By 22 October 2020 0 Comments

மெனோபாஸ் தாம்பத்யத்துக்கு தடையாகுமா?! (அவ்வப்போது கிளாமர்)

வாழ்வின் கடைசித் துளி வரை உடன் வரும் உணர்வு. ஆணுக்கும் பெண்ணுக்குமான இணைப்பை பலப்படுத்தும் அந்த அபூர்வ சக்தி இதற்கு கூடுதலாகவே உண்டு. ஆனால், இங்கு காலம்காலமாகவே ரொமான்சில் பெண்ணின் விருப்பங்கள் பேசப்படுவதில்லை.அடுத்தவரின் பசியை போக்குவதற்காகப் படைக்கப்பட்ட இனமாகவே பெண் கருதப்படுகிறாள்.

திருமணத்துக்குப் பின் ஆணின் விருப்பங்களை புரிந்து நடந்து கொள்வதாகவும், அதன் பிறகு பிரசவம், குழந்தை வளர்ப்புக் காரணங்களுக்காக தனது ஆசைகளை அடக்கிக் கொள்பவளாகவுமே பெண் இருக்கிறாள். குறிப்பாக, மெனோபாஸ் எனும் மாதவிடாய் நிற்கும் பருவத்தை எட்டிய உடன் அவளது காம உணர்வுகள் அனைத்தும் மனதின் ஆழத்தில் புதைத்துக் கொண்டு ஒரு யோகியைப் போல வாழ்பவள் என்ற கருத்தாக்கத்தை அவளது மனதில் திணிக்கிறது. இதையே பெண்களும் உண்மை என்று நம்பிக் கொள்கின்றனர். ஆனால், உண்மை அப்படியில்லை.

பெண்கள் ரொம்பவும் ரொமான்டிக்கானவர்கள். காமத்தில் சின்னச் சின்ன விஷயங்களையும் ரசனையோடு மனதில் பதிந்து நினைவுகளால் மீட்டி மகிழும் தன்மை பெண்களுக்கே உண்டு. சின்ன கோபத்தால், செல்லச் சீண்டல்களால் அலாதி இன்பத்தை உணரும் தன்மையும் பெண்களுக்கே உண்டு.

ஆனால், இவற்றை எல்லாம் அவள் ஒருபோதும் வாய் திறந்து சொன்னதில்லை. கணவனின் குறும்புகளை அசை போடும் அவள் தனிமைகள் அழகானவை. இதனால்தான் ஒவ்வொரு பெண்ணாலும் பல்வேறு முரண்களுக்கு இடையிலும் ஒரு ஆணுடன் நீண்ட காலம்பயணிக்க முடிகிறது.

Premenopause காலகட்டத்தில் அவள் மனம் அடையும் மாற்றங்கள் அதிகமானவை. ஹார்மோன் மாற்றங்களால் உடல், மனம் இரண்டும் இனம் புரியாத துன்பங்களை சந்திக்கிறது. இந்தக் காலகட்டத்தில் அவள் சாய்ந்து கொள்ளத் தோள் தேடுகிறாள். சின்னச் சின்ன ரொமான்ஸ் விளையாட்டுகள் அவளின் மனக்குழப்பத்துக்கு ஆறுதலாகிறது.

கணவனுக்காக, மகனுக்காக, மகளுக்காக என்று யோசித்தே பழக்கப்பட்ட அவளுக்காக மொத்த குடும்பமும் யோசிக்க வேண்டிய தருணம் இது. மெனோபாஸ் காலகட்டத்திலும் கணவன் மனைவிக்கான தனிமைகள் அவசியம். இந்த காலகட்டத்திலும் மகிழ்ச்சியான தாம்பத்யம் கொண்டாட முடியும். ஆண், பெண் இருவருக்குமே அந்த காலகட்டத்தில் ஏற்படும் சோர்வைப் போக்கி மனதை உற்சாகமான நிலையில் வைத்துக் கொள்ள தாம்பத்யம் அவசியமானது என்கிறார்கள் மருத்துவர்கள். பெண்ணின் மெனோபாஸ் காலகட்டம் குறித்து விரிவாக விளக்குகிறார் சித்த மருத்துவர் டாக்டர் லதாராணி.

