By 21 October 2020 0 Comments

மிளிர வைக்கும் கப்பிங் ! (மகளிர் பக்கம்)

ஏதேதோ பிரச்சினைகள் இருக்க, சிலருக்கு தங்கள் நிறத்தை கூடுதல் நிறமாக்குவது, தலை முடியைப் பாதுகாத்துக் கொள்வது என இவர்களது பிரச்சினை இமாலய அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

இதற்கு சாட்சி இருசக்கர வாகனங்களில் செல்வோர் பலரைக் காணலாம். ஆண், பெண் பேதமின்றி கண் மட்டும் தெரியும் படி, மற்ற உடல் பாகம் முழுவதும் பத்திரமாகப் போற்றிக் கொண்டுதான் வெளியே வருகின்றனர். இதில் உச்சக்கட்டம் அடிக்கிற வெயிலிலும் கோட் போட்டு வருவது. இது போன்று தங்களது தேகம் மீது அதீத அக்கறைக் கொண்டு கவலைப்படுவோருக்கு, “இதெல்லாம் இன்று இருக்கும் சூழலில் சாதாரணமப்பா, கவலைப்படாதீர்கள்… இதற்கான தீர்வு எங்களிடம் இருக்கிறது” என்கிறார், டாக்டர் ஹலினா ரெஜியா.

‘‘வண்ண வண்ண மருந்தோ, மாத்திரையோ, க்ரீம்களோ, அறுவை சிகிச்சைகளோ இன்றி, எந்த ஒரு பக்கவிளைவுகளும் இல்லாமல் நீங்கள் குழந்தையாக இருக்கும் போது உங்கள் தேகங்கள் எப்படி மிளிர்ந்ததோ, அதே மினுமினு மினிப்பு இப்போதும், ‘கப்பிங்’ தெரபி மூலம் கொண்டு வரலாம்” என்ற ஹலினா, இந்த துறையில் தான் வருவதற்கு அம்மாதான் காரணம் என்கிறார். “ஒரு முறை கிட்னி ஸ்டோனால் அவதிப்பட்ட அம்மாவுக்கு, எங்க போயும் குணமாகாமல், கடைசியாக இந்த முறையில்தான் சரியானது. இந்த மருத்துவம் பற்றி அவங்களுக்கு தெரியாது, இருந்தாலும் நான் இதுதான் படிக்க வேண்டுமென்பது அவங்களின் ஆசை.

நம்ம ஊரில், ஒரு சில இடங்களில் இன்றும் வழக்கத்தில் இருக்கும் செம்பு வைத்தியம்தான் கப்பிங் தெரபிக்கு அடிப்படை. இதைப் படிக்க வேண்டுமா என்ற சந்தேகத்திலேயே கல்லூரி போனேன். பல நாட்களாகக் கால் வலி, கை வலியினால் அவதிப்பட்ட முதியவர்கள் மருத்துவம் பார்த்த உடனே சரியான பின், ‘நீ கை ராசிக்காரி’ என்று சொல்வார்கள். நம்ம கையிலையும் ஏதோ இருக்கிறது என்பதை அப்போதுதான் நம்ப ஆரம்பித்து தீவிரமாகப் படிப்பில் கவனம் செலுத்தி கப்பிங் துறையில் பி.எச்.டி முடித்தேன். அதில் குறிப்பாக காஸ்மெட்டிக்கில் நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறேன்” என்று கூறும் ஹலினா இந்த கப்பிங் முறையின் வரலாற்றையும் பகிர்கிறார்.

“எகிப்தியர்கள் ஆண், பெண் என்று வித்தியாசம் பார்க்காமல் தங்களது அழகிற்கு அதிக கவனம் செலுத்துவார்கள். ‘மெடிசன் ஆஃப் டெம்பிள்’ என்ற பிரமிடில் கப்பிங் முறை பற்றி விளக்கப்பட்டிருக்கிறது. அதில், உடல் சம்பந்தமாகவும், அழகு சம்பந்தமாகவும் எப்படி பயன்படுத்த வேண்டும், எதற்காக இது பயன்படுகிறதுஎன்பதை சித்தரிக்கும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. பாபிலோனியர், கிரீக், சீனா உள்ளிட்ட பல நாடுகளில் இம்முறை மாற்று மருத்துவமாக நடைமுறையில் உள்ளது. கப்பிங் தெரபியில் முக்கியமான செயல்முறை ரத்த ஓட்டத்தை சீர் செய்வது.

