங்களில் பிட்டர், வெல்டராகப் பணியில் சேர்க்கப்பட்டனர்.

பலர் ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளி நாடுகளில் வேலை கிடைத்து சென்று பரவலாக குடும்பமாக செட்டிலாகிவிட்டார்கள். தொடர்ந்து 1912ல் அதே வளாகத்திற்குள் ஜனனா மிஷினரி சொஷைட்டி ஆஃப் இங்கிலாந்து நிறுவனத்தால் சி.எஸ்.ஐ. காதுகேளாதோர் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. ஜனனா என்றால் பரிதாபத்திற்குரிய பெண்கள் என்கிற அர்த்தம். 1927ம் ஆண்டு வளாகத்திற்குள் ஆங்கிலவழிக் கல்வி கொண்டுவர முடிவு செய்தனர். தற்போது எல்.கே.ஜி முதல் 12ம் வகுப்புவரை இதில் உள்ளது. ஹியரிங் எய்ட் கண்டுபிடிப்பதற்கு முன்பாக புனல் வழியாக மைக் வைத்து சொல்லித்தரும் கற்றல் முறை இருந்துள்ளது.

இதில் பல கட்ட பயிற்சிகளும் உண்டு. 1947ல் தமிழ்வழி் கல்வி கொண்டுவர முடிவு செய்தார்கள். அத்தோடு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஒன்றையும் தொடங்கி சைன் லாங்வேஜ் மற்றும் வாய்வழிக் கற்றல்(oral) முறையையும் தொடங்கினார்கள். முறையாகப் பயிற்சி கொடுத்தால் இவர்களையும் பேசவைக்க முடியும் என முடிவு செய்து, லிப் ரீடிங் முறை கொண்டு வரப்பட்டது. லிப் ரீடிங் முறை முதலில் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சியாகத் வழங்கப்பட்டது. புரிந்துகொள்ள முடியாத வார்த்தைகளுக்கும், ஒரே மாதிரி ஒலி வடிவம் கொண்ட வார்த்தைகளையும் புரிய வைப்பதற்கு சைன் அண்ட் லிப் ரீடிங் இரண்டையும் பயன்படுத்தி இவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது. கோயம்புத்தூர், திருவனந்தபுரம், மும்பை, ஆந்திரா போன்ற இடங்களில் இந்தியன் சைன் லாங்வேஜ் என்றே தனியாக பயிற்சிப் பள்ளிகள் இவர்களுக்காக உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுத்தைகளின் மரணசாசனங்கள்!! (கட்டுரை)
Next post சமையலறை பொருட்களுக்காக ஒரு அருங்காட்சியகம்!! (மகளிர் பக்கம்)