By 18 November 2020 0 Comments

சிவப்பழகு சிகிச்சை!! (மகளிர் பக்கம்)

‘க்ரீம்களினாலும், மருந்துகளினாலும் வெள்ளையாக முடியாது. அது தற்காலிகமான மாயை. நிரந்தரமான ஆரோக்கியக் கேடு’ என்று கடந்த அத்தியாயத்தில் கூறி நிறைவு செய்திருந்தோம். சிவப்பழகு க்ரீம்களையும், மருந்துகளையும் ஏன் ஆரோக்கியக் கேடு என்று சொல்கிறீர்கள்? வேறு எப்படிதான் வெள்ளையாவது? என்ற கேள்வி உங்கள் மனதில் நிச்சயம் எழுந்திருக்கும். அதற்கான பதிலைத்தான் இந்த அத்தியாயத்தில் விலாவாரியாகப் பார்க்கவிருக்கிறோம்…

இப்போது க்ளூட்டாதையோன் (Glutathione) என்ற மருந்தைத்தான் மிக அதிகமாக சிவந்த நிறம் பெறுவதற்கு உபயோகப்படுத்துகிறார்கள். இது நம் உடலில் இயற்கையிலேயே உள்ள ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட். ஆன்டி ஆக்ஸிடன்ட் என்றால் உடலில் உருவாகும் கெடுதல் ஏற்படுத்தும் நச்சுக்களை(Free radicals) ஒழித்துக்கட்டும் நல்ல பொருள் என்று அர்த்தம்.

உதாரணத்துக்கு வைட்டமின் ஏ, சி, இ மற்றும் பல பொருட்கள் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளாக செயல்படுவன. க்ளூட்டாமேட், சிஸ்டீன் மற்றும் க்ளைசீன் (Glutamate, Cysteine and Glycine) ஆகிய அமினோ அமிலங்களால் உருவானதுதான் இந்த க்ளூட்டாதையோன். இந்த க்ளூட்டாதையோன் அளவு உடலில் குறைந்துபோனால் ஆஸ்துமா, அலர்ஜி, மருந்து ஒவ்வாமை, புற்றுநோய் என்ற பல நோய்கள் உருவாவதாகக்
கண்டுபிடித்துள்ளனர்.

இந்த க்ளூட்டாதையோன் மருந்தை புற்றுநோய்க்கு எதிரான மருந்தாக கொடுத்தபோது சிலர் மிகவும் வெள்ளையாவதை மருத்துவர்கள் கவனித்தனர். மருத்துவத்தில் இந்த மாதிரி எதிர்பாராத பக்கவிளைவை வேறு ஒரு நோய்க்கு வைத்தியமாகப் பயன்படுத்துவர். இதற்கு Serendipity அல்லது Serendipitous discovery என்று பெயர்.

அப்படித்தான் க்ளூட்டாதையோன் மருந்தை வெள்ளையாக மாற்றுவதற்காக உபயோகப்படுத்த ஆரம்பித்தனர். இது பல வருடங்களாக பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவுக்கு வந்து சில வருடங்கள் ஆகின்றன.
க்ளூட்டாதையோன் எப்படி இதை சாத்தியப்படுத்துகிறது?

நம் உடலில் மெலனின் உருவாவதற்கு டைரோசினேஸ்(Tyrosinase) என்ற என்ஸைம் மிகவும் முக்கியம். அந்த என்ஸைமை இது தடுத்துவிடுகிறது. டைரோசினேஸ் என்ஸைம் நேரடியாகத் தடுப்பதோடு மட்டுமில்லாமல், அது செல்களுக்குள் போவதையும் க்ளூட்டாதையோன் தடுத்துவிடுகிறது.

