நெருக்கடி மத்தியில் விவசாய உற்பத்தியும் உணவு இறைமையும்! (கட்டுரை)

Read Time:14 Minute, 14 Second

இருபத்துஓராம் நூற்றாண்டில் நவீனமயப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் விமானப் போக்குவரத்து, நட்சத்திர விடுதிகள் மற்றும் சொகுசு வாகனங்கள் போன்றவற்றின் நுகர்ச்சிக் கலாச்சாரம் மேலோங்கியிருந்த நிலமையில் தற்போதைய கொவிட் 19 நெருக்கடி அடுத்த வேளை உணவிற்கு பருப்பு உள்ளதா, வெங்காயம் உள்ளதா என்று உயிரியின் அடிப்படைத் தேவையான உணவின் முக்கியத்துவம் பற்றி சிந்திக்க தூண்டியுள்ளது. உணவை எங்கே உற்பத்தி செய்வது? யார் உற்பத்தி செய்வது? எவ்வாறு உற்பத்தி செய்வது? எப்படி வினியோகிப்பது? யார் கொள்வனவு செய்வது? போன்ற கேள்விகளும் உலகின் பல திசைகளில் இருந்து எழுகிறன.

இலங்கையை பொறுத்தவரையில் பொருளாதார நெருக்கடியால் அன்னிய செலாவீனம் குறைந்துள்ள நிலையில் இறக்குமதிப் பொருட்களை கட்டுப்படுத்தி விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும், உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்த வேண்டும் என்று அரசாங்கமும் வலியுறுத்துகிறது. இந்த கட்டுரையில், விவசாயம் என்பது கடற்றொழிலையும் ஒட்டுமொத்தமான உணவு உற்பத்தி அனைத்தும் குறிப்பிடப்படுகிறது. இங்கு குறிப்பிடத்தக்க விடையம் என்னவென்றால் இலங்கையினுடைய விவசாயம் மற்றும் உணவுசார்ந்த ஏற்றுமதி ஏறத்தாள 3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும் அதே நேரம் இலங்கையின் உணவு மற்றும் விவசாயத்துடன் தொடர்புபட்ட உரம் போன்ற உள்ளீடுகளின் மொத்தமான இறக்குமதி 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆக அமைகிறது (நிதியமைச்சின் ஆண்டறிக்கை 2018).

தற்போதைய நெருக்கடி மத்தியில் அரசாங்கம் விவசாய மற்றும் உணவு உற்பத்தி பொருட்களை மேலதிகமாக ஏற்றுமதி செய்யலாமா, இறக்குமதி பொருட்களை குறைக்கலாமா எனும் கொள்கைகளை நாடுகிறது. ஆனால் இங்கு விவசாயம் மற்றும் உணவை உள்ளூர் உற்பத்திக்கூடாக அதிகரித்தல் எனும் போது அதை எவ்வாறான பார்வையில் நாங்கள் முன்னெடுக்க வேண்டும்? அடுத்து அதற்காக எவ்வாறான கட்டமைப்பு மாற்றங்களை உருவாக்க வேண்டும்?

சர்வதேச உணவு நெருக்கடியும் விவாதங்களும்

வரலாற்று ரீதியாக மூன்றாம் உலக நாடுகள் விவசாயம் மற்றும் உணவு உற்பத்தியில் கவனம் செலுத்தி வந்த போதும் 1970ம் மற்றும் 1980ம் ஆண்டுகளில் ஏற்பட்ட பெரும் மாற்றத்தால் அபிவிருத்தியடையாத நாடுகள் கூட சர்வதேச உணவு உற்பத்தி முறை மற்றும் சர்வதேச உணவு சங்கிலிகளில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் உணவின் விலைகளில் வந்த பெருமளவு மாற்றங்களால் 1970ம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, உணவுப் பாதுகாப்பு எனும் கருத்தை வெளியிட்டது. அதாவது உலகின் எல்லா மக்களும் உணவுப்பற்றாக்குறையால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த அந்தந்த நாடுகளில் உணவை வினியோகிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அந்த கருத்து முன்வைக்கப்பட்டது.

ஆனால் நடைமுறையில் சர்வதேச உணவு உற்பத்தி முறைகள் மற்றும் பெரும் பல்நாட்டு கம்பனிகளின் தாக்கத்துடன் உணவும் ஏனைய பொருட்களை போல் வர்த்தகமயமாக்கப்பட்டு பங்குச்சந்தைகளில் கூட ஊகவர்த்தகத்திற்கு உள்வாங்கப்பட்டது. அந்த நிலையில்தான் 2007ம், 2008ம் ஆண்டுகளில் ஒரு மாபெரும் உணவு நெருக்கடி உருவாகியது. அதாவது உணவு உற்பத்தியில் சில குழப்பங்கள் வந்து, உணவின் விலையில் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டு 7.5 கோடி மக்கள் பட்டினிக்கு தள்ளப்பட்டார்கள் மற்றும் 12.5 கோடி மக்கள் கடுமையான வறுமைக்குள் தள்ளப்பட்டார்கள். இந்த பெரும் நெருக்கடி பற்றி வோல்டன் பெலோ போன்ற சர்வதேச செயற்பாட்டாளர்கள் சமூகவிஞ்ஞான கண்னோட்டத்தில் பகுப்பாய்வு செய்துள்ளார்கள்.