ஹாலிவுட், பாலிவுட் விளையாட்டு வீரர்கள் எனப் பலர் இந்த தெரபியை எடுக்கின்றனர். சிலருக்கு உடலில் உள்ள எலும்பின் எடை அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு தசையில் எடை அதிகமா இருக்கும். இவர்களில் ஒரு சிலர், எதனால் எடை அதிகமாக இருக்கிறது என்று தெரியாமல், உடல் எடையைக் குறைக்கிறேன் என்று தங்களது உடலை வீணாக்குகின்றனர்.

கப்பிங் தெரபி மூலம் அவர்களது மசிலையும், ஸ்கின்னையும் டைட் பண்ணி ஸ்ட்ராங் ஆக்குகிறோம். இவர்களது உடல் மெல்லியதாகக் காட்சியளிக்கும். ஆனால், வெயிட் குறையாமல் ஆரோக்கியமாக இருப்பார்கள். எந்த ஒரு மருந்தோ, காஸ்மெட்டிக்கோ கப்பிங் தெரபியில் கிடையாது. நாங்கள் சொல்வது ஒன்றே ஒன்றுதான் அதிக அளவில் பழங்கள் மட்டுமே சாப்பிட சொல்ேவாம். எந்தவிதமான ெசயற்கை அழகு முறையில்லாமல், உடல் ஆரோக்கியமாக இருக்கலாம்.

மசாஜ் மூலமாகச் செய்யப்படும் இந்த தெரபியில் நீங்கள் இழந்த உங்களின் நிறத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். குழந்தையாக இருக்கும் போது எப்படி மிளிர்ந்தோமோ, அதே போன்ற மினுமினுப்பு இரண்டு, மூன்று சிட்டிங்கில் நீங்களே உணர்வீர்கள். இன்றைய சூழலில் நிலவும் உணவு, வாழ்க்கை முறை, மாசு தூசு, ஐ.டி வேலைகளினால் இரவு உறக்கம் விட்டு பகலில் தூங்கும் வாழ்வு, மன உளைச்சல் எனப் பல காரணங்களால் நம்முடைய சருமத்தில் அதிக அளவு டெத் செல்கள் உருவாகின்றன.சந்தோஷமாக இருந்தா முகம் தேஜசாக இருக்குமென்பார்கள். இந்த கப்பிங் தெரபி சந்ேதாஷமளிப்பது மட்டும் இல்லாமல் ஒரு நம்பிகையும் ஏற்படுத்தும்’’ என்றவர் யாரெல்லாம் கப்பிங் தெரபி
எடுத்துக் கொள்ளலாம் என்று விவரித்தார்.

‘‘வயது வித்தியாசம் இல்லாமல் கப்பிங் தெரபி எடுத்துக்கலாம். சிலர் அழகுக்காக அறுவை சிகிச்சை செய்கிறார்கள். எதற்காகச் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறது. விமான பணிப்ெபண்கள், சினிமா நடிகைகள் பொறுத்தவரை அவர்களின் அழகு மற்றும் நிறத்தை பொருத்து தான் அவர்களின் மார்க்கெட் நிர்ணயிக்கப்படுகிறது. இங்கு நாங்கள் கலர் ட்ரீட்மென்ட் எடுப்பது கிடையாது. ஆனால், சருமத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கான சிகிச்சை அளிக்கிறோம்” என்று கூறும் ஹலினா யூடியூப் பார்த்து வீட்டிலேயே சிகிச்சை செய்பவர்களை எச்சரிக்கிறார்.

“டிஜிட்டல் யுகத்தில் எல்லாமே நம் கையில் கிடைக்கிறது. ஒரு விஷயத்தை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் இணையத்தை தட்டினால் போதும், அது சம்பந்தமான செய்திகள், வீடியோக்கள் எல்லாம் குவிய ஆரம்பித்துவிடும். அதை படித்து, வரைமுறை தெரியாமல் செய்யும் போது பல்வேறு விதமான பாதிப்புகளுக்கு ஆளாகிறோம்.