மெனோபாஸ் பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமானது. அதைப் பற்றிக் கவலை கொள்கிற பெண்களே அதிகம். ஆனால், பெண்கள் பூப்பு சுழற்சி நிற்றலையும் மகிழ்ச்சியாக எதிர்கொள்ளலாம். தொடர்ந்து 12 மாதவிடாய் வராமலிருந்தால் அந்தப் பெண் மெனோபாஸ் அடைந்துவிட்டாள் என்று அர்த்தம். ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன் சுரப்பு குறைவதால்பெண்ணுடலில் பூப்பு நிற்றல் நிகழ்கிறது. இத்துடன் பெண்ணின் இனப்பெருக்கம் முடிவுக்கு வருகிறது. பெண்ணின் 45 வயது முதல் 52 வயதுக்குள் நிகழும் இதையும் சுப நிகழ்வாகவே கொள்ளலாம்.

பயிற்சியும், அன்பும், கவனிப்பும் இருக்கும் பட்சத்தில் பூப்புநிற்றலும் சுப நிகழ்வாகிறது. பெண்ணின் கருமுட்டைகள் பாலுறவால் கருவுற்றால் அவள் கர்ப்பமாகிறாள். கருவுறாவிட்டால் மாதவிடாய் நிகழ்கிறது. பெண்ணின் வயது அதிகமாகும்போது கரு முட்டை எண்ணிக்கை குறையத் தொடங்கி பூப்பு முடிவில் அவை உற்பத்தியாவதில்லை. பெண் பூப்பு எய்தும் முன் படிப்படியாக அவள் வளர்ந்து பூப்பெய்துகிறாள். அதற்கு மாறாக பூப்பு முடிவுக்கு வரும் போது படிப்படியாக அவள் உடல் முதிர்ச்சியடைந்து முழுமையை அடைகிறாள்.

இந்த நிறைவு போற்றப்பட வேண்டிய ஒன்று. இந்த கால கட்டத்தில் பெண் உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி குறைவதால் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும். மாதவிடாய் நிகழ்வில் மாற்றம் ஏற்படும். மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும்போது சில மாதம் முன்பும், பின்பும் பல உடல் மற்றும் உளவியல் மாற்றங்கள் பெண்ணுக்குள் நிகழ்கின்றன. இவை அவர்களின் சமூகச் சூழலுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. உணவுப் பழக்கங்கள், பாலியல் நடத்தைகள், மரபியல் போன்ற காரணங்களால் அவை மாறுபடுகின்றன.

வேறு சில உடல் நலக்காரணங்களாலும் பெண்களுக்கு மாதவிடாய் மாற்றங்கள் ஏற்படலாம். புதிய இடங்களுக்குக் குடியேறுதல், புதிய சூழல், அதிக கவலை, டென்ஷன் போன்ற காரணங்களால் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் கரு முட்டை வெளிப்படாத நிலை ஏற்பட்டு மாதவிடாய் வராமலிருக்கலாம். சில நோய்நிலைகள், நாட்பட்ட நோய்கள், ரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடுகள், உடல் பருமன், நரம்புத்தளர்ச்சி, நோய் ஆகியவற்றாலும் மாதவிடாய் வராமலிருக்கலாம். இதனைப் பூப்பு முடிவு என்று எடுத்துக் கொள்ள முடியாது.

நம் நாட்டைப் பொறுத்தவரை பெண்களுக்கு உள்ளங்கால் முதல் தலை வரை வெப்பம் பரவல், சிலசமயம் காது வழியாக வெப்பம் வேகமாக வெளிவருவது போல உணர முடியும். எலும்புத் தேய்மானம், எலும்பு எளிதில் முறியும் நிலை, இரவில் திடீரென்று அதிக வியர்வை, படபடப்பு, மன அழுத்தம், மனதை ஒருமைப்படுத்த முடியாத நிலை, தூக்கமின்மை, பிறப்புறுப்புகளில் ஒருவித வறட்சி, சிறுநீரை அடக்க முடியாமை, தோலில் மாற்றம், நீட்சித்தன்மை குறைதல், இதயக் கோளாறுகள் ஆகிய தொந்தரவுகள் பெண்களுக்கு ஏற்படுகிறது.