இந்த உணவு நெருக்கடியின் தாக்கம் காரணமாக சர்வதேச உணவு ஒழுங்குமுறை சம்பந்தமான பல விவாதங்களை உருவாக்கியது. குறிப்பாக 1980ம் ஆண்டுகளுக்கு பிறகு சிறுவிவசாயிகளுடைய முக்கியத்துவம் மற்றும் நிலம் சம்பந்தமான ஆய்வுகள் குறைவாக இருந்த சந்தர்ப்பத்தில் 2008ம் ஆண்டுக்கு பிறகு முன்னெடுக்கப்பட்ட போரட்டங்கள் மூலம் இவை முதன்மைப்படுத்தப்பட்டன. மேலும் 1990ம் ஆண்டுகளில் சர்வதேச விவசாயிகளினுடைய அமைப்புகளில் இருந்து முன்வைத்துக் கொண்டிருந்த உணவு இறைமை எனும் கருத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. உணவு இறமை என்பது உணவு உற்பத்தி, வினியோகம் மற்றும் கொள்வனவு தொடர்பான மக்களுடைய உரிமை மற்றும் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டது என்கின்ற எண்ணக்கருவாகும். எவ்வாறு ஒரு நாட்டின் இறைமை மக்களுடைய உரிமைகளில் தங்கியிருக்கிறதோ, அதே போல் உணவு இறைமையும் மக்களுடைய ஐனநாயக செயற்பாட்டுடன் தொடர்புபட்டதாக முன்வைக்கப்பட்டது.

இங்கு நாங்கள் கவனத்தில் எடுக்கவேண்டிய விடையம் நடைமுறையில் இறைமையென்னும் கருத்து மக்கனுடைய உரிமையில் தங்கியிராமல் அரச அதிகாரத்துடைய நலன்கருதிதான் பயன்படுகிறது. அந்த அபாயத்தை விளங்கி உணவு இறைமை எனும் கருத்தை முழுமையாக மக்களில் தங்கியிருக்;கும் செயற்பாட்டிற்கு கீழ் நடைமுறைப்படுத்தும் தேவையுண்டு.

அடுத்து உணவு பாதுகாப்பு என்று பார்க்கும் போது வெறுமனே அந்தந்த நாடுகளில் மக்களுக்கு தேவையான தானியங்கள் மற்றும் உணவுப்பொருட்களை பஞ்சம் வரும்போது வினியோகிப்பதாக கருதலாம். ஆனால் உணவு இறைமை என்பது அடிப்படையில் அந்தந்த பிரதேசங்களில் வாழும் மக்கள் தங்களுடைய உணவு விருப்பம் மற்றும் உற்பத்தி முறைகளை முன்கொண்டு தமக்கு ஏற்ற ஒரு தன்னிறைவு நிலமையை உருவாக்குவதாகும். இந்த கருத்தை 2008ம் ஆண்டு ஏற்பட்ட உணவு நெருக்கடியின் மத்தியில் வியா கம்பசீனா எனும் சர்வதேச அமைப்பு பலமாக முன்வைத்தது. அந்த அமைப்பினுடைய பெயரின் மொழிபெயர்ப்பு “சிறு விவசாயிகளுடைய வழி” என்பதாகும். இங்கு உணவு என்பது வெறுமனே ஏதாவது ஒருவழியில் உருவாக்குவது மட்டுமல்லாமல் மக்களுடைய வாழ்வாதாரத்துடனும் நாளாந்த உள்ளூர் கொள்வனவுடனும் அமையவேண்டும்.

இவ்வாறான கருத்துகள் 2007ம், 2008ம் ஆண்டுகளில் வந்த நெருக்கடிக்கு பின்பு பெரியளவில் முன்வைக்கப்பட்டாலும் உணவு உற்பத்தி முறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படவில்லை. அந்த நெருக்கடியின் படிப்பினைகளை எமது அரசாங்கமோ சர்வதேச அரசுகளோ உள்வாங்கவில்லை. பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் பிரபலமான வர்த்தக சஞ்சிகை எகொணமிஸ்ட் சென்ற வாரம் உலக உணவுமுறை சம்பந்தமான நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. அங்கு உலக உணவு சங்கிலியின் பெறுமதி எட்டு ரில்லியன் அமெரிக்க டொலர், அதாவது உலக மொத்த உற்பத்தியில் பத்துவீதம் என்றும் 150 கோடி மக்கள் அதில் தங்கியிருக்கிறார்கள் என்றும் வெளியிட்டிருக்கிறது.

