By 10 December 2020 0 Comments

கேன் வாட்டரால் காய்ச்சல் ஆர்.ஓ.வாட்டரால் ஃப்ராக்சர்!! (மருத்துவம்)

ஆரோக்கியம் சார்ந்து நாம் எடுக்கும் மெனக்கெடல்களில் தண்ணீருக்கு சற்று கூடுதல் பங்கு இருக்கிறது. பயணங்களின் போதும், ஹோட்டலுக்கு செல்லும்போதும் சுத்தமான நீர் என நினைத்து காசு கொடுத்து வாட்டர் பாட்டில்களை வாங்கிக் குடிக்கிறோம். இவை உண்மையில் ஆரோக்கியமானவைதானா? தண்ணீரைப் பற்றிய சந்தேகங்களை எழுப்பினோம் வேதியியல் பேராசிரியர் ரஹ்மானிடம்.அவர் வெந்நீரைப் போல கொதிக்கத் தொடங்கினார்…

“இயற்கை நீர்நிலை ஆதாரங்களில் கிடைக்கும் தாதுக்கள் (மினரல்ஸ்) நிறைந்த தண்ணீரை எடுத்து அதில் படிந்துள்ள துகள்களையும், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளையும், நீரின் அமிலத் தன்மை, காரத் தன்மை போன்றவற்றையும் சுத்திகரிப்பு என்ற பெயரில் நீக்குகின்றனர். பாக்டீரியா, வைரஸ் கிருமிகளை நீக்க வேதிப்பொருட்களை கலந்து, சுவைக்காகவும் சில வேதிபொருட்களைச் சேர்த்து, வடிகட்டுகின்றனர். இதனால் கிடைக்கும் கண்ணாடி போன்ற நீரினை எடுத்து பாட்டில்களிலும் கேன்களிலும் அடைத்து கவர்ச்சியான விளம்பரத்துடன் விற்பனை செய்கின்றனர்.

இந்நிறுவனங்கள், வாட்டர் கேன்களுக்கு ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்றிருக்க வேண்டும். உரிமக் கட்டணம் செலுத்த வேண்டும். பின், நிறுவனங்களில் லேப் அமைத்து வாரந்தோறும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பரிசோதிக்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை ஐ.எஸ்.ஐ. அங்கீகாரம் பெற்ற சோதனைக் கூடத்துக்கு குடிநீரை பரிசோதனைக்கு அனுப்பி சான்று வாங்க வேண்டும். இந்த அறிக்கைகள் மாதந்தோறும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

இதுபோன்ற நடைமுறைகளுக்கும், லேப் அமைக்கவும் டெக்னீஷியன்களுக்கு ஊதியம் போன்றவற்றுக்கும் அவசியம் செலவிட வேண்டும். இந்தச் செலவுகளை எதிர்கொள்ளத் திறனற்ற போலி கம்பெனிகள் தரமற்ற ஆர்.ஓ. பிளான்ட் மூலம் தண்ணீரை சுத்தம் செய்கின்றன. இவை சுத்தம் செய்யப்பட்ட குடிநீரை எந்தவித பரிசோதனையும் செய்யாமல், கேனில் அடைத்து விற்பனை செய்கின்றன.

லோகிரேட், ஹைகிரேட் எதுவாக இருந்தாலும் பிளாஸ்டிக் பிளாஸ்டிக்தானே? இந்த பிளாஸ்டிக் கேன்களை முறையாகவும் முழுமையாகவும் சுத்தம் செய்கிறார்களா? அதுவும் இல்லை. நீர் அடைக்கப்பட்ட கேனில் 2 நாட்களுக்கு மேல் பார்த்தால், அடியில் பாசி பிடித்துவிடும். இது சுத்திகரிக்கப்படாத நீர். அதிக நாட்கள் வைத்திருந்தால் புழு, பூச்சிகள் வந்துவிடும். தெரியாமல் அதைக் குடித்தால் கொடும் நோய்கள் ஏற்பட்டு வயிற்றுப்போக்கு, பேதி ஆகும். தொண்டையில் தொற்று ஏற்பட்டு தொண்டைப்புண், சளி, காய்ச்சல் வருகிறது.

