By 21 October 2020 0 Comments

பழங்கள்ளின் போதைதர ‘பாட்டனார்’ இருக்கின்றார்!! (கட்டுரை)

இலங்கையில் சமாதானத் தூதுவராகப் பணியாற்றிய எரிக் சொல்ஹெய்ம் பங்குபற்றிய, நிகர்நிலை கலந்துரையாடல் ஒன்று, சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்றது. ‘தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்’ என்ற அமைப்பு நடத்திய இந்தக் கலந்துரையாடல், ‘இன்றைய பூகோள அரசியல் இயங்குநிலையில் ஈழத்தமிழரின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் எரிக் சொல்ஹெய்ம், வி. உருத்திரகுமாரன், ஊடகவியலாளர் ஐயநாதன், பேராசிரியர் கிருஷ்ணா, நெறியாளராக பூகோள அரசியல் ஆய்வாளர் அருண்குமார் ஆகியோர் பங்குகொண்டனர். இந்தக் கலந்துரையாடலை ‘யூடியூப்’பில் பார்வையிட முடியும்.

போர் முடிந்து, 11 ஆண்டுகள் கடந்துவிட்டன. கடந்த ஒரு தசாப்த காலத்தில், உலகம் மிகவும் மாறியிருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான போர்நிறுத்தமும் நோர்வேயை மத்தியஸ்தராகக் கொண்ட பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று, கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் முடிந்துவிட்டன.

இதை, இப்போது ஏன் நினைவூட்டுகிறேன் என்று, நீங்கள் நினைக்கக்கூடும். ஆனால், மேற்குறிப்பிட்ட கலந்துரையாடல், சமாதான காலத்தில் நடந்தவற்றைப் பற்றியதாகவே இருந்தது. ஒருபுறம், நடந்தவை பற்றி எரிக் சொல்ஹெய்ம் சொல்ல, அதற்கான மாற்றுக்கருத்துகளையும் நோர்வே மீதான பழியையும் போட, அதற்கான சொல்ஹெய்மின் பதில் எனப் பழங்கதை பேசியே, கலந்துரையாடலை முடித்துக் கொண்டார்கள். வயதானவர்கள், தங்கள் அந்திம காலத்தில், தம்நினைவுகளை மீட்டிக் காலம் கழிப்பார்கள் அல்லவா; அவ்வாறானதோர் எண்ணமே மேலோங்கியது. இங்கு, இரண்டு விடயங்களைச் சொல்லியாக வேண்டும்.

முதலாவது, உலகம் மாறிவிட்டது. இலங்கையில், புதிய அரங்காடிகள் செல்வாக்குச் செலுத்துகிறார்கள். இலங்கை மீதான, பழைய அரங்காடிகளின் கவனத்துக்கான காரணங்கள் மாறியுள்ளன. எனவே, பழைய உலகை நினைத்தபடி, தற்போதைய பூகோள அரசியலை விளங்க முடியாது.

இரண்டாவது, தமிழ்ச்சமூகம் சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டியது தவிர்க்கவியலாதது. எம்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளைத் திறந்த மனதுடன், சீர்தூக்கிப் பார்க்க வேண்டியது அவசியம். இல்லாவிடின் இன்னும் எத்தனையோ முள்ளிவாய்க்கால்கள் எமக்குக் காத்திருக்கின்றன.

சர்வதேச அரசியலோ, இராஜதந்திர உறவுகளோ வெறும் கூட்டல் கழித்தல் கணக்கல்ல. அவை, எந்தவொரு பொதுச்சூத்திரத்தின் அடிப்படையிலும் விளங்கிக் கொள்ளக்கூடியதல்ல. அவை, தேசநலன்களாலும் தந்திரோபாயம், மூலோபாயத் தேவைகளின் அடிப்படையில் வழிநடத்தப்படுபவை.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், தமிழ் மக்களுக்கு ஆதரவானதெனவும் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம், தமிழ் மக்களுக்குத் தீர்வைப் பெற்றுத் தருவதற்காக, முன்னெப்போதையும் விட இப்போது, மிகுந்த முனைப்புடனும் அக்கறையுடனும் செயற்படுகின்றன போன்றதொரு தோற்றம் காட்டப்பட்டது.

இதேநாடுகள் தான், தீர்மானம் நிறைவேற்றுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன், கண்முன்னே நடந்த மனிதப் பேரவலத்தைக் கண்டும் காணாமல் இருந்தன. அதுமட்டுமல்ல, ஆயதங்களை வழங்கின; யுத்தத்தை முன்நின்று நடத்தி, கறைபடிந்த கைகளை உடையவையும் இதேநாடுகள்தான் என்பதை, வசதியாக மறந்துவிடுகின்றோம்.