பிறப்புறுப்பில் வறட்சி ஏற்படுவதால் உடலுறவின்போது வலி ஏற்படலாம். ஹார்மோன் சிகிச்சை, நெய்ப்புத் தன்மையுள்ள கிரீம்களை உபயோகித்து தாம்பத்யத்தில் ஏற்படும் சிரமங்களைக் குறைக்கலாம். பெண் பூப்பெய்தல் எதிர்பார்க்கப்படுகிறதோ, அப்படித்தான் பூப்பு முடிவும் எதிர்பார்க்கப்பட வேண்டும். அதற்குத் தற்காப்புகள் செய்யப்படுவது அவசியம். பெண் பூப்பெய்திய உடன் நல்ல ஓய்வு, ஊட்டச்சத்து உணவுகள் தரப்படுகிறது. மனமகிழ்ச்சியானநிகழ்வுகள் நடக்கின்றன.

ஆனால், பூப்பு முடிவின்போது ஏற்படும் மாற்றங்களை அந்தப் பெண் மட்டும் மனதுக்குள் புதைத்துக் கொள்கிறாள். அதையும் ஒரு முக்கிய நிகழ்வாக நினைத்து சிறிது ஓய்வு, ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ளுதல், கால்சியம் சத்துள்ள உணவுகளை உண்ணுதல், உளுந்தங்களி ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். உற்றார், உறவினர்கள் அவர்கள் மீது கவனம் செலுத்தினால் பூப்பு முடிவும் ஒரு சுப நிகழ்வாகவே அமையும். பூப்பு முடிவுக்குப் பின்னரும் பெண்கள் பல வெற்றிகளை, சாதனைகளைச் செய்ய முடியும்.

பூப்பு எய்தியது முதல் தியானம், பிராணாயாமம், யோகா போன்ற பயிற்சிகளை முறையாக செய்து வந்தால் ஒழுங்கான மாதவிடாய், பிற கருப்பைக் கோளாறுகள் இல்லாமல் இருக்கலாம். பூப்பு முடிவின் போது அதிக ரத்தப்போக்கு இன்றி மகிழ்ச்சியாக வாழ முடியும். தாய்மார்கள் ஒரு ஆண்டு வரை குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

பெண்ணின் பிறப்புறுப்புப் பகுதியின் செயல் திறனைப் பாதுகாக்க சலபாசனம், புஜங்காசனம், தனுராசனம் ஆகிய ஆசனங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இவ்வாசனங்கள் கருப்பை தன் தொழிலைத் திறம்படச் செய்யத் தூண்டப்படுகிறது. இத்துடன் சில வாழ்வியல் ஒழுங்குகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.

அதிகாலையில் எழுதல், குளிர்ந்த நீரில் குளித்தல், சரியான நேரத்துக்கு உணவு எடுத்துக் கொள்ளுதல், பகலில் சுறுசுறுப்பாக செயல்படுதல், இரவில் உணவு உண்ட ஒரு மணி நேரத்தில் உறங்கச் செல்லுதல் மற்றும் இரவில் நல்ல தூக்கம் ஆகியவை அவசியம். ரசாயனம் கலந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

அசோகு, கற்றாழை, தண்ணீர் விட்டான் கிழங்கு ஆகியவற்றை உணவாக சேர்த்துக் கொள்ளலாம். அசோகு பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து, அரிசி மாவுடன் கலந்து புட்டு செய்து சாப்பிடும் வழக்கம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. அசோகில் உள்ள டானின், கிளைக்கோசைடுகள், எசன்ஷியல் ஆயில், கால்சியம் போன்ற சத்துக்கள் கருப்பையை வலுப்படுத்துகிறது. சூதக வலி, கட்டிக் கழலைகள், வெள்ளைப்படுதல், அதிக ரத்தம் வெளிப்படுதல் ஆகியவற்றில் இருந்து பாதுகாக்கிறது.