வெயில் காலங்களில் தட்டுப்பாடு ஏற்படும் என அதிக கேன்களை வாங்கி வாரக்கணக்கில் வைத்திருப்பார்கள். 3 நாட்களுக்கு மேல் வைத்திருக்கக்கூடாது. பல கடைகளில் குடிநீர் நிரப்பிய கேன்களை வெயில் படும் இடங்களில் வைத்திருக்கிறார்கள். வெப்பத்தால் பிளாஸ்டிக் உருகி டயாக்சின் என்ற விஷத்தை வெளிப்படுத்தும். டிரான்ஸ் ஃபரன்டாக இருப்பதால் வெயில் ஊடுருவி கிருமிகள் வளரவும் வாய்ப்புள்ளது. கடைகள் சுகாதாரமான இடத்தில் இல்லாமல் குப்பைமேடு, மண்மேடுகளிலும் வைத்திருப்பார்கள்.

மழையில் நனையும்… வெயிலில் வேகும். காலி கேன்களை பயன்படுத்தும் விதம் அதைவிடக் கொடுமை. கேன்களை 6 மாதங்களுக்கு ஒருமுறை புதிதாக மாற்ற வேண்டும். இதை யாரும் கடைபிடிப்பதாகத் தெரியவில்லை. 2 வருடங்களுக்கு மேல் வைத்திருப்பவர்கள்தான் அதிகம். இவற்றை ஸ்டெரிலைஸ் செய்யாமல் அதிலேயே அருகில் இருக்கும் நீரை நிரப்பி சீல் வைத்து மீண்டும் விற்பனை செய்கிறார்கள். ரெடிமேடாக பிரபல கம்பெனி சீல்களை வைப்பதற்கென்றே சில ஃபேக்டரிகளும் இருக்கின்றன.

இதுபோல ஸ்டெரிலைஸ் செய்யாத கேன்களில் உள்ள தண்ணீரை பயன்படுத்தும் நமக்கு தொண்டையில் தொற்று ஏற்பட்டு தொண்டைப்புண், சளி, காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கு வருகிறது” என மினரல் வாட்டரின் அவலங்களைக் கூறும் பேராசிரியர் ரஹ்மான், வீடுகளில் அமைக்கப்படும் ஆர்.ஓ. சிஸ்டத்தின் அபாயங்களையும் எடுத்துரைக்கிறார்.

“வெளிநாட்டில் ஆர்.ஓ. சிஸ்டம் உபயோகிக்கிறார்கள் என்பதைப் பார்த்து, இப்போது நம் நாட்டிலும் மத்தியதர வகுப்பினரும் வீடுகளில் ஆர்.ஓ. சிஸ்டம், வாட்டர் ப்யூரிஃபையர் போன்றவற்றைப் பயன்படுத்துகிறார்கள். வெளிநாட்டினருக்கு குளிர் சீதோஷ்ண நிலையில் இருப்பதால் அதிகம் வியர்க்காது. அதனால் உடலின் உப்பு வெளியேற வாய்ப்பில்லை. வெப்ப நாடான நம் நாட்டிலோ அதிகப்படியான வியர்வை வெளியேறுவதால், உடலின் உப்பு சத்தையும் கணிசமான அளவில் இழக்கிறோம்.

ஆர்.ஓ. முறையில் நீரை சுத்திகரிக்கும் போது நீரில் உள்ள இரும்பு, கால்சியம், மாங்கனீசு, ஃப்ளோரைடு மற்றும் தாது உப்புகள் அழிக்கப்படுவதால், நம் உடலுக்குத் தேவையான வைட்டமின் மற்றும் மினரல்களை இழக்கிறோம். கூடுதலாக ஆர்.ஓ. வாட்டரை சமைக்க பயன்படுத்தும்போது, தாதுக்கள் இல்லாத இந்த நீர் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றில் உள்ள முக்கிய சத்துகளையும் அழிக்கிறது. தாது உப்புகள் இல்லாத இந்த நீர் எலும்புகளையும் அரித்துவிடுவதால், அவை வலுவிழந்து பஞ்சுபோல மிருதுவாகிவிடுகின்றன. இதனால் பலருக்கு அடிக்கடி எலும்பு முறிதல் (Fracture) ஏற்படுவதைப் பார்க்கிறோம்.