உதாரணத்திற்குப் பல் துலக்கும் பேஸ்ட்டில் உப்பு கலந்து முகத்தில் தேய்க்க சொல்கிறார்கள். இது எவ்வளவு பெரிய கொடுமை. முகம் வெந்துவிடும். காலையில் பேஸ்ட்டு போட்டு பல் துலக்குவதே தவறு என்கிறார்கள். அதற்குப் பதில் உமிக்கரி ரொம்ப நல்லது. இதைவிட ஒரிஜினல் தேன் கொண்டு வாய் கொப்பளிக்கும் போது மஞ்சள் கறை, கிருமிகள் சாவதோடு முகத்தில் முகப்பருக்களும் வராது” என்று கூறும் ஹலினா, வெறும் காஸ்மெட்டிக்கிற்காக மட்டுமின்றி மற்ற நோய்களுக்கும் கப்பிங் சிறந்த மருத்துவம் என்கிறார்.

“வெட் கப்பிங் என்ற முறையில், சர்ஜிகல் நைஃப் கொண்டு தோலின் முதல் லேயர் மட்டும் லேசாக கீரி விடப்படும். அதன் மேல் கப்பினை பொருத்தும் போது உடலில் ரத்தத்துடன் சேர்ந்து கேஸ்டிக், நீர், கொழுப்பு போன்றவை வெளியேறும். அதனால் உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கும். ரத்தம் சுத்தமாகும். சிலருக்கு தைராய்டு பிரச்னை இருக்கும். ஆனால் அது சரியாகாது.

காலம் முழுதும் மாத்திரை எடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதை ஆறு மாதத்தில் சரி செய்யலாம். இதே போன்று நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் ேபான்ற பிரச்னைகளுக்கும் இந்த தெரபி நல்ல ரிசல்ட் தரும். ஆனால் மக்களுக்கு இந்த சிகிச்சை மேல் பெரிய அளவில் நம்பிக்கை கிடையாது. அதனால் கவனம் செலுத்துவதில்லை. காஸ்மெட்டிக்னா, ஆர்வமா வராங்க. அதற்கு உடனே ரிசல்ட் காட்ட முடிகிறது.

பலரும் புலம்பும் பெரும் பிரச்சினையாக இருப்பது முடி கொட்டுவது. இதற்கு ஆக்ஸிஜன் ஜெட்பில் ட்ரீட்மென்ட் செய்கிறோம். எப்படி கார் கழுவும் போது தண்ணீர் போர்சா அடித்தால் அதில் உள்ள டஸ்ட் க்ளீன் ஆகிறதோ அதேபோல், தலையில் ஆக்ஸிஜன் ஜெட்பில் வைத்து அடிக்கும் போது டேண்ட்ரஃப், ட்ரை ஸ்லேப்கள், டஸ்ட் எல்லாவற்றையும் வெளியே எடுக்கும். பின் மைக்ரோ நீட்லிங் முறையால் புதிதாக முடி வளர்வதற்கான சாத்தியக்கூறுகளும் ஏற்படுகிறது. முன்னோர்கள் போல் வீட்டில் எண்ணையை காய்ச்சி அதை பயன்படுத்தும் போது, முடி அடர்த்தியாகவும், முடிக் கொட்டும் பிரச்னையும் நீங்கும்.

ஃபுட் கப்பிங் மூலம், கால்களில் உள்ள பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கிறது. விளையாட்டு வீரர்கள் சிலர் காலில் உள்ள தசைகள் இறுக்கமாகிவிட்டதுன்னு வருவாங்க. அவங்களுக்கு கப்பிங் முறையால் தசைகளை தளர்த்தி விடுகிேறாம். அதேபோல் நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு கால் எரிச்சல், அடிபட்ட புண் ஆறாமல் இருப்பவர்களும் இதை எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக ஃபையர் கப்பிங் என்றால், நெருப்பு வைத்துச் சூடு வைப்பார்கள் என்று பயப்படுகிறார்கள்.

அப்படியெல்லாம் கிடையாது. கப்பில் நெருப்பு புகுத்தி வெளியே எடுத்தபின் சில்லென்றுதான் இருக்கும். இதைச் செய்யும் போது ஆழ்ந்த தூக்கம் கிடைப்பதோடு உங்கள் உடம்பில் இருந்த பெரும் சுமையை இறக்கி வைத்தது போன்ற உணர்வு ஏற்படும். இந்த கப்பிங் தெரபி மசாஜ் போன்றது. எந்த ஒரு பக்கவிளைவுகளும் இல்லா, உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்” என்றார் டாக்டர் ஹலினா ரெஜியா.Post a Comment

Protected by WP Anti Spam