By 8 October 2020 0 Comments

கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)

சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன் வேலையில் சேரும்பொழுது, கற்பிப்பவர் என்று கூறும் ஆசிரியர்கள் சுமார் இருபதுகளில் இருந்திருக்கலாம். பன்னிரெண்டாம் வகுப்பு படிப்பவர்கள் பதினாறு அல்லது பதினெட்டு வயதிற்குள் இருப்பார்கள். அப்படியானால் கிட்டத்தட்ட ஆசிரியர்- மாணவர் உறவு ஒரு சகோதர, சகோதரி போன்று இருக்கலாம். அப்படியானால், கற்பிப்பவர் மிகவும் பொறுமையாக தவறுகளை சுட்டிக்காட்டி, நிதானமாகக் கையாள வேண்டும். ரொம்பவும் நட்பாகப் பழகும்பொழுது, சில சமயங்களில், நம் வார்த்தைகளுக்கு மதிப்பு குறையலாம்.

எனவே, அதற்கு இடம் தராமல் நாம் கூறவேண்டியதை அழுத்தமாகக் கூறியும், எந்தவிதத்திலும் பிள்ளைகள் மனம் கோணாமலும், அவர்கள் தம் கடமையைச் செய்ய வலியுறுத்தலாம். அதிலும் கற்பிப்பவரின் தோற்றம், பிள்ளைகள் அவர் சொல்வதை எடுத்துக்கொள்ளும் விதத்தில் இருந்தால் சிறந்தது. தெரியாத வயதில் பிள்ளைகள் நம்மை அடையாளப்படுத்துவதற்காக, சில வார்த்தைகளை பயன்படுத்துவர்.

உதாரணத்திற்கு, நம் உருவத்தோற்றத்தை வைத்து, ‘குள்ளமாக இருப்பாங்களே, அவங்கதான்! உயரமாக இருப்பாங்களே, அவங்கதான் என்றெல்லாம் கூறுவதுண்டு. அப்படி ஒரு சந்தர்ப்பம் வரும் முன்பே, முதலில் பிள்ளைகளை சந்திக்கும்பொழுதே, நம் பெயர் மற்றும் நம்மைப்பற்றி சில வார்த்தைகள் கூறி அறிமுகப்படுத்திக்கொள்ளலாம். அதேபோல் மாணவர்கள் பெயரையும், எங்கிருந்து வருகிறார்கள் போன்றனவற்றையும் கேட்டுத்தெரிந்து கொள்வதின் மூலம் முதலிலேயே நல்ல ஒரு அபிப்ராயம் உருவாகிறது.

குறிப்பிட்ட ஒரு வகுப்பில், குறிப்பிட்ட மாணவன் எப்பொழுதும் வெளியே நின்றுகொண்டு போய் வருபவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பான். பல நாட்கள் அந்தக் காட்சியை நாங்கள் கண்டபின், அதே ஆசிரியரிடம் அவன் வெளியே எப்பொழுதும் நிற்பதற்கான காரணத்தைக் கேட்டோம். அவன் வகுப்பில் எப்பொழுதும் விளையாடிக்கொண்டிருப்பதாகவும், மற்ற பிள்ளைகளையும் எழுதப்படிக்க விடாமல் தொந்தரவு செய்துகொண்டிருப்பதாகவும், அதனால் வெளியே அனுப்பியதாகவும் கூறினார். ஒருநாள் தலைமை ஆசிரியர் அவன் வெளியே நிற்பதைப் பார்த்து எங்களிடம் சொன்னார். ‘‘இவன் முகத்தில் குறும்புத்தனம்தான் தெரிகிறது. அவனிடம் பேசி, அறிவுரை சொல்லிப் பாருங்கள்’’ என்றார்.

