By 21 September 2020 0 Comments

திருமணத்திற்கு முன்னால் ஒரு டூயட்… !! (மகளிர் பக்கம்)

திருமணம் முடிவானால் போதும், திருமணம் செய்து கொள்ளபோகும் புதுமண ஜோடிகள் கனவு உலகத்தில் மிதக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அதுவும் நிச்சயதார்த்தம் முடிவான நொடியில் இருந்தே தங்களை ஹீரோ-ஹீரோயினாக நினைத்து கனவு உலகத்துக்குள் சஞ்சரிக்கிறார்கள். தங்கள் திருமணம் எப்படி நடக்க வேண்டும்? தங்கள் உடை எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் பெரும்பாலும் பெற்றோரைத் தாண்டி இவர்களே பேசி முடிவு செய்கிறார்கள். அதில் லேட்டஸ்ட் டிரெண்ட் ஃப்ரீ மேரேஜ் வெட்டிங் சூட்.

ஒவ்வொருவருக்குள்ளும் தங்கள் வாழ்க்கையைப் பற்றி எக்கச்சக்கமான கனவுகள், கற்பனைகள் இருக்கும். அந்தக் கனவுகளுக்குத் தீனிபோட இருக்கவே இருக்கு திரைப்படங்கள். திரைகளில் வரும் ஹீரோ-ஹீரோயின் என்ன உடை அணிந்து வருகிறார்களோ, எந்த லொக்கேஷனில் அவர்கள் ஆடிப் பாடுகிறார்களோ, அதே மாதிரியான உடை, அதே இடமென ஆசைகளை தங்கள் வாழ்க்கையில் செய்து பார்த்துவிட இன்றைய இளம் தலைமுறை ரொம்பவே மெனக்கெடுகிறார்கள். தன்னைக் கரம் பற்றப்போகும் இணையோடு அதே உடையில் அதே லொக்கேஷனில்…

அதே பாடலுக்கு ஆடிப்பாடி அதை பதிவு செய்து திருமண போட்டோ, வீடியோ, ஆல்பங் களை போல நினைவுப் பொக்கிஷமாக பாதுகாக்கிறார்கள். இந்த வீடியோக்களை நண்பர்களிடம் சமூக வலைத்தளங்கள் வழியாகப் பகிரவும் தொடங்குகிறார்கள். இந்த ஃப்ரீ மெரிட்டல் வெட்டிங் வீடியோக்கள் 30 செகண்டில் தொடங்கி, இரண்டு முதல் மூன்று நிமிடங்களையும் தாண்டியும் உள்ளது. சில ஜோடிகளின் வீடியோக்கள் இரண்டு மூன்று லொக்கேஷன்களில், இரண்டு மூன்றுவிதமான வேறுவேறு உடைகளில் வீடியோவாகவும் உள்ளது.

இவை பத்து பதினைந்து நிமிடங்களைக் கடந்து இருக்கும். திருமணத்திற்கு கல்யாண மண்டபம், அழைப்பிதழ், உடைகள் இவற்றுக்கு அடுத்தபடியாக இளைஞர் பட்டாளம் அதிகம் கவனம் செலுத்துவது திருமணப் புகைப்பட போட்டோ கிராஃபி மற்றும் வீடியோகிராஃபியில்தான். இதில் லேட்டஸ்ட் டிரெண்டாக வலம் வருவது சேவ் தி டேட் வாட்ஸ் ஆப் அழைப்பிதழ்கள். 30 செகண்டுக்குள் திருமணம் செய்துகொள்ளப்போகும் இணை, திரைப்படம் தொடர்பான ஏதாவது ஒரு தீமில் தங்களை வெளிப்படுத்தி, அதில் தங்கள் திருமணம் நடக்கப்போகும் இடம், தேதி, நேரம் இடம் பெறச் செய்து பதிவாக்கி, அதையே அழைப்பிதழாக வாட்ஸ் ஆப் மூலமாக நண்பர்களிடம் பகிரத் தொடங்கியுள்ளனர்.

