By 14 October 2020 0 Comments

உடலுக்கு பலம் தரும் தினை!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், உணவே மருந்தாக விளங்கும் உணவுகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். பூவரசம் இலையை பயன்படுத்தி கொழுக்கட்டை, தினை உருண்டை போன்றவற்றின் நன்மைகள் குறித்து செயல்முறையில் காணலாம்.

அரிசி மாவு பிசைந்து கொழுக்கட்டையாக செய்து சாப்பிடுவது வழக்கம். பூவரசு இலையில் கொழுக்கட்டை செய்யும்போது அதில் உள்ள மருத்துவ குணங்களால் உடலுக்கு நன்மைகள் கிடைக்கின்றன. கொழுக்கட்டை செய்யும்போது பூவரசு இலையில் அரிசி மாவை சுற்றி வேகவைக்கும்போது பூவரசுவின் மருத்துவ குணங்கள் கிடைக்கிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட பூவரசு சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. வயிற்று பூச்சிகளை வெளித்தள்ளும் தன்மை உடையது. உடல் தேற்றியாக விளங்குகிறது. இதேபோல், தினை மாவு அற்புதமான உணவாகி, மருந்தாகி உடலுக்கு பலம் கொடுக்கிறது. எள்ளு அற்புதமான உணவாக விளங்குகிறது.

பூவசரம் இலையை பயன்படுத்தி கொழுக்கட்டை தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பூவரசம் இலை, அரிசி மாவு, வெள்ளை எள்ளு, வெல்லம், ஏலக்காய். செய்முறை: வெள்ளை எள்ளு, ஏலக்காய் ஆகியவற்றை பொடித்து வெல்லத்துடன் சேர்த்து பூர்ணம் தயாரிக்கவும். இதை அரிசி மாவுடன் வைத்து பூவரசம் இலையை சுற்றி வேகவைத்து எடுக்கவும். இந்த கொழுக்கட்டையை சாப்பிட்டு வர பல்வேறு நன்மைகள் கிைடக்கும். வயிற்றில் உள்ள பூச்சிகளை இது அழிக்கும். உடலுக்கு பலத்தை தருகிறது. மாந்தம், சளி, இருமல் பிரச்னைகள் இல்லாமல் போகும்.

குழந்தைகள் விரும்பி உண்ணும் தினை லட்டு தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தினை மாவு, வெள்ளை எள்ளு, வெல்லம், ஏலக்காய். செய்முறை: வெள்ளை எள்ளு, வெல்லம், ஏலக்காய் சேர்ந்த கலவையுடன் சம அளவு தினை மாவு சேர்த்து நன்றாக கலக்கவும். ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு உருக்கவும். நெய் இளஞ்சூடாக இருக்கும்போது ஏற்கனவே கலந்து வைத்திருக்கும் தினை மாவுடன் சேர்த்து கலந்து லட்டு போன்று பிடிக்கவும். இந்த லட்டுவை சாப்பிட்டுவர உடல் பலம் பெரும். சிறுநீர் பெருக்கியாக இது விளங்குகிறது. எலும்புகளுக்கு பலத்தை கொடுக்கிறது. மருந்தாக கொடுக்கும்போது அதை சாப்பிடாம ஒதுக்கும் நிலையுள்ளது.

மருந்தையே விருந்தாக கொடுக்கும்போது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். பூவரசு இலையில் வைத்து வேகவைத்த கொழுக்கட்டை, தினை லட்டு ஆகியவை உடலுக்கு நன்மைகளை கொடுக்கிறது. எனவே இந்த உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு நல்ல பலன் கிடைக்கும். உடல் எடையை குறைக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: கொடி பசலை கீரை, பூண்டு. செய்முறை: கொடி பசலை கீரையை எடுத்து அதனுடன் பூண்டு சேர்த்து கடைந்து அடிக்கடி உணவில் சேர்த்துவர கொழுப்பு சத்து குறைந்து உடல் எடை குறையும்.



Post a Comment

Protected by WP Anti Spam