மெலனின் உற்பத்தியை யூமெலனின்(Eumelanin) என்ற பிக்மென்ட் உருவாக்காமல் அதற்கு பதிலாக பியோமெலனின்(Phaomelanin) என்ற பிக்மென்ட் உருவாக்கும் பாதைக்கு மாற்றிவிடுகிறது. உங்கள் அனைவருக்கும் முன்பு சொன்ன விஷயம் ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

உலகத்தில் உள்ள அனைத்து மனிதருக்கும் மெலனோசைட் செல்களின் எண்ணிக்கை ஒன்றுதான். ஆனால், அது எந்த வகை மெலனினை உருவாக்குகிறது என்பதை பொறுத்துதான் நம் நிறம் அமையும். இதை மாற்றுவதில் க்ளூட்டாதையோன் வெள்ளை நிறத்தை கொடுக்கிறது.

ஆஹா… ஜாலி… நாம் எல்லோரும் க்ளூட்டாதையோனை எடுத்துக்கொண்டு வெள்ளையாகி விடலாமா?

க்ரீமாகவா, சோப்பாகவா, மாத்திரையாகவா, நாக்கின் அடியில் வைக்கக்கூடிய(Sublingual tablet) மாத்திரையாகவா, வாயில் அடிக்கக்கூடிய ஸ்ப்ரேயாகவா அல்லது ரத்தக் குழாய்களில் நேராகவே சேர்க்கும் இன்ஜெக்‌ஷனாகவா?

எப்படி பயன்படுத்தலாம் க்ளூட்டாதையோனை என்று மற்றோர் கேள்வி எழுகிறதுதானே…பலரால் இது பலவிதமாக பயன்படுத்தப்பட்டாலும் இதில் பல விந்தைகளும், வியப்புகளும், ஏமாற்றங்களும் கலந்துதான் உள்ளன. Evidence based studies தரும் முடிவுகள் ஏனோ இதில் இன்னும் திருப்திகரமாக இல்லை.

இந்த மருந்தை பற்றி நாம் புரிந்துகொள்ள இன்னும் நிறைய ஆராய்ச்சிகள் வெளியானால்தான் அது முழுமை அடையும். க்ளூட்டாதையோன் மாத்திரைகளை ஒருவகை பூஞ்சையிலிருந்துதான் தயார் செய்கிறார்கள். இந்த மாத்திரையை தனியாகவோ, வைட்டமின் சி-யுடனோ எடுத்துக் கொள்ள அறிவுறுத்துகிறார்கள். இந்த மருந்து சிறு குடலில் இருந்து உறிஞ்சப்பட்டு சிறுநீரகத்தால் உடலில் இருந்து அகற்றப்படுகிறது.

ஆய்வு ஒன்றில் ஒரே வீரியம் உள்ள மாத்திரை 40 பேருக்கு கொடுக்கப்பட்டு சில மணி நேரம் கழித்து அவர்களின் ரத்தத்தில் க்ளூட்டாதையோனின் அளவை அளந்து பார்த்ததில் மருந்து எடுத்தவருக்கும் எடுக்காதவருக்கும் ரத்தத்தில் பெரிதாக எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. அதேபோல், இந்த மாத்திரையை உருவாக்குவதும் அத்தனை எளிதில்லை. ஒரு சில தொழில்நுட்பத்தில் மட்டும்தான் அந்த மாத்திரையின் ஸ்திரத்தன்மை
குறையாமல் இருக்கும்.

இதனால் அறியப்படுவது என்னவென்றால் எல்லா 500 மி.கி. மாத்திரையும் அதே அளவு சக்தி உடையதாக இருக்காது. தாய்லாந்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்திய ஆய்வு ஒன்றில் இந்த மாத்திரையால் பெரிதாக ஏதும் பக்கவிளைவுகள் இல்லை என்று கூறியுள்ளார்கள். ஆனால், இந்த ஆய்வில் 4 வாரம் மட்டும்தான் இம்மாத்திரையை எடுத்துக் கொண்டுள்ளார்கள். மற்றோர் ஆய்வில் விழுங்கும் மாத்திரைகளை விட கன்னத்தில் மற்றும் நாக்கின் அடியில் வைத்துக் கொள்ளும் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் ரத்தத்தில் இந்த மருந்தின் அளவு நன்றாக ஏறியுள்ளதாக கண்டறிந்துள்ளார்கள்.