இன்று, அந்தத் தீர்மானத்தின் நிலை என்ன? அத்தீர்மானம் தமிழ் மக்களின் மீதான அக்கறையால் கொண்டுவரப்பட்டதல்ல என்பதை, இப்போதாவது எமக்கு உறைத்திருக்க வேண்டும்.

சர்வதேச ரீதியாக, மனித உரிமைகள் பற்றி எவ்வளவுதான் பேசப்பட்டபோதும், நாடுகளுக்கும் நாடுகளுக்கும் இடையான உறவு என்பது, அரசுக்கும் அரசுக்கும் இடையேயான உறவே ஆகும். இதில், மக்களின் நியாயமான கோரிக்கைகள், இரண்டாம் பட்சமானதாக்கப்பட்டுவிடும்.

ஈழத்தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை, இந்தியா வென்றுதரும் என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. இந்தியாவில் இயங்கிய வந்த, சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ‘சர்வதேச மன்னிப்புச் சபை’, மிக அண்மையில் இந்தியாவிலிருந்து வெளியேறியிருக்கிறது. தமது பணிகளுக்குத் தொடர்ச்சியாக, இந்தியா இடையூறு விளைவிப்பதாகவும் மனித உரிமை விடயங்களில் இந்தியா அக்கறையற்று இருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறது.

இங்கு கவனிக்க வேண்டிய விடயம், மனித உரிமைகள் விடயத்தில், இந்தியா யோக்கியவான் அல்ல! காஷ்மீரில், மணிப்பூரில், நாகலாந்தில் என்ன நடக்கிறது என்பதைக் கொஞ்சம் நோக்கினால், மனித உரிமைகள் தொடர்பில், இந்தியாவின் நிலைப்பாடு விளங்கும். தனது சொந்த மக்களையே, மோசமாக ஒடுக்குகின்ற ஒரு நாட்டை, ஒடுக்கப்படுகின்ற ஒரு சமூகம் நம்பியிருப்பது, எவ்வளவு அபத்தமானது.

காஷ்மீர் விடயத்தை எடுத்தால், ஈழத்தமிழ் மக்கள் யாருடைய பக்கத்தில் நிற்க வேண்டும்? ஒடுக்குகின்ற இந்திய அரசாங்கத்தின் பக்கமா, உரிமைகள் மறுக்கப்படுகின்ற காஷ்மீரிய மக்களின் பக்கமா என்ற வினாவுக்கான விடையிலேயே, ஈழத்தமிழரின் எதிர்காலம் தங்கியுள்ளது.

எம்மில் எத்தனை பேர், ஈழத்தமிழர் ஒடுக்கப்பட்ட சமூகம் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்? தமிழர் போல், உலகெங்கிலும் ஒடுக்கப்பட்ட சமூகங்களோடு, நாம், எம்மைத் தொடர்புபடுத்தி இருக்கிறோமா? ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு, ஆதரவு வழங்கி இருக்கிறோமா? தொன்மைகளின் பெருமைகளிலும் புனைவுகளிலும் இன்னமும் எவ்வளவு காலத்துக்கு மூழ்கியிருக்கப் போகிறோம்.

எந்தவோர் ஒடுக்கப்பட்ட சமூகத்தினதும் விடுதலை, அச்சமூகத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது. எந்தவொரு வெளிச்சக்தியின் ஆதரவில் வெல்லப்படும் விடுதலை என்பது, உண்மையான விடுதலையாக இராது. மாறாக, ஓர் அடக்குமுறையாளனிடம் இருந்து, இன்னோர் அடக்குமுறையாளனின் கைகளுக்குப் போவதாகவே இருக்கும்.

இதற்கு, சிலாகிக்கப்பட்ட இரண்டு அண்மைய உதாரணங்களைப் பார்க்கலாம். முதலாவது, கொசோவோவின் விடுதலையும் தனிநாடானமையும் மெச்சப்பட்டது. ஆனால், கொசோவோவும் வொய்வொதினாவும் சேர்பியாவின் சுயாட்சி மாகாணங்களாக இருந்தமை பேசப்படுவதில்லை. இங்கு வலுவான சுயாட்சிகள் இருந்தன. கொசோவோவில், சேர்பிய சிறுபான்மையினர் கணிசமாக இருந்தனர்.