நாங்களும் அவனிடம் அன்பான பேச்சுவார்த்தை நடத்தினோம். வீட்டிலும் அவனுக்கு முழு ‘டியூஷன்’ வகுப்புகள் இருப்பதால், அங்கு படித்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இங்கு ஜாலியாக இருக்க நினைத்து, மற்றவர்களையும் தொந்தரவு செய்திருக்கிறான் என்பது புரிந்தது. வேறு விதமாக அவனுக்கு எடுத்துக் கூறினோம். ‘‘உன் தந்தை ஒரு வி.ஐ.பி. நீ நன்கு படித்து நல்ல மதிப்பெண் எடுத்தால், உன்னைப்பற்றி
பெருமையாக அவரிடம் சொல்ல முடியும். அவரும் பள்ளிக்கு வர பெருமைப்படுவார்.

நீ இதுேபான்று அடிக்கடி வெளியே போக நேரிட்டால், நாங்கள் உன்னைப்பற்றி எப்படி பெருமை பேச முடியும்? தன் பையன் இப்படித்தான் என்று தெரிந்தால், அவர் மனம் எப்படி சந்தோஷப்படும்? நீ அப்பாவுக்கு பெருமையைத்தானே தர விரும்புவாய்?’’ என்றோம். உடன் ‘சாரி’ என்ற பதில் வந்தது. மறுநாள் முதல் அவன் நடவடிக்கையில் அப்படி ஒரு மாற்றம்.

பேசுபவர் வகுப்பில் யாராகயிருந்தாலும், அமைதியாக கவனிக்கும்படி மற்றவர்களை அவன் கேட்டுக்கொண்டான். அறியாத வயதில் அனைத்தும் ஒரு விளையாட்டுத்தனம் என்பது நன்கு புரிந்தது. எப்பொழுது தந்தைக்கு கௌரவம் பாதிக்குமென்று அவனுக்குப் புரிய ஆரம்பித்ததோ, அவன் தன்னை முழுவதும் மாற்றிக்கொண்டான். உண்மையில் நடந்தது அவன் பெற்றோருக்கும் தெரியாது. அவர்களும், ஆசிரியர், மாணவர்கள் பிரச்னைகளில் தலையிட்டதும் கிடையாது. அதுதானே பாரபட்சமற்ற ஒரு தன்மை என்பது. நாமும் பிள்ளைகள் மனதை அறிந்து, புரிந்து நடந்துகொண்டுவிட்டால் எதுவுமே சாத்தியம்தான்.

மாணவப்பருவம் என்பது பட்டாம்பூச்சிகள்போல் பறந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நேரம். அவர்களால் புரிந்துகொள்ள முடியாதபடி பேசி, மனதை நோக அடிக்கக் கூடாது. நம் வயதையும், தகுதியையும் கருத்தில் கொள்ளாமல், அவர்கள் வயதிற்கு ஏற்றாற்போல், நம்மையும் சிறிதளவு மாற்றிக்கொண்டால் போதும்! அதுவே நம் பிள்ளையாக இருந்தால், என்ன செய்வோம் என்று ஒரு நிமிடம் சிந்தித்து செயல்படுவோம். அல்லது அதே வயதில் நாம் எப்படி இருந்திருப்போம் என்று யோசித்தால், பொறுமை வந்துவிடும். அந்த வயதில் வேண்டுமென்று அவர்கள் தவறுகள் இழைப்பதில்லை. அப்படி நமக்குத் தவறாகப்படும் சில கருத்துக்கள் அவர்களுக்குத் தவறாகவும் தெரியாது.

எவற்றை யெல்லாம் செய்வதால் அவர்களுக்கு மனமகிழ்ச்சி கிடைக்கிறதோ அவற்றைச் செய்து தன்னை மகிழ்வித்துக்கொள்கிறார்கள். சொல்லும் விதத்தில் எடுத்துச்சொல்லி புரியவைக்கும்பொழுது, பலர் புரிந்து நடந்துகொள்கிறார்கள். சிலர் குடும்ப சூழல் காரணமாக அப்படியே இருந்து விடுகிறார்கள். அப்படியும் ஒரு சில நிகழ்வுகள் உண்டு.