இந்த பிரச்னைகளை சமாளிக்க நேரடியாக ரத்தக் குழாய்களிலே இன்ஜெக்‌ஷன் மூலம் செலுத்தப்படும் Intravenous Glutathione-ஐ கண்டுபிடித்தார்கள். இது பல வருடங்கள் உபயோகப்படுத்தப்பட்டாலும் இதன் பலன் பற்றி முழுமையாக ஆராய்ந்து இதுவரை எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.

வாய்வழியில் எடுப்பதைக் காட்டிலும் ரத்தக் குழாய்களில் நேராக ஊசி மூலம் செலுத்தப்படுவதால் 100% மருந்தும் நேரே ரத்த ஓட்டத்தில் கலக்கிறது. இதில் மருத்துவத் தன்மைக்கும், நச்சுத்தன்மைக்கும் இடையே, அஜித் சொல்வதுபோல் ஒரு மெல்லிசான கோடுதான் உள்ளது.

ஆகவே, எப்போது யாருக்கு இது ஆபத்தாகலாம் என்பதைக் கண்டறிவது அத்தனை சுலபமல்ல. ஒவ்வொரு நிறுவனமும் அதன் க்ளுட்டாதையோன் தயாரிப்பை ஒவ்வொருவிதமாக உபயோகப்படுத்தச் சொல்கிறது. வாரத்தில் ஒருமுறையோ அல்லது இருமுறையோ 600-1200 mg மருந்தை உபயோகப்படுத்த வேண்டும் என்றும் பலவிதமாகச் சொல்கிறார்கள்.

உலகிலேயே க்ளுட்டோதையோனை அதிகமாக உபயோகப்படுத்தும் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஓர் எச்சரிக்கை வெளியாகியுள்ளது. ஒரேயொரு விஷயத்தில் மட்டும் இப்படி ஊசி மூலம் இம்மருந்தை பயன்படுத்தலாம். சிஸ்ப்ளாட்டின் என்ற மருந்தை உபயோகப்படுத்தும்போது அதன் நரம்பு சம்பந்தமான பக்கவிளைவை நீக்குவதற்காக ஊசியின் மூலம் க்ளூட்டோதையோனை உபயோகிக்கலாம்.

மற்றபடி சருமம் சிவப்பு நிறம் பெற இந்த மாதிரி அதிக அளவு மருந்தை ஊசியின் மூலம் உபயோகித்தால் சிலருக்கு உயிர் பாதிக்கக்கூடிய அளவுக்குக் கூட பிரச்னைகளும் வரலாம். மிகப்பெரிய மருந்து ஒவ்வாமையான Steven Johnson Syndrome மற்றும் Toxic Epidermal Neurolysis.

சிலருக்கு தைராய்டு சுரப்பி பாதிப்பு, சிறுநீரகம் பாதிப்பு, வயிற்றுவலி என விபரீதமான விளைவுகள் உருவாகலாம். ஆன்லைனில் குறைந்த விலையில் வாங்கப்படும் ஊசிகளில் தரம் குறைந்தும் இருக்கலாம். இவ்வகை ஊசி உபயோகத்தால் ஏதாவது தொற்றுநோய் அபாயமும் உருவாகலாம். சரி நல்ல தரமான ஊசியை உபயோகிக்கலாம் என்று நினைத்தால் அது மிகவும் விலை அதிகம்.

சரி… இதற்கு என்னதான் செய்வது?!

நம் உடலில் எந்த ஒரு பொருளுமே தேவைக்கேற்பதான் சுரக்கும். ஒரு ஹார்மோனோ அல்லது உடலுக்குத் தேவையான ஒரு வேதிப்பொருளோ கொஞ்சம் சுரக்கும். பின்பு ஓரளவு அதிகரித்தவுடன் நமக்குள் ஒரு நிறுத்தும் ஸ்விட்ச் எல்லாவற்றிலும் உள்ளது. அதனால் வேண்டிய அளவு வந்தவுடன் அதன் சுரப்பு நின்றுவிடும்.

