By 15 November 2020 0 Comments

ப்யூட்டி பாக்ஸ்!! (மகளிர் பக்கம்)

நமது உடலின் புறத்தோற்றமாய் தெரியும் தோலை இயற்கைக்கு மாறாக வெள்ளையாகவும், மினுமினுப்பாகவும், வழவழப்பாகவும், அழகாகவும் வெளியில் காட்டிக்கொள்ள எத்தனையோ முயற்சிகளை மேற்கொள்கிறோம். நம் உடல் அதனை ஏற்றுக் கொள்கிறதா என்பதை அறியாமலே, ஓர் அகத் தோற்றத்தினை நம் தோல் வழியாக நமது உடலில் செயற்கையாய் ஏற்படுத்துகிறோம். உலகத் தரம் வாய்ந்த காஸ்மெட்டிக் நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புப் பொருட்களை சந்தைப்படுத்தியிருக்கும் விதத்தை, சாதாரணமாய் இயங்கும் பல்பொருள் அங்காடிகளுக்குச் சென்று பார்த்தாலே உணர முடியும்.

விற்பனைப் பிரிவில் இருக்கும் பெண்கள், அவர்கள் நிறுவனத் தயாரிப்புகளுடன், நமது தோலின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியபடியே, அவற்றை சரிசெய்வதாக தங்கள் தயாரிப்புகளோடு நம்மை பின் தொடர்வார்கள். அழகு சார்ந்து இயங்கும் அத்தனை நிறுவனங்களும், தங்கள் பொருட்களை சந்தைப்படுத்த எத்தனை மாயாஜால வேலைகளைச் செய்து அவர்களின் தயாரிப்புகளை நம் தலைகளில் கட்டுகிறார்கள். பல்வேறு விளம்பர உத்திகளோடு, நமது வீடுகளின் வரவேற்பறைக்குள் நுழையும் இவர்கள், தொலைக்காட்சி வழியே கடைவிரித்து காசு பார்க்க, நமது உடலை நாம் குப்பையாக்கிக் கொண்டிருக்கிறோம்.

காஸ்மெட்டிக் நிறுவனங்களின் தயாரிப்புகள், உண்மையிலேயே நம் தோலுக்கு அழகைத் தருகின்றனவா? அதன் பக்க விளைவுகளைப் பற்றி நாம் யோசித்திருக்கிறோமா? நம் உடலை மூடி இருக்கும் மெல்லிய அடுக்கான தோல் என்பது உண்மையிலே அழகு சார்ந்ததா? இவை குறித்து இனி வரும் இதழ்களில் தோல் குறித்து பார்க்கலாம்.

சுவாசிக்கவும், கழிவை நீக்கவுமே தோல்

தோல் என்பதை நாம் அழகு என தவறாக நினைக்கிறோம். நமது உடலை முழுதும் மூடி பாதுகாக்கும் கவசமான தோல், நம் உடலின் கழிவு நீக்க மண்டலம். தோல் என்பது அக அழகையும் சேர்த்து, இதயம், கல்லீரல், சுவாசப்பகுதி, கண், தொண்டை என எல்லா உறுப்பையும் இணைத்து, நமது உடல் முழுவதையும் பாதுகாக்கும் ஓர் அமைப்பு தானே தவிர, காஸ்மெட்டிக் நிறுவனங்கள் காட்டுவதுபோல வெறும் அழகை மட்டும் வெளிக்காட்டும் அமைப்பல்ல.

நம் தோல்களில் கண்ணுக்குத் தெரியாத துளைகள் மிக மெல்லியதாக நிறைய இருக்கும். நமது உடலுக்குள் இருக்கும் நுரையீரல் மட்டுமல்ல நம் தோலும் சுவாசிக்கிறது. துளைகள் வழியாகச் சுவாசிக்கும் தோல், அந்தத் துளைகள் வழியாகவே கழிவுகளை வியர்வையாக வெளியேற்றும். தோலின் மேலே வெளிப் பகுதியில் அழகுக்காக ஃபவுண்டேஷ‌ன், க்ரீம், லோஷன், ஜெல் என எல்லாவற்றையும் தடவி சுவாசத் துளைகளை அடைக்கும்போது, மிக இலகுவான தோல் சுவாசிக்க முடியாமல் திக்கித் திணறத் துவங்குகிறது. விளைவு? ஆரம்பிக்கிறது நமக்கு தோல் வியாதி.