பிள்ளைகள் பொதுவாக மிக நட்புடன் பழகி விடுவார்கள். அவர்களின் நட்பு மிகவும் நெருக்கமாகும் பொழுது, ஒருவரைப்பற்றி ஒருவர் நன்கு புரிந்துகொள்கிறார்கள். ஏழ்மையில் வாடும் சிறுவன், பணக்கார வசதி படைத்த ஒருவனைப் பார்த்து மனதில் ஏங்குகிறான். அவன் பயன்படுத்தும் விலையுயர்ந்த பொருட்களைக் கண்டு, தனக்கு இதுபோல் எதுவும் கிடைக்கவில்லையே என்று நினைத்து ஆதங்கப்படுகிறான். அதன் விளைவாக, மற்றவரிடமிருந்து பொருட்களை எடுக்க முற்படுகிறான்.

அதுவே அவன் பழக்கமாக மாறி, யார் ‘பை’ என்றுகூட பாராமல், பணம் எடுக்க ஆரம்பித்தான். அப்பொழுதெல்லாம் ‘கேமரா’ வசதி கிடையாது. ஒருநாள் ஆசிரியர் பையிலிருந்து எடுக்கும்பொழுது, ஆசிரியர் வந்துவிட்டார். ஆசிரியர் ஒன்றுமே கேட்கவில்லை. அவன் விசும்பி அழுதான். அதற்கும் அவர் ஒன்றும் கூறவில்லை. பின் முதுகில் தட்டிக்கொடுத்து அவனிடம், ‘‘காசு வேண்டுமென்றால் என்னிடம் கேட்டிருக்கலாமே! நான் உதவி செய்திருப்பேனே! அடுத்தமுறை என்னிடம் கேள், நான் தருகிறேன்’’ என்றார்.

கோபமாக திட்டியிருந்தால், அவன் வாக்குவாதம் செய்வானோ, என்னவோ, இந்த அன்பான வார்த்தைகள் அவனுக்கு ஈட்டிபோல் குத்தியது. உடன் சரண் அடைந்ததோடு, தான் இதுவரை செய்த குற்றங்கள் அனைத்தையும் ஒப்புக்கொண்டு, பள்ளியை விட்டு விலகுவதாகச் சொன்னான். நாங்கள் அறிவுரை வழங்க, இதுபற்றி இனி பேச வேண்டாம், வேண்டியதை நாங்கள் உதவி செய்து தருகிறோம் மற்றும் இங்கேயே படிப்பைத் தொடரலாம் என்று கூறி சம்மதிக்க வைத்தோம். தன் தவறை எப்பொழுது உணர்ந்துகொண்டானோ, அப்பொழுதே அவன் திருந்தி விட்டதாக உணர்த்தினோம்.

இதுபோன்ற சம்பவங்களுக்கு வறுமையும், ஏழ்மையும் அறியாமல் செய்யும் ஏதேனும் பெரியவர்கள் குறையும்கூட காரணமாக இருக்கலாம். சுமார் இருபத்தைந்து முப்பது வருடங்களுக்கு முன்பு நடைபெற்றது என்றாலும், கல்வி பெறாத சில குடும்ப சூழல்களும் காரணமாக இருந்திருக்கலாம். போதிய விழிப்புணர்வு அவர்களுக்கு கிடைக்காமல் இருந்திருக்கலாம். இப்பொழுது போன்ற ‘மீடியா’ (Media) வசதிகள் நிறைய இல்லாமல் இருக்கலாம். எந்தக்
காலத்திலும் பிள்ளைகள் நம் பிள்ளைகள்தான்.

மிகவும் சுட்டியாகக் காணப்படும் பெண் மாணவி. அழகாக எழுதுவாள். அன்றைய பாடங்களை அன்றைக்கே முடித்துவிடுவாள். வகுப்பில் மற்றவருக்கும் உதவி செய்து கொண்டிருப்பாள். ஒரு குட்டி ‘டீச்சர்’ என்று சொல்லுமளவுக்கு தன்னையே மாற்றிக்கொண்டு நடித்துக்காட்டுவாள். பத்தாம் வகுப்பில் அவள்தான் முதல் மதிப்பெண் எடுப்பாள் என்று அனைவரும் கணித்தனர். ஆனால், அதற்கு சில மாதங்களுக்கு முன்பே அவள் மிகவும் மாறியிருந்தாள். எப்பொழுதும் எதையோ இழந்துவிட்டது போன்று முகத்தை சோகமாக வைத்துக்கொண்டாள்.