சோவியத் ஒன்றியத்தின் சரிவுக்குப் பின்னரே, கொசோவோ தேசியவாதம் கிளறிவிடப்பட்டது. சேர்பியாவின் சோஷலிஸ ஆட்சியைப் பலவீனப்படுத்தும் நோக்கத்துடன், கொசோவோ தீவிரவாத இயக்கம், அமெரிக்காவால் ஆயுதபாணியாக்கப்பட்டது. சேர்பியப் படைகளுக்கும் அமெரிக்கா ஆதரவு பெற்ற தீவிரவாதிகளுக்கும் மோதல்கள் வலுத்த போதும், கொசோவோவில் படுகொலைகள் நடக்கவில்லை. எப்போது ‘நேட்டோ’, சேர்பியா மீது குண்டு வீச்சைத் தொடங்கியதோ, அப்போதுதான் கொசோவோ அல்பேனியர் மீதான தாக்குல்கள் நிகழ்ந்தன.

கொசோவோவின் சேர்பியர்கள் விரட்டப்பட்டது பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. இன்றும் அந்நியப் படைகள், கொசோவோவில் நிலைகொண்டுள்ளன. குறிப்பாக, ‘நேட்டோ’ தலைமையிலான படைகளே, கொசோவோவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றன. அதேவேளை, அமெரிக்காவின் ‘பொன்ட்ஸ்டீல்’ இராணுவத்தளம் கொசோவோவில் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கான மனித உரிமைகளுக்கான சிறப்புப் பிரதிநிதி, இந்தத் தளத்தை ‘கொண்டானோமோ தீவு’ போன்ற சித்திரவதை முகாம் என வர்ணித்தார். எனவே, கொசோவோ மக்களுக்காக வெல்லப்பட்ட விடுதலை அல்ல.

இரண்டாவது உதாரணம், தென் சூடான் தனிநாடானமை. தனிநாடாகி இரண்டு ஆண்டுகளில், உள்நாட்டு யுத்தம் தொடங்கியது. இவ்வாண்டு தொடக்கம் வரை, உள்நாட்டு யுத்தம் நீடித்தது. இப்போது, உலகில் வறுமையான நாடுகளில் தென் சூடானும் ஒன்று. இத்தனைக்கும் துணை சகாரா ஆபிரிக்க நாடுகளில், அதிகூடிய எண்ணெய் வளங்களைக் கொண்ட மூன்றாவது நாடு தென் சூடான். விடுதலை, பட்டினியையே பரிசளித்துள்ளன.

இன்றைய உலக நிலைமைகளை, ஆழமாக மனத்தடைகள் இன்றி ஆராய வேண்டியுள்ளது. இந்தியா, அமெரிக்கா, மேற்குலகம் என்ற சூத்திரங்களை, மீண்டும் மீண்டும் ஒப்புவிக்காமல், விமர்சன நோக்கில் சர்வதேச சமூகத்தின் நடத்தையை நோக்க வேண்டியுள்ளது. ஜெனீவாவுக்கான காவடிகள் சாதித்தது என்ன? இந்தியா மீதான நம்பிக்கைகள், பெற்றுத்தந்தது என்ன? கடந்த பத்தாண்டுகளில், தமிழ் மக்களின் வாழ்வில் சொல்லும்படியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளனவா?

இந்தக் கேள்விகள் மீதான ஆழமான விவாதங்கள், இன்றைய உலக ஒழுங்கையும் கள யதார்த்தங்களையும் விளங்கிக் கொள்ள உதவும். தமிழ் மக்களின் இருப்புக்கான போராட்டம், தனித்த போராட்டம் அல்ல! அது, இலங்கையில் ஜனநாயகத்தையும் உரிமைகளையும் தக்க வைப்பதற்கான போராட்டத்துடன் பின்னிப் பிணைந்தது.

இலங்கையில் ஜனநாயகத்தையும் உரிமைகளையும் தக்கவைக்காமல், தமிழ் மக்களின் உரிமைகளைத் தக்க வைக்க முடியாது. இலங்கையில், ஏனைய சிறுபான்மையினர் உரிமைகளை இழந்து, மோசமாக நடத்தப்படும்போது, தமிழர்களின் உரிமைகள் மட்டும் தக்கவைக்கப்படாது.

இலங்கையில் தமிழர்கள் வாழ்கிறார்கள்; இனியும் வாழ்வார்கள். இந்த உண்மை, அயல்தேசங்களின் அந்தங்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு விளங்குவதில்லை. அவர்கள், அந்நிய தேசங்களில் ஆறமர இருந்து, பழங்கதைகள் பேசி, இன்புற்று இருக்கட்டும். நாங்கள், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கான எதிர்காலம் குறித்து, கள யதார்த்தங்களோடு ஏனைய சமூகங்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு, முன்செல்வதற்கான வேலைத் திட்டத்தை நோக்கி நகர்வது, இன்று அவசியமானதும் அவசரமானதும் ஆகும்.Post a Comment

Protected by WP Anti Spam