By 8 October 2020 0 Comments

தோழா, தோழா தோள் கொடு! (மகளிர் பக்கம்)

2020 ம் ஆண்டு உலக மக்கள் அனைவரையும் ஒரு ஆட்டம் கண்டுவிட்டது. கடந்த நான்கு மாத மாக தொலைக்காட்சி செய்தி முதல் தினசரி வரை கொரோனா பற்றிய பேச்சு தான். இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. மேலும் பலர் மிகப் பெரிய
மன உளைச்சலில் சிக்கி தவித்து வருகிறார்கள்.

விளைவு கணவன்-மனைவி இடையே ஏற்படும் சிறு வாக்குவாதம் கூட தவறான முடிவுக்கு காரணமாக அமைகிறது. குறிப்பாக பெண்கள் அதிக அளவில் மன அழுத்தத்திற்கு உள்ளாகி விவாகரத்து, தற்கொலை போன்றவற்றிற்கு சென்றுவிடுகிறார்கள். பிரச்சனை நடந்தவுடன் உணர்ச்சிவசப்படாமல் உடனடியாக இவர்கள் செய்ய வேண்டியது என்ன? சாப்பிட வேண்டியது என்ன? இதை தவிர்க்கும் வழிமுறைகள் என்ன என்று நிபுணர்கள்
ஆலோசனை வழங்கியுள்ளனர்.

‘‘ஒரு அழகிய ரோஜா மலரை வெயிலில் காயவிடாமல், மழையில் அழுகி விடாமல் பாதுகாப்பாக தன் கைக்குள் வைத்திருப்பதாக நினைத்துக்கொண்டு, அதை மூச்சு முட்டும் அளவுக்கு கசக்கி விட்டு தன் கையைத் திறந்து காப்பாற்றி விட்டோம் என்ற பெருமையுடன் பார்க்கும் சில ஆண்கள் இருக்கிறார்கள். ஆனால், அந்த ரோஜா தன் இயல்பை விட அப்போதுதான் அதிகமாக வதங்கியிருக்கும் என்று அப்போது அவர்களுக்குத் தெரிவதில்லை. சில ஆண்கள் இப்படித்தான் பெண்களை நடத்துகிறார்கள்’’ என்றார் வேதனையுடன் மனநல ஆலோசகர் தீபா. ‘‘எவ்வளவு போராட்டங்கள் இருந்தாலும், நாம் நம்முடைய வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக மாற்றிக் கொள்ளலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்….

*வீட்டில் பிரச்னை ஏற்பட்டால், ஒருவர் உணர்ச்சிவசப்படும் நேரத்தில், மற்றொருவர் அமைதியாக இருப்பதே நல்லது. குறிப்பாக, பெண்கள் இது போன்ற சூழ்நிலையில், கணவர் கோபப்பட்டால், அவர்களுடைய விளக்கங்களை, உணர்ச்சிகளை, நியாயங்களை அதே வேகத்துடனும், கோபத்துடனும் உடனே தெரியப்படுத்த வேண்டியதில்லை. அதற்காக தவறான முடிவும் எடுக்க வேண்டாம். அந்த சமயத்தில் உங்கள் கவனத்தை சமையல் அல்லது குழந்தைகள் மேல் செலுத்துங்கள்.

அப்படியும் மன அழுத்தம் குறையவில்லையென்றால், நமக்கு நல்லதை எடுத்துக் கூறும் நெருங்கிய தோழிகளிடமோ அல்லது உறவினர்களிடமோ பேசலாம். ஆனால், உங்கள் தரப்பு வாதத்தை நியாயப்படுத்துவதற்காக, உங்கள் கணவரின் குறைகளை அதிகப் படுத்திக் கூறாதீர்கள். பொதுவாக, ஒருவரின் கருத்துக்களை மற்றொருவர் காது கொடுத்து கேட்டாலே எந்தப் பிரச்சனையும் வராது. கணவன்- மனைவிக்குள் ஈகோ என்பது எப்போதும் வரக்கூடாது. நேர்மறையாக சிந்தியுங்கள்.

*எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், அதிக நாட்கள் நீட்டிக்க விடக் கூடாது. அது உறவில் விரிசல் ஏற்படக் காரணமாகும். இளம் தம்பதிகளிடம் எப்போதும் ஒருவரின் மேல் மற்றொருவருக்கு ஒருவித ஈர்ப்பு இருக்கும். சமாதானத்திற்கு பிறகு பெண்கள் தங்களின் கோபத்தை தாம்பத்தியத்தில் வெளிப்படுத்தாமல், அவர்களின் கருத்தினை கணவருக்கு புரியும் படி தெரிவிக்க ஒரு வாய்ப்பாக அமைத்துக் கொள்ளலாம். மேலும் கணவரின் மேல் உள்ள அன்பை அவருக்கு தெரியும் படி வெளிப்படுத்தலாம். இது நமக்கான வாழ்க்கை. எல்லாவற்றிற்கும் தீர்வு இருக்கிறது. தவறான முடிவுகளால் வருந்துவதால் எந்த பலனும் இல்லை” என்றார்.