உணவு உற்பத்தியும் விவசாய உறவுகளும்

இந்த நிலமையில்தான் கொவிட் 19 அனர்த்தத்துடனான உற்பத்தி மற்றும் போக்குவரத்து பிரச்சினைகளால்; மீண்டும் ஒரு உணவு நெருக்கடி உருவாகியுள்ளது. இங்கு கடந்தகால படிப்பினைகள் ஏன் உள்வாங்கப்படவில்லை? இனியாவது எங்களது உணவு உற்பத்தி கட்டமைப்புகளில் மாற்றங்களை கொண்டுவர முடியுமா? போன்ற விவாதங்கள் சர்வதேச ரீதியாக ஆரம்பித்துள்ளன.

இலங்கை அரசாங்கம் விவசாயம் மற்றும் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. இவ்வாறான அரசநடவடிக்கைகள் விவசாய உற்பத்தியின் ஏற்றுமதி அதிகரிப்பு அல்லது இறக்குமதி குறைப்பு என்பதற்கப்பால் நிலம் மற்றும் உணவு இறைமை போன்ற விடையங்களை உள்வாங்குமா? அதாவது உற்பத்தியை அதிகரித்தல் என்று கூறும் போது அரசாங்கம் விரும்பினால் அரசாங்க கம்பனிகள், தனியார் கம்பனிகள் அல்லது பல்நாட்டுக்கம்பனிக@டாக முதலீடுகளை செய்து உற்பத்தியை அதிகரிக்கலாம். ஆனால் அவ்வாறான உற்பத்தி அதிகரிப்பு என்பது கிராம மட்டங்களில் இருக்கும் சமூக உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்காது. மேலும் அது உள்நாட்டிற்குள்ளோ அல்லது சர்வவைதேச ரீதியாகவோ இருக்கும் வர்த்தகரீதியான ஸ்திரமற்ற விலையேற்றம் விலை குறைப்பையும் கையாளாது.

விவசாயம் என்று கருதும் பொழுது அதை வெறுமனே ஒரு உற்பத்தி சார்ந்த அல்லது தொழில்நுட்ப ரீதியான விடையமாக பார்க்கலாம் அல்லது மக்களுடன் தொடர்புபட்ட உறவுகள் தொடர்பான விடையமாக பார்க்கலாம். சமூக விஞ்ஞானப் பார்வையில் விவசாய உற்பத்திக்கும் விவசாய உறவுகளுக்கும் இடையே பாரிய கருத்து வேறுபாடுகள் உண்டு. இலங்கையில் விவசாயம் மற்றும் உணவு சார்ந்த ஆழமான பார்வை 1970ம் ஆண்டுகளுக்கு பின்னர் வந்த திறந்த பொருளாதார கொள்கைகளுடன் கைவிடப்பட்டது. இவ்வாறான விவசாய உறவுகளை கவனம் செலுத்தாத பட்சத்தில்தான் இலங்கையில் விவசாயம் சார்ந்த கொள்கைகள் தெளிவற்ற நிலையில் இருக்கின்றன.

விவசாய உறவுகளை மாற்றியமைக்க வேண்டும் எனும் போது சிறு விவசாய உற்பத்தியாளர்களுடைய நிலம்சார்ந்த கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். அதாவது அரசாங்கம் நிலசீர்திருத்த திட்டங்களூடாக காணியில்லாதவர்களுக்கு காணியை வழங்கி அவர்களுடைய உரிமைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அது தான் அந்த மக்கள் கௌரவத்துடன் விவசாயத்தை மேற்கொள்ள வழிவகுக்கும். மேலும் சிறுவிவசாயிகளுக்கான நீர்ப்பாசனம், விதைகள் மற்றும் உரங்கள் போன்ற உள்ளீடுகளையும் வழங்கும் திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டும். இவ்வாறான வளங்களை அணுகுவதற்கு முற்போக்கான சமூக நிறுவனங்களும் தேவைப்படும். விவசாய உற்பத்தியை ஐனநாயகப்படுத்தி விவசாய உறவுகளில் பெரும் மாற்றத்தை கொண்டுவருவதாக இருந்தால் கூட்டுறவுசங்கங்களுக்கும் விவசாய அமைப்புகளுக்கும் பெரும்பங்குண்டு. அதுதான் உணவு இறைமை அடிப்படையிலான தன்னிறைவையும் உணவுமுறையில் முழுமையான மாற்றத்தையும் கொண்டுவரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உல்ட்டிமேட் அச்டின் சீன்!! (வீடியோ)
Next post படுக்கை அறை விஷயத்தில் ஆண்களை கவர்வது எப்படி? (அவ்வப்போது கிளாமர்)