தோலில் பிக்மென்டேஷன், ரேஷஸ், அபங்கஸ், அலர்ஜி, சொரியாஸிஸ், பரம்பரை நோய், சூரிய வெளிச்சம் படாத இடங்களில் வரும் பூஞ்சைத் தொற்று என எல்லாத் தொல்லைகளும் வரத் துவங்கும். நமது உடலில் உள்ள சூரிய ஒளி படாத மறைவான பகுதிகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளல் வேண்டும். சிலருக்கு ஒருவித ஒவ்வாமையினால், அதாவ‌து சில ரசாயன வாடை, ஒத்துக்கொள்ளாத உணவு, பூச்சிக் கடி இவைகளாலும் தோலில் பிரச்சனைகள் வரும். ஒரு சிலருக்கு நண்டு, ஒரு சில வகை மீன், கத்திரிக்காய் போன்ற உணவுகளாலும், மற்ற சில ஒவ்வாத உணவுகளாலும் தோலில் அலர்ஜி உண்டாகும். சிலருக்கு பரம்பரை வியாதியாலும் தோல் தொடர்பான பிரச்சனைகள் வரும். பரம்பரை தொடர்பாக வரும் தோல் பிரச்சனை கட்டாயம் வந்தே ஆகவேண்டும் என்றில்லை.

சிலருக்கு வரும் வராமலும் போகலாம்.சோப்பை பயன்படுத்துவதால் உடலில் உள்ள அழுக்கு வெளியேறி விடுவதாக நாம் நினைக்கிறோம். அப்படியல்ல, சோப்பில் உள்ள ஒரு லேயர் நம் உடலில் படிகிறது. அதனால்தான் நம் முகமும், உடலும் பளிச்செனத் தெரிகிறது. நமது தோல் அப்படியேதான் இருக்கும். ஆனால் சோப்பில் இருக்கும் சுண்ணாம்பு நமது முகத்தில் ஏறி இருக்கும். பெரும்பாலான குளியல் சோப்புகள் பாமாயில் கழிவில் இருந்து தயாரிக்கப்படும் ஃபேட்டி ஆசிட் சோப்புக்களாகும். பாமாயில் எண்ணையின் அடர்த்தித் தன்மையால் நமது தோலின் துளைகளை அவை மூடிவிடுகின்றன. எனவே குளியலுக்காக பயன்படுத்தும் சோப்பில் கவனம் தேவை. தேங்காய் எண்ணெய் தயாரிப்பு சோப்புகள் தோலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

ஃபேஸ் வாஷ், சோப் ஆயில், ஜெல் என எல்லாவற்றிற்கும் இதே நிலைதான். செயற்கையான ரசாயனப் பூச்சுக்களைத் தவிர்த்து இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் குளியல்பொடி, சீயக்காய், பச்சைப் பயறு, கடலை மாவு, பயத்தம் பருப்பு, நல‌ங்கு மாவு, அரப்புப் பொடி இவற்றை உடலை சுத்தப்படுத்துவதற்கென பயன்படுத்தத் துவங்கலாம். இவற்றால் தோலுக்கு எந்த பாதிப்போ, பக்க விளைவுகளோ கண்டிப்பாக இல்லை. முகப்பருக்கள், மருக்கள், கருவளையங்கள் தோலில் தோன்றுவதில்லை. நமது முன்னோர்கள் இவற்றை வீட்டிலே தயாரித்துப் பயன்படுத்தியதால்தான், நம் பாட்டி, அம்மா காலங்களில் எல்லாம் முகப்பருப் பிரச்சனைகள் வந்ததும் இல்லை. ஏனெனில் அவர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தார்கள். இயற்கை பொருட்களையே முகப் பூச்சாகவும், வாசனை திரவியமாகவும் பயன்படுத்தினார்கள்.

முன்பெல்லாம் வீடுகளில் வாரம் இரண்டு நாட்கள் எண்ணெய் குளியல் எடுப்பார்கள். எண்ணெயை தலையில் நிறைய வைக்கும்போது தோல் வறண்டு போகாமல் சரிவிகித எண்ணைத் தன்மையுடன் தோல் பாதுகாப்பாக இருக்கும். உடம்பில் இருக்கும் எண்ணைத் தன்மையும், ஈரத் தன்மையும் பேலன்ஸ் ஆகாமல் சரிவிகிதம் இன்றி போகும் போதுதான் தோலில் பிரச்சனைகள் வரத் துவங்குகின்றன.

