By 4 October 2020 0 Comments

உண்மையான நல்லிணக்கத்துக்குத் தேவையானது என்ன? (கட்டுரை)

துரிதமாக நாடு அபிவிருத்தியடைய வேண்டுமாயின் நாட்டில் சமாதானமும், நல்லிணக்கமும் அவசியமானதொன்று. அவற்றை ஏற்படுத்தினால் மாத்திரமே வளர்ச்சிமிகு நாட்டை உருவாக்க முடியும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 2018 யூலையில் நடைபெற்ற அரச விழா ஒன்றிலே தெரிவித்ததாகச் செய்தியுண்டு. அவர் இக்கருத்தை மக்கள் முன் வைத்தபோது, அங்கே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவும் பிரசன்னமாகி இருந்ததாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்போது, மைத்திரி – ரணில் கூட்டு அரசாங்கத்தையே நல்லிணக்க அரசு என மக்கள் நம்பியிருந்த காலம். அந்தவகையில் நடைபெற்ற பெரும்பாலான நல்லிணக்க நிகழ்வுகளுக்கெனப் பல கோடிக்கணக்கான பணமும் செலவு செய்யப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் அந்தத் திட்டங்களை முன்னின்று நடத்தினார் என்ற விடயமும் பலரும் அறிந்ததே.

ஆனால் அந்த அரசு பதிவியிலிருந்த காலத்திலேயே நல்லிணக்கம் என்ற விடயம் சிதைவடையத் தொடங்கியது எனலாம். ஈஸ்ரர் குண்டு வெடிப்பின் பின்னர் துளிர்விட்ட நல்லிணக்கம் என்ற விடயம் முற்றாகக் கருகிப்போய்விட்டதாவே கருதமுடியும். அந்த விடயம் இனங்களுக்கிடையே பலத்த முரண்பாடுகளைத் தோற்றுவித்ததொரு நிகழ்வாகக் கணக்கிடப்பட்டுள்ளது. முஸ்லிம் தீவிரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்கள், கிறிஸ்தவ தேவலாயத்தை குறிவைத்துத் தற்கொலைக் குண்ணுத்தாக்குதல்களை நடத்தினர். அதில் அதிகப்படியாகக் கொல்லப்பட்டவர்கள் தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள். எனவேதான் இனியும் நல்லிணக்கம் சாத்தியமா? என்ற கேள்வி எழுகிறது!

பின்னர் பதவிக்கு வந்த அரசு கூட ,“ தனிச் சிங்கள மக்களின் வாக்குகளால் மட்டுமே நாம் வெற்றி கொண்டோம். சிறுபான்மை மக்களின் வாக்குகள் எமக்குத் தேவை இல்லை” என்று சிறுபான்மை இன மக்களைப் புறந்தள்ளி, சூளுரைத்ததன் மூலம் இனங்களுக்கிடையே இருந்த நல்லிணக்கம் தொடர்பானதொரு சிறிய எதிர்பார்ப்பும் இல்லாது போய்விட்டதா? எனச் சந்தேகிக்கும் சூழலிலேயே , நாம் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

ஆனால், கடந்த வாரம் நடைபெற்று ஓய்ந்த தியாகி திலீபனின் சாத்வீகப் போராட்ட நாட்களை நினைவுகூர அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறை தடைவிதித்த போது, அதற்கு எதிராகப் பல சிங்கள மக்கள் கருத்துத் தெரிவித்து, அதனைத் தமது சமூக வலைத் தளங்களில் பதிவிட்டிருந்தனர். அவ்வாறான பதிவுகள் பல்லின மக்களால் பலருக்குப் பகிரப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. அந்த நிகழ்வானது, பெரும்பான்மைச் சிங்கள மக்களிடையே, நாட்டில் சாந்தியையும், சமாதானத்தையும் வேண்டிப் பலர் காத்திருக்கின்றனர் என்ற செய்தியையும் எமக்குத் தந்திருக்கிறதாகவே எண்ணத் தோன்றுகிறது.அது மட்டுமல்ல, “ ஜீவகாருண்யச் சிந்தனையை மையமாகக் கொண்ட, பௌத்த மதக்கோட்பாட்டைக் கடைப்பிடிக்கின்றதோடு, அதனை முழுமையாக நேசிக்கின்ற நாங்களும் இருக்கிறோம்.” என்ற செய்தியும் அதனூடாகப் பெறப்பட்டதாகவே கருதலாம். அது உண்மையாயின் அந்தவிடயம் எமக்குச் சற்று ஆறுதலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இப்படியான காலகட்டங்களிலே வெளிப்படுகின்ற எழுச்சியையும், அதனூடாக அடையாளப்படுத்தப்படும் மக்களையும் அடிப்படையாக வைத்தே நல்லிணக்கம் பற்றிப் பேசவேண்டும், அவர்கள் தொடர்பாகவே நிகழ்வுகளும் அமைதல் வேண்டும். அதை விட்டுக் கோடிக்கான பணச் செலவில் நிகழ்வுகளை ஏற்படுத்தி, அதனூடாக வலிந்து திணிக்கும் நல்லிணக்கம் சிறந்த பலனைத் தராது என்பதற்கு மைத்திரி – ரணில் கூட்டு ஆட்சிக் காலங்களில் நடத்தப்பட்ட நல்லிணக்க நிகழ்வுகள் சான்றாகின்றன.