படிப்பில் கவனம் மிகவும் குறைந்துவிட்டது. உடல்நலம் ஏதேனும் சரியில்லையா, சரியாக சாப்பிடவில்லையா என்றெல்லாம் விசாரித்தோம். அவள் கதறிக் கதறி அழ ஆரம்பித்தாள். குடும்பத்தில் ஏதேனும் ஆபத்தோ என்று யோசிக்கத்தோன்றியது. அப்பொழுது அவள் அழுது கொண்டே ‘‘என் அம்மாவிற்குக் குழந்தை பிறந்துள்ளது’’ என்றாள். ‘‘இது நல்ல விஷயம்தானே!’’ என்று நாங்கள் கேட்டு முடிக்கவும், ஒரு ஆசிரியை ‘‘போன வருடம் தம்பி பிறந்திருப்பதாக சாக்லேட் தந்தாயே!’’ என்றார். அவள் மேலும் வேகமாக அழ ஆரம்பித்தாள்.

அவளைத் தனியே அழைத்துச்சென்று சிறிது சாப்பிடக்கொடுத்து ஆசுவாசப்படுத்தினோம். அவள் முகம் சிறிது தெளிவுற்றது. ‘கவலைப்படாதே! நீ முதல் மதிப்பெண் எடுப்பாய்!’ என ஆறுதல் சொன்னோம். அவள் காதில் வாங்கவில்லை. பின் தானாகவே தொடர்ந்தாள், ‘என் அம்மா, என் அம்மா’ என்று ஏதோ சொல்ல முனைப்பட்டாள். சரி, இது ஏதோ குடும்பப் பிரச்னை என்று நாங்கள் தலையிட விரும்பாமல், தம்பியைப்பற்றி விசாரிக்க ஆரம்பித்து விட்டோம். அவளும் சாதாரணமாகப் பேச ஆரம்பித்தாள். வீட்டுப் பிரச்னையில் அவள் மிகவும் வேதனையடைந்திருக்கிறாள்
என்பதை புரிந்துகொண்டோம்.

ஆறுதலாகப் பேசி அவளை படிப்பின் பக்கம் திருப்ப முயற்சித்தோம். அவளுக்கு வேண்டிய மனஆறுதல்கள் அளித்து, முதல் மதிப்பெண் எடுக்க வைத்தோம். வீட்டுச்சூழலை நம்மால் என்ன செய்ய முடியும்? இதுபோல் எங்கேயோ நடைபெறும் சில சூழல்கள், தெரிந்தோ தெரியாமலோ பிள்ளைகள் மனதைக்கூட பாதிக்கச் செய்கிறது. இவை நடைமுறை வாழ்க்கையில், நாம் பார்த்த அனுபவங்கள்தான். இவை நமக்குப் பாடப்புத்தகங்
களில் கிடைப்பதல்ல.

பிள்ளைகளுடன் ஒன்றிப்பழகி, நட்புடன் கலந்த பாசத்தையும் ஊட்டும்பொழுது, நமக்குக் கிடைக்கும் வாழ்க்கைத் தத்துவங்கள்! பார்த்த மாத்திரத்தில், இவர்கள் இப்படித்தான் என்று கணிப்பது எவ்வளவு பெரிய தவறு. எனவே ஒருவரின் வாழ்க்கைச்சூழலும், வளரும் விதமும்கூட, அவர்களை நல்லவர்களாக-தீய பழக்கங்கள் உடையவராக மாற்ற ஏதுவாகிறது. இவற்றைப்புரிந்துகொண்ட எவரும், யாரைப்பற்றியும் புறம் பேச மாட்டார்கள்.Post a Comment

Protected by WP Anti Spam