ஆர்.ஓ. முறையில் நீரைச் சுத்திகரிக்கும்போது தேவையில்லாமல் நீரும் வீணாக்கப்படுகிறது. சாதாரணமாக வாட்டர் ஃபில்டரில் வடிகட்டும் முறையில் பாக்டீரியாக்களை மட்டுமே வடிகட்டுகிறோம் மிக நுண்ணிய வைரஸ்கள் அப்படியே தங்கிவிடும். வைரஸ் கிருமிகளை அழிக்க நீரை கொதிக்க வைக்க வேண்டும். மொட்டை மாடிகளில் தண்ணீரை சேமிக்க சிமென்ட் தொட்டிகளும் பிளாஸ்டிக் தொட்டிகளும் பயன்படுத்தப்படுகின்றன. சிமென்ட் தொட்டிகளை சிலிண்டர் வடிவில் கட்ட வேண்டும்.

சதுரமாகவோ செவ்வகமாகவோ இருந்தால் முடுக்குகளில் அழுக்கு படிந்து கிருமிகள் வளர வாய்ப்புள்ளது” என்று அறிவுறுத்தும் பேராசிரியர், எது சுத்தமான நீர் என்றும் நமக்கு எடுத்துரைக்கிறார்…“மற்ற எல்லா முறைகளையும் விட குளோரினால் சுத்தம் செய்யப்பட்டு குழாயில் வரும் குடிநீரை கொதிக்க வைத்து, அதை ஆற வைத்து, வடிகட்டி குடிப்பதே சிறந்த முறை. கொதிக்க வைத்த நீருடன் குளிர்ந்த நீரை கலப்பதும் வெதுவெதுப்பாக சுட வைத்து குடிப்பதும் தவறு. அதிகம் கொதிக்க வைப்பதால் ஆக்ஸிஜன் வெளியேறுகிறது என்று சொல்வது தவறு. அந்த நீரை ஆற வைக்கும் போது ஆக்சிஜன் இழப்பு ஏற்படாது. கொதிக்க வைத்த நீரை ஃபிரிட்ஜில் 2 நாட்கள் வரை வைத்திருந்து குடிப்பதும் தவறு. அன்று கொதிக்க வைத்த நீரை அன்றே உபயோகப்படுத்திவிட வேண்டும்.”

பாக்கெட் வாட்டர் பயங்கரம் கேன் வாட்டரைவிட இப்போது பாக்கெட் வாட்டர் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. பஸ் நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் தெர்மகோல் பாக்ஸில் ஐஸ் கட்டிகளை போட்டு அதில் வாட்டர் பாக்கெட்டுகளை அடுக்கி விற்கின்றனர். இவர்களுக்கு ஐ.எஸ்.ஐ. தரம் என்பதெல்லாம் கிடையாது. கைக்கு கிடைத்த நீரை அப்படியே பாக்ெகட் செய்து மக்கள் நெரிசல் நிறைந்த இடங்களில் விற்று விடுகின்றனர்.

இதை படித்தவர்கள், பாமரர்கள் வித்தியாசமின்றி அனைவருமே வாங்கிக் குடிக்கின்றனர். அதிலும் சிலர் பலரின் கைகள் படும் இந்த பாக்கெட்டுகளை, வாயில் கடித்து அப்படியே வேறு குடிக்கின்றனர். இதனால் வரும் ஆரோக்கிய பிரச்னைகள் சொல்லி மாளாது. வைரஸ், பாக்டீரியா தொற்றுகளால் சளி, காய்ச்சல், பேதி என எல்லாவகை நோய்களையும் விலை கொடுத்து வாங்குகின்றனர். வெகுசில ஐ.எஸ்.ஐ. முத்திரை பதித்த வாட்டர் பாக்கெட்டுகளே கிடைக்கின்றன. இதையெல்லாம் கவனித்து யாரும் வாங்குவதில்லை.Post a Comment

Protected by WP Anti Spam