‘‘பிரச்சனைகளை கையாள்வதற்கும், நம்முடைய உணவுப் பழக்கத்திற்கும் அதிக தொடர்பிருக்கிறது’’ என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் மைதிலி. சிலவகை பழங்கள், பருப்புகள் ஆகியவை நாம் பதட்டமடையும் நேரத்தில் நம் மூளையைச் சமன்படுத்தி நம் மனதையும் சமநிலையில் வைக்கும். தம்பதியருக்கிடையே பிரச்சனைகள் உருவாகும்போது, மனதளவில் வலுவிழந்த பெண்களின் மூளை பெரும்பாலும் தற்கொலை எண்ணத்தைத் தூண்டிவிடும். எவ்வளவு காதலுடன் இருந்தோம் என மனம் பதைபதைக்கும். கை, கால்கள் நடுங்கும். அந்த சமயத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்து, மெதுவாக உறிஞ்சிக் குடிக்க வேண்டும்.

ஒரு கப் தயிரை ஸ்பூனில் சாப்பிடலாம். பாதாம், வாதுமை பருப்புகளை ஒரு கையளவு உட்கொள்ளலாம். பத்து துளசி இலைகளை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இது மன அழுத்தத்தைக் குறைப்பதுடன் நல்ல நிம்மதியான உறக்கத்தையும் தரும்.

வாழைப்பழத்தில் நம்முடைய நரம்புக் கோளாறுகளை சரி செய்யும் ஆற்றலுண்டு. கவலை, மன அழுத்தம், இதய கோளாறுகளை சரி செய்யும் பீட்டா கரோட்டீன் உள்ளது. மஞ்சளில் உள்ள குர்குமின் (curcumin) மூளையை சாந்தப்படுத்தும். இரவில் ஒரு டம்ளர் பாலில், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து பருகுவது மன அமைதியை ஏற்படுத்தி தூக்கத்தை வரவழைக்கும். ஆரஞ்சுப்பழம், நார்ச்சத்து நிறைந்த உணவுகள், கீரை வகைகள் ஆகியவற்றையும் தொடர்ந்து சாப்பிடும்போது பெண்களின் மன அழுத்தங்கள் குறைந்து, ஆரோக்கியத்தோடு, எவ்விதப் பிரச்சனைகளையும் பொறுமையாக கையாள முடியும்’’ என்று கூறினார்.

‘‘முப்பது, நாற்பது வயதுகளில் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், டென்ஷன் போன்றவைகளே அவர்களுக்கு அறுபது, எழுபதுகளில் மூட்டு வலி, முதுகு வலி போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. ஒரு பிரச்சனைக் காரணமாக தற்கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்தால், அவர்கள் முதலில் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த எண்ணத்திலிருந்து மீண்டு வர “ஓம்கார பிராணாயாமம்” மற்றும் “பிராமரி பிராணாயாமம்” போன்ற மூச்சுப்பயிற்சிகள் உதவும்.

உடல் நடுங்கும், அதிக அளவு உணர்ச்சிவசப்படும் போது, ஓம்கார பிராணாயாமம் செய்யவேண்டும். பத்மாசனத்தில் அல்லது சாதாரணமாக சம்மணம் போட்டு உட்கார்ந்து இரு கைகளையும் சின் முத்திரையில் வைத்து, மூச்சை விட்டு பின் நன்றாக மூச்சை இழுக்கவும். மூச்சை விடும் போது, ஆ ஆ…. ஊ ஊ…. ம் ம்…… என உச்சரிக்க வேண்டும். இருபத்தியொரு முறை செய்ய வேண்டும்.

பிராமரி பிராணாயாமம், பத்மாசனம், சித்தாசனம் அல்லது சுகாசனத்தில் உட்கார்ந்து முதுகை நேராக வைத்து கையை சின் முத்திரையில் வைக்கவும். பிறகு மூச்சை இரண்டு நாசி துவாரங்களால் வெளியில் விட்டு நன்றாக உள்ளே இழுக்க வேண்டும். இரு கைகளின் சுண்டுவிரலால் காதுகளை மூடிக்கொண்டு மூச்சை நாசித்துவாரங்கள் வழியாக ம் ம் ம்… என குளவி ரீங்காரம் இடுவது போல் சத்தத்துடன் விட வேண்டும். இதுபோல் குறைந்தது பத்து தடவையாவது செய்வது நல்லது.நம் தலைப்பகுதியில் ஒலியின் அதிர்வுகளை உணரலாம்.

இந்த பயிற்சியின் மூலம், மூளையின் அடைப்புகள் நீக்கப்பட்டு, கவனிக்கும் திறன் அதிகமாகும். மன அழுத்தம் குறைந்து, நிம்மதியையும், சந்தோசத்தையும் பெற நம் மூளையையும், மனதையும் தூண்டும். கர்ப்பிணிப் பெண்கள் கூட இப்பயிற்சியை செய்யலாம். ஒவ்வொரு உறவுகளுமே அன்பு என்ற அழகிய வலையால் பின்னப்பட்டது. கணவன்-மனைவி உறவு என்பது விட்டுக் கொடுத்தல், பெருந்தன்மை, அன்னியோன்யம் என கூடுதல் விஷயங்களை உள்ளடக்கியதால் தனக்கானவள் மட்டுமே என்ற எண்ணத்தையும் ஆண்களின் மனதில் ஆழமாக பதியவைக்கும். அதை அன்பாக கையாள கற்றுக்கொள்வோம். களிமண் நம் கையில்கொடுக்கப்பட்டிருக்கிறது. அழகான பானையாக மாற்றுவோம்’’ என முடித்தார்.Post a Comment

Protected by WP Anti Spam