ஆனால், இந்த மருந்தை நாம் வாரம் ஒருமுறை இவ்வளவு அதிகமான அளவு உபயோகப்படுத்திக் கொண்டே வந்தால் நம் ஈரலில் தானாகவே சுரந்துகொண்டிருந்த க்ளூட்டோதையோன் நிரந்தரமாக நின்றுவிடலாம். ஆகையால், நாமே ஒரு பிரச்னையை விலை கொடுத்து வாங்கியதுபோல் ஆகிவிடும்.

நாம் எல்லோருமே மாநிறம், பிரவுன் அல்லது கருப்புதான். பின் எதற்கு நீ சிவந்து இருந்தால்தான் அழகு என்று பிரபலமான நடிகர் நடிகைகள் விளம்பரத்தில் சொல்வதை கேட்டு மருகுகிறோம். நம் இந்திய அரசாங்கம் காண்டம் விளம்பரத்தை பகலில் தடை செய்துள்ளது. ஆனால், காலம்காலமாக சில விளம்பரங்கள் வந்து நம்மை பாடாய்படுத்துகிறதே அதையெல்லாம் தடை செய்ய வேண்டாமா என்று ஆதங்கப்படுகிறவர்கள் உண்டு. அதில் நியாயமும் உண்டு.

‘நீ வெள்ளையா இருந்தாதான் உனக்கு தன்னம்பிக்கை வரும்’, ‘வெள்ளைக்காரன் பொய் சொல்ல மாட்டான்’ என்பது போன்ற தவறான நம்பிக்கைகளைத் தகர்த்து எறிய வேண்டும்.பின்பு எப்படிதான் நான் மற்றவர்களைக் கவரும் விதத்தில் இருப்பது?

நல்ல உணவு, நல்ல பழக்கவழக்கங்கள், ஃப்ரெஷ்ஷான காய்கறிகள், பழங்கள் மற்றும் நட்ஸ்களில் இந்த க்ளூட்டாதையோன் இயற்கையாகவே போதுமான அளவில் உள்ளது. குறிப்பாக தக்காளி, அவகேடா, ஆரஞ்சு மற்றும் வால்நட் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

எனவே, புகைப்பிடிக்கும் பழக்கம் மற்றும் விஸ்கி, பிராந்தி போன்றவற்றை உபயோகப்படுத்தாமல் பழங்களையும், காய்கறிகளையும் உணவில் சேர்க்க வேண்டும். உடற்பயிற்சி சிறிதளவாவது வேண்டும்.

இவையெல்லாவற்றையும் விட நல்ல எண்ணங்கள் வேண்டும். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை உள்ளது. அதனால் யாரையும் இகழ்வதோ அல்லது யாரையாவது பார்த்து நம்மை தாழ்த்திக் கொள்வதோ வேண்டாம். சந்தோஷத்தைத் தேடிக் கொண்டேயிருப்பதுதான் வாழ்க்கையல்ல. எதையும் சந்தோஷமாக எடுத்துக் கொள்வதுதான் வாழ்க்கை.

நம்மால் ஒரு நாளில் பல்லாயிரம் விஷயங்களை நினைக்க முடியும். ஆனால் ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தைத்தான் செயல்படுத்த முடியும். ஆகையால், எப்பொழுதெல்லாம் ஒரு நெகடிவ்வான அல்லது ஒரு கெட்ட சிந்தனை மனதினுள் வருகிறதோ அதை உணர்ந்து அதை அப்பொழுதே நிறுத்திவிட்டு நல்லதை மட்டும் நினையுங்கள். யாரைப் பற்றியும் பொறாமைப்படாதீர்கள்.

நல்ல சிந்தனை, நல்ல பழக்கம்… நல்ல பழக்கம், நல்ல நடத்தை… நல்ல நடத்தை, நல்ல மனிதன்… நல்ல மனிதன், நல்ல வாழ்க்கை…இப்படி வாழ்ந்துதான் பாருங்களேன்…நீங்கள் மிகவும் அட்ராக்டிவ்வான மனிதராக இந்த புத்தாண்டிலிருந்து மாறிவிடுவீர்கள்!Post a Comment

Protected by WP Anti Spam