காதலித்து கரம் பிடிக்கும் ஜோடிகள் மட்டுமில்லை, வீட்டார் பார்த்து முடிவு செய்யும் திருமணங்களில் இந்த டிரெண்ட் தலைகாட்டத் தொடங்கியுள்ளது. இது குறித்து சென்னை கோடம்பாக்கத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீசாய் ஸ்டுடியோஸ் பத்மநாபனை அணுகியபோது இளைஞர்களின் இந்த லேட்டஸ்ட் வீடியோகிராஃபி கான்செப்டை நம்மிடம் பேசி பகிர்ந்து கொண்டார். ‘‘இன்விடேஷனுக்கு பதிலாக நண்பர்களிடையே ‘சேவ் தி டேட்’ எனும் பெயரில் வாட்ஸ் ஆப் இன்விடேஷன்கள் சமீபத்தில் ரொம்ப பிரபலம். அதிகபட்சம் 30 செகண்டில் இந்த அழைப்பிதழ்களைக் கொண்டு வருவோம்.

அதில் தேதியும், இடமும் நண்பர்களின் நினைவுக்காக பகிரப்படும். இதையும் தாண்டி சில ஜோடிகள் தங்களை சில படங்களில் நடித்த தங்களுக்கு பிடித்த ஹீரோ-ஹீரோயின் உடையில், அதே பாடலுக்கு, அதே மாதிரியான இடங்களில், அதே உடையில் படம் பிடித்து தரச் சொல்லிக் கேட்பார்கள். சமந்தா-விஜய் இந்தப் படத்தில் வந்தது மாதிரி அல்லது அஜீத்-காஜல் அஹர்வால் மாதிரி கான்செப்டில் அல்லது பியர் பிரேமா ஜோடி மாதிரி என்றெல்லாம் கான்செப்ட்டோடு கேட்கிறார்கள். இந்தப் பாடல், இந்த இடம், இந்த உடை என அவர்களாகவே தேர்வு செய்து வருகிறார்கள்.

அவர்கள் விரும்புகிற மாதிரி அந்தப் பாடல்களுக்கு நடிக்க வைத்து பதிவு செய்து தருகிறோம். ஒருசில ஜோடிகளுக்கு நாங்களும் சில ஆலோசனைகளைச் சொல்வோம். பெரும்பாலும் பீச் ரிசார்ட்ஸ், ஹில்ஸ் ஸ்டேஷன், பாண்டிச்சேரி, செம்மொழி பூங்கா என இடங்களைத் தேர்வு செய்வோம். பணத்தை செலவு செய்வதில் பிரச்சனை இல்லையென்றால் நெட்டில் இருந்து உடை, கான்செப்ட் எல்லாவற்றையும் டவுன் லோட் செய்து லொக்கேஷன், தீம் எல்லாவற்றையும் முடிவு செய்வோம். சினிமாவில் எப்படி நடிகர், நடிகைகளை இயக்குகிறோமோ அதே மாதிரி இவர்களுக்கும் நடிப்பை சொல்லிக்கொடுத்து சூட் செட்வோம்.

லிப் மூவ்மென்டை வர வைத்தும் சூட் செய்வோம். நிறைய டேக் வாங்குவார்கள். சில நேரங்களில் படப்பிடிப்பு இரண்டு மூன்று நாட்களைக் கடந்தும் செல்லும். இதில் நான்கு முதல் ஐந்து பேர் ஒரு யூனிட்டாக இணைந்து வேலை செய்கிறோம். ஒருத்தர் புகைப்படம் எடுத்தால், ஒருவர் வீடியோ, மற்றொருவர் ஹெலிகேம் டிரோன் ஆபரேட்டர், ஒருத்தர் உதவிக்கு என பிரித்துக் கொள்வோம். டிரோன் பயன்படுத்துவதாக இருந்தால் பொதுவெளிகளை தேர்வு செய்ய முடியாது.