அதிகப்படியான எண்ணெய் தன்மை மற்றும் குறைவான‌ எண்ணெய் தன்மை இருப்பதனாலும் தோலில் பிரச்சனை வரக் கூடும். உடலுக்குத் தேவையான தண்ணீரை அருந்தாமையும் ஒரு காரணம். ஒரு நாளைக்கு சராசரியாக குறைந்தது இரண்டரை லிட்டரில் இருந்து அதிகபட்சம் நான்கரை லிட்டர் வரை தண்ணீர் குடித்தல் வேண்டும்.நமது தோலுக்குத் தேவையான விட்டமின் டி வேறெதையும்விட‌, சூரிய ஒளியில்தான் மிகமிக அதிகமாக உள்ளது.

பத்து மாதமும் குழந்தை அம்மாவின் வயிற்றில் இருட்டிலே இருப்பதால், மற்ற அத்தனை சத்துக்களும் அம்மாவிடம் இருந்து கிடைத்தாலும், விட்டமின் டி மட்டும் குழந்தைக்குக் கிடைக்காது. அதனால்தான் பிறந்த குழந்தைக்கு தேவையான விட்டமின் டி பெற அதிகாலை சூரிய வெளிச்சத்தில் குழந்தையைக் காட்டுகிறார்கள். குளிர் பிரதேசங்களில் வாழும் வெளிநாட்டினர், திறந்த வெளிகளில் சூரியக் குளியலை எடுக்கிறார்கள்.

அலுவலகத்திலும் குளிர்சாதன வசதி, காரிலும் குளிர்சாதன வசதி, வீட்டிலும் குளிர்சாதன வசதியென வெயில் படாமல் ஏசியிலே வாழும் வாழ்வையும் தோல் நலன் கருதி தவிர்த்தல் நலம். உழைக்கும் வர்க்கத்தினர், வெயிலில் வேலை செய்வதாலும், வேர்வை சிந்த உழைப்பதாலும்தான் பெரும்பாலும் தோல் பிரச்சனைகள் அவர்களை அணுகுவதில்லை. அதேபோல் வெளியில் செல்லும்போது வெயிலே படாத அளவிற்கு, உடல் முழுவதையும் மூடிச் செல்லக் கூடாது.

காலையில் 11 மணிக்குள்ளும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் சூரிய வெளிச்சம் நமது தோலில் பட்டால் போதுமானது. எப்போதும் நமது சுற்றுச்சூழல் நன்றாக மாசின்றி இருத்தல் வேண்டும். அதிகமான வெயில், காற்று வசதி இல்லாத இடம், இருட்டான இடங்களில் தோலுக்கு பளபளப்புக் கிடைக்காது.

நமது தோலின் அடிப்பகுதியில் பரவியிருக்கும் கொழுப்பே நமது தோல் மூடிய உடலமைப்பைப் பளபளப்பாகக் காட்டுகிறது. தோலில் சரிவிகித எண்ணெய்த் தன்மை இல்லை எனில், நமது வயது ஏற ஏற தோலில் இருக்கும் கொழுப்பு குறைந்து, தோல் தளர்வடைந்து, தோலில் கோடுகள் வரத்துவங்கும். தோல் கொஞ்சம் கொஞ்சமாகச் சுருக்க‌த்தை நோக்கி போகத் துவங்கும். வயதான தோற்றத்தை நமது உடல் மெல்ல மெல்ல பெறத் துவங்கும். ஒரு சிலருக்கு மிகச் சிறிய வயதிலேயே தோலில் சுருக்கம் வரக் காரணம் எண்ணெய்த் தன்மை குறைவாக இருப்பதுதான்.நாம் எடுக்கும் உணவில் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு என இரண்டுமே உண்டு. கெட்ட கொழுப்பை விட்டுவிட்டு நல்ல கொழுப்புள்ள உணவுகளை எடுத்தல் தோலுக்கு நலம் பயக்கும். எல்லா உணவு தானியப் பொருட்களில் இருந்தும் எண்ணெய் தயாரிக்கத் துவங்கிவிட்டார்கள்.

எடுத்துக்காட்டாக சூரியகாந்தி, அரிசி, நிலக்கடலை என எல்லாவற்றில் இருந்தும் எண்ணெய் வந்து விட்டது. அதில் நம் உடலுக்கு எது ஏற்றது என்பதை அறிந்து அந்த எண்ணெயை நம் உணவில் சேர்த்தால் தோல் தொடர்பான பிரச்சனைகள் நமக்கு வராது. மஞ்சள் வண்ண பழங்களில் புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது. வாழைப்பழம், ஆரஞ்சு, பப்பாளி, பூசணிக்காய் இதெல்லாம் தோலுக்கும் உகந்தவை. நிறைய தண்ணீர்ச் சத்து நிறைந்த பழங்கள், பழச்சாறுகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ள‌ வேண்டும்.