நல்லிணக்கம் தொடர்பான விடயங்களை ஞாகப்படுத்துவதாக ஒரு நூல் வெளியீட்டு விழா நிகழ்வு, கடந்த புதன் கிழமை மாலை , யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.திரு.ஜோர்ஜ் ஜெஸ்ரினின் “சிங்கத்தை மயக்கிய சிறுவன்” என்ற சிறுவர்களுக்கான சிறு கதை நூல் ஒன்றின் வெளியீடு அது. ஓவியங்களுக் கூடாகப் பதினைந்து பக்கங்களிலே சொல்லப்பட்ட அந்தக் குட்டிக்கதையை, நேர்த்தியோடு, அழகாக, சிறுவர்களுக்கான பல நல்ல விடயங்களை மறைமுகமாக அறிவுறுத்துவதாக ஜெஸ்ரின் உருவாக்கியிருப்பதைப் பலரும் மெச்சினர்.

இலங்கை வானொலி அறிவிப்பாளர் யசோதரா பாலசிங்கம் அவர்களின் நிகழ்சித் தொகுப்போடு ஆரம்பமான நிகழ்வு முடியும்வரை இரு மொழிகளிலும் தொகுத்து வழங்கப்பட்டதை ஒரு சிறப்பம்சமெனலாம். அந் நிகழ்விலே கருத்துரையாற்றிய அனைவரினதும் பேச்சுகளையும் இரு மொழிகளிலும் கேட்கக் கூடியதாக இருந்தது. இலங்கை பல் சமயக் கருத்தாடல் நிலையத்தைச் சேர்ந்த திரு.கருணாரட்ண வெலிக்கல அவர்கள் இந்த நூலை சிங்கள மொழியில் மொழிமாற்றம் செய்யவிருப்பதாகச் சொல்லப்பட்டது. அவருக்கு “லங்கா தீபம்” என்ற சிறப்புப் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப் பட்டதைப் பொருத்தமானதொரு செயற்பாடு எனலாம். தமிழ் மொழியில் அவர் ஆற்றிய உரை மிகவும் காத்திரமானதொன்று .

திருமறைக் கலாமன்றத்தின் பிரதி இயக்குனர் திரு.ஜோன்சன் ராஜ்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அந்த நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராக, யாழ்.நகரசபை மேயர் கலாநிதி இமானுவேல் ஆனோல்ட் அழைக்கப்பட்டிருந்தார். அத்துடன் அந்த நிகழ்வுக்குப் பொருத்தமாக, சிறப்பு விருந்தினராக வட மாகாணம் – மகாணக் கல்வித் திணைக்களத்தின் ஆரம்பப் பிள்ளைப் பருவ அபிவிருத்திப் பிரிவு – பணிப்பாளர் ஜெயா தம்பையா அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்.நூலின் முதல் பிரதியை ஆறுதல் நிறுவனத்தின் இயக்குனர் திரு.சுந்தரம் டிவகலாலா அவர்கள் பெற்றுக் கொண்டார். யாழ். மாநகரசபை ஆணையாளர் கவிஞர் இ.த.ஜெயசீலன் மதிப்பீட்டுரையை நிகழ்த்தினார்.

பல் சமயத் தலைவர்கள் முன்னிலையில் நூல் வெயிடப்பட்டதும், அதில் இருபதுக்கு மேற்பட்ட சிங்கள மக்கள் கலந்து கொண்டதும் தான் நல்லிணக்கத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். உலகில் பாரிய மாற்றங்கள் வர வேண்டும் என்று விரும்புபவர்கள் முதலில் இது போன்ற சின்னஞ்சிறிய விடயங்களில் நம்பிக்கை கொள்ள வேண்டும். சிறு விதைதானே விருட்சமாகிறது?Post a Comment

Protected by WP Anti Spam