கற்றாழையை மோர், சாம்பார், ரசம் செய்து சாப்பிடலாம். கற்றாழையிலுள்ள சத்துக்கள் புற்றுநோய்க்கான வாய்ப்புக்களைத் தடுக்கிறது. தண்ணீர்விட்டான் கிழங்கை சூப், ஊறுகாய், குழம்பு வைத்து சாப்பிடலாம். உணவாக எடுத்துக் கொள்ள முடியாத பட்சத்தில் மருந்தாக எடுத்துக் கொள்ளலாம். இதிலுள்ள சத்துக்கள் பூப்பு முடிவில் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க உதவுகிறது.

ஆளி விதை சுண்டல், சூப், பொடி செய்து பொரியல், கூட்டு ஆகியவற்றில் சேர்த்து உணவாக எடுத்துக் கொள்ளலாம். மீனில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி அமிலங்கள் ஆகியவை ஆளிவிதையில் உள்ளது. சைவ உணவுப் பிரியர்கள் ஆளி விதையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். புற்றுநோய்க் கட்டிகளை சுருக்கும் தன்மை உள்ளது. ஆளிவிதைக்கு புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தியும்உள்ளது.

பூப்பு முடிவில் உண்டாகும் இதய நோயைத் தடுக்கும் தன்மையும் இதில் உள்ளது. ஈஸ்ட்ரோஜென் குறைபாட்டை தடுக்க சோயா, பயறு வகைகள், கொண்டைக் கடலை, சிவப்பு காராமணி, ஆளிவிதை, செலரிக்கீரை ஆகியவற்றைக் கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும். கால்சியம் அதிகம் உள்ள பாதாம், கீரை வகைகள், வாழைப்பூ, குடை மிளகாய், புரோக்கோலி சற்று அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். மாலைநேர நடைப்பயிற்சியின் போது வைட்டமின் டி சத்துக் கிடைக்கிறது. இது கால்சியம் உற்பத்திக்கு உதவுவதுடன் எலும்புத் தேய்மானத்தைத் தடுக்கிறது.

உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை இரண்டிலும் பூப்பு நிற்றலின் போது ஏற்படும் பிரச்னைகளை முன்கூட்டியே தீர்மானித்து அதற்கான பாதுகாப்பு நடைமுறைகளைக் கையாள வேண்டும். இந்தக் காலகட்டத்தில் பெண் தன்னை ஃபிரஷ்ஷாக உணர வேண்டும். எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும்படியான வாழ்க்கைச் சூழலை உருவாக்கிக் கொள்வதும் அவசியம். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதும், ரொமான்டிக் மனநிலையும் உங்களை இளமையாக உணர வைக்கும்.

மெனோபாஸ் வந்துவிட்டால் உடல் ஒத்துழைக்காது, செக்ஸ் உணர்வுகள் வற்றிப்போய்விடும் என்பதெல்லாம் கற்பனையே. கூர்ந்து கவனித்தால் மாதவிடாய்க்கு முந்தைய காலம், மாதவிடாய் முடிந்த பின்னர் என பெண் மனதில் தாம்பத்ய உறவுக்கான வேட்கை இருக்கும். பெண்ணின் மன நிலையை ஆண்கள் புரிந்து கொண்டு ரொமான்டிக்காகவே இருங்கள். தனக்கு செக்ஸ் உணர்வு வராது, குழந்தைகள் வளர்ந்துவிட்டால் இதெல்லாம் தேவையா என்ற எண்ணங்கள் பெண்களை இறுக்கமான மனநிலைக்குத் தள்ளுகிறது.

இதனால் உடலுறவின் போது வலியை அனுபவிக்கின்றனர். வழக்கமான உற்சாகத்தைப் பெண்கள் இழக்கின்றனர். இது பொதுவாக மூட நம்பிக்கையே. வயதானாலும், ஹார்மோன் கண்ணாமூச்சியாடினாலும் ரொமான்டிக்காக உணருங்கள். காதலில், காமத்தில் பேரன்பை பகிருங்கள். மெனோபாஸ் ஒருபோதும் மகிழ்ச்சிக்கான ஸ்பீட்பிரேக்கர் கிடையாது. பெண்ணே… நீ எப்போதும் காதல் வேட்டைக்காரிதான். வெட்கம் விட்டு வேட்டையாடு!Post a Comment

Protected by WP Anti Spam