இவை நம் தோலுக்கு அதிக மினுமினுப்பையும், பளபளப்பையும் தரக் கூடியவை. கடையில் விற்கும் எண்ணெய் பதார்த்தங்களைத் தவிர்த்தல் வேண்டும். தோல் பிரச்சனை உள்ளவர்கள் அசைவ உணவுகளை தவிர்த்தல் மிகவும் நல்லது.மனித உடல்களில் நார்மல் ஸ்கின், ஆயிலி ஸ்கின், ட்ரை ஸ்கின், காம்பினேஷன் ஸ்கின், சென்சிட்டிவ் ஸ்கின் என ஐந்து விதமான தோல்கள் உள்ளது.

ஆயிலி ஸ்கின்

முகத்தில் இருக்கும் எண்ணெய் தன்மை போன்ற பசை அழுக்கை வெளியில் வர விடாமல் தோலின் துளைகளை அடைத்துக் கொண்டு முகப்பருவை உருவாக்கும். இவர்கள் அடிக்கடி முகத்தைக் கழுவுதல் வேண்டும் அல்லது டிஸ்யூ பேப்பரைக் கொண்டு முகத்தை சுத்தமாகத் துடைத்து எடுக்க வேண்டும். எண்ணெயால் செய்யப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல் வேண்டும். பழச்சாறுகளை அதிகம் அருந்த வேண்டும்.

ட்ரை ஸ்கின்

முகம் வற‌ண்டுபோய் இருக்கும். தோலில் நிறைய வெடிப்புகள் இருக்கும். தண்ணீரை அதிகம் குடிக்காமல், தோலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால் தோல் வற‌ண்டு காணப்படும். அழகு சாதனப் பொருட்களை அதிகம் பயன்படுத்துவதும் ஒரு காரணம். வறண்ட சருமம் உள்ளவர்கள் மாயிஸ்ட்ஸரை முகத்தில் பயன்படுத்துதல் வேண்டும். மாயிஸ்ட்ஸ‌ராக வாழைப்பழம், பட்டர் ஃப்ரூட், பால் ஏடு போன்றவைகளை பயன்படுத்தலாம்.

காம்பினேஷன் ஸ்கின்

நெற்றி, மூக்குப் பகுதி மட்டும் எண்ணெய்த் தன்மையோடு இருக்கும். மற்ற பாகங்கள் நன்றாக இருக்கும். இதுவே காம்பினேஷன் ஸ்கின். சரிவிகித உணவுப் பழக்கங்கள் வழியாக இதனை சரிப்படுத்த இயலும்.

சென்சிட்டிவ் ஸ்கின்

ஒரு சில அழகு சாதனப் பொருட்கள், அது சார்ந்த ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தும்போது, சென்சிட்டிவ் ஸ்கின் உள்ளவர்களுக்கு ஒவ்வாமை வரும். இவர்கள் காஸ்மெட்டிக் தயாரிப்புகளை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். அதிகமான கெமிக்கல் உள்ள ஷாம்பூ, சோப்புக்களை பயன்படுத்தக் கூடாது.

எந்தவகை தோலாக இருந்தாலும், இரவில் தூங்கச் செல்வதற்கு முன், முகத்தையும் கால்களையும் நன்றாக கழுவி சுத்தம் செய்த பிறகே படுக்கச் செல்ல வேண்டும். ஏனெனில் நமது பாதங்களில் அதிகமான துளைகள் இருக்கும். அதன் வழியாக அழுக்குகள் உள் நுழைந்து, நம் தோலைப் பாதிக்கும் அபாயமும் உண்டு.

முகம் என்பது தோலின் வெளிப்பாடு தானே? அகத்தின் அழகே முகத்தில். அதாவது நமது தோலின் வெளிப்பாடும் கூட. மனதால் நாம் மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் இருந்தாலே நமது தோல் அழகாகத் தெரியும். மனம் தெளிவின்றி குழப்பங்களோடு இருப்பவர்களுக்கு, அவர்களின் சிந்தனையும், மன உணர்வுகளும் எப்படியோ அதைத்தான் புறத்தோற்றமான முகமும், தோலும் பிரதிபலிக்கின்றன. எப்போதும் மகிழ்ச்சியாகவே இருங்கள். புன்னகை தானே அழகு?இனிவரும் கேள்விகளுக்கான பதில்கள் அடுத்த இதழில்…
§ எந்த மாதிரியான பிரச்சனைகள் தோலில் வருகின்றன‌?தோலில் வரும் பிரச்சனைகளை எப்படி சரிசெய்வது?



Post a Comment

Protected by WP Anti Spam