அதற்கு அனுமதிபெற வேண்டும். அதுவே ரிசார்ட்டாக இருந்தால் டிரோன் ஹெலி கேம் பயன்படுத்தலாம். சுதந்திரம் இருக்கும். நாங்கள் இடத்தை முடிவு செய்து, திருமணம் செய்துகொள்ள போகும் இணைகளிடத்தில் சொல்லிவிடுவோம். அவர்கள் அதற்கான ஏற்பாட்டை செய்துவிடுவார்கள். இதற்கென இ.சிஆரில் நிறைய பீச் ரிசார்ட்கள் உள்ளது. குறைவான பட்ஜெட் என்றால் இருக்கவே இருக்கு செம்மொழி பூங்கா’’ என முடித்தார்.

பத்மநாபன், வீடியோ கிராஃபர்

‘‘நான் படித்தது பொறியியல் படிப்பு. அப்பா சின்னத்திரை தொடர்களுக்கு கேமராமேன். இந்தத் துறையில் 45 வருடமாக இருக்கிறார். அப்பாவின் பெயர் பாலசந்தர். கேமரா பாலா என்றால் அப்பாவை எல்லோருக்கும் தெரியும். பந்தம், கனா காலங்கள், அஞ்சலி போன்ற தொடர்களில் பணியாற்றியுள்ளார். அத்தோடு திருமண புகைப்படங்கள், வீடியோக்களும் எடுப்பார். அவரைப் பார்த்து எனக்கும் கேமராவின் மேல் காதல் தொற்றிக்கொண்டது. நான் இந்தத் துறைக்கு வந்த பிறகே கேமராவை இயக்க முழுமையாகக் கற்றுக்கொண்டேன். இப்போது முழுநேரமாக இதில் இறங்கிவிட்டேன்.

திருமணங்களை புகைப்பட ஆல்பங்கள் வழியாக பார்த்த காலங்கள் கடந்து, வீடியோவாக்கி பார்க்கத் தொடங்கினர். நவீன தொழில்நுட்பங்கள் வரவால் இத்துறை நிறையவே மாற்றம் கண்டுள்ளது. கேன்டிட் போட்டோ கிராஃபி என்ற நிலைக்கு பரிணாம வளர்ச்சி கண்ட திருமண ஆல்பங்கள், அதில் இருந்து சற்று முன்னேற்றம் அடைந்து கேன்டிட் வீடியோ கிராஃபி எனும் நிலையை தற்போது எட்டியுள்ளது. இப்போதுள்ள அவசர யுகத்தில் முழுமையாக திருமணம், வரவேற்பு வீடியோக்களை பல மணி நேரம் செலவழித்து பார்க்க யாருக்கும் நேரமில்லை.

எனவே மொத்த திருமணத்தின் சில முக்கிய நிகழ்வுகளை அதற்கென தனியாக கேன்டிட் வீடியோவாக்கி இரண்டு முதல் மூன்று நிமிடத்திற்குள் கொண்டு வந்துவிடுவோம். அதையும் தாண்டி கையில் எடுத்துச் செல்லக் கூடிய சின்ன அளவிலான காபி டேபிள் ஆல்பங்களும் லேட்டஸ்ட் வரவு. ஒரு திருமணத்திற்கு போட்டோகிராஃபி, வீடியோ கிராஃபி, கேன்டிட் பதிவுகள், ப்ரீ மேரிட்டல் வெட்டிங் சூட், சேவ் தி டேட் எல்லாம் சேர்த்து லேட்டஸ்ட் டெக்னாலஜி ஆல்பம், வீடியோவோடு ஒன்றரை லட்சம் வரை ஆகும். இதில் வாட்ஸ் ஆப் வழியாக 30 செகண்டில் நண்பர்களுக்கு பகிரப்படும் ‘‘சேவ் தி டேட்’’ கான்செப்ட் ஒரு காம்டிமெண்டரி’’.Post a Comment

Protected by WP Anti Spam